முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொது வாழ்வில், விமர்சனங்கள் இயல்பு. முடிந்த மட்டிலும் அவற்றுக்கு நான் செயல்கள் மூலம் பதில் அளிக்க விழைகிறேன். எனக்கென பெரிய பட்டம் எல்லாம் தேவையில்லை. மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்த உறுதிமிக்க முதலமைச்சர் என மக்கள் என்னை நினைவில் கொண்டாலே எனக்கு போதும்!
பாஜகவினர் வேண்டுமானால் மோடியை ‘விஸ்வகுரு’ என்றெல்லாம் அழைத்துக் கொள்ளலாம். ஆனால் மாநிலங்களை அவர் புறக்கணிப்பதற்கும் சீனாவின் ஆக்கிரமிப்பை அவர் கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் பின் உள்ள அமைதி ஆபத்தானது. மோடி என்கிற ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பத்தையும் ஆர்எஸ்எஸ்ஸின் உத்தியையும் இளம் தலைவர் ராகுல் காந்தி உடைப்பார்.
அரசியல் சித்தாந்தங்கள் தலைமுறைகளுக்கேற்ப மாற்றம் பெறும். புதிய தலைமுறைகளிடம் கொள்கைப் பிடிப்பை உருவாக்குவது தலைமையின் முக்கியப் பணி. திராவிட இயக்கம் அதற்கு சிறந்த உதாரணம். சமூகநீதி, சமத்துவம் மற்றும் மொழியுணர்வு ஆகிய எங்களின் அடிப்படை கொள்கைகள் உறுதியுடன் தொடர்கின்றன.
விபி சிங், தேவகெளடா, ஐகே குஜரால், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்களை தேர்வு செய்வதில் திமுக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் கலைஞரின் ஆலோசனையை கேட்கும் தருணங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் ‘என் உயரம் எனக்கு தெரியும்’ என பணிவாகவே பேசியிருக்கிறார். கலைஞரும் திமுகவும் இந்திய அரசியல் பரப்பில் முக்கிய தூண்கள்!
நிதி உதவி என்பது சலுகை அல்ல, மாநிலங்களின் உரிமை. கடைசியாக முதலமைச்சர்கள் கூட்டத்தை மோடி எப்போது நடத்தினார் என நினைவில் இருக்கிறதா? ஜனநாயகம், கூட்டாட்சி பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுவார்கள். நடைமுறையில் எதையும் அவர்கள் செய்வதில்லை.
இந்திராகாந்தியின் அரசை தாக்குவதற்காக RTI-ன் உதவியை பாஜகவினர் நாடியிருக்கிறார்கள். ஏனெனில் மோடியின் பேச்சை இனி மக்கள் நம்ப மாட்டார்கள் என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. விளைவாக கச்சத்தீவு குறித்து RTI பதில் கிடைத்ததாக கதை அளக்கிறார்கள்.பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தும் கடந்த கால விஷயங்களை சுட்டிக் காட்டித்தான் மோடியால் அரசியல் செய்ய முடிகிறது. ஏனெனில் பாஜகவின் ஆட்சியில் சொல்வதற்கென அவருக்கு ஏதுமில்லை.
இன்று மோடியை முன்னிறுத்தி அவர்கள் அரசியல் செய்கிறார்கள். கடந்த காலத்தில் வேறு முகத்தை பயன்படுத்தினார்கள். எதிர்காலத்தில் இன்னொரு முகத்தை கொண்டு வருவார்கள். ஆர்எஸ்எஸ் கருத்தியலில் ஊறி, மத உணர்வுகளை தூண்டி, வெறுப்புணர்வை வளர்த்து அரசியல் செய்யும் கட்சிதான் பாஜக" என்று கூறியுள்ளார்.