மு.க.ஸ்டாலின்

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன்.. இதோ உங்களுக்கு ஒரு கோரிக்கை..” : முதல்வரின் அசத்தல் பேச்சு!

“கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.” என கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன்.. இதோ உங்களுக்கு ஒரு கோரிக்கை..” : முதல்வரின் அசத்தல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.” என கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

30-வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆற்றிய உரை வருமாறு:

“இங்கு வரவேற்புரை ஆற்றிருக்கக்கூடிய இராதாகிருஷ்ணன் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றிய காட்சியை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் பார்த்தீர்கள். அதிலும் குறிப்பாக, தலைவர் கலைஞரிடத்திலே அவர் கொண்டிருந்த நட்பு, பாசம், அதேபோல் தலைவர் கலைஞர் அவர்கள், அவர் மீது கொண்டிருந்த பற்று, பாசம். அதற்கு எடுத்துக்காட்டாக அவர் இன்னமும் இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு என்னிடத்திலே தேதியைப் பெறுவதற்காக கோட்டைக்கு வந்து, முதலமைச்சர் அறைக்கு வந்து, என்னிடத்திலே வந்து சந்தித்து, என்னிடத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, அவசியம் வர வேண்டும், தலைவர் கலைஞர் அவர்கள் நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்திருக்கிறார். அழைத்தபோது வந்தது மட்டுமல்ல, நாங்கள் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றித் தந்திருக்கிறார். கலைஞருடைய ஆட்சி நடைபெற்ற நேரத்தில் என்னென்ன நன்மைகளை, பலன்களை நாங்கள் பெற்றோம் என்பதையெல்லாம் அவர் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கரிகாலன் விருது வழங்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு வாக்குறுதி தந்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அது நடக்காமல் போய்விட்டது. இப்போது மீண்டும் ஆட்சிமாற்றம் வந்திருக்கிறது. எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்று கலைஞர் அவர்கள் எந்த அடிப்படையிலே அந்த உறுதிமொழியை மக்களிடத்திலே தந்தாரோ, அதை இன்றைக்கு நாங்கள் கூடுதலாக நிறைவேற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

சொன்னதை மட்டுமல்ல, செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. ஏனென்றால், தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். 16 அடி பாய்ந்தால் எங்கள் தலைவருக்கு அது பெருமை இல்லை, 32 அடி பாய்ந்தால்தான் எங்கள் தலைவருக்கு பெருமை கிடைக்கும். அந்த உணர்வோடுதான் நானும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய ஒரு நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கக்கூடிய இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் அவருடன் இணைத்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் நாங்கள் எல்லாம் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த அழைப்பிதழைப் பார்த்தேன். அந்த அழைப்பிதழின் அடியில் ஒரு வரியை நீங்கள் போட்டிருக்கிறீர்கள், “Role of Construction in Nation Building” என்ற வாசகத்தைப் படித்தேன். கட்டுநர்கள், இந்த மாநிலத்தின் - நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவர்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

ஒன்றிய - மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் நீங்கள். ஆம் - நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் ஒன்றிய - மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள். அந்தப் பயணத்தினுடைய ஒரு அங்கமாகவே இந்த 30-வது அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டை அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் தென்னக மையம் நடத்துகிறது. 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தென்னக மையம் - அகில இந்தியக் கட்டுநர்கள் சங்கத்தின் பழமையான மையம் என்பதையும் தாண்டி, “தாய் மையம்” என்பதாலோ என்னவோ - அதே தாய் மனப்பான்மையோடு, மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வேலை வழங்கும் அமைப்பாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல - வேலைவாய்ப்பிற்கும் உறுதுணையாக இருப்பதுதான் இந்தச் சங்கத்தின் சிறப்பு என்பதை நான் உணர்கிறேன். சென்னை மையம் மட்டுமே - 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும்,
1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக விளங்குகிறது என்று சென்னை மையத்தின் தலைவர் சாந்தகுமார் அவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்த மையத்தின் சார்பாக செய்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. அதற்காக நான் அரசின் சார்பிலே வாழ்த்தும், நன்றியும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன்.. இதோ உங்களுக்கு ஒரு கோரிக்கை..” : முதல்வரின் அசத்தல் பேச்சு!

வழக்கமாக, ஒரு கட்டடத்திற்கு தூண் வலு சேர்க்கும் என்று சொல்வார்கள். நீங்கள் மாநில அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டுவதில் வலுசேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதையெல்லாம் மனதில் வைத்துதான்- நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இந்தக் கட்டுநர்கள் சங்கத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து, நீங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து பங்கேற்றாரோ - அதுபோல இன்றைக்கு நான் வந்திருக்கிறேன், இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் வருவேன், எப்போதும் வருவேன், எந்த நேரத்திலும் வருவேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நேரத்தில், சிமென்ட் விலை உயர்வு குறித்து நீங்கள் எல்லாம் கவலை தெரிவித்துக் கோரிக்கை வைத்தீர்கள் அந்த நேரத்தில். மேடையிலேயே உங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, சிமென்ட் விலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். மேடையிலேயே உங்கள் கோரிக்கையை அவர் நிறைவேற்றினார்.

இன்றைக்கு முதலமைச்சராக வந்தவுடன் என்னை அழைத்தீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் – நானும் இங்கே வந்து பங்கேற்க வந்திருக்கிறேன்.

கொரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்தக் கட்டுமானத் தொழில் சந்தித்துக் கொண்டு வருகிறது என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும்.

  • அதனால்தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி (பேக்கேஜ் டெண்டர்) கோரக்கூடிய நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

  • 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் உள்ள சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.

  • முன்தகுதி ஒப்பந்தப்புள்ளிக்கான நிதி உச்சவரம்பு 2 கோடியிலிருந்து
    5 கோடியாக உயர்த்தப்பட்டது.

  • புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல் மண்டல தலைமைப் பொறியாளர்கள் அளவிலேயே மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.

  • ஒப்பந்ததாரர் பதிவு ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று மாற்றப்பட்டது.

  • மதிப்பீடுகள் தயாரிப்பதற்கான தரவினை தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்க குழு அமைக்கப்பட்டது.

ஆனாலும் - கொரோனா காலத்தின் தாக்கத்திலிருந்து கட்டுமானத்துறை இன்னும் மீளவில்லை என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.

அதை மனதில் வைத்துக் கொண்டு, நீங்கள் ஒரு கோரிக்கையை என்னிடம் வைத்தீர்கள். ஒப்பந்ததாரர் வகுப்பு-1ல் பண வரம்பு 10 முதல் 25 கோடி ரூபாயாகவும், செல்வநிலைச் சான்று 1 கோடி ரூபாயாகவும், புதிய வகுப்பு-1A ஏற்படுத்தி அதற்கு பண வரம்பு 25 கோடி ரூபாய்க்கு மேல் நிர்ணயித்து - அதுக்கு solvency 3 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்க அகில இந்திய கட்டுநர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். பிற வகுப்புகளுக்கு தற்போதுள்ள solvency 30 விழுக்காட்டில் இருந்து -10 விழுக்காடாக குறைக்க கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

அவரே சொன்னார், கலைஞருடைய வாரிசு நான் என்று. எனவே, அவர் வழியிலே இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே நான் முத்தமிழறிஞர் கலைஞருடைய மகன் - ஆகவே இந்த மேடையிலே இப்போது நான் அறிவிக்கிறேன்.

அகில இந்தியக் கட்டுநர் கழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து- புதியதாக வகுப்பு 1-A ஏற்படுத்தி, solvency 10 விழுக்காடாக - அதாவது 2.50 கோடி ரூபாய் எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இதர வகுப்புகளுக்கான Solvency, அனைத்து நிலை ஒப்பந்ததாரர்களும் பயன்பெறக்கூடிய வகையில்
30 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். இப்போது நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கப் போகிறேன். இப்போது நான் வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால், ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர நீங்கள் முன்வர வேண்டும். தொன்மை வாய்ந்த இந்த மையம்- கட்டுமானப் பணிகளை தரத்துடன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே, நீங்கள் இந்த அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டிக் கொடுத்து - வலிமை மிக்க கட்டடங்களாக கட்டிக் கொடுத்து - இந்த அரசுக்கு, மீண்டும் சொல்கிறேன், இந்த அரசுக்குத் “தூண்”போல் நீங்கள் துணை நிற்க வேண்டும்.

ஆகவே, இன்றைக்கு தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடிய ஆட்சி, மக்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி, இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள். கலைஞர் மேற்கோள் காட்டிய செய்திகளை, எங்களை எல்லாம் ஆளாக்கிய அறிஞர் அண்ணா அடிக்கடி எடுத்துச் சொல்லக்கூடிய அந்த உணர்வை மக்களிடம் செல், மக்களோடு சேர்ந்து வாழ், மக்களுக்காக பணியாற்று. ஆகவே, நான் மட்டுமல்ல, பொதுவாக, இந்த ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்று சொல்வதை விட, என் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி என்று சொல்வதை விட, எங்களுடைய ஆட்சி என்று சொல்வதை விட, நான் எப்போதும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது, இது நமது ஆட்சி, மக்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி. அந்த உணர்வோடு தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்களும் எப்போதும் போல் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் துணை நிற்கக்கூடியவர்கள். எனவே, அதைத் தொடர்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும். உங்களுடைய ஊக்கமும் ஆக்கமும் எங்களுக்குக் கிடைத்தால் தான் நாங்கள் பணியாற்ற முடியும், நாங்கள் பணியாற்றினால் தான் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதை நினைவுப்படுத்தி, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய நல்வாய்ப்பை பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்."

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories