சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய அவரது முழு உரை :-
"நினைவில் வாழும் தொழிற்சங்கத்தின் தலைவர் வி.எம்.ஆர். சபாபதி – சாவித்திரி அம்மாள் இணையருடைய பெயர்த்தி, நினைவில் வாழும் தயாமூர்த்தி - இராணி இணையருடைய மூத்த புதல்வி த.எழிலரசி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.
மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றியுரை ஆற்றிய அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள் எப்பொழுதும் - எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேச மாட்டார். அதனால்தான் நன்றியுரை ஆற்றுகிறபோது இந்த அழைப்பிதழில் வெளியிடப்பட்டிருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வரவில்லை என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த வருத்தத்தை கொஞ்சம் இங்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அவர் எனக்கு சால்வை அணிவித்தபோது, பட்டாடை அணிவித்தபோது நான் சொன்னேன். “நீங்கள் வருத்தப்பட வேண்டாம்… எல்லோருக்கும் சேர்த்துதான் நாங்கள் வந்திருக்கிறோமே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்“. சரி… சரி என்று தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அது மட்டுமல்ல, இன்றைக்குத் திருமண நிகழ்ச்சிகள் நிரம்ப நடந்து கொண்டிருக்கிறது. பல அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி அவர்களும் சென்றிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள்… வராதவர்கள் எல்லாம் மாலையில் வருவார்கள்… மணமக்களை வாழ்த்துவார்கள். நீங்களே இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறீர்கள். அதனால் அவர் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் அண்ணன் திருநாவுக்கரசு அவர்களைப் பற்றி இங்கே வாழ்த்தியவர்கள் எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
விழா அழைப்பிதழிலேயே திராவிட இயக்க எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு வெளிப்படையாக அதை யாரும் வெளிப்படுத்துவதற்கு அச்சத்தின் காரணமாக கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் திருநாவுக்கரசு போன்றவர்களுக்குத்தான் அந்தத் துணிவு உண்டு, துணிச்சல் உண்டு. அந்த அடிப்படையில்தான் அவருடைய அடையாளத்தை அவர் இந்த அழைப்பிதழில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள் 'திராவிட இயக்கத்தில் பூத்த மலர்‘ திருநாவுக்கரசு அவர்கள் என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள். அதேபோல நம்முடைய இனமான பேராசிரியர் பெருந்தகை ஒரு முறை திருநாவுக்கரசு அவர்களைப் பாராட்டி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ‘‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தொண்டைத் தொடர்பவர் நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள்“ என்று பெருமையோடு பாராட்டியிருக்கிறார்.
எனவே நடமாடும் ஒரு அறிவுக்கருவூலமாக - திராவிட இயக்கத்தின் கணினியாக - திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களைத் தலைமுறைகள் கடந்து தனது பேனாமுனையில் எடுத்துச் சொல்லும் ஆற்றலைப் பெற்றவராக நம்முடைய எழுத்தாளர் திருநாவுக்கரசு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
நீதிக்கட்சியை பற்றி - அதன் வரலாற்றைப் பற்றி இரண்டு பாகங்களாக நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை முதல் மூன்று பாகங்களாக எழுதி அதனை இந்த அடியேன்தான், இதே அரங்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதேபோல திராவிட இயக்கத்தைப் பற்றி பல நூல்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், திராவிட இயக்கத்தின் வேர்கள், திராவிட இயக்கத்தின் தூண்கள், திராவிட இயக்கமும் – திராவிட நாடும், திராவிட இயக்கமும் - திரைப்பட உலகமும், திராவிட இயக்க சாதனைகள், திராவிட இயக்கமும் – கலைத் துறையும், திருக்குறளும் - திராவிட இயக்கமும், திராவிட இயக்கமும் – பொதுவுடைமையும் - இவ்வாறு திராவிட இயக்கம் பற்றி அவர் எழுதிக் குவித்திருக்கிறார். அதனால்தான் அவரை இன்றைக்கு எல்லோரும் திராவிட இயக்கத்தின் கணினி என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
தலைவர் கலைஞருடைய மூத்த பிள்ளை முரசொலி என்பதைப் பல நேரங்களில் அவரே பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலைஞருடைய மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலியில் நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, அந்த முரசொலியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவராக நம்முடைய ஐயா திருநாவுக்கரசு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கும் கட்டுரைகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை கணக்கெடுத்துப் பார்த்தீர்கள் என்றால் 4000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் நம்முடைய அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள். திராவிட இயக்கத்தையோ, தலைவர் கலைஞரைப் பற்றியோ யாராவது லேசாக விமர்சித்தால் போதும், பொறுத்துக் கொள்ள மாட்டார் அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள். உடனே அதற்குத் தகுந்த பதிலை, தகுந்த விமர்சனத்தை எழுதினால்தான் அவருக்கு நிம்மதி வரும். அந்த அளவிற்கு ஒரு தீவிரத்தைத் தனது மனதில் ஏற்படுத்திக் கொண்டவர். அதனால்தான் திராவிட இயக்கத்தின் தீரர் என்று இன்றைக்கு நம்மால் அவர் அழைக்கப்படுகிறார்.
அவருடைய புதல்வர் - இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் நம்முடைய சிற்றரசு அவர்கள், அப்பாவைப்போல ஒரு கொள்கைவாதியாக, ஒரு இலட்சியவாதியாக விளங்கிக் கொண்டிருப்பவர்.
அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள் ‘நக்கீரன்‘ என்கிற ஒரு பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல அவருடைய மகன் சிற்றரசு அவர்கள் ‘தளபதி‘ என்ற பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலமாக 20 புத்தகங்களை அவர் வெளியிட்டுயிருக்கிறார்.
அவ்வாறு வெளியிட்டிருக்கும் புத்தகங்களில் மிக முக்கியமான நூல் எது என்றால், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாற்றைத் திருநாவுக்கரசு அவர்கள் எழுதி நம்முடைய சிற்றரசு வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஒரு சிறப்பு என்னவென்று கேட்டீர்கள் என்றால், அந்த நூல் வெளியிட்டு 3 மாத காலத்தில் 11 ஆயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இதைக்கூட விமர்சனம் செய்யலாம். அப்பா எழுதிய நூலை பிள்ளை எவ்வாறு வெளியிடலாம் என்று கேட்கலாம். அதனால்தான் அய்யா ஆசிரியர் அவர்கள் தகுந்த விளக்கத்தை தந்தார்கள். இது ஒரு கொள்கைக் குடும்பம். திராவிட இயக்கத்தின் குடும்பம்.
இன்றைக்கு ‘திராவிட மாடல் ஆட்சி‘ தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை - வாக்குறுதிகளைத் தந்தோமோ, அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பசியோடு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் - மாணவ - மாணவிகள் அவர்களுக்காக ‘காலை உணவு திட்டம்‘, பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அறிவித்த அந்தத் திட்டம், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் நுழையும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை. வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாகியிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவிருக்கிறது என்ற செய்தியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கோடிப் பேர் அதைப் பெற இருக்கிறார்கள். எனவே சிலருக்கு இன்றைக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம் வந்திருக்கிறது. பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் இன்றைக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு இந்தியாவிற்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்று சொல்வதைவிட பேராபத்து வந்திருக்கிறது. எனவே அப்படிப்பட்ட அந்த பேராபத்திலிருந்து நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நாம் அறிவித்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அந்தத் திட்டங்களைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது, இதே பி.ஜே.பி. ஆட்சி 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன்னால் - தேர்தலுக்கு முன்னால் அறிவித்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
நான் ஆட்சிக்கு வந்தால், இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி சொன்னது, வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களை எல்லாம் நான் மீட்டுக் கொண்டு வந்து, அவற்றை எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு தலைக்கு - ஒரு நபருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என்று உறுதிமொழி தந்தார். பதினைந்து லட்சம் வேண்டாம், பதினைந்து ஆயிரமாவது வழங்கியிருக்கிறாரா? பதினைந்து ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது வழங்கியிருக்கிறாரா? கிடையாது. இதுவரை அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை, அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அதைப் பற்றி பேசவே இல்லை.
மாதம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்தித் தருவோம் என்றெல்லாம் உறுதிமொழி தந்தார்கள். ஆனால் அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேபோல் விவசாயிகள் நலனை பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இதே டெல்லி மாநகரத்தில் - இந்தியாவின் தலைநகரத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை, ஆண்டுக்ணக்கில் நடத்தி, நூற்றுக்கணக்கான உயிரிழந்த அந்த கொடுமைகள் எல்லாம் நடந்தது. கடுமையான குளிரில் - கொடுமையான வெயிலில் - மழையில் - பல்வேறு சித்திரவதை ஏற்றுக்கொண்டு அந்த போராட்டத்தை நடத்தியபோது அதை பற்றி கண்டும் காணாமல் இருந்த ஆட்சி பி.ஜே.பி. ஆட்சி. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஓரளவிற்கு அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையை அவர்கள் பெற்றார்கள்.
எனவே இதையெல்லாம் உணர்ந்துதான், இப்படிப்பட்ட ஒரு மோசமான - சர்வாதிகார ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை இந்திய நாட்டிற்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு, அண்மையில் பீகார் மாநிலத்தில் - பாட்னாவில் அங்கிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள் முயற்சியின் காரணமாக எதிர்கட்சிகளை சார்ந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானங்கள் எல்லாம் வழித்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரே ஒரு முக்கியம் என்ன என்று கேட்டீர்கள் என்றால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற 17, 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் - பெங்களூர் நகரத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இதைல்லாம் பார்த்து எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆட்சி, குறிப்பாக அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி அவர்கள், இன்றைக்கு பிரதமர் என்ற அந்த நிலையிலிருந்து மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார், உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் எந்த சூழ்நிலை வந்தாலும், ஏன் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நம்முடைய கொள்கை - நம்முடைய இலட்சியம் ஒரே ஒரு கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு நாம் இந்த களத்தில் இறங்கி இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மணவிழா நிகழ்ச்சியில் மணமக்களாக வீற்றிருக்கும் நம்முடைய மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.
அய்யா ஆசிரியர் அவர்கள் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். ஒவ்வொரு திருமணவிழா நிகழ்ச்சிக்கும் நான் போகிறபோது மணமக்களுக்கு வைக்கின்ற வேண்டுகோள்தான். ஆனால் இந்த மணமக்களை பொறுத்த வரைக்கும் வேண்டுகோள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்களுடைய பெயர்களே அழகான தமிழ் பெயர்கள்தான். சிற்றரசு – எழிலரசி. நிச்சயமாக அவர்களும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு நிரம்ப இருக்கிறது."