மத்திய பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், பெரும்பான்மை இருப்பதால் அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதாலேயே கேரள, மேற்கு வங்க, பஞ்சாப் முதல்வர்கள், ‘இந்த சட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்கிறார்கள்.
பா.ஜ.கவின் தனித்த விருப்பமாக ஒரு சட்டத்தை இயற்றிவிட, முடியாது. அது அரசியல் சட்டப்படி பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் இந்த குடியுரிமை சட்டத்தின் ஆபத்து உணரப்படுவதால் தான் நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெறத் தொடங்கி இருக்கின்றன.
மேலும் பல சிக்கல்கள் நிரம்பியுள்ள இந்தச் சட்டத்தை எப்படி மாநிலங்கள் வரவேற்கும்? உச்சநீதிமன்றம் இதை எப்படி பார்க்கிறது என்பதனையும், நாட்டு மக்கள் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். குடியுரிமை சட்டத்தின் மூலம் பா.ஜ.க அரசு தனது ‘இந்து ராஷ்டிரத்தை’ நோக்கி முன் நகர்கிறது.
இதனால் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக, ஏகாதிபத்தியமாக மாற்ற மோடி – அமித் ஷா இரட்டையர்கள் துணிந்து இருக்கிறார்கள். அந்த நிலைக்கு அவர்களை இந்திய ஜனநாயகம் விட்டுவிடாது என முரசொலி தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.