தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மு.க.ஸ்டாலின் அரசு அமைந்ததில் இருந்து ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. திமுக அரசின் திட்டங்களை பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்கட்சியினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் காலத்தில் மருத்துவத்துறைக்கு என்று தனி கவனம் செலுத்தினர். அதேபோன்று தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மருத்துவத்துறைக்கு தனியாக கவனம் செலுத்தி வருகிறார்.
மக்களை காப்பாற்றுவதில் சீரிய சிந்தனையோடு தமிழக அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. மக்களின் இருப்பிடத்திற்கு நேரடியாக வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம்." என்று பேசியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் அரசியலுக்காக திமுகவையும் முதலமைச்சரையும் விமர்சித்து வந்தாலும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சமூகவலைதளத்தில் தொடர்ந்து திமுக அரசின் திட்டங்களை பாராட்டியே வருகிறார்கள். இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏ திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டியுள்ளது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.