கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. ந.மனோகரன் அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,"நம்முடைய தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருமை சகோதரர் மனோகரன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில், அதிலும் இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
இன்றைக்கு நடைபெறும் இந்த திருமணத்திற்கு நான் தலைமையேற்று வாழ்த்த வந்திருக்கிறேன் என்று சொன்னால், ஏதோ மனோகரன் இல்லத்தில் நடைபெறும் முதல் திருமணம் மட்டுமல்ல இது, ஏற்கனவே இரண்டு திருமணங்களை, அவரே இங்கே சொன்னது போல நடத்தி வைத்திருக்கிறேன்.
அவருடைய மகளுக்கு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அதற்கு பின்பு 2018-ஆம் ஆண்டு அவருடைய மகனுக்கு நடைபெற்ற திருமணத்தையும் நான்தான் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். இன்றைக்கு அவருடைய மகனுக்கு நடைபெறும் திருமணத்தையும் நான்தான் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். இன்னும் ஏதாவது மகன்கள், மகள்கள் இருந்தாலும் அதற்கும் நான்தான் வருவேன். நல்லவேளை மகன்கள், மகள்கள் இல்லை. பேரன்கள்தான் இருக்கிறார்கள். நிச்சயம் உறுதியாக அந்தப் பேரன்களுக்கும் நான்தான் திருமணத்தை நடத்தி வைப்பேன். எனவே உங்களோடு சேர்ந்து மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
இங்கே நம்முடைய பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் சொன்னதுபோல, அவருடைய தந்தை மெட்டல் பாக்ஸ் நடராஜன் அவர்கள், இந்த வட்டாரத்தில் - இந்த பகுதியில் - இந்த மாவட்டத்தில் கழகத்தின் தளபதியாக விளங்கியவர். மெட்டல் பாக்ஸ் நடராஜனை இந்தப் பகுதியில் இருப்பவர்கள், கட்சிக்காரர்கள், கட்சிக்காரர்கள் மட்டுமல்ல எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும், கட்சியைத் தாண்டி இருப்பவர்களாக இருந்தாலும் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே அந்த அளவிற்கு ஒரு சிறப்பான பெயரை பெற்றவராக - மக்கள் தொண்டாற்றுபவராக - கட்சிக்கு தொண்டாற்றுபவராக விளங்கியவர்.
அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய காலத்தில் இருந்து மெட்டல் பாக்ஸ் நடராஜன் அவர்கள் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் இருந்து அவர் பணியாற்றி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அவரைப் போலவே அவருடைய மகன் மனோகரன் அவர்கள் 1984-இல் இளைஞர் அணியில் வட்ட அமைப்பாளராக பொறுப்பேற்று அவர் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பின்பு 172-ஆவது வட்டமாக இருந்த வட்டக் கிளையில் அவைத் தலைவராக இருந்தும் பணியாற்றி இருக்கிறார்.
இடையில்தான் கொஞ்சம் அவரைக் காணவில்லை. பாலு சொன்னதுபோன்று காணாமல் போய்விடவில்லை. ஒதுங்கி இருந்தார். ஏதோ தனிப்பட்ட காரணமோ அல்லது சூழல் காரணமோ – ஏதோ நிலையில் ஒதுங்கி இருந்தாலும், ஆனால் உடனடியாக நம்மிடத்தில் வந்து விட்டார்.
நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன், அவர் எப்படி நம்மைவிட்டு கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தாலும் அதன்பின் நம்மிடம் வந்து எப்படி சேர்ந்தார் என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கிறபோது, 2013-ஆம் ஆண்டு இங்கு நம்முடைய கழகத்தில் இருக்கும் ஒரு முன்னோடி மறைவெய்திய செய்தியை கேட்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நான் வந்திருந்தேன். நான் நடந்து வந்தபோது அவர் கடை வழியாகப் போகிறபோது, அவர் கடையில் அவர் உட்கார்ந்து இருக்கிறார். “என்ன மனோகரன் நன்றாக இருக்கிறீர்களா?” என்று கேட்டு நான் உள்ளே சென்று விட்டேன். அன்றைக்கே தி.மு.க.வில் வந்து உடனே சேர்ந்து விட்டார். அதைத்தான் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அது மட்டும் அல்ல, தொடக்க காலத்தில் இளைஞரணி தொடங்கிய நேரத்தில் நான் எங்காவது சுற்றுப்பயணம் செய்கிறேன் என்று சொன்னால் சென்னையில் மட்டுமல்ல, வெளியூருக்கு எங்காவது செல்கிறேன் என்று சொன்னால் எனக்குப் பாதுகாவலராக வந்தவர்தான் நம்முடைய மனோகரன் அவர்கள். எப்படி அன்றைக்கு பாதுகாவலராக இருந்து எனக்கு அந்தப் பணியை தொடங்கினாரோ, இன்றைக்கும் எனக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் பாதுகாவலராக இருந்து தன்னுடைய கடமை அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எனவே அவருடைய இல்லத்தில் அவருடைய மகனுக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டதிட்டக் குழு உறுப்பினராக, அதற்குப் பின்னால் செயற்குழு உறுப்பினராக இருந்து தன்னுடைய கடமையை அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, அவருடைய மகன் - மணமகனாக வீற்றிருக்கும் மகேஷ் குமார் அவர்களும் இன்றைக்கு மாணவரணியில் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்தவுடனே கழகமே குடும்பம், வாரிசு… வாரிசு என்று பேசுவார்கள். கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் கொள்கைக் குடும்பமாக இருக்கிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம். யார் காலிலும் பாதத்திலும் விழுந்து வளர்ந்த குடும்பம் அல்ல இது. தவழ்ந்து சென்று வளர்ந்த குடும்பம் அல்ல இது. இலட்சியக் குடும்பமாக, ஒரு கொள்கைக் குடும்பமாக, மெட்டல் பாக்ஸ் நடராஜனில் இருந்து - மனோகரனில் இருந்து - இன்றைக்கு அவருடைய மகனாக இருப்பவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்முடைய இயக்கத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால், இதுதான் அண்ணா அவர்கள் உருவாக்கிய இயக்கம், அண்ணா அவர்கள் ஒரு குடும்பப் பாச உணர்வோடு இந்த இயக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் இது சிலருக்கு இன்றைக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதில் என்னென்ன பேசுகிறார் என்பதை எல்லாம் நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அதைப்பற்றி நாம் கவலையும் படவில்லை.
இன்றைக்கு நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எவ்வாறு சட்டமன்றத்தில் தேர்தல் நடந்தபோது தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு - நம்முடைய கூட்டணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தீர்களோ, அதே போல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன், யார் பிரதமராக வரவேண்டும்? யார் ஆட்சிக்கு வரவேண்டும்? என்பதல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம்முடைய இலட்சியமாக - நோக்கமாக இருக்க வேண்டும்.
எனவே இந்தியா என்று சொன்னாலே இன்றைக்கு நிறைய பேருக்கு பயம் ஆகிவிட்டது. அதிலும் பாரதீய ஜனதா கட்சிக்கு அச்சமே ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்ற பெயரைச் சொல்வதற்கே கூச்சப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள்.
இந்தியா கூட்டணி அமைத்து முதன் முதலில் பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் அவர்கள், பா.ஜ.க. ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி பாட்னாவில் ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்தோம். அதற்கு பின்னால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மீண்டும் இரண்டாவது முறையாகக் கூடி இந்தக் கூட்டணிக்கு ‘இந்தியா‘ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து, அதை அறிவித்து, அதற்குப் பிறகு மராட்டிய மாநிலம் மும்பையில் மூன்றாவது கூட்டத்தை நடத்தி, நம்முடைய கூட்டங்கள் எப்படி செயல்பட வேண்டும், அப்படி செயல்படுவதற்கு என்னென்ன அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், தேர்தல் களத்தில் நாம் எப்படி ஈடுபட வேண்டும், பிரச்சாரத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி எல்லாம் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்பதற்காக அதற்கென்று சில குழுக்கள் எல்லாம்கூட அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம்.
எனவே இதையெல்லாம் பார்த்து அஞ்சி, நடுங்கி இன்றைக்கு பா.ஜ.க. என்ன செய்திருக்கிறது என்று சொன்னால் திடீரென்று நாடாளுமன்றத்தைக் கூட்டப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இன்றைக்கு எதற்காக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்‘ என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த ஒரே நாடு - ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவிற்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்று சொல்கிறோம் அல்லவா, அந்த ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவரைத் தலைவராக போட்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையிலும் தலையிடுவது அவருக்கு நியாயம் கிடையாது. அதுதான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறிவிடுகிறார்.
ஆனால் அதை எல்லாம் இன்றைக்குக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற்காக அவரைப் போட்டு, அதற்குப் பிறகு அதில் சில உறுப்பினர்களைப் போட்டிருக்கிறார்கள். அந்த உறுப்பினர்களிலாவது எல்லா கட்சியும் கலந்து, கேட்டு போட்டார்களா என்றால், அதுவும் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தி.மு.க.வின் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்றால் கிடையாது.
எனவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பேரை போட்டு, அவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதை இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சி அ.தி.மு.க., - ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்தக் கொள்கையை எதிர்த்தார்கள். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறபோது, தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கிறபோது, அதே அ.தி.மு.க. அதை ஆதரிக்கிறது. இதை ஆதரிக்கிறதை பார்க்கிறபோது என்ன நினைக்கிறோம் என்றால், ஆட்டுத் தலையை வெட்டுவார்கள் அல்லவா, அதற்கு என்ன சொல்வார்கள்? ஆம், பலிகடா செய்வார்கள் அல்லவா, அந்த மாதிரிதான். தாம் பலிகடா ஆகப்போகிறது என்று ஆட்டுக்கு தெரியாது. அதனால் அ.தி.மு.க. பலிகடா ஆகப்போகிறது. இந்த சட்டம் நிறைவேறினால், தி.மு.க. மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ஆகிவிடும். ஒரே நாடு - ஒரே தலைவர், ‘அதிபர்’ என்று அவரே அறிவித்து விடலாம். எனவே தேர்தலே கிடையாது. ஒரே நேரத்தில் ஒரே தேர்தல்தான் வைக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.
நான் கேட்கிறேன், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 2021-இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து, நாம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகிறது. இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறபோது, ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா? நாம் மட்டுமா, பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம். அதேபோல மேற்குவங்கம். அங்கெல்லாம் கலைத்துவிடுவீர்களா? அவர்களுக்கெல்லாம் இன்னும் இரண்டரை வருடத்திற்கு மேல் ஆட்சி இருக்கிறது. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக மாநிலம். அங்கு 40 சதவீதம் ஊழல் என்ற ஒரு சிறப்புப் பெயர் எடுத்து, பா.ஜ.க., படுதோல்வி அடைந்து, அங்கு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது. எனவே அந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா?
சரி, அதுதான் போகட்டும். ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கிறீர்கள். அப்படி நாடாளுமன்றத்தோடு சட்டமன்றங்களுக்கும் தேர்தல் வைத்து, எங்காவது ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி வராமல் போய்விட்டது என்றால், ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை அந்தத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப் போகிறீர்களா? எனவே இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, எனவே ஒரு அதிபராகத் தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
தேர்தல் செலவை மிச்சப்படுத்த வேண்டும், குறைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். நீங்கள் தேர்தல் செலவைக் குறைக்கிறீர்களோ, இல்லையோ - நீங்கள் கொள்ளை அடிப்பதை முதலில் குறையுங்கள். சி.ஏ.ஜி. ரிப்போர்ட் என்ன கொடுத்திருக்கிறது? 7.5 லட்சம் கோடி!
நெடுஞ்சாலை போட்டதில், அதே நேரத்தில் டோல்கேட் வசூலில் - இப்படி பல நிலைகளில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்து, அதுவும் ஆதாரங்களோடு சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், இப்படிப்பட்ட இந்த கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் திருமண விழாவில், இது கழகக் குடும்பத்தில் நடைபெறும் திருமணம், நம்முடைய வீட்டு திருமணம். எனவே இந்தக் குடும்பத் திருமணத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியும், சபதமும் – ‘இந்தியாவைக் காப்பாற்ற நாம் இன்றைக்குத் தயாராக இருக்க வேண்டும்‘ என்று இந்த நேரத்தில் உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், ‘வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்‘ இருந்து வாழுங்கள்… வாழுங்கள்… வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி. வணக்கம்" இவ்வாறு அவர் உரையாற்றினார்.