காவிரி உரிமையை மீட்டுவிட்டதாக முதலமைச்சர் பழனிசாமி நித்தமும் பேசி வருகிறார். கடைசிநேரம் வரை காவிரி பிரச்சினையில் துரோகம் செய்ததுதான் அவரது வரலாறு! காவிரியில் இருந்த கொஞ்சநஞ்ச உரிமையையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகுவைத்த அரசுதான் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வந்தது. அப்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியே இருந்தது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்தின் பாசனப் பரப்பு 4,56,130 ஏக்கர் விடுபட்டு இருந்தது. இதனைக்கழக அரசு கடுமையாக எதிர்த்தது.
உடனடியாக அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கலைஞர். அக்கூட்டத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். காவிரிப் பாசன விவசாயிகளின் பாரம்பர்ய உரிமையைக் காக்க காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் கூடுதலாக 60 டி.எம்.சி நீர் கோரி 2007 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறோம் என்றால் என்ன பொருள்? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நாம் ஏற்கவில்லை என்று பொருள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா, அந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வழக்குப் போட்டார். அதாவது இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதே இதன் பொருள். முதல் சறுக்கல் இது.
இதன்படி அரசிதழில் 19.2.2013 அன்று வெளியானது. இதனையே தனது பெரிய சாதனையாகச் சொல்லிக் கொண்டார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. பழனிசாமி முதலமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும்போது தான் இறுதி விசாரணைக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூலை 10, செப்டம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களும் விசாரணை நடந்தது. இங்கு தான் பழனிசாமி அரசின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டது. சரியான வாதங்களை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் உள்ளன.
1. நிலத்தடி நீர் பயன்பாட்டை, காவிரி நதியின் நீர் உபயோகமாகக் கருதக்கூடாது.
2.குடிநீர், தொழிற்சாலை, உள்ளாட்சி ஆகியவற்றுக்காக தண்ணீரைப் பயன்படுத்தினால் அந்தத் தண்ணீர் அந்தந்த மாநிலக் கணக்கீட்டில்தான் சேர்க்கப்படும் - என்று இறுதித் தீர்ப்பில் உள்ளது. அதை வைத்து தமிழக அரசு வாதங்களை வைக்கவில்லை.
தனக்கு நிலத்தடிநீர் குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு வாதங்களை வைத்ததை தமிழக அரசு மறுக்கவில்லை. தமிழகத்துக்கு நிலத்தடி நீர் வளம் உள்ளதாகச் சொல்லி 10 டி.எம்.சி. குறைக்கப்பட்டதை தமிழக அரசு கேள்வி எழுப்பவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் கருத்துருவைச் சொல்லி வாதிடவில்லை பழனிசாமியின் அரசு.
பெங்களூரு மாநகர குடிநீர்த் தேவை குறித்து கர்நாடக அரசு வாதம் வைத்தது போல சென்னை, சேலம், ஈரோடு, தஞ்சை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் தண்ணீர்த் தேவையை தமிழக அரசு சொல்லி வாதங்களை வைத்திருக்க வேண்டும். மேலும் இராமநாதபுரம், தருமபுரி கூட்டுக் குடிநீர்த்திட்டங்களின் தேவையையும் சொல்லி இருக்க வேண்டும். எதையும் செய்யவில்லை.
“உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கான காவிரி நீரின் பங்கு குறைந்து போனதற்கு, காவிரி தொழில் நுட்பப் பிரிவு அதிகாரிகளின் அலட்சியமே முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஓய்வுபெற்ற பிறகும் பணி நீட்டிப்பில் உள்ள காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் உண்மையான அக்கறையோடு செயல்படவில்லை.
லட்சக்கணக்கில் ஊதியம் வாங்கும் இவர்கள், 2017ல் உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையான போது, தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லும் சரியான கருத்துக்களை முன்வைக்கவில்லை. குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் தொடர்பான நீதிபதிகளின் கேள்விகளுக்கு இவர்கள் ஆணித்தரமான விளக்கத்தை முன்வைக்காமல், கடனே என அரசு செலவில் டெல்லிக்குச் சென்று வந்திருக்கிறார்கள்.
தமிழகத்திற்காக வாதாடிய வழக்கறிஞர்களும் போதிய தொழில்நுட்ப விபரங்கள் புரியாமல் கோட்டை விட்டுவிட்டனர். இத்தகைய ஜீவாதாரப் பிரச்சினையைக் கையாளத் திறமையான அதிகாரிகளை நியமிக்காவிட்டால், காவிரியைப் போலவே மற்ற நதி நீர்ப் பிரச்சினைகளிலும் தமிழகம் இப்படியே கோட்டை விட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று ‘காவிரி அரசியல்’ என்ற நூலில் கோமல் அன்பரசன் குறிப்பிடுகிறார்.
உச்ச நீதிமன்றத்துக்கு 60 டி.எம்.சி. கூடுதலாகக் கேட்டு முதல்வர் கலைஞர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது வழக்கு! ஆனால் கிடைத்த 192 டி.எம்.சி.யில் 14.75 டி.எம்.சி.யை இழந்தது தான் பழனிசாமியின் சாதனை! இந்த நிலையில் காவிரி என்ற வார்த்தையையாவது பழனிசாமி பயன்படுத்தலாமா?