மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் நாளை திருச்சி வரும் முதலமைச்சர் தஞ்சை மாவட்டம் கல்லணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து டெல்டா மாவட்ட சாகுபடிக்கான தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
பின்பு வல்லம் அருகே உள்ள முதலை முத்து வாரி வடிகாலில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து பின்பு கல்லணை கால்வாய் வெண்ணாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ள இடங்களை இன்று முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சை சரக DIG பிரவேஸ்குமார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தான் ஆய்வு மேற்கொள்ள வரவிருப்பது குறித்து தி.மு.கழகத்தினர் எவரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதில், “ தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் காவிரிப் படுகைக்கு வருகிறேன். கழகத்தினர் நேரில் வர வேண்டாம்! பேரிடர் காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்; காலம் மாறும்; உங்கள் அன்பு முகம் காண வருவேன்! #LetterToBrethren ” எனக் குறிப்பிட்டுள்ளார்.