கொரோனாவை ஒரு வழியில் அல்ல, பல்வேறு வழிகளில் போய்தான் வீழ்த்த முடியும் என்பதனை உணர்ந்து செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்காரணமாக தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் வேகம் தற்போது படிபடியாக குறைந்துள்ளது. ஆனாலும் ஒருசில மாவட்டங்களில் மட்டும் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சரின் ஆய்வு மற்றும் தடுப்பு பணிகள் பெரும் பாராட்டுக்களை பெற்று வந்தாலும், முதல்வரின் இன்றை செயல்பாடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதாவது, நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார், அப்போது, இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதுதொடர்பாக வெளியான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகளை பாராட்டி பலரும் #WeStandWithStalin என்ற ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.
எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்! #WeStandWithStalin” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கரூர் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த நெருக்கடியான கொரொனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பிஜேபியினரே இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் நரேந்திர மோடி எங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து ட்விட்டரில் இந்திய அளிவில் #WeStandWithStalin என்ற ஹேஸ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.