விருதுநகர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். விருதுநகர் சென்றுள்ள முதலமைச்சருக்கு அங்கிருக்கும் பொதுமக்கள் பெருமளவு வரவேற்பளித்துள்ளனர். தொடர்ந்து இன்று (நவ,10) அங்கு புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான இந்தியா டுடே, இந்தியாவின் சக்தி வாய்ந்த ‘டாப் 10’ தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்குக் கிடைத்த பெருமையோ, புகழோ இல்லை. இந்த பெருமையையும், புகழையும் வழங்கியது, தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான்! உங்களுடைய அன்பும், ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்! தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன்! போராடுவேன்!
இந்த உழைப்பின் பயன்தான், அனைத்து புள்ளி விவரங்களையும் வெற்றிகரமாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பேப்பரிலும், ரெக்கார்ட்டுகளிலேயும் ‘ஃபர்ஸ்ட் வந்துவிட்டோம்’ என்று நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. ஏனென்னால், நமக்கு பின்னால், நம்மை முந்தி வெற்றி பெறவேண்டும் என்று இன்னும் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதைத்தான் நான் மற்ற அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்!
அந்த எதிர்பார்ப்புடன் தான் மாவட்டம்தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறேன். இது பற்றியெல்லாம் எதுவும் புரியாத ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவலப்படாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன சொல்கிறார்..
“மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கலைஞர் பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி வருவதாக” உளறியிருக்கிறார்.
அதை படித்ததுமே சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.
நம்முடைய ஆட்சியில், நவீனத் தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி தலைவர் கலைஞர் பெயரால், மக்கள் நலனுக்காக நாம் செய்து கொண்டு வருகின்ற மூலதனச் செலவுகள், என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன; என இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். நான் கேட்கிறேன்…
எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோமே... அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?
இல்லை, தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் – இளைஞர்களுக்கும் – அறிவுச் சுரங்கமாக மதுரையில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம்… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா? இல்லை, ஆயிரக்கணக்கான மக்களுடைய உடல்நலனையும் - உயிரையும் காப்பாற்றுகின்ற கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை… அதை பயனில்லை என்று சொல்கிறீர்களா?
இல்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோடியே 20 இலட்சம் தாய்மார்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகின்ற, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?
எதைச் சொல்கிறீர்கள்கள்? பழனிசாமி அவர்களே! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்! அது உறுதி! நான் கேட்கிறேன்… தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, தலைவர் கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கலைஞர்’ என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர்! தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்!
கலைஞர் தான் - எந்நாளும் தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண்! அவருடைய கொள்கைகள், சிந்தனைகளைதான் நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். விடியல் பயணம், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்ப்புதல்வன் என்று இந்த திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாமே கலைஞர் பெயரைத்தான் சொல்லுகிறது!
கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, கலைஞருடைய தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். எங்கள் தலைவர் பெயரால், தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கும் திட்டங்களை நிறைவேற்றியதில் நான் பெருமிதப்படுகிறேன்.
கலைஞரின் புகழ் வெளிச்சம், இந்தியா முழுக்க பரவி இருக்கிறது! அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும்! என்னை பொறுத்தவரையில், என்றும் – எப்போதும் – உங்களுக்கு உறுதுணையாக உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும்… தொடரும்… தொடரும்… என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.