மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. இதன் மூலம் நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்காக கொண்டுவரப்பட்டது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது நீட் தேர்வில் நடக்கும் அவலத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் நீட் தேர்வு பயனற்றது என ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டதாக பலரும் விமர்சித்து வருகின்ற்னர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். இது குறித்து தனது x பக்கத்தில், பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் PG கட்-ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய தகுதித் தேர்வு அர்த்தமற்றது என்பதை ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது .
நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். நீட் தேர்வு வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை.விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத ஒன்றிய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் என்ற கில்லட்டின் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.