சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.315 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு மேடையில் பேசிய அவர், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நீதித்துறைக்கே அடையாளமாகச் சுட்டிக்காட்டிச் சொல்லக் கூடிய அளவுக்கு, அழகிய தோற்றத்தோடு, சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.
தொடர்ந்து முதலமைச்சர் பேசியதாவது, "இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான, மகிழ்ச்சியான வரலாற்றில் பதிவாகி இருக்கக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமாக நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்பது மட்டுமல்ல, நாங்களும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பயன்பாட்டுக்காகச் சென்னை பழைய சட்டக்கல்லூரிக் கட்டடத்தைப் புதுப்பித்தல் மற்றும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நான் பெருமையும் அடைந்து கொண்டிருக்கிறேன்.
இந்த வளாகத்துக்குள் வரும்போது, ஏன், இங்கே நின்று கொண்டு இருக்கும்போதும், மிகப்பெரிய கம்பீரத்தையும், உணர்ச்சியையும் நான் அடைந்து கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், 1862-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் நிறுவப்பட்டது இந்த உயர்நீதிமன்றம். அந்த வகையில் பார்த்தால், இது 160-ஆவது ஆண்டு. 160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பை ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே வாய்த்த பெருமை.
நீதி கம்பீரமாக நிலைநாட்டப்படுவதைப் போலவே, இந்த கட்டடமும் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. இந்தோ - சார்சனிக் முறைப்படி கட்டப்பட்ட இந்தக் கட்டடம், முதல் உலகப் போரின் போது எம்டன் போர்க்கப்பலால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்றைக்கும் கூட அதன் நினைவாக பாரிமுனையில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
செஞ்சிவப்பு வண்ணமும், கட்டடத்தின் கூரைகளில் வண்ணக் கண்ணாடிகளும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 175 அடி உயரத்தில் கலங்கரை விளக்கு முன்பு செயல்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நீதித்துறைக்கே அடையாளமாகச் சுட்டிக்காட்டிச் சொல்லக் கூடிய அளவுக்கு, அழகிய தோற்றத்தோடு, நமது உயர்நீதிமன்றக் கட்டடம் இருந்து வருகிறது.
இதே அழகும், கலைநயமும், கம்பீரமும் கொண்டதாகப் புதிய கட்டடம் அமைய வேண்டும் என்று நம்முடைய தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சரை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கம்பீரமான சென்னை உயர்நீதிமன்றக் கட்டடத்துடன், இதற்கு முன்பு சட்டக்கல்லூரி இருந்த வளாகமும் இணைக்கப்படுகிறது. உயர்நீதிமன்றக் கட்டடத்தைப் போலவே சட்டக் கல்லூரிக் கட்டடமும் கம்பீரமானதுதான்.
1891-ஆம் ஆண்டு சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. மெட்ராஸ் சட்டக்கல்லூரி என்று அதற்கு அப்போது பெயர். இந்தியாவுக்கான சட்டத்தை உருவாக்கிக் கொடுத்த மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவாக டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி என்று அதற்குப் பெயர் சூட்டியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த வளாகத்தையும், அதன் பழமை மாறாமல் மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
பாரம்பரியமான கட்டடங்களைப் பாதுகாப்பது என்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பது. அதில் நமது அரசு மிக கவனமாக உள்ளது. பாரம்பரியமான கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு பழமை கொண்ட கோயில்கள், சென்னை கோட்டையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தேவாலயங்கள், தர்காக்கள், அரசு அருங்காட்சியகம், அமீர் மகால், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக கட்டடம், காவல்துறை அருங்காட்சியகம், அரசு கவின்கலைக் கல்லூரி, ஆவணக் காப்பகம், ரிப்பன் கட்டடம், தெற்கு ரயில்வே தலைமையகம், இப்படி எத்தனையோ கட்டடங்கள் சென்னையின் பாரம்பரியக் கட்டடமாக அமைந்திருக்கிறது.
இவை பழமையான நமது பண்பாட்டுச் சின்னங்கள். இவற்றின் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் பழைய சென்னை சட்டக்கல்லூரி வளாகமும் பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்.
நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்டவை! அதற்கான சான்றுகள் தமிழிலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. வள்ளுவரும், இளங்கோவடிகளும், புறநானூற்றுப் புலவர்கள் பலரும், நீதியின் மேண்மையைப் பற்றியும், செங்கோல் வழுவாமையின் சிறப்பினைப் பற்றியும், எப்போதும் உயர்த்திப் பிடித்துள்ளார்கள். அத்தகைய ஒரு திராவிட மரபுவழி வந்த நம் பண்பாட்டில் வளர்ந்த இந்த அரசு, அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து, மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது" என்றார்.