“ ‘எல்லோருக்கும் எல்லாம்' என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், மக்களின் அரசாக நடைபோடும். அனைத்து மக்களும் சேர்ந்து, ‘எமது அரசு’ என்று பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும்.
தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமைபெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது.
திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கிய சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்தளித்த பாதையில் தொடர்ந்து பீடுநடை போட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலை நிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்.
இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்!” - திரும்பத் திரும்ப எத்தனை தடவைகள் படித்தாலும் திகட்டாத தீந்தமிழ்ச் சொற்கள் இவை! காலம் நமக்கு அளித்த கொடையாம் - திராவிட இயக்கத்தை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு செலுத்தும் தீரராம் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன சிந்திக்கிறார் என்பதை நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களது உரை நாட்டுக்கு உணர்த்தி இருக்கிறது.
ஏதோ வழக்கமாக ஆண்டின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடரில், அல்லது ஆட்சி அமைந்த முதலாவது கூட்டத்தொடரில் ஆளுநர் வாசிக்கும் அறிக்கையாக இல்லாமல் - இனி தமிழ்நாடு எந்தத் திசையில் போகப் போகிறது, நமது ஏற்றமும் எழுச்சியும் எத்தகையதாக இருக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது ஆளுநரின் உரை!
தந்தை பெரியாரின் சுயமரியாதை - அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த சமத்துவ சமுதாயமும் மதச்சார்பின்மை மாண்பும் - பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் - முத்தமிழறிஞர் கலைஞர் போட்டுக் கொடுத்த நவீனத் தமிழகம் - ஆகிய நான்கு திசையிலும் ஒருசேரப் பயணிக்கும் உன்னத ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி இருக்கப்போகிறது என்பதைச் சொல்லி விட்டார் ஆளுநர்.
ஆளுநர் உரை என்பது நிதி நிலை அறிக்கை அல்ல. ஆளுநர் உரை என்பது மானியக் கோரிக்கை அல்ல. ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் செய்தி அறிக்கை அல்ல. ஆளுநர் உரை என்பது கொள்கைப் பிரகடனம். இலட்சியப்பாதை. அந்தப் பாதை என்ன என்பது நேற்றைய தினம் விளக்கப்பட்டுள்ளது.
சமூகநீதி - மதச்சார்பின்மை - சமத்துவம் - மக்களாட்சி - ஆண் பெண் சமத்துவம் - அனைவருக்குமான பொருளாதார நீதி - இடஒதுக்கீடு மூலம் அனைவருக்குமான வாய்ப்பு - சமூக சீர்திருத்தம் - கல்வியில் முன்னேற்றம் - மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி - பொருளாதார வளர்ச்சி - வேலை வாய்ப்புகள் - உள்கட்டமைப்புகள் - ஆகியவற்றைக் கொண்டதாக இந்த அரசு அமையும் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.
இதில் மிக மிக முக்கியமானது பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் வளர்ச்சி அடையாவிட்டால் மற்ற வளர்ச்சிகள் முழுமை பெறாது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றார் அதிகப்படியாக அறம் பாடிய அய்யன் வள்ளுவர். அந்தப் பொருள் அறத்தின் அடிப்படையில் திரட்டப்பட வேண்டும் என்றவர் அவர்.
அதற்கான உலகளாவிய திட்டத்தை தீட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
* தமிழகத்தின் கடன் சுமையை குறைப்பதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.
* பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் லாபம் தரும் நிறுவனங்களாக மாற்றப்படும்.
* பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும். - என்று சொல்லப்பட்டு இருந்தது. இதோ, ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூ செட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மாநிலப் பொருளாதாரம் மீட்சி அடைய இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், இணையதளத்திலும் இந்தக் குழுவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம், ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள் என்ற நூல்களின் ஆசிரியரும், சமூக ஆய்வாளரும், எழுத்தாளருமான ஸ்ரீதர் சுப்பிரமணியம் தனது பதிவில், “தமிழ்நாடு அரசு மாநிலப் பொருளாதாரத்தை முடுக்கிவிட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பெயர்களை எல்லாம் ஒருங்கே ஒரு கமிட்டியில் பார்க்கும் பொழுது பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது. இதெல்லாம் கனவா என்று ஒரு முறை என்னைக்கிள்ளியே கூட டெஸ்ட் பண்ணிப் பார்த்துக் கொண்டேன். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த இவர்களின் சிந்தனைகள், ஆய்வு முடிவுகள் ஏற்கப்பட்டு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் வியத்தகு முன்னேற்றம் இங்கே நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
A problem clearly stated is a prob-lem half solved, ,என்று ஒரு ஆங்கில சொலவடை இருக்கிறது. ஒரு பிரச்சினையை தெளிவாக வரையறுத்து விட்டால் அது பாதி தீர்க்கப்பட்டதற்கு சமம். அதற்கு முதல்படியாக பிரச்சினைகளை புரிந்து கொள்ளப் பொருத்தமான நிபுணர்களை நியமித்து விட்டால் அந்தப் பிரச்சினை கால்வாசி தீர்ந்ததற்கு சமம். அந்தக் கால்வாசி தீர்வை நோக்கிப் பயணித்திருக்கும் தமிழ் நாட்டு அரசுக்கு வாழ்த்துகளும் நன்றியும்” என்று சொல்லி இருக்கிறார்.
“ஒரு பக்கம் பி.டி.ஆர். - நிதி அமைச்சர். இன்னொரு பக்கம் மாநில வளர்ச்சிக் குழுவின் பொறுப்பில் ஜெயரஞ்சன் உள்ளிட்டவர்கள். இப்போது, நியோ லிபரல் பொருளாதாரத்தை முழுமையாக மறுக்காதவர்கள் என்றாலும் அவற்றின் மீது விமர்சனம் கொண்ட, சர்வதேசப் புகழ்வாய்ந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு, முதல்வரின் ஆலோசனைக்காகப் போடப்பட்டுள்ளது.
அதாவது அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டிருக்கிறது. இப்போது முதலீட்டை விட முக்கியமானதாக நிலைபெறு வளர்ச்சி ( sustainable development), பசுமை காப்பு, பொருளாதார சமூக நீதி போன்றவை தலையெடுத்துள்ளன. இப்போது தமிழ்நாடு போட்டிபோட வேண்டியது தென் கிழக்காசிய நாடுகளோடு அல்ல, ஸ்காண்டிநேவிய நாடுகளோடு” என்று எழுதி உள்ளார் கல்வி செயற்பாட்டாளர் ஆழி செந்தில் நாதன். மிக உயர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் மிக உயர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால்! அதனால்தான் காலம் வழங்கிய கொடைதான் இன்றைய முதலமைச்சர் என்று சொல்கிறோம்!