சமூகநீதி - வகுப்புவாரி - இடஒதுக்கீடு எனப்படும் அனைத்து உரிமைகளுக்கும் அச்சுறுத்தலான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கி இருக்கிறது! இதனை நாம் மிக உன்னிப்பாக கவனித்தாக வேண்டும். மராத்திய இடஒதுக்கீடு தொடர்பான சட்டம் அது என்று நாம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்த்ய்ஹா சமூகத்தினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2018ம் ஆண்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் சில திருத்தம் செய்தது. மராத்தா சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பில் 12 சதவிகிதமும், கல்வியில் 13 சதவிகிதமும் வழங்கலாம், 16 சதவிகிதம் என்பது அதிகம் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தார்கள். மகாராஷ்டிரா மாநில அரசு பிறப்பித்துள்ள சட்டமானது உச்சநீதி மன்றம் ஏற்கனவே நிர்ணயித்துள்ள 50 சதவிகித இடஒதுக்கீட்டின் வரம்பை மீறுவதாக உள்ளது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 பேர்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு கடந்த மே 5 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
மராத்திய இடஒதுக்கீடு சட்டம் 50 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதாலும், மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 50 விழுக்காட்டிற்கு மேற்பட்டு இடஒதுக்கீடு அமையுமானால், அது தனி விதி விலக்குக்குரியது என்பதை - போதிய ஆதாரத்துடன் விளக்குவதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைக்கு உகந்ததாக மராத்திய ஒதுக்கீடு அமையவில்லை என்று கூறி, அது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
இன்று மராத்தாவுக்கு வந்தது. நாளை நமக்கும் வரலாம். எவருக்கும் வரலாம். அனைத்து மாநிலங்களும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை தாண்டக் கூடாது என்ற இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய பெரிய அமர்வுக்கு அனுப்ப இந்நீதிபதிகள் ஒருமனதாக மறுத்துவிட்டார்கள். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு - சட்ட அங்கீகாரத்தோடு - அதற்கான வலிமையோடு இருந்தாலும் இந்தத் தீர்ப்பை நாம் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. கூடாது. இந்தத் தீர்ப்பின் போது இன்னொரு ஆபத்தும் வெளிப்பட்டுள்ளது. அதுதான், இனி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்குக் கிடையாது என்பதாகும்.
இது மட்டும் நிறைவேறினால் இந்தியா முழுவதும் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து மிகமிக பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். இனி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் உரிமை மாநில அரசுகளுக்குக் கிடையாது; காரணம் அந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் 102-இல் உள்ள 342A என்ற புதிதாக இணைக்கப்பட்ட பிரிவு, ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’ பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு சேர்க்கும் உரிமை - வரையறை செய்வது நாடாளுமன்றத்தையும் குடியரசுத் தலைவரையுமே - அதாவது மத்திய (டில்லி) அரசினை மட்டுமே சார்ந்த ஒன்று என்பதாக பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மாநிலங்கள் தீர்மானிக்க முடியாது - குடியரசுத் தலைவர் தான் தீர்மானிக்க முடியும் என்கிறது இந்தத் தீர்ப்பு. அனைத்து மாநிலங்களிலும் சாதி இருக்கிறது. அது ஒரே மாதிரியான சாதியாக இல்லை. இவர் பிற்படுத்த சாதி - இவர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என மாநிலங்கள் தான் தீர்மானிக்க முடியும். இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதனை மாநிலங்களால் மட்டுமே அடையாளம் காண முடியும். அளவிட முடியும்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளும்; சமூக நீதிக்கான - மாநிலங்களின் உரிமைப் பறிப்பும் மிகவும் மோசமானதாக - இனிமேல் மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உள்ஒதுக்கீடுகள் உட்பட எதையும் கொடுப்பதற்கு எந்த உரிமையும் அற்றவைகளாகவே ஆகக் கூடும்” என்று ஆசிரியர் கி.வீரமணி சுட்டிக் காட்டி உள்ளார்.
“ஏற்கெனவே 1951ல் தந்தை பெரியார் போராடி, பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும், நாடாளுமன்றமும் கல்வியில் இடஒதுக்கீடு செய்ய பிற்படுத்தப்பட்டவர்களுக்கென - சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும், (Socially and Educationally) என்று அடையாளப்படுத்திய வரைமுறையைத் தந்த முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், அதனால் விளைந்த அத்துணைப் பயன்களும் காணாமற்போகச் செய்யும் - பறிமுதல் செய்யும் பேராபத்தான நிலையே இன்று ஏற்பட்டுள்ளது” - என்றும் அவர் கொந்தளித்துள்ளார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட வலிமை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
சமூகநீதி என்பது சமூகங்களின் உரிமையே தவிர, சட்ட உரிமை அல்ல. சமூகநீதி என்பது குடிமக்களின் உரிமையே தவிர, குடியரசுத் தலைவரின் உரிமை அல்ல. - இதனை நிரூபிக்க வேண்டிய சமூகநீதிக்கடமை நம் அனைவர் தலையிலும் விழுந்துள்ளது. சமூகநீதி மட்டுமல்ல, மாநில உரிமையும் இன உரிமையும் தொடர்புடையது!