தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் அரங்கில் நடைபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கும்முடிப்பூண்டி கி.வேணு அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "நம்முடைய வேணு அவர்களைப் பற்றி சகோதரர் ராஜா அவர்களும், நம்முடைய நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் நேரம் இல்லா காரணத்தால், ஆனால் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாக உங்களிடத்தில் சொல்லி இருக்கிறார்கள். நானும் அதைத்தான் வழிமொழிகிற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு தீரராக, கழகத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, இளம் வயதிலிருந்து - மூத்த வயதிற்கு வந்திருக்கிறார் என்று சொல்ல மாட்டேன், உடல்நலத்தின் காரணமாக அவர் கொஞ்சம் தளர்ந்து போயிருக்கலாமே தவிற, இப்போதும் அவர் உட்கார்ந்திருக்கும் காட்சியை பார்த்தால் மாப்பிள்ளை போன்றுதான் அவர் உட்கார்ந்திருக்கிறார். 1975 ஆகஸ்ட் 22-ஆம் தேதிதான் நம்முடைய வேணு அவர்களுக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. எனக்கு ஆகஸ்ட் 20. அதற்கு இரண்டு நாளுக்கு முன்பு எனக்கு. எனவே திருமணத்தைப் பொறுத்தவரை நான் அவரைவிட இப்போது சீனியர். இரண்டு நாள் சீனியர்.
ஓராண்டுகாலம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சென்னை சிறைச்சாலையில் அடைபட்டிருந்தபோது, அங்கே எங்களுடைய திருமண நாளை நானும் கொண்டாடினேன், அவரும் அங்குதான் கொண்டாடினார். முதல் ஆண்டு. இது எல்லாம் வரலாறு. இந்த வரலாறு எல்லாம் பலருக்கு இன்னும் புரியவில்லை. அதுவும் நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவர்களுக்கே தெரியவில்லை என்றால் எங்கே போய் சொல்வது. ஏனென்றால் இது நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி. இது வேணு அவர்களுடைய குடும்பம் மட்டுமல்ல. கழகக் குடும்பம். அண்ணாவால் - கலைஞரால் கட்டிக் காக்கப்பட்டிருக்கும் கழக குடும்பம் - இந்தக் குடும்பம். எனவே அந்தக் குடும்பத்தில் - ஒரு கொள்கைக் குடும்பத்தில் - அந்தக் கொள்கைக் குடும்பத்தின் இன்றைக்குத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்த அடியேன் தலைமையில் இந்தத் திருமண விழா இன்றைக்கு நடந்தேறியிருக்கிறது. முதன்முதலாக நம்முடைய வேணு அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் குருதனம்பேடு கிராமத்தில் கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு பணியாற்றி இருக்கிறார். அதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றியக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, கழகத்திற்காகப் பல்வேறு வகைகளில் தனது கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார். அதற்குப் பின்னால் தலைமைச் செயற்குழு உறுப்பினராக. திருவள்ளூர் மாவட்டம் என்று ஒரு மாவட்டம் உதயமானதற்குப் பின்பு, அந்தத் திருவள்ளூர் மாவட்டத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, அதைத்தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார். இப்போது உயர்நிலை செயல்திட்டக் குழுவின் உறுப்பினர். பாலு பேசுகிறபோது சொன்னார். தலைவர் என்ன சொன்னாலும் கேட்பார். தலைவர் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொள்வார். முதலில் பிடிவாதம் பிடிப்பார். எவ்வளவுக்கு எவ்வளவு கேட்க வேண்டுமோ, எவ்வளவுக்கு எவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டுமோ அந்தளவுவிற்குப் பிடிவாதம் பிடிக்கக் கூடியவர் அவர். ஆனால் கடைசியாக தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதைத் தட்டாமல் கேட்கிற ஒரு தூய தொண்டனாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய வேணு அவர்கள்.
பாலு அத்தோடு நிறுத்தி இருக்கலாம். சும்மா இரு என்றாலும் இருந்திடுவார். ஆனால் அவரால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது செய்து கொண்டேதான் இருப்பார். இந்த உடல் நிலையிலும்கூட அவர் தொடர்ந்து அறிவாலயத்திற்கு வந்து, கழக நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொள்கிற நேரத்தில், நானே சில நேரங்களில் கொஞ்சம் கோபமாக "உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அலைகிறீர்கள்?" எனப் பல நேரங்களில் அவரை நான் உரிமையோடு கடிந்து கொண்டதும் உண்டு. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் தன்னுடைய உடலைப் பற்றிகூட கவலைப்படாமல் உடல்நலத்தைப் பற்றிகூட சிந்தித்து பார்க்காமல் தொடர்ந்து கழகத்திற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு உன்னதத் தொண்டர்தான் நம்முடைய கும்மிடிப்பூண்டி வேணு அவர்கள். அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிற வாய்ப்பைப் பெற்றமைக்கு, அதுவும் குறிப்பாக இந்த விழாவிற்குத் தலைமையேற்று, இந்த விழாவின் தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு மணவிழாவை நடத்தி வைத்து, அதற்கு பிறகு வாழ்த்தும் வாய்ப்பையும் பெற்றமைக்காக நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய கழகத்தின் முப்பெரும் விழாவை நடத்துகிறபோது, அந்த முப்பெரும் விழாவைத் தலைமைக் கழகத்தின் சார்பில் நடத்துகிறபோது, கழகத்திற்காக உழைத்த - உழைத்துக் கொண்டிருக்கும், பல்வேறு தியாகங்களை செய்திருக்கும் கழக நிர்வாகிகளை - முன்னோடிகளை எல்லாம் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்குத் தந்தை பெரியார் பெயரிலே - அண்ணா பெயரிலே - நம்முடைய தலைவர் கலைஞர் பெயரிலே – நம்முடைய பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் பெயரிலே - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலே தொடர்ந்து விருதுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு ஆண்டு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றபோது, நம்முடைய வேணு அவர்களுக்குக் கலைஞர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறோம் என்பதும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
1989-இல் முதன்முதலாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அதற்குப் பின்னால் 1996-ஆம் ஆண்டு அதே கும்மிடிப்பூண்டி தொகுதியில் நின்று, வென்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, அந்தத் தொகுதி மக்களுக்காக அவர் ஆற்றியிருக்கும் பணிகள், அந்தத் தொகுதி மக்களுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்த அந்த உணர்வுகள் அதை எல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியிருக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராக விளங்கியவர் நம்முடைய வேணு அவர்கள். நெருக்கடிநிலை நேரத்தில் நம்முடைய ஆட்சியைக் கலைத்துவிட்டு 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் சிறைபிடிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், சென்னை சிறைச்சாலையில் நானும், நம்முடைய பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், மற்றவர்களும் அடைப்பட்டிருந்தபோது, எங்களோடு இருந்தவர்தான் நம்முடைய வேணு அவர்கள். எனவே அப்படிப்பட்ட ஒரு தியாகச்சீலராக இருக்கும் வேணுவின் பேத்திக்கு இன்று மணவிழா நிகழ்ச்சி. இன்றைக்கு சிலர் - சிலர் என்று சொல்வதைவிட முக்கிய பொறுப்பில் இருக்கும் - பிரதமராக இருக்கும் மோடி அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உரையை ஆற்றி இருக்கிறார். குடும்ப அரசியலை நாம் நடத்திக் கொண்டிருப்பதாக. உண்மைதான். இது குடும்ப அரசியல்தான். தி.மு.க. என்பது குடும்பம் குடும்பமாக இருந்து. அதை அவர் சொன்னதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அத்தோடு நிறுத்தாமல், குடும்பம் குடும்பமாக அரசியலை நடத்திக் கொண்டு, அவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள், வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தொனியில் பேசியிருக்கிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய உடன்பிறப்புகளை - கழகத் தோழர்களை எல்லாம் “தம்பி… தம்பி…“ என்றுதான் உரிமையோடு அழைத்தார்கள். அதைத்தொடர்ந்து நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தோழர்களை எல்லாம் - கழகத் தோழர்களை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை உடன்பிறப்புகளையும் “உடன்பிறப்பே… உடன்பிறப்பே…“ என்றுதான் - அது ஆண்களாக இருந்தாலும் - மகளிராக இருந்தாலும் - தங்கையாக இருந்தாலும் - அக்காவாக இருந்தாலும் - அண்ணனாக இருந்தாலும் - தம்பியாக இருந்தாலும் - யாராக இருந்தாலும் அத்தனை பேரையும் “உடன்பிறப்பே… உடன்பிறப்பே…“ என்று ஒட்டுமொத்தமாக அழைத்து அந்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். எனவே இது உள்ளபடியே குடும்ப அரசியல்தான்.
திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளைப் பல்வேறு வகைகளில் - பல்வேறு மாவட்டங்களில் - பல்வேறு நேரங்களில் நாம் நடத்தி இருக்கிறோம். அந்தக் கழக மாநாடுகள் நடத்துகிறபோது மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்றெல்லாம்கூட நடத்தியிருக்கிறோம். அப்படி மூன்று நாட்கள், நான்கு நாட்கள் நடத்தும் அந்த மாநாட்டிற்குக் குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்றுதான் தலைவர் கலைஞர் அவர்கள் அழைப்பார்கள். குடும்பம் குடும்பமாக வருவார்கள். அந்தப் பந்தலிலே உட்கார்ந்து உணவு அருந்துவார்கள். கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்து அந்த பந்தலிலேயே தொட்டில் கட்டி, அந்த தொட்டில் ஆட்டும் காட்சிகளை எல்லாம் தலைவர் பார்த்துப் பரவசம் அடைந்திருக்கிறார்கள். ஏதோ மாநாட்டிற்கு மட்டுமல்ல, போராட்டத்திற்குக்கூட குடும்பம் குடும்பமாக அதில் பங்கேற்று, சிறை சென்று பல கொடுமைகளை எல்லாம் அனுபவித்திருக்கிறோம். இது திராவிட இயக்கத்தில் இருக்கும் வழக்கம். ஆனால் இன்றைக்கு நாட்டின் பிரதமராக இருப்பவர் என்ன சொல்லுகிறார் என்று சொன்னால், தி.மு.க.விற்கு வாக்களித்தால் இதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். “தி.மு.க.விற்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம்தான் வளர்ச்சி அடையும்“ என்று பேசியிருக்கிறார். ஆம், கருணாநிதியின் குடும்பம் என்பதே இந்த தமிழ்நாடுதான். தமிழர்கள்தான்.
50 ஆண்டு காலமாக திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருக்கும் அந்த நிலைகள் எல்லாம் பார்த்துவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் யார் என்றால் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு நூற்றாண்டு விழாவை அவருக்காக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பட்டியலை - சாதனைப் பட்டியலை போட்டால் நேரம் போதாது. அவ்வளவு பெரிய பட்டியல் இருக்கிறது. அந்த வழியில்தான் இன்றைக்கு ஆறாவது முறையாக நம்முடைய ஆட்சி – ‘திராவிட மாடல் ஆட்சி‘யாக தலைவர் கலைஞர் அவர்கள் வழிநின்று நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
குடும்பம்… குடும்பம்… என்று சொல்லிக் கொண்டிருக்கருப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஒரு வருடம் மிசாவில் அடைக்கப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில், அந்தச் சிறையில் இருக்கும் தோழர்களை எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கும் உறவினர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் வந்து முறையாக சந்திப்பது வழக்கம். ஆனால் சென்னை சிறைச்சாலையை பொருத்தவரை இரண்டு மாத காலம் அதற்கு அனுமதி தரவில்லை. ஆனால் அனுமதி உண்டு. நியாயமாக சட்டப்படி அனுமதி தந்தாக வேண்டும். ஆனால் அனுமதி தரவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை விட்டார்கள். “அனுமதி தரவில்லை என்று சொன்னால் சிறைவாசலில் சிறையில் இருப்பவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். என்னுடைய தலைமையில் நடைபெறும்“ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிவிக்கிறார்கள். அதற்குப்பிறகு அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டு அனுமதி தந்தார்கள். முதல் அனுமதி யாருக்கு என்றால் எனக்குதான் கிடைத்தது. கலைஞர் வந்து பார்க்க வேண்டும். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். சிறையில் இருக்கும் அனைவரும் பார்த்ததற்குப் பிறகுதான் என்னுடைய மகன் ஸ்டாலினை நான் பார்க்க வருவேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால், என்னை மட்டும் மகனாகக் கருதவில்லை அவர், சிறையில் இருக்கும் அத்தனை பேரையும் மகனாகக் கருதியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எனவே குடும்ப அரசியல் என்று பொருத்தமாகத்தான் நம்முடைய பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்பொழுது ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 23-ஆம் தேதி பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள் பாட்னாவில் ஒரு கூட்டத்தை கூட்டினார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எந்த வியூகத்தோடு சந்திப்பது என்பதை பற்றி யோசிக்க, கலந்துபேசிட முதற்கட்டமாக, முதல் கூட்டமாக அந்த முயற்சி எடுத்து அந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள். எனவே அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம்தான், இன்றைக்கு பிரதமர் மோடி அவர்களே இறங்கி வந்து பேசும் சூழல் உருவாகி இருக்கிறது. நான் கேட்கிற கேள்வி எல்லாம், மணிப்பூர் மாநிலம் - இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. ஆளுகிற மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா அவர்கள் நடத்தி இருக்கிறார். இதுதான் ஒன்றியத்தில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சணம். இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி அவர்கள். எனவே மதப் பிரச்சனையை அதிகம் ஆக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார்.
நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக உறுதியாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தயாராகி விட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை உங்கள் மூலமாக, இந்த திருமண நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நீங்களும் தயாராக இருக்க வேண்டும், உறுதியோடு இருக்க வேண்டும். இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆளுகிற உங்கள் ஆட்சி - திராவிட மாடல் ஆட்சி, தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை எடுத்துச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறோமோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே இது தொடர ,எப்படி தமிழ்நாட்டில் ஒன்று சேர்ந்து, நம்முடைய ஆட்சியை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி - மதச்சார்பற்ற ஒரு ஆட்சி - நமக்காகப் பாடுபடும் ஒரு ஆட்சி - மாநில உரிமைகளை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கும் நிலையில் நடைபெறும் ஆட்சி உருவாகுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும்… தயாராக வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேரையும் கேட்டுக் கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்துகிற அதேநேரத்தில், நான் மணமக்களை அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். தமிழன் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்துங்கள் என்று இந்த நேரத்தில் மணமக்களை கேட்டுக்கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்“ வாழுங்கள்… வாழுங்கள்… வாருங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்" என்று பேசினார்.