மு.க.ஸ்டாலின்

"இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை; கொரோனாவை கட்டுப்படுத்துங்கள்" : மு.க.ஸ்டாலின்

'காபந்து சர்க்கார்' இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை; கொரோனாவை கட்டுப்படுத்துங்கள்" : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"மே 2-க்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் - அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை; 'காபந்து சர்க்கார்' இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று வருகின்ற செய்திகளும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது. நேற்றைய தினம் மட்டும், தமிழ்நாட்டில் 13776 பேர் பாதிக்கப்பட்டு - 78 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த 10-ஆம் தேதி 5989 ஆக இருந்த பாதிப்பு இன்றுவரை இரு மடங்காகி - மூன்று மடங்கையும் தொடும் அளவிற்கு இந்தத் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது.

ஒரு நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகில் முதல் நாடாக வந்திருப்பது இன்னொரு பக்கம் பேரதிர்ச்சியளிக்கிறது. முதல் கொரோனா தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் - அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - அப்போது கிடைத்த அனுபவங்கள் எல்லாவற்றையும் வைத்து ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரிக்கத் தவறிவிட்ட காரணத்தால்தான் இந்த இரண்டாவது கொரோனா அலை தாக்குதல் தீவிரமாகி - தமிழகம் இவ்வளவு மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மட்டுமே நேற்றைய தினம் 3,842 பேர் பாதிக்கப்பட்டு - செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் அதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அனைத்து மாவட்டங்களுமே கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. வட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும், மருத்துவமனைகளில் படுக்கைக்கும் மக்கள் தடுமாறும் சூழ்நிலையைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் சுகாதார உட்கட்டமைப்பு நமக்கு வரப்பிரசாதம் என்றாலும் - அதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே மக்களை இந்த கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவதால் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைவதற்கும் - தற்போது அதிகாரிகள் செயல்பாட்டிற்கும் இடையே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது. ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிப்பது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்குவது, போதிய எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது, கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட 'தற்காலிக மருத்துவமனைகள்' அமைப்பது, மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் - போர்க்கால வேகத்தில் பரிசோதனைகளைச் செய்து - கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோரைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து - மற்றவர்களுக்கு நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை ஒரு மக்கள் இயக்கம் போன்ற பிரச்சாரமாகவே ஆங்காங்கே உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களின் கீழுள்ள நிர்வாகம் மூலம் செய்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்பில் கழகத்தின் சார்பில் பொறுப்பில் இருப்போரும் இந்தப் பணியில் ஆங்காங்கே அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைத்திட வேண்டும். அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உடையவர்கள் மூலம்தான் அதிகம் இந்த நோய்த் தொற்று பரவுகிறது எனச் செய்திகள் வருவதால் - பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்திடுவது காலத்தின் கட்டாயம்!

எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களும் - அவரின் கீழ் உள்ள அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் கொரோனா பரவலைத் தடுக்க - பாதிப்புக்குள்ளானவர்களுக்குத் தடையின்றி சிகிச்சை கிடைக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திடவும் - குறிப்பாக, தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி போட்டிடவும், ஓர் இயக்கமாகவே செயல்பட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் - அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே 'காபந்து சர்க்கார்' இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories