தமிழ்நாட்டின் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கல்வி பயின்ற பெண்களின் திருமண உதவிக்காக கலைஞரின் தி.மு.க ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அதனை விரிவுபடுத்தி 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில், தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தை மாற்றி, அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேரவிருக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், ஆசிரியர் தினமான இன்று (05.09.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் இந்த முத்தான திட்டத்தை சென்னை இராயபுரத்தில் பாரதியார் மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் 'அரவிந்த் கெஜ்ரிவால்' கலந்து கொண்டு "26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சமூகநீதி என்றால் என்ன என்பதற்கு தலைவர் கலைஞர் ஒரு உதாரணத்தைச் சொன்னார். 'மந்தைகளில் இருந்து ஆடுகளை ஓட்டிவரும் மேய்ப்பர் ஒருவன், ஒரே ஒரு ஆட்டை மட்டும் தனது தோளில் தூக்கி வருவான். அந்த ஆடு நடக்க முடியாததாக இருக்கும்; அல்லது காலில் காயம் பட்டதாக இருக்கும். அதுதான் சமூக நீதி' என்றார்.
அப்படி தோளில் தூக்கி எடுத்துவருவது அந்த ஆட்டுக்குக் காட்டும் சலுகை அல்ல, அந்த மேய்ப்பரின் கடமை ஆகும். அத்தகைய கடமை 'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசுக்கு இருப்பதால் தான் நாம் இத்தகைய திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.
பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு 1000 ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைகிறார். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும்; படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும்; அறிவுத்திறன் கூடும்; திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள்; பாலின சமத்துவம் ஏற்படும்; குழந்தை திருமணங்கள் குறையும்; பெண் அதிகாரம் பெறுவாள்; சொந்தக் காலில் பெண்கள் நிற்பார்கள் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். திராவிட மாடல் ஆட்சியின் மையக் கரு என்பது இதுதான்.
அனைவர்க்குமான வளர்ச்சியின் உள்ளடக்கம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதாகும். அதனை மனதில் வைத்துத்தான் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளும் தகைசால் பள்ளிகளும் இதே நோக்கத்துடன் தான் உருவாக்கப்படுகின்றன.
தனியார் பள்ளிகள் தான் ஸ்மார்ட் வகுப்புகள் இருக்குமா? அரசு பள்ளிகளிலும் நாம் உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் இதனை நான் உருவாக்கி இருக்கிறோம். பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதிரி கல்வி - அது இல்லாதவர்களுக்கு இன்னொரு மாதிரி கல்வி அல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரி கல்விதான் நம்முடைய நோக்கம் ஆகும்.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையானது மகத்தான பல சாதனைகளைச் செய்துள்ளது. இதனை நினைத்து உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன்.
இல்லம் தேடிக் கல்வி
நான் முதல்வன்
பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி
1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்
பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
9 முதல் 12 வரையிலான மாணவர்க்கு வினாடிவினா போட்டிகள்
மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி
ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம்
கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்
வகுப்பறை உற்று நோக்கு செயலி
வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு
முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
இளந்தளிர் இலக்கியத் திட்டம்
வயது வந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம்
கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு தரப்பட்டுள்ளது.
மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி வழங்கப்பட்டுள்ளது.
இதோ இப்போது மாதிரிப் பள்ளிகள்- தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
முதல் கட்டமாக ரூ.171 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளியின் கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அதாவது மாணவர்களின் பல்துறை திறன் வெளிக்கொண்டு வரப்படும். இவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் 4 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்ப்பறை உருவாக்கப்படும். பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான திட்டத்தின் மூலமாக ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட உள்ளன.
பள்ளி வசதி ஏற்படுத்துதல், சமத்துவம், உள்கட்டமைப்பு, கற்றல் விளைவுகள், மற்றும் நிர்வாகம் ஆகிய கோட்பாடுகளில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தர வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதை விட அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வேறு யார் பாராட்டு வேண்டும்?
பள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களின் பெயரை மட்டும் தான் நான் சொன்னேன். இதன் பயன்களை விளக்கிச் சொன்னால் பல மணி நேரம் ஆகும். 'இத்திட்டங்களின் மூலமாக தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது ஒளிமயமானதாக அமையும். இதனை எதிர்காலம் நிச்சயமாகச் சொல்லும்.
தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுடன் தீட்டப்பட்டவை ஆகும். பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டுகிறோம். ஒரு சிற்பி, சிலையைச் செதுக்கும் போது ஒவ்வொரு நொடியும் கவனித்துச் செதுக்குவதைப் போல தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியானது கவனத்தோடு செதுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழ்நாட்டின் இளைய தலைமுறை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகும்" என்றார்.