தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த 27-ம் தேதி இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்க்கு சென்றடைந்தார்.
மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த சந்தித்து பேசியபோது, ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்த நிலையில், அந்த மாநாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெயின் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
எனது UAE, ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன்.நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது” என்று கூறியுள்ளார்.