பாலியல் வல்லுறவு தொடர்பான 2017-ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின் படி, 86 சதவீத பாலியல் வன்கொடுமை வழக்குகளை காவல்துறை இறுதி செய்தது. ஆனால், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றங்களினால் வெறும் 13 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் 32 சதவீத தீர்ப்புகள் குறைந்தபட்ச தண்டனையை மட்டுமே நிர்ணயம் செய்தன.
இந்நிலையில், தேசிய குற்ற ஆவணப் புள்ளிவிவரப்படி ஒவ்வொரு 20 நிமிடத்திலும் இந்தியாவில் ஏதோதொரு பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு பெண் ஆளாகிறார்.
குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை நிர்பயா நிதியின் கீழ் 109 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் வெறும் 6 கோடியை மட்டுமே அ.தி.மு.க அரசு செலவு செய்திருக்கிறது. இதன் மூலம் அ.தி.மு.க அரசு பெண்கள் பாதுகாப்புக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் தருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எனவே பாலியல் குற்றங்கள் எங்கும் நடந்துவிடக்கூடாது; மீறி எங்காவது நடந்தால் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான உயர்ந்தபட்ச தண்டனை மிகவும் வேகமாகக் கிடைத்திட வேண்டும்; எந்த நிலையிலும் பெண்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது; இதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என முரசொலி நாளேடு தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.