மு.க.ஸ்டாலின்

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விருதுநகர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். விருதுநகர் சென்றுள்ள முதலமைச்சருக்கு அங்கிருக்கும் பொதுமக்கள் பெருமளவு வரவேற்பளித்துள்ளனர். தொடர்ந்து இன்று (நவ,10) அங்கு புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2024) ஆற்றிய உரை வருமாறு :

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

மருது சகோதரர்கள் போல இந்த மண்ணுக்கு தூணாக விளங்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களையும், தங்கம் தென்னரசு அவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அந்த இருவருக்கும் மாவட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு துணை நிற்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயசீலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர்! இந்தப் பெயரை சொன்னவுடன் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நினைவுக்கு வருபவர், வீரத் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள்! மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நம்முடைய தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று உயிர்த்தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார் அவர்கள்!

இன்றைக்கு நாமெல்லாம் தமிழ்நாடு என்று பெருமையுடன் சொல்ல சங்கரலிங்கனார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் காரணம்! தமிழ்நாட்டு மண் ஏராளமான தலைவர்களை, தியாகச் சீலர்களை ஈன்றெடுத்திருக்கக்கூடிய மண்!

ஈரோடு - பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரைத் தந்தது!

காஞ்சி - பேரறிஞர் அண்ணாவை பெற்றெடுத்தது!

திருவாரூர் - முத்தமிழறிஞர் கலைஞரை உருவாக்கியது!

இந்த விருதுநகர் மண் - பெருந்தலைவர் காமராசரை நமக்கெல்லாம் வழங்கியது!

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

காமராசர் பெயரை சொன்னதுமே பலருக்கும் பல நினைவுகள் வரும். எனக்கு, என்னுடைய திருமணம் ஞாபகத்திற்கு வருகிறது… நினைத்துப் பார்க்கிறேன்… என்னுடைய திருமணத்துக்கு வரவேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்களை இல்லத்திற்குச் சென்று நேரில் அழைத்தார். அப்போது அவர் உடல் நலிவுற்று இருந்தார்! பெருந்தலைவர் வரவேண்டும், உடல் நலிவுற்று இருந்த அவர் மேடை ஏறவேண்டும் என்று அவருடைய கார் மேடை மேல் வரக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகளை தலைவர் கலைஞர் அவர்கள் செய்தார்கள்!

பெருந்தலைவர் காமராசர் வந்தார்; என்னையும் – என் மனைவியையும் வாழ்த்தினார்கள்! இதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது! பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்த போது, ஒரு மகன் போல, அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு, அரசு மரியாதையுடன் அடக்கம் - நினைவு மண்டபம் - கடற்கரைச் சாலைக்கு காமராசர் பெயர் - குமரியில் ‘காமராசர் மணிமண்டபம்’ - நெல்லையில் சிலை - காமராசரின் செயலாளராக இருந்த வைரவன் அவர்களுக்கு, பணி – வீடு ஒதுக்கீடு - காமராசரின் சகோதரி நாகம்மாளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி - சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் – பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்து, பெருந்தலைவர் காமராசர் அவர்களைப் போற்றியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! இதையெல்லாம் தமிழ்நாடு என்றைக்கும் மறக்காது!

நாடு போற்றும் அந்த ‘சிவகாமியின் செல்வனை’ தந்த இந்த விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி…. சாஸ்தா கோவில் அணைக்கட்டு என்று பலவற்றை நான் சொல்லிக் கொண்டே போகலாம்!

மாவட்டங்கள் தோறும் நான் கள ஆய்வு செய்ய தொடங்கி இருக்கிறேன். நேற்று மாலை, நான் இந்த மாவட்ட அளவில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கின்ற, கடந்த மூன்றாண்டு திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்தேன். அப்போது, நடந்து கொண்டு இருக்கின்ற பணிகளைப் பற்றி கேட்டேன். அதில், முக்கியமான சிலவற்றை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

* 1,286 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

* இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

* ‘ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா’ அமைக்கப்பட்டு வருகிறது.

* ‘அயன் கொல்லன் கொண்டான்’ என்ற புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட இருக்கிறது.

* அருப்புக்கோட்டை மருத்துவமனையை மாவட்ட தலைமையிட மருத்துவமனையாக மேம்படுத்துகின்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* சிவகாசியில், அறிவுசார் மையம் வணிக வளாகம், பூங்கா, புதிய மாநகராட்சி அலுவலகக் கட்டடம் என்று பல பணிகள் நடந்து கொண்டு வருகிறது.

* காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் இருக்கின்ற 1,286 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1,387 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

கடந்த 3 ஆண்டுகளில், விருதுநகர் மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில், 257 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது, மேலும் 37 சாலைப்பணிகள் நடந்து கொண்டு வருகிறது. திருவில்லிப்புத்தூரில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதையெல்லாம், உட்கட்டமைப்பு திட்டங்கள் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஆய்வின் போது, இந்தப் பணிகள் எல்லாம், விரைந்து முடிக்க நான் அறிவுறுத்தி இருக்கிறேன்.

அடுத்து, நம்முடைய சமூகநலத் திட்டங்கள் மக்களிடம் எப்படி சேர்ந்திருக்கிறது என்று பார்த்தேன். அதைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், விருதுநகர் மாவட்டத்தில் 95 விழுக்காட்டுக்கு மேல் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சராசரி 33 விழுக்காடு. ஆனால், நம்முடைய தமிழ்நாடு மாநில சராசரி 60 விழுக்காடு என்பது நமக்கு மிகமிகப் பெருமையாக இருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களால் விருதுநகர் மாவட்டத்தில், அதிகளவு உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில், பள்ளிக்கல்வி துறையின் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் உயர்கல்வியில் சேர்த்ததற்காகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு ‘முதலமைச்சரின் நல் ஆளுமை’ விருதை நானே வழங்கியிருக்கிறேன்.

அதேபோல், 2023-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் மாநாட்டில், பள்ளிக்கல்வித் துறையின் சிறந்த செயல்பாட்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துதல், வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்துதல் போன்ற சிறந்த பணிக்காக 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதும், இந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தை ‘விருதுகள் மிகு’ மாவட்டமாக உயர்த்திக் காட்டி வரும் மாவட்ட அமைச்சர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுக்கும் நான் மீண்டும், மீண்டும் என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

இப்படிப்பட்ட சாதனைகளை செய்து வருகின்ற விருதுநகர் மாவட்டத்திற்கு, சில திட்டங்கள் தேவைப்படுகிறது என்று நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை சொன்னார்கள். அதை ஏற்று, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்.

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

முதலில், நேற்று நான் ஒரு பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அப்போது, அங்கிருந்த பணியாளர்களை சந்தித்தேன். அவர்கள் சில கோரிக்கைகள் வைத்தார்கள். அதன் அடிப்படையில், ஒரு முக்கியமான அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.

பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்!

இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இதற்கான முதற்கட்ட உதவியாக 5 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

அடுத்து, தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி உற்பத்தி மற்றும் அச்சுத் தொழில் போன்ற பல்வேறு தொழில்துறைகளில் விருதுநகர் மாவட்டம் முன்னணியில் இருந்தாலும், விவசாயத்தைப் பொறுத்தவரை, மழையையும், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது. எனவே, இந்த மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கின்ற கண்மாய்களும், அணைக்கட்டுகளும், 17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

அதுமட்டுமல்ல, காரியாப்பட்டி வட்டத்தில், தெற்காற்றின் குறுக்கே 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை ஒன்றும் கட்டப்படும். அத்துடன், விருதுநகர் வட்டத்தில் இருக்கின்ற கௌசிகா ஆறு, அருப்புக்கோட்டை வட்டத்தில் இருக்கின்ற கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் 41 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் பகுதிகளில் இருக்கின்ற 22 கண்மாய்கள், 18 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அது புனரமைக்கப்படும். அதேபோல், காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணைகள் 23 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

அத்துடன் அந்த அணைப் பகுதிகளில், 2 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து, தொழிற்துறை அது தொடர்பான அறிவிப்புகள்!

விருதுநகர் மாவட்டத்தில், எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது. அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் செலவில், இந்த புதிய சிப்காட் தொழில்வளாகம் அமைக்கப்படும். இதனால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

அடுத்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள்;

* சிவகாசி மாநகராட்சியில், 15 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

* விருதுநகர் நகராட்சியில், 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.

* சாத்தூர் நகராட்சியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பூங்கா மற்றும் சிறு பாலம் அமைக்கப்படும்.

* இராஜபாளையம் நகராட்சியில், 13 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், கோடை நீர்த்தேக்கம் 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

* அருப்புக்கோட்டை நகராட்சியில், 3 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பூங்காவும் அமைக்கப்படும்.

* விருதுநகர் நகராட்சி எல்லைக்குள் வரக்கூடிய நெடுஞ்சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,

* அருப்புக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் 10 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரியாபட்டி நகரத்தின் எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

* திருவில்லிபுத்தூரில், இருக்கின்ற ஆண்டாள் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பயன்பாட்டிற்காக, கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சில அறிவிப்புகள்!

வத்திராயிருப்புக்கு அருகே பிளவக்கல் அணைப் பகுதியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சாஸ்தா கோவில் அருவி பகுதியில், 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் என்னிடம் கேட்டு இத்தனை அறிவிப்புகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்! மகிழ்ச்சி தான்! ஆனால், நான் உங்களுக்கு சொல்வது, இந்த அறிவிப்புகளுக்கு விரைந்து அரசாணை பெற்று, பணிகளை தொடங்குவதற்கு நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். விடாமல் செலுத்தவேண்டும், அதுதான் முக்கியம்!

வருவாய்த்துறை அமைச்சர் மாவட்டம் என்பதால், இந்த விழாவில், 40 ஆயிரம் பேருக்கு பட்டா ஏற்பாடு செய்திருக்கிறார்! பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சிகளில், என்னைப் பொறுத்தவரைக்கும் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால், பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரைக்கும், இதுதான் அதிகமான எண்ணிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக அந்தத் துறையின் அமைச்சரையும், அந்தத் துறையின் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட வருவாய்த்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற கூட்டங்கள் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினேன். கழக ஆட்சி அமைந்ததும், அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வாக்குறுதி அளித்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அதற்காக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனி துறையை நான் உருவாக்கினேன். பெரும்பாலான மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியும். அப்படி வந்த மனுக்களில் பெருபான்மையான மனுக்கள் எனக்கு வீடு இல்லை, வீடு கட்டுவதற்கு இடம் இல்லை, இடமோ, வீடோ அதை வாங்குவதற்கு பணம் இல்லை, இதுவரையில், புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகிறேன் என்று பல பேர் மனு அளித்திருந்தார்கள். மக்களின் குறைகளை தீர்ப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்ற அடிப்படையில், வருவாய்த் துறைக்கு நான் ஒரு உத்தரவிட்டேன். "வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைகளை எந்தளவுக்கு வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்குங்கள்" என்று நான் சொன்னேன். நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் போதிய அளவு இல்லை. ஆனால் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீடற்ற ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டேன்.

தீவிரமான நடவடிக்கைகளை நாம் எடுத்த காரணத்தால், 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து இன்று வரை, மொத்தமாக இந்த மூன்று ஆண்டுகளில், 10 இலட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இது மிகப்பெரிய சாதனை!

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

நில உரிமையை வழங்குவதிலும், திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமல்ல, இதற்கு சமதர்மக் கொள்கைளும் உண்டு. அதைத்தான் “சுயமரியாதைச் சமதர்மம்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.

சமூகத்தில் சமூகநீதியும், பொருளாதாரத்தில் சமநீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, குடியிருப்போருக்கே மனை சொந்தம் என்று சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

“நாங்கள் பல்லாண்டு காலம் ரத்தம் சிந்தி போராடியும் கிடைக்காத உரிமையை ஒரு துளி பேனா மையில் நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்” என்று பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார். அதிகப்படியான நிலங்களை இலவசமாக ஏழை எளிய பாட்டாளிகளுக்கு வழங்கிய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இன்றைக்கு உங்கள் முகங்களில் தெரிகின்ற மகிழ்ச்சிதான் எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டு!

ஆட்சிப் பொறுப்பேற்றபோது சொன்னேன்… “மு.க.ஸ்டாலின் எனும் நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன் - நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்" என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான இந்தியா டுடே, இந்தியாவின் சக்தி வாய்ந்த ‘டாப் 10’ தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்குக் கிடைத்த பெருமையோ, புகழோ இல்லை. இந்த பெருமையையும், புகழையும் வழங்கியது, தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான்! உங்களுடைய அன்பும், ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்! தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன்! போராடுவேன்!

இந்த உழைப்பின் பயன்தான், அனைத்து புள்ளி விவரங்களையும் வெற்றிகரமாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பேப்பரிலும், ரெக்கார்ட்டுகளிலேயும் ‘ஃபர்ஸ்ட் வந்துவிட்டோம்’ என்று நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. ஏனென்னால், நமக்கு பின்னால், நம்மை முந்தி வெற்றி பெறவேண்டும் என்று இன்னும் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதைத்தான் நான் மற்ற அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்!

அந்த எதிர்பார்ப்புடன் தான் மாவட்டம்தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறேன். இது பற்றியெல்லாம் எதுவும் புரியாத ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவலப்படாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன சொல்கிறார்..

“மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கலைஞர் பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி வருவதாக” உளறியிருக்கிறார்.

அதை படித்ததுமே சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

நம்முடைய ஆட்சியில், நவீனத் தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி தலைவர் கலைஞர் பெயரால், மக்கள் நலனுக்காக நாம் செய்து கொண்டு வருகின்ற மூலதனச் செலவுகள், என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன; என இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். நான் கேட்கிறேன்…

“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் பழனிசாமி” - விருதுநகரில் பதிலடி கொடுத்த முதலமைச்சர் !

எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோமே... அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

இல்லை, தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் – இளைஞர்களுக்கும் – அறிவுச் சுரங்கமாக மதுரையில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம்… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

இல்லை, ஆயிரக்கணக்கான மக்களுடைய உடல்நலனையும் - உயிரையும் காப்பாற்றுகின்ற கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை… அதை பயனில்லை என்று சொல்கிறீர்களா?

இல்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோடியே 20 இலட்சம் தாய்மார்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகின்ற, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

எதைச் சொல்கிறீர்கள்கள்? பழனிசாமி அவர்களே! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்! அது உறுதி! நான் கேட்கிறேன்… தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, தலைவர் கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கலைஞர்’ என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர்! தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்!

கலைஞர் தான் - எந்நாளும் தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண்! அவருடைய கொள்கைகள், சிந்தனைகளைதான் நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். விடியல் பயணம், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்ப்புதல்வன் என்று இந்த திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாமே கலைஞர் பெயரைத்தான் சொல்லுகிறது!

கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, கலைஞருடைய தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். எங்கள் தலைவர் பெயரால், தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கும் திட்டங்களை நிறைவேற்றியதில் நான் பெருமிதப்படுகிறேன்.

கலைஞரின் புகழ் வெளிச்சம், இந்தியா முழுக்க பரவி இருக்கிறது! அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும்! என்னை பொறுத்தவரையில், என்றும் – எப்போதும் – உங்களுக்கு உறுதுணையாக உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும்… தொடரும்… தொடரும்… என்று கூறி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories