மு.க.ஸ்டாலின்

தலைவர்கள் கைது நடவடிக்கை: “இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் வலிமை அடைகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தலைவர்கள் கைது நடவடிக்கை: “இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் வலிமை அடைகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று (31.3.2024) டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி சார்பாக பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

அப்போது கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு, கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உரையை வாசித்தார். அந்த உரை பின்வருமாறு :

“எனது இனிய நண்பரும் - டெல்லி மாநிலத்தின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாஜக தலைமை. 'இந்தியா' என்ற பெயரே அவர்களுக்கு கசப்பானதாக மாறியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கியது பாஜக தலைமை. பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை, மிகமோசமாக நடத்தினார்கள். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என அனைத்து இழிவான செயல்களையும் செய்தார்கள்.

அதன்பிறகு, தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பாஜகவில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும். ஆனால் பாஜகவின் ஆணவங்களுக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதைப் போல இருக்கிறது.

தலைவர்கள் கைது நடவடிக்கை: “இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் வலிமை அடைகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அருமை நண்பரும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் அவர்கள் முதலில் கைது செய்யப்பட்டார்கள். இப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் 'இந்தியா' கூட்டணியின் முக்கியத் தலைவர்கள். இந்தியாவின் முக்கியமான தலைவர்கள். இவர்களைக் கைது செய்வதன் மூலமாக 'இந்தியா' கூட்டணியை குலைத்துவிட முடியாது.

இது போன்ற கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைத்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம்.

பாஜக சில மாதங்களுக்கு முன்பு வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்று கருதியது. ஆனால் நாளுக்கு நாள் தோல்வியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், ராமர் கோவில் என்று அடுக்கடுக்காத தனது அஜெண்டாவை பாஜக அவிழ்த்துவிடக் காரணம், இதில் ஏதாவது ஒன்றாவது தன்னைக் காப்பாற்றாதா என்ற ஆசை தான். இவை எதுவும் பாஜகவுக்கு கை கொடுக்கவில்லை. அதனால் தான் இந்தியா கூட்டணித் தலைவர்களைக் குறி வைத்தார்கள். அதாவது, தோல்வி பயத்தில் எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பதே தெரியாமல் மூர்க்கத்தனமான சர்வாதிகார நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்கள்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் அவர்களைக் கைது செய்திருப்பது அத்தகைய நடவடிக்கை தான்.

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், தேர்தல் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நினைத்து, அவரது பிரச்சாரத்தை தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டிய வரவேற்பை விட அவரைக் கைது செய்தன் மூலமாக கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வருகையை வரவேற்ற படித்த - நடுத்தர - உயர் வகுப்பு இளைஞர்கள் மத்தியில் இந்தக் கைது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'அரவிந்த் கெஜ்ரிவாலை பழிவாங்கும் நோக்கத்தோடு மோடி கைது செய்துள்ளார்' என்ற எண்ணத்தை இந்த தரப்புக்கு ஏற்படுத்தி உள்ளது. ' 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறவர், எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். இதுவரை மோடி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட, கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு மோடியை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

தலைவர்கள் கைது நடவடிக்கை: “இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் வலிமை அடைகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சரிந்து கொண்டிருந்த மோடியின் செல்வாக்கை கெஜ்ரிவால் கைது நடவடிக்கை இன்னும் அதிகமாகச் சரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அருமை நண்பர் கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதன் மூலமாக 'இந்தியா' கூட்டணித் தலைவர்களை மிரட்டிப் பார்க்க நினைத்தால் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏமாந்து போவார்கள். நாடு முழுவதும் நடக்கும் அனைத்து அசைவுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாரகள். அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. ஆணவக்காரர்களின் ஆட்டத்தை மக்கள் அனுமதித்ததும் இல்லை.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துடிப்புடன் பணியாற்றி வரும் ஆம் ஆத்மி தொண்டர்கள் இதன் மூலமாக சோர்வடைந்து விட மாட்டார்கள். பாஜகவை வீழ்த்தியாக வேண்டிய அவர்களது உறுதிக்காரணங்கள் அதிகமாகி வருவதை உணர்வார்கள். இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த முதல் கட்சி திமுக தான்.

அடக்குமுறைகள், சர்வாதிகாரங்கள் ஆகியவை எந்த வடிவில் வந்தாலும் எதிர்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் கழகம், இப்போதும் அதே உறுதியுடன் துணை நிற்கிறது. 'இந்தியா' கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் வந்தால், இப்போது இருக்கும் இந்தியாவின் ஜனநாயக - அரசியலமைப்புச் சட்டப்பண்புகள் வேரோறு சாய்க்கப்படும் என்பதை பரப்புரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 'இந்தியா ' கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம்.

பல்வேறு மாநிலங்களில் அணிச் சேர்க்கை மிக நல்லபடியாக நடந்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் மாநிலங்களில் விரைந்து முடித்துவிட்டு உங்களது பரப்புரைகளை தொடங்குங்கள். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும் தான் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். அருமை நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியில் வருவார். 'இந்தியா' கூட்டணியை வலிமைப்படுத்தவும், இந்தியாவை செழுமைப்படுத்தவரும் அவர் விரைவில் வருவார்.

போராட்டக் களத்துக்கு வந்திருக்கும் அனைத்துத் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நான் தினந்தோறும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். பாசிச பாஜகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். பரப்புரை பயணத்தில் இருப்பதால் என்னால் டெல்லி வர இயலவில்லை. திமுக மாநிலங்களவை குழுத் தலைவரும் - எங்கள் இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவை அனுப்பி வைத்துள்ளேன். நேரில் வர இயலாமைக்கு பொருத்தருளக் கேட்டுக் கொள்கிறேன்.

பாசிச பாஜகவை வீழ்த்துவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்.

banner

Related Stories

Related Stories