மு.க.ஸ்டாலின்

"சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்.. இனியும் சமரசமின்றி போராடுவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!" என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்.. இனியும் சமரசமின்றி போராடுவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!" என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன். கடந்த பல ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது சமூகநீதியைப் பற்றிய புரிதலும் ஆழமான பற்றுதலும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி! சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!

இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, உச்சநீதிமன்ற வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு, வாதிட்டு வென்ற இயக்கம் தி.மு.க. என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க.வும் சமூகநீதியின்பால் பற்றுகொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்குத் தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி!

மிகுந்த மனநிறைவோடு இந்தப் போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்.. இனியும் சமரசமின்றி போராடுவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை, ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தி.மு.க. வாதாடி வந்ததைப் பெருமையோடு நினைவுகூர்கிறேன்.

உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்காடி வென்றோம். இப்போது இறுதிக்கட்டமாக அதைத் தடுக்கும் முயற்சியையும் உச்சநீதிமன்றத்தில் வாதாடி, கழகம் முறியடித்திருக்கிறது.

நமது கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு தொடக்கத்தில் உணர மறுத்தது வேதனைக்குரியது. சென்னை உயர் நீதிமன்றத்திலும்கூட இடஒதுக்கீடு வழங்க மறுத்து வழக்காடியது. இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதிசெய்த பிறகும்கூட, ஒன்றிய அரசு அதை அமல்படுத்த முன்வரவில்லை. அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும்கூட தி.மு.க. தொடர்ந்தது.

அக்கறையின்மையாலும் ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சியின் காரணமாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி இப்போது துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு முனைப்பு காட்டி இருந்தால், இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு உரிய பலனைப் பெற்றிருப்பார்கள்.

சமூகநீதியின் முன்னோடி மாநிலமான தமிழ்நாடும், சமூகநீதியில் மாறாத பற்றைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்துள்ள பங்களிப்பு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும்.

அண்மைக் காலத்தில் எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த மாநில மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமன்றி, எம்.பி.பி.எஸ். படிப்பிலும் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும் அதன் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி 100 விழுக்காடு இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலை. அதை நோக்கிப் போராடுவதோடு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் – தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் எதிர்காலத்தில் முயற்சிகளைத் தொடர்வோம்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல்சட்டத்துக்கு எதிரானது. இதுதொடர்பாகத் தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கு அரசியல்சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது. நேற்று நடந்த வாதத்தின்போதும்கூட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டையும் - உயர்சாதியினருக்கான ஒதுக்கீட்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும், சமமற்ற இரு பிரிவினரை சமமான தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும் கழகத்தின் சார்பில் வாதாடிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எடுத்துரைத்துள்ளார்.

வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் அரசியல்சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் அவர் நினைவூட்டி, தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். (Rs.8 lakh criteria so far as OBCs is concerned, EWS and OBC by no stretch of imagination can be considered same. They stand on a different footing. It's like trying to consider unequal as equal. So far as EWS is concerned, economic criteria cannot be sole criteria. This is also laid in Indira Sawhney case).

வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள விரிவான விசாரணையின் போதும், அரசியல்சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும், 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தி.மு.கழகம் விரிவான வாதங்களை வைக்கும், அந்த அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்லும்.

சமூகநீதி என்பது நெடும் பயணம்; தொடர் ஓட்டம். வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாத் தளங்களிலும் தங்கள் பங்கைப் பெற்று சமூக மக்களாட்சியை நிலைநிறுத்தும் வரையிலும் நமது பணியையும் போராட்டத்தையும் சமரசமின்றித் தொடர உறுதி ஏற்போம்.

இந்தியா சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும்! திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு என்றும் போராடும்!

banner

Related Stories

Related Stories