இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது தனது லோகோவில் நிறத்தை மாற்றி சர்ச்சையில் சிக்கியுள்ளது. 1959-ல் நிறுவப்பட்ட இந்த தொலைக்காட்சியானது, ஹிந்தியில் உருவானது. அரசு தொலைக்காட்சியான இது, நாளடைவில் பல மொழி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டது.
பொதிகை என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த சேனலிலும் வழக்கம்போல் பாஜக தனது அரசியல் தலையீட்டை வைத்தது. பாஜக அனைத்திலும் தங்கள் இந்தி மொழி ஆதிக்கத்தை திணிப்பதுபோல், இதிலும் திணிக்க எண்ணி, கடந்த ஆண்டு பொதிகை என்ற பெயரை மாற்ற முற்பட்டபோது, தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. எனினும் DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்தது ஒன்றிய பாஜக அரசு.
இந்நிலையில், மீண்டும் தாங்கள் பாஜக கூறுவதை தான் கேட்போம் என்று நிரூபிக்கும் வகையில், தங்கள் சேனலின் லோகோவை மாற்றியுள்ளது தூர்தர்ஷன் தொலைக்காட்சி. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்தி தொலைக்காட்சியான DD News-ல் லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியுள்ளது. இதற்கு தற்போது நாடு முழுவதும் இருந்து வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் Doordarshan இலச்சினை காவி நிறமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்" என தெரிவித்துள்ளார்.