தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் அதனை அடக்க இந்து பயங்கரவாதம் உருவாகும் எனப் பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இஸ்லாமிய பயங்கரவாதம் உருவானால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று பேசியுள்ளார். தீவிரவாதம் உருவானால் அதனை ஒடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறதே தவிர, அதற்கு மாற்று இந்து பயங்கரவாதம் அல்ல என்று முரசொலி நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தூண்டிவிடும் வழி என்பது நாட்டை நாசமாக்கும் வழி. நாட்டின் நிம்மதியைக் கெடுக்கும் வழி. இப்படி பேசியிருக்கும் பா.ஜ.கவின் நாலாந்தரப் பேச்சாளரான அமைச்சர் இந்த அரசியலைமைச் சட்டத்தின் படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்.
அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்கவேண்டிய அமைச்சர் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கிறார். வன்முறையைத் தூண்டி விடுகிறார். அதனை மாநில முதல்வரும் வேடிக்கை பார்க்கிறார். அதேபோல் தமிழக அமைச்சர்களிடம் மற்ற அமைச்சர்களின் உளறல்களையும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வராக எடப்பாடி இருக்கிறார்.
இதன்மூலம் அவரால் அமைச்சர்களை மட்டுமல்ல, எம்.எல்.ஏக்களையே கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிகிறது. தனது ஆட்சி அதிகாரத்திற்கு எதுவும் வந்திடாமல் இருந்தால் போதும், யாரும் எப்படியும் போகட்டும் என்று நமக்கென்ன என்றிருருப்பவர் அவர். அ.தி.மு.கவில் தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர் ஆகிவிட்டனர். அதனால் தான் கோட்டையே சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது.
ஏன் சமீபத்தில் கூட தேவையற்ற விஷயங்களை பொதுதளத்தில் பேசவேண்டாம் என முதல்வர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இதுபோல பேசியது ஏன்? முதலமைச்சருக்கு அடங்காமல் பேச யார் இவரை தூண்டி விடுக்கிறார்கள். இவர் யாருடைய ஊதுகுழல் என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.