இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தொழில் வளர்ச்சியில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு.அடுத்ததாக செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக உலகளாவிய புகழைப் பெற்றது தமிழ்நாடு.இதோ இப்போது அறிவுலகத்திலும் - அதாவது புத்தக பதிப்பிலும் உலகளவில் தனது சிறகை விரித்துள்ளது தமிழ்நாடு.இதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது, பூரிப்பாக இருக்கிறது.கடந்த 6 ஆம் தேதி இதே மைதானத்துக்கு வந்து புத்தகக் காட்சியைத் திறந்து வைத்தேன்.1000க்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகள் இங்கு இடம் பெற்று - ஒரு வார காலமாக புத்தக விற்பனையைச் செய்து வருகின்றன. இது 46 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஆகும்.இந்த 46 ஆண்டுகளில் இல்லாத ஒன்று இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது. அதுதான் பன்னாட்டு.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் இயற்றல் வேண்டும்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்!
என்ற கவிதை வரிகளை மகாகவி பாரதியார் எழுதி 120 ஆண்டுகள் ஆகிவிட்டது. மகாகவியின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியானது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும் போது இது போன்ற பன்னாட்டு புத்தகக் காட்சிகள் நடப்பது வியப்புக்குரியது அல்ல.இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.அண்மையில் நடந்த சென்னை இலக்கிய விழாவில் 108 புத்தகங்களை ஒரே நேரத்தில் நான் வெளியிட்டேன்.
* திசை தோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் 25 நூல்களும்-
* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் 46 நூல்களும்-
* இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் 59 நூல்களும் -
* சங்க இலக்கிய வரிசையில் பத்துப்பாட்டு நூல்களும் -
* முன்பு வெளியான கலைக்களஞ்சியத்தின் ஆவணப்பதிப்பும் -
* நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகளாக 2 நூல்களும் -
* வ.உ.சி.யின் நூல் திரட்டுகளாக இரண்டு நூல்களும்-
* நாட்டுடமை ஆக்கப்பட்டவர் வரிசையில் 17 நூல்களும் என 173 நூல்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் இந்திய மொழிகளையும் - உலக மொழிகளையும் உள்ளடக்கி 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட இருக்கின்றன. அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளோம். பல்வேறு மொழிகளிலும் உள்ள நூல்களை தமிழில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேகமாக நடைபெற்று வருகின்றன.இவற்றுக்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியை சென்னையில் தொடங்கி இருக்கிறோம். உலகளாவிய அளவில் ஜெர்மனி,இங்கிலாந்து,இத்தாலி,சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் இது போன்ற புத்தகக் காட்சியானது இப்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. இதனை ஆண்டு தோறும் நடத்தி, மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு எனது வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.
எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும்.சொற்களும் வலிமை பெறும். புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல, புதிய சொற்களும் கிடைக்கும்.காலம் தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால் தான் மொழியின் காலமும் நீட்டிக்கும். தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்பிரமணியம் அவர்கள், 'ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழிபெயர்ப்பாளர்களால் தான் ஏற்பட்டது' என்று சொல்லி இருக்கிறார்.அத்தகைய தொண்டை தமிழுக்கு அந்த வகையில் தமிழுக்கு பிறமொழிகளில் இருந்து நூல்கள் வரவும் வேண்டும். பிறமொழிகளில் இருந்து நூல்கள் வரவும் வேண்டும். தமிழ் நூல்கள் பிறமொழிக்கு செல்லவும் வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 'இந்து தமிழ் திசை' நாளிதழில் இந்திய இலக்கியம் குறித்து எழுதி இருந்தார். இந்திய இலக்கியங்களோடு போட்டி போடும் படைப்புகள் தமிழில் ஏராளமாக வெளியாகி இருந்தாலும்-அது இந்திய அளவில் கவனம் பெறாமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கி இருந்தார். உண்மையான காரணம் - நமது தமிழ் இலக்கியங்கள் இந்திய மொழிகளிலும் - உலக மொழிகளிம் மொழிபெயர்க்கப் படாமல் இருப்பதுதான். நம்முடைய தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால் உலக மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும்.படைப்பிலக்கியத்துக்கு இணையான மதிப்பு மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கும் இருக்கிறது. அதற்கு இது போன்ற பன்னாட்டு புத்தக் காட்சிகள் மிகமிகப் பயன்படும்" என்று கூறினார்.