சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாக்கவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் முதல் கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளின் எதிர்கால மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிலையாக நீடிக்கும் பொதுப்போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்ட திட்டமானது இந்தியாவிலேயே ஒரே தடவையில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாகும். சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மீ), கலங்கரைவிளக்கம் (Light House) முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மீ), என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய பாஜக அரசுக்கு, தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் பாஜக அரசு இதிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்தது. எனினும் தமிழ்நாடு அரசு மட்டுமின்றி, கூட்டணி கட்சித் தலைவர்களும் மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
எனினும் செவிடன் காதில் சங்கு ஊதிய... கதையாக ஒன்றிய பாஜக அரசு செவி சாய்க்காமல் இருந்து வந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கூட, இதனை தவிர்த்தது பாஜக அரசு. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு, கட்சித் தலைவர்கள், மக்கள் என பலரிடமும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இருப்பினும் பணிகளில் தொய்வு இருக்கக்கூடாது என்பதால் ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு மெட்ரோ 2-ம் கட்ட பணிகளை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தொடர் வலியுறுத்தல்களுக்கு பிறகும் பாஜக அரசு முறையாக பதிலளிக்காததால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளுடன் மெட்ரோ திட்டப் பணிகள் குறித்தும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (அக்.03) பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.63,246 நிதி ஒதுக்கீட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த ஒப்புதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், “உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது, எங்களின் கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மெட்ரோ பணிகள் 2047-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என ஒன்றிய இரயில்வேதுறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த திட்டமானது ஒன்றிய அரசு - மாநில அரசு பாதிக்கு பாதி நிதி ஒதுக்கும். அதில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும், மீதி மாநில அரசுக்கு கடனாக மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.