திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் The Week ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலின் முதல் பாக தொகுப்பு:
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் மாபெரும் சவாலாக தி.மு.கதான் உள்ளதா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டு மக்கள் சரித்திரப்பூர்வமான சமூக, நல்லிணக்கத்தையும், மாநிலத்தில் சமத்துவக் கொள்கையையும் பாதிக்கச் செய்யும் எந்தக் கட்சிக்கும் இடமளிக்க மாட்டார்கள். மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும் வருவாயை வடஇந்திய மாநிலங்களுக்கு செலவழித்து வருகிறது. எந்தவொரு மத்திய அரசும் இந்த அளவுக்கு அதிகமாக தமிழ்நாட்டுக்கு பாரபட்சமாகச் செயல்பட்டதில்லை. பா.ஜ.கவும், அதன் தலைவர்களும் தமிழ்நாட்டைப் பற்றி பேசி வந்தாலும், அது விளம்பரத்துக்காக மட்டுமே. நான் கவலைப்படுவது என்னவென்றால்; தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக தங்கள் வெறுப்பைக் காட்டுவது இயற்கையானதாகும். ஏனெனில் அக்கட்சி, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக தமிழ்மொழி, பண்பாடு, சமூகநீதி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கும் எதிராக உள்ளது.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!
செய்தியாளர் : நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: மோடி அரசு மக்களுக்கானதல்ல; விவசாயிகளுக்கானது அல்ல; பெண்களுக்கானது அல்ல; ஏழை மக்களுக்கானது அல்ல; நடுத்தர மக்களுக்கானதும் அல்ல. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி. வர்த்தகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. கடுமையான வரிகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. இந்த அரசு பல லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்யத் தயாராக இருக்கிறது.
ஆனால், அது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இது மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பிரதமராகச் செயல்படுகிறார் என்று மக்களை நினைக்கச் செய்கிறது. மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கருத்துகளுக்குக் கூட மதிப்பளிப்பதில்லை. அரசியலமைப்புச் சட்ட மற்றும் சட்டப்பூர்வமாக 100 நாட்களுக்கு மேல் கடுமையாகப் போராடிய விவசாயிகளின் உணர்வுகளுக்குக் கூட மதிப்பளிப்பதில்லை. வளர்ச்சி என்ற முழக்கத்தோடு வாக்குகளைப் பெற்ற ஒருவர் கண்மூடித்தனமாக, பொது மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது சொந்தத் திட்டத்தை மட்டுமே நிறைவேற்றிக் கொள்கிறார்.
மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தரவுகளையே பின்பற்றி வருகிறார். அவருடைய ஒரே வேலை மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள சட்டப்பூர்வமான அரசாங்கங்களைத் தூக்கி எறிவதே ஆகும். பேச்சு சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. ஊடகங்களும், விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகளும் அடக்குமுறையைச் சந்திக்கின்றனர். மோடி ஓர் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வலதுசாரி சிந்தனைகளை திணித்தால் எதிர்ப்போம்!
செய்தியாளர் : தேர்தலுக்குப் பிறகும் தி.மு.கழகம் பா.ஜ.க.வை எதிர்க்குமா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க, இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி; அது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துள்ளது. விவசாயத்துக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியதை எதிர்த்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு) 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்துள்ளது.
மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதை எதிர்ப்பதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். வலதுசாரி சிந்தனைகளை நாட்டில் திணிப்பதற்கான எந்த முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம்.
செய்தியாளர் : காங்கிரஸ் பற்றியும், அதன் தலைவர் ராகுல்காந்தி பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: எரியும் பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியும், அதன் இளம் தலைவர் ராகுல்காந்தியும் பா.ஜ.கவை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். பா.ஜ.க அரசின் அதிகார துஷ்பிரயோகம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் குரல் கொடுத்து வருவதால் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் : தி.மு.கவால்தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் உயிருடன் உள்ளது என்று சிலர் சொல்கிறார்களே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: நான் அவ்வாறு சொல்லமாட்டேன். நாங்கள் தோழமைக் கட்சிகள். நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு கட்சிகளின் பலமும் இருவரும் அறிந்திருக்கிறோம். எங்களது கூட்டணி 2004 முதல் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் கூட்டணியாகும். 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மட்டுமே விதிவிலக்கு. காங்கிரஸ் எங்களுக்கு பலத்தைக் கொடுக்கிறது. நாங்கள் காங்கிரசுக்கு பலத்தைக் கொடுக்கிறோம். தோழமை உணர்வுடன் நாங்கள் இணைந்து செல்கிறோம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்! தி.மு.க. ஆதரிக்காது!
செய்தியாளர் : தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கி விடும்படி உங்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: அ.தி.மு.கவைப் போல தி.மு.க.வுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இது ஒரு வலிமையான இயக்கம். அது தனது அரசையே விலையாகக் கொடுத்து நெருக்கடி நிலையை எதிர்த்தது. தி.மு.கதான் அதன் கூட்டணியைப் பற்றி தீர்மானிக்கிறது.
செய்தியாளர் : பா.ஜ.க.வின் "ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டம்" பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: அது நடைமுறையில் இயலாதது. தி.மு.க. அதை ஆதரிக்கவில்லை.
செய்தியாளர் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பற்றி நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: பழனிசாமி தமிழ்நாட்டை அழித்து விட்டார். முதலமைச்சர் பொறுப்பின் கவுரவத்தை அவர் அடமானம் வைத்துவிட்டார். மத்திய அரசின் சுயநல விருப்பங்களுக்கு, தன்னுடைய ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக அவர் சரணடைந்துவிட்டார். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்பதுதான் முதலமைச்சராக அவருடைய செயல் திட்டமாக உள்ளது.
அவர் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டார். வர்த்தக மேம்பாட்டை மேம்படுத்தத் தவறிவிட்டார். உள் கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த தவறிவிட்டார். அவர் தமிழ்நாட்டின் கடனை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டார். மாநிலம் அவரால் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது.”
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்