முரசொலி தலையங்கம்

அளவிட முடியாத வேகத்தில் பயணித்து வியப்பில் ஆழ்த்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அளவிட முடியாத வேகத்தில் பயணித்து வியப்பில் ஆழ்த்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மிக வேகமான விரைந்த செயல்பாட்டினை ‘வாயு வேகம், மனோ வேகம்’ என்று எழுதுவார்கள். இப்போது அந்தச் சொற்றொடரை நமது முதல்வர் மீண்டும் நினைவுப்படுத்திவிட்டார், அவரின் செயல்பாட்டின் உறுதியின் மூலம்! மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு ஆலை ஒன்று செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் வெகு நாட்களாகச் செயல்படாமல் இருக்கிறது. ரூ.700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறையால் இப்போது இயங்கவில்லை. அவ்வாலையை இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று நமது முதல்வருக்கு தோன்றுகிறது.

கடந்த மே 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கழுக்குன்றம் செல்கிறார். மூடப்பட்டு இருக்கும் ஆலையை ஆய்வு செய்கிறார். அதன் விவரங்களை தெரிந்து கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசாமல் இருந்து விடவில்லை. ஆய்வை உடனே அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார். மே 26ஆம் தேதி புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தடுப்பூசி மருந்து ஆலையை ஏற்று நடத்த தயார்’ என்று கடிதம் எழுதினார். அதோடும் அவர் சும்மா இருந்து விடவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை டெல்லிக்கு அனுப்புகிறார். பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் போன்றவர்களை உடனடியாகச் சந்திக்கச் சொல்கிறார்.

மே 27ஆம்தேதி பிரதமரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் சந்திக்க முடியவில்லை. ரயில்வே மற்றும் தொழில் துறை அமைச்சரைச் சந்திக்கின்றனர். அவரிடம் முதல்வர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை நமது குழுவினர் தருகின்றனர். வியாழக்கிழமை - மே 27 ஆம் தேதி சந்திப்புக்குப் பிறகு - மே 28 வெள்ளிக் கிழமை மத்திய அரசு தனது கருத்தை ஒரு வாரத்தில் தெரிவிக்கும் என்ற செய்தி நாட்டிற்கு கிடைக்கிறது. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு முன்னோட்டமாக கிடைக்கிறது. மே 25-ந் தேதி தொடங்கி மே 28-க்குள் மூடப்பட்டுள்ள ஓர் ஆலையின் நிலவரம் நாட்டுக்குக் கிடைத்து விடுகிறது. இதைத்தான் நாம் முதல்வரின் ‘வாயுவேக’, ‘மனோவேக’ நடவடிக்கை என்கிறோம்.

முதல்வர் மூடப்பட்ட ஆலையின் செய்தியை வெளி கொணர்ந்தவுடன் அது தொடர்புடைய பல விவரங்கள் நாட்டிற்குக் கிடைக்கின்றன. டி.ஆர்.பாலுவும், தங்கம் தென்னரசுவும் அளித்துள்ள பேட்டி பயனுள்ளதாக இருக்கிறது. 6 மாதங்களில் 2 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என்பது நமது உத்தேசத் திட்டம். முதல்வர் குறிப்பிட்டது போல இந்திய அளவிற்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும் இதன் தயாரிப்புகள் பயன்படும். இன்னொரு முக்கியச் செய்தியும் இதனால் வெளிவந்து இருக்கிறது. இந்த ஆலையை ஏற்று நடத்த விரும்புகிறவர்களை 10 தினங்களுக்கு முன்பு (அதாவது மே 21ஆம் தேதி வாக்கில்) அழைத்து மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில் 15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு விரும்பியது.

ஆனால், யாரும் ஆர்வத்துடன் ஏற்று நடத்த முன் வரவில்லை. அரசுத் தரப்பில் வைக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் கடுமையாக இருந்ததே அதற்குக் காரணம். இதனால்தான் நிறுவனத்தை எடுத்து நடத்துவதற்கு காலதாமதமாகிறது. மேலும் ஆலையை நடத்த மூன்று நிறுவனங்கள் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தி கூறுகிறது. இந்த விபரங்கள் எதுவும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், மூடப்பட்டுக் கிடக்கும் ஆலையைத் திறக்க வேண்டும் என்று முதல்வர் கருதி கடிதம் எழுதப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். கொரோனாவின் தாக்குதலிலிருந்து நாட்டு மக்களை விடுவிக்க முதல்வர் பலவிதமான யோசனைகளைச் செய்து வருகிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள தடுப்பூசி ஆலை விவகாரம் மிக முக்கியமான ஒன்று ஆகும்.

முதல்வர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியும் அதன் பிறகு நமது தோழர்கள் மத்திய அமைச்சரை சந்தித்ததும் பல செய்திகள் ஆலை சம்பந்தமாக நாட்டுக்கு கிடைத்துள்ளது! நான்கு நாள்கள் கூட இல்லை. மூன்றே நாள்களில் ஓர் ஆலை சம்பந்தமாக பிரதமருக்குக் கடிதம் எழுதியதும், நமது தோழர்கள் மத்திய அமைச்சர்களைக் கண்டதும், நாட்டுக்கு விவரம் தெரிந்ததும் மிகப் பெரிய விரைந்த நடவடிக்கை ஆகும். அதே நேரத்தில் நமது முதல்வர் எழுதிய கடிதம் ‘தமிழ்நாடு அரசுக்குத் தடுப்பூசி ஆலையைக் குத்தகைக்கு தர வேண்டும்’ என்பதுதான் மத்திய அரசிடம் நாம் கோருவது! ஆனால் அங்கே 15 ஆண்டுகள் குத்தகைக் காலம் என்றும் மூன்று நிறுவனங்களிடம் பேச்சு நடப்பதும் நாம் கோரிக்கை வைத்த பிறகே நமக்குக் கிடைத்த தகவலாகும். ஆலை இயங்க முடிவு எந்த வகையில் இருந்தாலும் நாம் அதனை வரவேற்போம்.

இந்தக் கொரோனா சூழ்நிலையில் பல சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டே நமது முதல்வர் மத்திய அரசின் இயங்கா தடுப்பூசி ஆலையைக் கண்டறிந்து உள்ளார். அதனை தடுப்பூசிகள் உற்பத்தி நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கொள்ள இந்தியாவுக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும் பயன்படும் விதத்தில் கட்டமைக்க வேண்டும் என்கிற ஆரம்ப வேலையை மூன்றே நாளில் முடித்து இருக்கிறார். மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். மத்திய அரசும் தனது பதிலை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்க இருக்கிறது.

‘வினைத் திட்பம்’ என்பது ஒருவன் மனத் திட்பம்’ என்று வள்ளுவர் பேசுவார். அதைப் போல கொரோனாவை ஒழிப்பதில் மனஉறுதியைக் கொண்டு செயல்பட்டு வரும் நமது முதல்வரை நாடே பாராட்டுகிறது. அதனால் நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. முதல்வர் ஸ்டாலின் விரைந்தாற்றும் பணியை கொண்டு அவர் வேகத்தை நம்மால் அளவிட முடியவில்லை; வியக்கிறோம்.

banner

Related Stories

Related Stories