"விவசாயிகள், சிறுபான்மையினர், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றப் பார்க்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வரும் 6-ஆம் தேதி சரியான பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
இன்று (03-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, வேதாரண்யத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“உங்களிடத்தில் வாக்கு கேட்டு ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்க வந்திருக்கிறேன்.
வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும். அவர் ஏற்கனவே இந்தத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தத் தொகுதி மக்களுடைய அன்பை ஆதரவைப் பெற்று, இந்தத் தொகுதிக்குரிய முன்னேற்றத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் தோழர் மாலி அவர்கள், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக, அந்த இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர். எனவே அவருக்கு நீங்கள் எல்லாம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர், விவசாயிகளுக்காகப் போராடுகின்ற ஒரு சிறந்த செயல் வீரராக விளங்கிக் கொண்டு இருக்கும் மாரிமுத்து அவர்களுக்கு, நீங்கள் எல்லாம் கதிர் அரிவாள் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் அருமைச் சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள், அவரை நீங்கள் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத மேடைகளில் பார்க்காமல் இருக்க முடியாது. அதில் கலந்து கொண்டு அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் சமூகநீதிக்காகவும், திராவிட இயக்கத்திற்காகவும் அவர் கொடுக்கின்ற குரல் நம்முடைய உள்ளத்தில் ஆழமாகப் பதியக்கூடியது. அப்படிப்பட்ட சிறந்த சிந்தனையாளராக, சிறந்த பேச்சாளராக, சிறந்த செயல் வீரராக விளங்கிக் கொண்டிருப்பவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வலதுகரமாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு நீங்கள் எல்லாம் பானை சின்னத்தில் ஆதரித்து மிகச் சிறப்பான வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பணமென்றால் ஓ.எஸ்.மணியன், இல்லை என்றால் நோ. மணியன். அவரை, "மாண்புமிகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன்" என்றால் யாருக்கும் தெரியாது. சுவர் ஏறிக் குதித்து ஓடிய மந்திரி என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.
கஜா புயலின் போது மக்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்காததால் மக்கள் விரட்டியடித்தனர் என்று அவர் சுவர் ஏறிக் குதித்து ஓடினார். இதனால், அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருக்கும் 150 பேர் மீது கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்கு, குண்டர் சட்டம் வரை பல வழக்குகளைப் போட வைத்திருக்கிறார் என்று நேற்றுதான் கேள்விப்பட்டேன். இதனால் வேலைக்குப் போக முடியாத நிலையில் பல துன்பங்களுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் ஆளாகித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நான் உறுதி சொல்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்குகள் அனைத்தும் உடனடியாக வாபஸ் வாங்கப்படும். அந்த வழக்குப் போட்டவர்தான் சிறைக்குப் போகப் போகிறார்.
நேற்று மாலையில் கன்னியாகுமரிக்கு நம்முடைய நாட்டின் பிரதமர் வந்து பேசியிருக்கிறார். ஏற்கனவே தாராபுரத்தில் பேசிய பேச்சுகள் உங்களுக்குத் தெரியும். நேற்று காலையில் மதுரையில் பேசிய பேச்சுகள் உங்களுக்குத் தெரியும்.
அவர் கன்னியாகுமரியில், மீனவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த - பெயரைச் சொல்லாமல் - துறைமுகம் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். அந்த இனயம் துறைமுகத்தை வேண்டாம் என்று அந்தப் பகுதியில் இருக்கும் மீனவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பலமுறை குமரிக்குச் சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் பேராயர்கள் என்னைச் சந்தித்து, அது தேவையில்லாதது, அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு நான், நிச்சயம் தி.மு.க. ஆட்சியில் அது வராது என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அதற்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி அந்த மாவட்டத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர், “ஸ்டாலின் பொய் சொல்கிறார். அந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டு வருவதாக இல்லை. ஆனால் கொண்டு வருவதாகச் சொல்லி அந்தத் திட்டத்தைத் தடுத்து விடுவேன் என்று ஒரு பொய் சொல்லிட்டுச் சென்றிருக்கிறார்” என்று பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார்.
நான் அங்கு பேசியபோது, ஆதாரத்தைக் கையில் வைத்துக்கொண்டுதான் சொன்னேன். மத்திய அரசு, ஆணை பிறப்பித்திருக்கிறது. இது முதலமைச்சருக்கு எவ்வாறு தெரியாமல் போனது? தெரியும். இருந்தாலும் தேர்தல் வரும் காரணத்தினால் அதை மூடிமறைத்து, நான் பொய் சொல்கிறேன் என்று பேசியிருக்கிறார். நேற்றைக்கு மாலை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள், நாங்கள் அதைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார்.
ஆனால் இங்கிருக்கும் முதலமைச்சர், நான் ஏதோ பொய் சொல்லி விட்டதாக, அதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது மக்களிடம் வாக்கு வாங்குவதற்காகப் போடப்படும் நாடகம். எனவே இவர்கள் தமிழர்களுக்கு எதிரான துரோகக் கூட்டணி என்பதற்கு இதைவிடச் சான்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அதேபோல பிரதமர் அவர்கள், மீனவர்களைப் பாதுகாப்பதுதான் என்னுடைய அரசின் முன்னுரிமை என்று ஒரு அபாண்டமான பொய்யைச் சொல்லி இருக்கிறார். பிரதமர் அவர்கள் டெல்லியில் இருந்து வருகிறார் என்றால் பண மூட்டையுடன் வருகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பண மூட்டை மட்டுமல்ல, பொய் மூட்டையும் கொண்டு வந்திருக்கிறார்.
நேற்றைக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். என்னுடைய மகள் வீட்டில் சோதனை நடந்தது. ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு நான் திருவண்ணாமலைக்கு பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, அந்த மாவட்டச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் - திருவண்ணாமலை தொகுதியின் வேட்பாளர் வேலு அவர்களுடைய கல்லூரி, தொழில் நிறுவனங்கள், கெஸ்ட் ஹவுஸில் நான் தங்கி இருந்த அறையில் எல்லாம் சோதனை நடத்தினார்கள். இரண்டு நாட்கள் அது நடந்தது. அதற்குப் பிறகு அவர்கள் சொன்னது, "இங்கு ஒன்றும் இல்லை. ஆனால் மேலிடத்து உத்தரவு. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.
அதேபோல கரூரில் நம்முடைய வேட்பாளர் - மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி வீட்டில், அவருடைய உறவினர் வீட்டில், அவருடைய நண்பர் வீட்டில் சோதனை செய்திருக்கிறார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. அதேபோல அண்ணா நகர் தொகுதியில் கழக வேட்பாளராக நிற்கும் மோகன் வீட்டில் சோதனை செய்திருக்கிறார்கள். அவ்வாறு வந்த அதிகாரிகள் எல்லாம் வீட்டில் காஃபியும் - டீயும் சாப்பிட்டுவிட்டு, தொலைக்காட்சி போடச் சொல்லி பார்க்கிறார்கள். அதற்குப் பிறகு நாங்கள் வந்ததால்," உங்களுக்கு 25 சீட்டுகள் அதிகமாக வரப்போகிறது. நாங்கள் சோதனை செய்ய வந்ததனால், உங்கள் தலைவர், கூட்டத்தில் போடு போடு என்று போடுகிறார்" என்று பேசி விட்டுச் செல்கிறார்கள்.
நம்மைத் தேர்தல் பணியைச் செய்ய விடக்கூடாது என்பதற்காகவே சோதனை. இவைகளெல்லாம் பார்த்து பார்த்து எங்களுக்குப் பழகிவிட்டது. தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்தச் சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சி விடமாட்டோம்.
நீங்கள் வேண்டுமானால் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருடைய இடங்களில், தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுவனங்களில் சோதனை செய்து அவர்களை மிரட்டலாம். அவர்கள் பயந்து உங்கள் காலில் விழலாம்.
ஆனால் நாங்கள் கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்களுக்குப் பணிய மாட்டோம். மிசா சட்டத்தையே பார்த்தவர்கள் நாங்கள். ஒரு வருடம் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தவர்கள். அதைப்பற்றி நாங்கள் கிஞ்சித்தும் கவலைப் படமாட்டோம்.
தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மோடியாக இருந்தாலும், அமித் ஷாவாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். பிரதமருக்கு நான் ஒரு கோரிக்கை வைத்தேன். தாராபுரம் வந்தீர்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசி விட்டுச் சென்றீர்கள். நான் உடனே, "தாராபுரத்திற்கு பக்கத்தில்தான் பொள்ளாச்சி இருக்கிறது. அங்கு நடந்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியாதா? ஒரு பெண் போலீஸ் எஸ்.பி.க்கு, உயர் பதவியில் இருக்கும் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் உங்களுக்குத் தெரியாதா?
இப்போது நீங்கள் மதுரைக்கு வரப் போகிறீர்கள். மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதற்காக இடம் ஒதுக்கி இருக்கும் கிரவுண்டுக்குச் சென்று அது என்ன ஆனது என்று பார்த்துவிட்டு நீங்கள் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தேன்.
ஆனால் நீங்கள் இப்போது குமரியில் வந்து என்ன பேசியிருக்கிறீர்கள்? மீனவர்கள் பாதுகாப்புக்கு நான்தான் முன்னுரிமை கொடுக்கிறேன் என்ற ஒரு பொய்யைச் சொல்லி இருக்கிறீர்கள்.
நான் கேட்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஏழு வருடங்களில் என்னென்ன நடந்திருக்கிறது? 2015-இல் தாக்குதல் நடந்திருக்கிறது. 2016-இல் தாக்குதல் நடந்திருக்கிறது. 2017-இல் தங்கச்சிமடத்தில் தாக்குதல் நடந்திருக்கிறது. அதில் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டிருக்கிறார். 2018-இல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடந்து, அதில் படகுகள் சேதம் ஆகியிருக்கின்றன. 2020-இல் இலங்கை கடற்படை தாக்கி இருக்கிறது. அவ்வாறு தாக்கியது மட்டுமல்ல, 28 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அது வீடியோவாகப் பதிவாகி வெளியாகியிருக்கிறது.
2021 ஜனவரியில் மேவியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு நம்முடைய மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது போன்ற பல்வேறு அராஜகங்களை அளவில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இதைக் கண்டுகொள்வதே இல்லை. மோடியும் இதைப்பற்றிக் கண்டு கொள்வதே இல்லை. இங்கு பழனிசாமி தலைமையில் இருக்கும் அடிமை அரசும் அதைத் தட்டிக் கேட்பதில்லை.
எனவே நான் உறுதியோடு சொல்கிறேன், இந்தத் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அந்த உரிமையை நிச்சயம் நிலைநாட்டுவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பழனிசாமி ஆட்சியைப் பொறுத்தவரையில் மீனவர்களை எவ்வாறு ஏமாற்றுவது என்பதில்தான் அவருடைய செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2012-ஆம் ஆண்டு மீனவர்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டத்திற்கு ‘நாகை பசுமை சூழ் துறைமுகம்’ என்று பெயர் வைத்தார்கள்.
அவ்வாறு அறிவித்தார்களே தவிர, இப்போது 2021. அது என்ன ஆனது? இப்போது இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அந்தத் திட்டத்தின் பெயரையே மறந்திருப்பார்.
இன்றைக்குக் காலையில் தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன். சுவரேறி குதித்த அமைச்சர்தான் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். என்னுடைய கையில் அந்தப் பத்திரிகை இருக்கிறது.
‘நீங்கள் இலங்கைக் கடலில் மீன் பிடிக்கலாம் - என்று மீனவர்களிடம் அள்ளி விட்ட அமைச்சர்’ என்று, அவர்களே கேலி செய்து தலைப்புப் போட்டிருக்கிறார்கள்.
'ஜூன் மாதம் முதல் நீங்கள் இலங்கையின் எல்லையில் மீன் பிடிக்கலாம்' என்று மீனவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். உண்மை நிலை என்ன? இந்திய எல்லையில், சர்வதேச எல்லையில் மீன்பிடித்தாலே இலங்கைக் கடற்படை வந்து சுடுகிறது. அங்கு வந்து கொடுமை செய்கிறது. இதில் இலங்கை போகலாம் என்று சொல்கிறார் ஓ.எஸ்.மணியன். மீனவர்களை ஏமாற்றும் வேலையைச் செய்யாதீர்கள். நீங்கள்தான் ஏமாறுவீர்கள். மக்களை ஏமாற்றும் உங்களுக்கு வருகின்ற ஆறாம் தேதி பாடம் புகட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
அதேபோல சிறுபான்மையினருக்குத் துரோகம் செய்யும் ஒரு ஆட்சி இங்கு நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், சிஏஏ - குடியுரிமை திருத்தச் சட்டம். அந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மாநிலங்களையில் அ.தி.மு.க-வும், பாமகவும் ஆதரித்தன. இப்போது இந்தத் தேர்தல் அறிக்கையில், அந்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பச்சைத் துரோகம்.
இந்தச் சட்டத்தால் சிறுபான்மைச் சமுதாயத்தை உரிமை அற்றவர்களாக ஆக்க பாஜக முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதற்கு இங்கே இருக்கும் அ.தி.மு.க. தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் முடிவெடுத்து, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் வேலையைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் இங்கே வந்திருக்கிறேன்.
இப்போது பழனிசாமி எங்கு சென்றாலும், "நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி, இந்த விவசாயி ஆளுவது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை" என்று பேசுகிறார். விவசாயி என்றால் எனக்குப் பிடிக்கும். ஆனால் போலி விவசாயி என்றால், எனக்குப் பிடிக்காது. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் விவசாயியா? பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு துரோகம் செய்து கொண்டிருப்பவர் விவசாயி அல்ல. அவர் விஷவாயு.
உண்மையான விவசாயியாக இருந்தால், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்திருப்பாரா? இன்றைக்கும் 129-வது நாளாக டெல்லி தலைநகரில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான வெயிலில், குடும்பம் குடும்பமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி ‘புரோக்கர் – தரகர்’ என்று சொன்னார். இவ்வாறு சொல்பவர் விவசாயியா?
1,500 கோடிக்கு குடிமராமத்து - தூர்வாரும் பணிகள் என்று சொல்லி, போலி பில் போட்டு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் விவசாயியா?
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடைபெறாமல் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. அதைச் செய்யும் நீங்கள் விவசாயியா? புயலால் பாதிக்கப்படும் போதெல்லாம் விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல், அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லாத நீங்கள் விவசாயியா? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சொல்லிவிட்டு நீதிமன்றத்தில், எந்த விதிமுறையும் வகுக்கவில்லை என்று சொன்ன நீங்கள் விவசாயியா? நீங்கள் விவசாயி அல்ல, விஷவாயு என்பதுதான் உண்மை. அதனால், அவர்களுக்கு வருகின்ற ஆறாம் தேதி சரியான பாடத்தை புகட்டுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.
நம்முடைய கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன பணிகளைச் செய்யப்போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பயன்தரக்கூடிய 505 வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த 4 தொகுதிகளுக்காக, நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தும் நிலையமும், வேளாங்கண்ணியில் மீன் உலர்தளமும் அமைக்கப்படும். கீழ்வேளூர் தொகுதியில் மீன்கள் வைப்பதற்காகக் குளிர்பதனக் கிடங்கு. நாகப்பட்டினத்தில் கடல் உணவு மண்டலம் உருவாக்கப்படும். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் நவீனத் தரத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். நாகூரில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுச் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும். வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை; நறுமணத் தொழிற்சாலை; காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை; நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் குளிர்பதனக் கிடங்குகள். நாகப்பட்டினம் - அக்கரைப்பேட்டை மற்றும் கீழ்வேளூரிலிருந்து கச்சனம் சாலையில் ரயில்வே மேம்பாலங்கள். தோப்புத்துறை நாலுவேதபதி - கள்ளிமேடு பகுதிகளில் தடுப்பணை. திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி கொள்முதல் நிலையம். தெற்குப் பொய்கைநல்லூர் மற்றும் கீழையூரில் மாம்பழச் சாறு தொழிற்சாலை. நாகூர் அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும். நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடற்கரை கிராமங்கள் பாறைக் கற்கள் அமைத்துப் பாதுகாக்கப்படும். வேதாரண்யம் - ஆயக்காரன்புலத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். கீழ்வேளூர் பேரூரில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும். நாகப்பட்டினத்தில் உரத் தொழிற்சாலை அமைக்கப்படும். திட்டசேரி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்.
இப்போது நான் சொன்னவை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் எண்ணற்ற திட்டங்களில் சில. அத்துடன், அதிமுக ஆட்சியால் 50 ஆண்டுகள் பின்தங்கிவிட்ட தமிழகத்தை முன்னேற்றுவதற்காக, ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற பெயரில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களையும் திருச்சியில் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தேன்.
அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன், இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர் என்பதையும் மறந்து விடாதீர்கள். நன்றி. வணக்கம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.