நாளை செப்டம்பர் 17, பெரியாரின் பிறந்தநாள். அதுவே தி.மு.கழகம் தோன்றிய நாள். கழகத்தை நிறுவ பேரறிஞர் அண்ணா இந்த நாளை தேர்ந்தெடுக்கத் தலையாயக் காரணம் அந்நாள் பெரியார் பிறந்தநாள் என்பதுதான். ஏன் அண்ணா அந்த நாளை அண்ணா தேர்ந்தெடுக்க வேண்டும் என விளக்கியுள்ள முரசொலி, பெரியாரைப் பற்றி அண்ணா, ‘பெரியார் ஒரு சகாப்தம்; ஒரு காலகட்டம்; ஒரு திருப்பம்’ என்று குறிப்பிட்டதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்கள் தெளிவடைவதற்காக பெரியார் எனும் பேராசான் வழங்கிய வீட்டுக்கணக்கு கடினமானது. பெரியாரின் மொழி மக்களின் மொழி, அதில் இலக்கிய இலக்கணத்தைக் காண முடியாது. பெரியார் நமக்காகப் பேசியவர், நமக்காகவே உழைத்தவர். இதுவரை பெரியாருடன் பேசாமல் இருந்தால், அவரோடு பேசிப் பாருங்கள், பழகி கலந்து உரையாடுங்கள். முன்னர் படித்தவர்கள் மீண்டும் மறுவாசிப்பு செய்து தேறுங்கள். “பெரியார் விரும்பிய சுயமரியாதை வாழ்வான சுகவாழ்வு உங்களுக்கும் கிடைக்கும்” என்று முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.