மு.க.ஸ்டாலின்

“5 மாவட்டங்களில் ஆய்வு” : தி.மு.க-வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வரும் எனக்கு வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“5 மாவட்டங்களில் ஆய்வு” : தி.மு.க-வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு கழகத் தொண்டர்கள் வரவேற்பளிப்பது, சந்திக்க முயல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை நாளை (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் கழக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.

எனவே, கழக உடன்பிறப்புகள் நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் – இந்தப் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் கழக கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கழக உடன்பிறப்புகளான உங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும் - பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை கழகத்தினர் தவறாது கடைபிடித்திட வேண்டுகிறேன்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories