மு.க.ஸ்டாலின்

“நீட் தேர்வு குறித்து விவாதிக்க EPS, OPS-க்கு திராணி இருக்கா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

“நீட் தேர்வு குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திராணி உள்ளதா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

“நீட் தேர்வு குறித்து விவாதிக்க EPS, OPS-க்கு திராணி இருக்கா?” - 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்ததென்று சொல்லப் ‘பச்சை பொய்’ பழனிசாமிக்கும் - ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திராணி உள்ளதா?” என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (10-02-2022) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“கடந்த ஜனவரி 10-ஆம் நாள் அன்று ஈரோட்டில் நடைபெற்ற விழாவிலும் காணொலி மூலமாக நான் கலந்துகொண்டேன்.

நேரடியாக நானே ஈரோடு வந்து அந்த விழாவில் பங்கேற்பதாகத்தான் அமைச்சர் முத்துசாமி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். சனவரி முதல் வாரத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கூடுதலாக உயர்ந்ததின் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் வந்தது. ஆனாலும் விழாவைத் தள்ளி வைக்கக் கூடாது என்பதால் - நான் கோட்டையில் இருந்து காணொலி மூலமாக விழாவில் பங்கேற்றேன்.

அன்றைய தினம் ஏராளமான பணிகளை தொடங்கி வைத்தேன். மொத்தம் 66 முடிவுற்ற பணிகள் ஈரோடு மாவட்டத்தில் அன்று திறந்து வைக்கப்பட்டன. இவை மொத்தம் 104 கோடி ரூபாய் மதிப்பிலானவை ஆகும். அதேபோல் 45 கோடி ரூபாய் மதிப்பிலான 365 பணிகளுக்கு அன்றைய தினம் அடிக்கல் நாட்டினேன்.

பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 40 ஆயிரத்து 75 பயனாளிகளுக்கு 20,976 கோடியே 11 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன்.

மலைவாழ் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் - கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலங்காடு வரையிலான சாலை அமைக்கும் பணி இதில் முக்கியமானது ஆகும். மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது.

தாளவாடி வட்டாரம் பையணாபுரம் ஊராட்சியில் 129 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப் பிரமாண்டமான வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனை வளாகத்தில் கோவிட் மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. அரசுடன் இணைந்து ரோட்டரி சங்கம், ஈரோடு பவுண்டேஷன், அமைதிப்பூங்கா அறக்கட்டளை, கொங்கு கல்வி அறக்கட்டளை போன்ற அமைப்புகள் உதவிகள் செய்தார்கள்.

2008-ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக ஈரோடு தரம் உயர்த்தப்பட்டது. 2011 முதல் விரிவடைந்த மாநகராட்சியாகச் செயல்பட்டுவருகிறது. இம்மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் வசதிக்காக மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியானது 1954-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியினை அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி கடந்த 20 ஆண்டிற்கும் மேலாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இக்கல்லூரியின் நீண்டகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இதனை அரசுக் கல்லூரியாக அறிவித்தேன். தென்னாட்டு சாக்ரடீஸ் ஈரோட்டுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் இந்தியப் பெருந்தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை நான் திறந்து வைத்துள்ளேன்.

மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

சத்தியமங்கலம் - தாளவாடி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஈரோடு மாநகரப் பகுதியில் செயல்படுத்தியுள்ளோம்.

மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காகத் தனியாக வாட்சப் எண் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் அளிக்கின்ற புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல் - புதிய பேருந்துகள் விடுதல் - புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுதல் - புதிய நியாயவிலைக் கடைகள் அமைத்தல் - எனப் பல்வேறு பணிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன.

இதை எல்லாம் இங்கு நினைவூட்டுவதற்குக் காரணம் - மக்களது கோரிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் செய்து தரும் அரசுதான் தி.மு.க. அரசு என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதற்குத்தான்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக – இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் அல்ல - மக்களுக்கு எந்நாளும் நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். தேர்தலுக்காக உருவான இயக்கமல்ல திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழர்களின் இன உரிமையை மீட்பதற்காக - தமிழ்மொழியைக் காப்பதற்காக - தமிழ்நாட்டை இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக - அனைத்து வளங்களும் கொண்ட தமிழ்நாடாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தலுக்காக உருவான இயக்கம் என்றால் கட்சி ஆரம்பித்த உடனேயே நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பங்கெடுத்திருப்போம். முதலாவது சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கவில்லை. சட்டமன்ற நாடாளுமன்றங்களுக்கு வெளியே மக்கள் மன்றத்தில் கழகம் வாதாடியது; போராடியது; சிறைச்சாலைகளைக் கண்டது. சித்திரவதைகளை அனுபவித்தது.

இத்தகைய சூழலில் மக்கள் ஆதரவு நமக்குப் பெருகி நின்றாலும் - நம்முடைய எண்ணங்களைச் செயல்படுத்திக் காட்டுவதற்கு சட்டமன்ற நாடாளுமன்றத்துக்குள் நாம் நுழைய வேண்டும்; அங்கும் நமது எண்ணங்களைச் சொல்லியாக வேண்டும் என்று திட்டமிட்டதன் அடிப்படையில்தான், தேர்தலில் பங்கெடுத்தோம். வெற்றி வாகை சூடினோம். சந்தித்த முதல் தேர்தலிலேயே 15 சட்டமன்ற உறுப்பினர்கள் - இரண்டாவது தேர்தலில் 50 சட்டமன்ற உறுப்பினர்களை வென்ற நாம் - மூன்றாவது தேர்தலில் 138 உறுப்பினர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம். அண்ணா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1971 தேர்தலில் 184 இடங்களைப் பிடித்து மகத்தான வெற்றியை அடைந்தோம். தற்போது ஆறாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றித் உங்களின் அன்பாலும் ஆதரவாலும் நான் இன்றைக்கு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

1967-ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலம் என்பது நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கும் பொற்கால ஆட்சியாகத்தான் அமைந்துள்ளது. இனியும் அப்படித்தான் அமையும். இனித் தமிழகத்தில் நிரந்தரமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம். இது ஏதோ நான் முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்பதற்காகவோ - சிலர் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ் மண்ணில் - இம்மண்ணின் மணத்துடன் - குணத்துடன் - நிறத்துடன் - உணர்வுடன் உருவான இயக்கம். தமிழ்நாட்டுக்கு எது தேவை - தமிழ் மக்களுக்கு எது வேண்டும் - தமிழர்களின் பண்பாட்டுக்குப் பொருத்தமானது எது - என்பதை உணர்ந்த இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்தான். இது தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களுக்கும் - திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது ஒரு ரத்த பந்தம். அதனை யாராலும் பிரிக்க முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 38 இடங்களைப் பெற்றோம். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்துள்ளோம். கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலானது - அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோதே நடந்தது. அப்போதே 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இடங்களை வெற்றி பெற்று பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் - முழுக்க முழுக்க தி.மு.க., மற்றும் நமது கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தி உங்களிடம் இருந்து வந்தாக வேண்டும்.

மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 1,374 பேரும் - நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் 3,843 பேரும் - பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் 7,608 பேரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அதாவது 12 ஆயிரத்து 825 பேர் பல்வேறு பொறுப்புகளில் உட்கார இருக்கிறார்கள். இந்தப் பதவிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள், நமது கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்.

நான் சுயநலமாகச் சிந்திக்கிறேன் – பேராசைப்படுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நாம் பொதுமக்களின் நன்மைக்காகத்தான் இதைச் சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கிறது. நல்ல பல திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இனியும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப் போகிறது. இந்த நன்மைகள் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அதற்கு உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் திரவாவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களாக, கூட்டணிக் கட்சியினராக இருந்தால்தான் அது முறையாக சிறப்பாகச் சென்றடைய எளிதாக இருக்கும். எதிர்க்கட்சி வேட்பாளர் வந்தால் - மக்களை மறந்து தேவையற்ற அரசியல் செய்யத் தொடங்குவார். மக்களுக்கு நன்மைகள் போய்ச்சேராத வகையில் தடுக்கப் பார்ப்பார்கள், இடையூறுகளை ஏற்படுத்த முயல்வார்கள். எனவேதான் அனைவருமே நம்முடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற வேண்டும் என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி – பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்த பழனிசாமி – தனது அவல ஆட்சியின் தோல்வியை மறைக்க – தானும் தனது அமைச்சர்களும் ஊழல்களை மறைக்க – தினம் ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இவரது பொய் சொல்லும் குணத்தைப் பார்த்து மக்கள் இவரை பச்சைப் பொய் பழனிசாமி வருகிறார் என்றுதான் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு மக்களை ஏமாற்றியவர்தான் இந்தப் பச்சைப் பொய் பழனிசாமி.

பொய் சொல்லுவது ஒன்று மட்டுமே அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிப் பொய் சொன்னார். நீட் மசோதா பற்றிப் பொய் சொன்னார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றிப் பொய் சொன்னார். அண்ணா என்னை விட்டுடுங்க என்று அப்பாவிப் பெண் ஒருவர் கதறும் அளவுக்கு அந்த சம்பவத்தைக் கேட்டு நாம் அனைவரும் துடித்துப் போனோம். ஆனால் நெஞ்சில் துளி ஈரமும் இரக்கமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பொய் சொன்னது யார்? அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? பச்சைப் பொய் பழனிசாமிதானே? எல்லாவற்றுக்கும் மேல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கிலேயே பொய் சொன்ன நவீன கோயபல்ஸ்தான் பச்சைப்பொய் பழனிசாமி.

அதேபோல, நீட் தேர்வு விவகாரத்திலும் திரும்பத் திரும்ப ஒரு பொய்யை அ.தி.மு.க சார்பில் சொல்லி வருகிறார்கள். காங்கிரசும் தி.மு.க.வும் சேர்ந்துதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக இரத்து செய்ததாகவும் சட்டமன்றத்திலேயே இப்போது பொய் சொன்னார்கள். உண்மையில, நுழைவுத் தேர்வைச் சட்டப்பூர்வமாக ரத்து செய்தது முத்தமிழறிஞர் கலைஞர்தான். நுழைவுத் தேர்வு என்பது எந்த வடிவத்திலும் வரக்கூடாது என்பதுதான் முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை.

அதனால்தான் நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து- 12-ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை எனச் சட்டம் போட்டார் முத்தமிழறிஞர் கலைஞர். இந்திய மருத்துவக் கவுன்சில் - இப்படி ஒரு தேர்வை நடத்த 2010-ஆம் ஆண்டு ஆலோசனையாகச் சொன்னபோதே - தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், கடுமையாக எதிர்த்தார். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் - அன்றைய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களுக்கும்- தலைவர் கலைஞர் அவர்கள் 15.8.2010 அன்று கடிதம் எழுதினார். இதுபோன்ற தேர்வு முறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அந்தக் கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் கலைஞர் அவர்களின் எதிர்ப்பை மனப்பூர்வமாக அன்றைய காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. 27.8.2010 அன்று - அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்கள், முதலமைச்சர் கலைஞருக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.

"மருத்துவப் படிப்பில் - அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது அகில இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த நடவடிக்கையாகும். எனினும் முதலமைச்சர் கலைஞர் அவர்களது ஆலோசனைப்படி- அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் - மாநில அரசுகளுடனும் - சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

4.1.2011 அன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களுக்கு - முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மீண்டும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் - முதுகலைப் படிப்புகளின் சேர்க்கைக்கான அகில இந்தியப் பொது நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார். அதோடு நிற்கவில்லை. உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு - 6.1.2011 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு தடை வாங்கினார். பின்னர், அந்த வழக்கு உச்சநீதிமன்றதுக்குப் போனது. ஐதராபாத்தில் 2011-ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில்- அகில இந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டது. அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று - அன்றைய காங்கிரசு அரசு 13.1.2011 அன்று அறிவுறுத்திக் கடிதம் அனுப்பியது.

இதுதான் உண்மையாக நடந்தது. இந்த நிலையில் - நீட் தேர்வு செல்லாது என்று தி.மு.க. அரசும் தொடுத்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளிச்சுச்சு. 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசில் ஆட்சி மாறியது. இதனால் காட்சியும் மாறியது. நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி - தனியார் நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றம் சென்றது. 11.4.2016 அன்று தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். இதன்பிறகு 24.5.2016 அன்று நீட் தேர்வை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அதன்பிறகுதான் நீட் தேர்வு உயிர்பெற்றது. அதாவது 2011-ஆம் ஆண்டே இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அதை 2016-ஆம் ஆண்டு தூசித்தட்டி எடுத்தது பா.ஜ.க அரசுதான். அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்ப்பு தெரிவிச்சார். அதை நான் மறுக்கவில்லை. ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் கொடுத்தார். அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு - பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய பிறகு - நீட் விலக்கு மசோதாவைத் தயாரித்து அனுப்பினார்கள். அதை டெல்லி நிராகரித்ததை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். இது சம்பந்தமாக நான் சட்டசபையில் கேட்டபோதுகூட, இன்னும் டெல்லியில் இருந்து பதில் வரவில்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால், இதுதொடர்பான வழக்கு ஒன்னு உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஒன்றிய அரசின் வழக்கறிஞர், "நாங்கள் எப்போதோ அதைத் திரும்ப அனுப்பி விட்டோம்" என்று சொன்னார். அப்படி அவர் சொன்னதற்குப் பிறகுதான்- இந்த உண்மையே வெளியில் தெரிந்தது. கடந்த 8-ஆம் தேதி, இதைச் சட்டமன்றத்தில் நான் கேட்டபோதும் அ.தி.மு.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆளுநரிடம் கேட்பதற்கு பயந்து - ஒன்றிய பாஜக அரசிடம் கேட்பதற்கு பயந்து - பதுங்கியதன் விளைவாகத்தான் நான்காண்டுகாலமாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடந்ததே தவிர வேறல்ல!

“தி.மு.க. ஆட்சி... தி.மு.க. ஆட்சி..." என்று சொல்லும் ‘பச்சை பொய்’ பழனிசாமியும் - ஓ.பன்னீர்செல்வமும்- தி.மு.க. ஆட்சியில் - தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்ததென்று சொல்லத் திராணி உள்ளதா? ஏழை, எளிய - கிராமப்புற மாணவர்கள் - அரசுப் பள்ளி மாணவர்கள் - மருத்துவக் கல்லூரிக்குள் கடந்த நான்காண்டுகள் நுழைய முடியாமல் போனதற்கு யார் காரணம்? அதற்குப் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதில் சொல்லட்டும்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய உழவர்களைத் தரகர்கள் என்று சொன்னது, கொரோனா காலத்தில் நேரம் காலம் பாராமல் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தன்னுடைய இரக்கமற்ற சொற்களால் அவமானப்படுத்தியது என்று எத்தனையோ செயல்களைச் செய்த பழனிசாமி, இப்போது அவர் செய்த கோமாளிக்கூத்துகளை மக்கள் மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைத்து தினம் ஒரு தகவல் போல, தினம் ஒரு பொய் என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார். கூச்சமே படாமல் தி.மு.க மீது புகார் சொல்லி வருகிறார். கழக ஆட்சி அமைந்து ஓராண்டு கூட ஆகவில்லை. அதற்குள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிவிட்டோம் என்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவுகள் வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னாடியே இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தவன்தான் இந்த ஸ்டாலின். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றக் கையெழுத்து போட்டேன். கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் வழங்க கையெழுத்து போட்டேன். ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துக் கையெழுத்து போட்டேன். நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று கையெழுத்து போட்டேன். நான்காவதாக, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகக் கையெழுத்துப் போட்டேன். ஐந்தாவதாக, என்னிடம் வழங்கப்படும் மனுக்களுக்கு நூறு நாட்களுக்குள் தீர்வுகாண புதிய துறையை உருவாக்கிக் கையெழுத்து போட்டேன். இப்படி, இன்று வரை பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கு. இது எல்லாம் உங்களுக்குத் தெரியும். நமது அரசின் அறிவிப்புகளால் பயனடைந்த மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அனைவரும் நமது செய்யும் நலத்திட்டங்களை - நிறைவேற்றும் வாக்குறுதிகளைச் செய்திகளில் பார்த்து தெரிந்துகொள்கிறீர்கள். பத்திரிகைகளில் படித்துத் தெரிந்துகொள்கிறீர்கள். ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாணயத்தைப் படித்த பழனிசாமியால் தினமும் வரும் செய்தித்தாள்களைக் கூட படிக்க முடியல. பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கம்பெனி சீரழித்துவிட்டுப் போன நிதிநிலைமையை நாம் இப்போது சரி செய்துகொண்டு இருக்கிறோம். மீதம் இருக்கும் வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றப் போகிறோம். இது கலைஞர் மகனான இந்த ஸ்டாலினின் அரசு. நாங்கள் சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். மக்கள் நலனை மனதில் வைத்து சொல்லாததையும் செய்யும் அரசுதான் இது. இது ஸ்டாலினின் அரசு என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களின் அரசு.

ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், சொன்னதையெல்லாம் பத்தாண்டுகால அவல ஆட்சியில் நிறைவேற்றினார்களா? எல்லோருக்கும் செல்போன் கொடுப்பதாகச் சொன்னார்கள். தமிழ்நாட்டில் எவர் ஒருவருக்காவது செல்போன் கிடைத்ததா? பழனிசாமி கொடுத்த செல்போன் யார் வீட்டிலாவது இருக்கிறதா?

இலவசமாக அம்மா மினரல் வாட்டர் கொடுத்தார்களா?

கைத்தறித் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் கொடுத்தார்களா?

எதைக் கொடுத்தார்கள்?

செய்தது எதையாவது ஒழுங்காகச் செய்தார்களா என்றால் - அதுவுமில்லை.

கழிவறை போன்ற இடத்தில் - மயானச் சடங்குகள் நடக்கும் இடத்தில் - குறுகிய சந்தில் - கழிவுநீர்க் குட்டைக்குப் பக்கத்தில் – என மினி கிளினிக்குகள் என்ற பெயரில் எதையோ அமைத்தார்கள். புதிதாக மருத்துவர்களையோ - செவிலியர்களையோ வேலைக்கு எடுக்காமல் மற்ற இடங்களில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களை இங்கு மாற்றி 200 மினி கிளினிக்குகள் உருவாக்கியதாக கணக்கு காட்டிவிட்டார்கள்.

ஒரு திட்டத்தை எப்படித் தீட்டுவது - எப்படி உருவாக்குவது என்பதே தெரியாத அதிமுகவின் கையில் அன்று ஆட்சி இருந்தது. ஆனால் நமது தலைவர் கலைஞர் அவர்கள் உழவர்களுக்கு இலவச மின்சாரம் என்று சொன்னார். கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள் அனைவரும் அந்த நன்மையை அனுபவித்து வருகிறார்களா இல்லையா!

மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளே கையெழுத்து போட்டேன். இந்த ஒன்பது மாத காலமாக ஒவ்வொரு மகளிரும் – நான் ஏதோ அவர்களுக்குச் சலுகை என்று சொல்லமாட்டேன் - அந்த உரிமையை பயன்படுத்தி வருகிறார். பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டில் இருந்து 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாகப் போக்குவரத்துத் துறைக்கு வருமானம் குறைகிறது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் பெண்கள், இந்தச் சமூகத்தில் முன்னேறுவதன் மூலமாக நாட்டுக்குக் கிடைக்கும் நன்மையை மனதில் கொண்டு பார்ப்பதால் இதனை இழப்பாக நாங்கள் கருதவில்லை. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்பாக, கருவியாகத்தான் இதனைப் பார்க்கிறோம். மக்கள்நலத் திட்டங்களுக்கு ஆகும் செலவு என்பது ஒரு வகையில் முதலீடுதான். பெண்கள் வளரும்போது நமது மாநிலமும் சேர்ந்தே வளர்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை உருவாக்கினோம். கிராமம் கிராமமாக, தெருத்தெருவாக, வீதி வீதியாக, வீடு வீடாக மருத்துவப் பணியாளர்கள் செல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். ஐம்பது லட்சம் மக்களுக்கு மருத்துவ உதவி செய்துள்ளோம். இப்படித்தான் ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டும். மாறாக, கணக்குக் காட்டுவதற்காக மினி கிளினிக் 200 என்று போர்டு வைப்பதால் எந்தப் பயனும் கிடையாது. அப்படி, பச்சை போர்டு மட்டுமே வைத்து பாவ்லா காட்டிய ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. அதனால்தான் நமது தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவுக்கு ரெட் சிக்னல் காட்டினார்கள்.

அதிமுக ஆட்சியானது தமிழ்நாட்டில் கொள்ளை அடித்தது. டெல்லிக்கு தலையாட்டியது. அதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய ரெய்டுகளின் மூலமாக அவர்களின் இலட்சணம் வெளிச்சத்துக்கு வரவில்லையா?

வணிகவரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி வீட்டில் 34 லட்சம் ரூபாய் பணம், 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது. 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடந்த சோதனையில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் பணமும், தங்கநகைகள் 6 கிலோ, சுமார் 14 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை கொடுத்திருக்கிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்சம் ரூபாயும், 2 கோடிக்கான வைப்புத் தொகை, நிலப்பதிவு ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 23 லட்ச ரூபாய் பணமும், 5 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் ஆவணங்களும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நிலக்கரியைக் காணாமல் போன மர்மமும் இன்னும் விலகவில்லை.

இவர்கள் அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் வாயைத் திறந்தாலே வன்முறையைத் தூண்டும் அமைச்சராக இருந்தாரே - ராஜேந்திர பாலாஜி என்கிற ஒருவர்! ஆட்சி மாறியதும் அவர் தனது மஞ்சள் சட்டையைக் கழற்றிவிட்டு மாறுவேடத்தில் தலைமறைவு ஆனதைத்தான் நீங்கள் பார்த்தீர்கள்? வேலை வாங்கித் தருவதாக அவர் நடத்திய மோசடி தொடர்பாக பலரும் புகார் கொடுத்துள்ளார்களே!

இவர்களின் கையில்தான் கோட்டையும் ஆட்சியும் இருந்தது. எண்ணற்ற முறைகேடுகளும் நடந்தன. இந்தக் கும்பலிடம் உள்ளாட்சி அமைப்புகளைக் கொடுத்துவிடாதீர்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஈரோடு மாவட்டம் என்பது கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்தாக வேண்டும். ஈரோடு என்பது திராவிட இயக்கத்தின் தாய் வீடு. தந்தை பெரியார் பிறந்த ஊர். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர். நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பயின்றதும் ஈரோட்டில்தான். அப்படிப்பட்ட ஈரோட்டுக்கு இப்போது என்ன பெருமை தெரியுமா? இப்போது ஈரோட்டு அரசியல்தான் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடக்கிறது. தந்தை பெரியாரின் சமூகநீதிதான் இன்று உத்தரபிரதேச அரசியலில் எதிரொலிக்கிறது. நாட்டில் இன்றைக்கு மதவாதத்துக்கு எதிர்ச்சொல் தந்தை பெரியார்தான். அதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றிவைத்த சமூகநீதி தீபம்தான்.

இந்த மாபெரும் தலைவர்களின் வழியைப் பின்பற்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்வியில் உறுதிசெய்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். அந்தப் பெருமையோடுதான் தந்தை பெரியார் மண்ணில் அமர்ந்துகொண்டு இருக்கும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதே உணர்வோடு ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றியை வாரி வழங்குங்கள். உதயசூரியனை உங்களது இதயசூரியன் என்று நெஞ்சில் ஏந்திக் களப்பணி ஆற்றுங்கள். கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மதச்சார்பற்ர முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். வெற்றிவிழாவில் நிச்சயம் உங்களைச் சந்திக்க நான் வருவேன். வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க தமிழ்நாடு! என்று முழங்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!”


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories