மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனா நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சராக பதவியேற்றவுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில்,
“தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன்.
தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சென்னையில் Remdesvir போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன்.”
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.