திமுக தகவல் தொழில்நுட்ப அணி (DMK IT WING) சார்பில் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து DMK IT WING நடத்திய TWITTER SPACES நிகழ்ச்சியில் பல திமுக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று இறுதிநாளைத் தொடர்ந்து TWITTER SPACES நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் " திராவிடம் தமிழருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது, சமூக நீதியை நிலை நாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது. அனைவரும் படிக்க அருகருகே பள்ளிகளை உருவாக்கினோம். உயர்கல்வி அடைய கல்லூரி கல்வியை இலவசமாக்கினோம்.பெண்களை ஆசிரியர்களாக உருவாக்கியது திராவிட இயக்கம். கல்வி சமூக நீதி பெண்ணுரிமை திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வருகிறோம்.
ஒரு காலத்தில் நமது கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல எழுத்துக்களாக, மேடைப் பேச்சுக்களாக, மேடை நாடகங்களாக, திரைப்படத்தின் வாயிலாக கொண்டு சென்றோம். இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதனை கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.
தங்களுக்கென வரலாறு இல்லாதவர்கள் கொள்கை இல்லாதவர்கள் பொய்களை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அவ்வாறு பரப்பப்படும் பொய்களுக்கு கலைஞர் தனது கடிதங்கள் மூலமாகவோ அறிக்கைகள் மூலமாகவோ பதிலளித்திருக்கிறார்.ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் காரணம் புதிதாக வரும் இளைஞர்களுக்கு பொய்களை அறிமுகம் செய்யவே. அப்படிப்பட்ட பொய்செய்திகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
ஐடி விங் உறுப்பினர்கள் நிர்வாகிகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். சமூக வலைதளங்களில் திமுகவின் வரலாறுகளையும் செயல்பாடுகளையும் தவறாக திரித்து கூறுபவர்களின் செயல்பாடுகளை நீங்கள் தடுக்க வேண்டும். 73% மக்கள் மொபைல் போனில் செய்தி பார்க்கிறார்கள். 3 முதல் 4 மணி நேரம் சராசரியாக மொபைல் பார்கிறார்கள் என புள்ளி விவரம் சொல்கிறது. எனவே அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். நமது வளர்ச்சியை வட மாநிலங்களோடு ஒப்பிடுவது தவறு என்றாலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலங்கள் எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்றும் தமிழ்நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்றும் தற்போது எப்படி உள்ளது என்பதை பார்த்தாலே திராவிட இயக்கத்தின் சாதனை அனைவருக்கும் தெரியும்.
நமது எதிரிகள் மதவாத சாதிய வாத சக்திகள். மதவாதிகள் சாதியவாதிகள் உங்களை எரிச்சல் ஊட்டுவார்கள், ஆபாசமாக பேசுவார்கள் உங்களை கோபமூட்டுவார்கள். பெண்கள் என்றால் ஆபாசமாக திட்டுவார்கள் பேசுவார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் அளிக்கக்கூடாது. நாமே புது பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை படித்து வாந்தி எடுப்பவர்களுக்கு நாம் பதில் கூற முடியாது. ஒரு செய்தி வந்தால் அந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் பகிர வேண்டும். நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்த தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்" என்று கூறினார்.