முரசொலி தலையங்கம்

திராவிட இயக்கத்தின் கொள்கை செம்மல் ‘எழுத்தாளர் இமையம்’ : முரசொலி தலையங்கம் புகழாரம்!

திராவிட இயக்கத்தின் கொள்கை செம்மல் ‘எழுத்தாளர் இமையம்’ : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட இயக்கம் நூறாண்டு காலத்தை கடந்து இயங்கிக் கொண்டு இருக்கிற இயக்கம். திராவிட இயக்கம் வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; அதோடு கலை, இலக்கிய, பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளை தனித்து நிலை நாட்டிய இயக்கமாகவும் அது திகழ்ந்து வருகிறது. பண்டையத் தமிழர் வாழ்க்கையின் நிகழ்வுகள் இலக்கியமாக ஆகி வரலாற்றுக்குள் புகுந்து கலை, இலக்கிய, கலாச்சார படிமங்களை உருவாக்கிச் சிறப்பு அடையாளங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நம் முன்னோர்களால் படைக்கப்பட்ட அவ்வாழ்க்கை மரபுகள் ‘கலப்பினால்’ சிறப்புத் தன்மைகளை இழந்து புதைந்துப் போயின.

அப்படிப் புதைந்தவைகளை அகன்றாழ்ந்து எடுத்து வைக்கக்கூடிய ஆற்றல்கள் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு உண்டு - ஆய்வாளர்களுக்கு உண்டு. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உண்டு. எழுத்தின் வடிவங்கள் அத்தனையும் இலக்கியங்களே. இலக்கியங்களின் பணி பரப்புரை மட்டுமன்றி, பழையவற்றை மீட்டெடுப்பதும் - புதியவற்றை படைக்கின்றதுமான போர்க்கருவியாகும். அந்தப் போர்க்கருவியை நீண்ட காலமாக திராவிட இயக்கம் பயன்படுத்தி வருகிறது. 1940களிலிருந்து நமது இயக்க ஏடுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சுமார் 300-க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்து கொண்டு இருந்தன. அவை 400-ஐயும் தாண்டின.

1950களில் திராவிட நாடு, மன்றம், முரசொலி, தென்றல், திராவிடன் என வந்த முக்கிய இதழ்களிலும், மற்றவற்றிலும் ஆ.மாதவன் சிறுகதை, கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் திருவனந்தபுரத்திலிருந்து எழுதினார். அங்கே சொந்தமாக பாத்திரக் கடை நடத்தி வந்தார். இவருக்கு 2016ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது இலக்கியச் சுவடுகள் எனும் திறனாய்வு கட்டுரைகள் எனும் தொகுப்பு நூலுக்குக் கிடைத்தது. குங்குமம் ஏட்டின் கதை, கட்டுரை தேர்வு பொறுப்புகளை முரசொலிமாறன் கவனித்து வந்தபோது, ஆ.மாதவனை நினைவுகூர்ந்து சிறுகதையைப் பெறச் செய்தார் என்று ஒரு எழுத்தாளர் எழுதி இருக்கிறார். இத்தகைய ஒரு சிறந்த திராவிட இயக்க எழுத்தாளர்தான் முதன்முதலாக சாகித்திய அகாதெமியின் விருதைப் பெற்றார். அவருக்கு நம் பாராட்டுகளை அப்போது உரித்தாக்கி இருக்கிறோம்.

திராவிட இயக்கத்தின் கொள்கை செம்மல் ‘எழுத்தாளர் இமையம்’ : முரசொலி தலையங்கம் புகழாரம்!

இப்போது நமது இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் அவர்களுக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்து இருக்கிறது. நாவலுக்கான அந்த விருது 2018 இல் கிரியா பதிப்பகம் வெளியிட்ட ‘செல்லாத பணம்’ எனும் நாவலுக்காக வழங்கப்பட்டு இருக்கிறது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுத்தாளர் இமையத்தை, ‘எளிய மக்களின் வாழ்வியலைத் தனது எழுத்துக்களால் அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்கப் படைப்பாளர் இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ புதினத்திற்கு ‘சாகித்திய அகாதெமி’ விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. கொள்கை சார்ந்த பயணத்துடனான அவரது படைப்புகள் மென்மேலும் பல விருதுகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன்’ என்று போற்றிப் பாராட்டி இருக்கின்றார்.

அகாதெமியின் விருது அறிவிக்கப்பட்டவுடன் ஆங்கில ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளருக்கு இமையம் அளித்த பேட்டியில், ‘இந்த என் விருதை நீதிக்கட்சி - திராவிட இயக்கத் தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். குறிப்பாகவும், சிறப்பாகவும் பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இப்படி அவர் சொல்வதற்கு காரணம் நமது இயக்கத்தின் மீது அவர் வைத்து இருக்கிற கொள்கைப்பற்றே ஆகும். நமது இயக்கத்தைச் சார்ந்த எழுத்தாளர் பெறும் இரண்டாவது விருது இது !

‘செல்லாத பணம்’ எனும் நாவல், சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைத்தான் சொல்கிறது. மனித உறவுகளில் சாதியும், பணமும், தகுதியும் எப்படியெல்லாம் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகின்றது. எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் வி.அண்ணாமலை. இதுவரை இவர் ஆறு நாவல்களை எழுதி இருக்கிறார்.

அதோடு ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இவரது கோவேறு கழுதைகள் நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. புதிரி வண்ணார்களைப்பற்றிய கதை இது. டாரண்ட்டோ தமிழ் இலக்கியத்தோட்டத்தின் சாதனையாளர் விருதினை இந்த நாவல் பெற்று இருக்கிறது. எழுத்தாளர் இமையம் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. அவர் ஒரு பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கிறார்.

திராவிட இயக்கத்தின் கொள்கை செம்மல் ‘எழுத்தாளர் இமையம்’ : முரசொலி தலையங்கம் புகழாரம்!

சமூகத்தின் சிறுபான்மை நலிந்த மக்களைப் பற்றி எழுதும் அவர் சாதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதில்லை. என் எழுத்துகள் சாதியை அழிக்க வேண்டுமே தவிர, சாதியத்தை வளர்த்தெடுக்கப் பயன்படக்கூடாது என்று இமையம் கருதுபவர். “விமர்சகர்கள் வேண்டுமானால் என்னைத் தலித் எழுத்தாளர் என்று சொல்லிவிட்டு போகட்டும். அவர்கள் சாதியை விரும்புகிறவர்கள்” என்று கருத்துக் கூறி இருக்கிறார். அவருடைய கொள்கையிலும், நடைமுறையிலும் திராவிட இயக்கச் சித்தாந்தங்கள் குடிகொண்டு இருப்பதால் அவரின் விருதை திராவிட இயக்கத்திற்கும், அதன் தலைவர்களுக்கும் அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார்.

அந்தத் திராவிட இயக்கக் கொள்கை செம்மலை நாம் மனமார முரசொலியின் சார்பாகப்பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம். அந்தப் பெருமையை நம் இயக்கம் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கிறது. நமது எழுத்தாளர் இமையத்தைப் பாராட்டுகின்ற இந்த நேரத்தில் நாம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம். மத்திய அரசு சாகித்திய அகாதெமியின் மூலம் கவிதைகள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், நாடகங்கள், பெருங்கவிதை நூல்கள், அனுபவ நூல்கள் என்று மொத்தம் 20 மொழிகளில் 20 நூல்கள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் விருதுகளுக்கு ரூபாய் ஒரு இலட்சம் ரொக்கத்துடன் தாமிர கேடயம் பரிசளிக்கப்படுகிறது.

20 மொழிகளில் எழுத்துக்களின் பல்வேறு வடிவங்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூபாய் ஒரு இலட்சம் இப்போதைய காலகட்டத்திற்கு சிறப்புக்குரிய ஒரு தொகை இல்லை. இந்திய மொழிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரொக்கத் தொகை ரூ.5 இலட்சம் அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாதெமி பரிசு அளிக்கும் விழா ஏதாவது ஒரு இந்திய மாநிலத் தலைநகரில் நடைபெறும்படியாக வழி காண வேண்டும். இது எழுத்தாளர்களை மட்டுமல்லாமல் இந்திய மொழிகளின் வளர்ச்சியினையும் நோக்கிய கருத்தாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

banner

Related Stories

Related Stories