“‘ஊர்ந்து செல்வதற்கு நான் பாம்பா, பல்லியா’ என்று கேட்கும் பழனிசாமி; அவற்றின் விஷத்தை விடப் பெரிய விஷமான துரோகத்தைச் செய்தவர்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (20-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, திருநெல்வேலியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில், நம்முடைய கழகத்தின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அருமைச் சகோதரர் ஏ.எல்.எஸ். இலட்சுமணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் - சட்டப்பேரவையின் முன்னாள் தலைவராக இருந்தவர் - மூத்த வழக்கறிஞரான இரா.ஆவுடையப்பன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் சார்பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் அருமை சகோதரர் அப்துல் வகாப் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அப்பாவு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்களுக்கு கை சின்னத்திலும் ஆதரவு தர வேண்டுமென்று என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.
திக்கெட்டும் புகழ் பரப்பும் நெல்லைச் சீமைக்கு கலைஞரின் மகனாக, வந்திருக்கிறேன். வீரத்திற்கு பூலித்தேவன், கல்விக்கு பாளையங்கோட்டை, ஆன்மீகத்திற்கு நெல்லையப்பர் என்று அனைத்து சிறப்பையும் பெற்றிருக்கும் இந்த நெல்லைச் சீமைக்கு கலைஞருடைய மகனாக உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு, அவர் எவ்வாறு முதலமைச்சர் ஆனார் என்று சொன்னால் கோபம் வந்துவிடும். அவரைப்பற்றி நான் மட்டுமல்ல எல்லோரும் பேசியிருக்கிறார்கள். பேசியது மட்டுமல்ல, வலைதளங்களில் பார்த்திருக்கிறார்கள்,
தவழ்ந்து… ஊர்ந்து… சசிகலாவால் முதலமைச்சர் ஆனார் என்பதை நான் பல கூட்டங்களில் சொன்னேன். அதை நான் அவமானப்படுத்துவதற்காக சொன்னேன் என்று அவரும் நினைக்கவேண்டாம். நீங்களும் நினைக்க வேண்டாம். நடந்த செய்தியைச் சொன்னேன்.
ஆனால் அவருக்கு கோபம் வந்து விட்டது. அதற்கு அவர் நான் சசிகலாவால் முதலமைச்சராகவில்லை. எம்.எல்.ஏ.க்களால் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று சொல்லி உள்ளார்.
அதற்கு நான் விளக்கமாகவும் சொன்னேன். நீங்கள் சசிகலாவின் தயவில்தான் முதலமைச்சர் பதவியை வாங்கினீர்கள் என்று சொன்னேன். நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்கள். ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? முதலில் அதை சொல்லுங்கள். நீங்கள் தவழ்ந்து போனது உண்மையா? இல்லையா? அதை சொல்லுங்கள்.
நான் மட்டுமா பார்த்தேன். இந்த நாடே அதைப் பார்த்து சிரித்தது. அதை நான் தவறாக சொல்லியிருந்தால் பழனிசாமி அவர்களே என் மீது வழக்குப் போடுங்கள். என் மீது மட்டுமல்ல, அதைப் பார்த்த அனைவர் மீதும் நீங்கள் வழக்கு போடுங்கள். உங்களுக்கு முதலில் அதற்கு தைரியம் இருக்கிறதா? என்று கேட்டேன்.
இப்போது திடீரென்று அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? ஊர்ந்து போவதற்கு என்று சொல்லியிருக்கிறார். அவர் விஷப்பல்லி… விஷப்பாம்பு…
பாம்பு, பல்லிகளின் விஷத்தை விட துரோகம் தான் பெரிய விஷம். அந்த துரோகத்தை செய்தவர்தான் பழனிசாமி. யாரால் பதவி கிடைத்ததோ அந்த சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு துரோகம் செய்தவர். இப்போது அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் இப்போது அ.தி.மு.க. என்பது பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கையைக் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக்கொண்டு கேட்டு ஒரு அடிமையாக இருக்கிறார். இப்படி ஒரு அக்கிரமமான ஆட்சியை, அடிமைத்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்தான் பழனிச்சாமி.
இப்போது தேர்தல் வரும் காரணத்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போட்ட தேசத்துரோக வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இதுவரை வாபஸ் வாங்கவில்லை.
உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இல்லை. 2011 முதல் இந்த பகுதியையே ஒரு எமர்ஜென்சி பகுதியைப் போல உருவாக்கி வைத்திருக்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் அல்ல.
நான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தேன். அதேபோல இந்த மாவட்டத்துக்கு வந்தபோது இந்தப் பிரச்சினையைச் சொன்னார்கள். அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தேசத்துரோக வழக்குகள் மற்றும் உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று சொன்னேன். இப்போதும் நான் உறுதியோடு அதனைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்கு நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல் விண்ணை முட்டும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இந்த ஆட்சியும் மத்திய அரசும் கவலைப்படவில்லை.
இந்த நிலையை விட மோசமானது என்னவென்றால் ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை வழங்கி மக்கள் தலைகளில் கட்டவேண்டும் எனக் கட்டாயப்படுத்திச் செய்வதுதான். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி, இன்றைக்கு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி எந்த அளவிற்கு மோசமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த உதாரணமே போதும்.
பழனிசாமி சொல்கிறார், மக்களைக் குழப்பி அதில் வெற்றி பெறுவதற்காக ஸ்டாலின் சதி செய்கிறார் என்று. நான் சதி செய்யவில்லை. மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். தெளிவாக இருப்பதால் தான் இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது.
பழனிசாமியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற காரணத்தால் இந்த கூட்டத்திற்கு வந்து இருக்கிறீர்கள், தி.மு.க.வை ஆட்சிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உறுதியோடு தான் இங்கு வந்திருக்கிறீர்கள், இந்த அடியேனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறீர்கள்.
நம்முடைய வேட்பாளர்களுக்கு நான் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன் என்றால் நானும் இப்போது ஒரு வேட்பாளர் தான் - முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடந்து போயிருக்கும் பத்தாண்டுகாலச் சீரழிவைச் சரிசெய்ய முடியும் என்று மக்கள் தெளிவாகக் கருதுகிறார்கள். எனவே இப்போது அ.தி.மு.க. ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ.க.வையும் உள்ளே விடக்கூடாது.
இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண் - அண்ணா வாழ்ந்த மண் - தலைவர் கலைஞர் அவர்கள் பயிற்றுவித்த மண், இந்த மண். எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களை உள்ளே விடக்கூடாது. அதை மக்கள் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
ஒன்றை மறந்துவிடக்கூடாது, நீங்கள் ஏதோ மற்றவர்களுக்கு வாக்களிக்கிறோம் என்ற எண்ணத்திற்கும் சென்றுவிடக்கூடாது. அப்படி வாக்களிப்பது என்பது யாருக்கு சாதகமாக முடியும் என்பதை தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், அதனால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்குத் தான் நீங்கள் உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும்.
பிரச்சாரத்தின்போது பழனிசாமி அவர்கள் இன்னொன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத் திட்டத்தை அறிவித்து, நாம் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளிலிருந்து 100 நாட்களில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம் என்ற உறுதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் நான் சென்றேன்.
அந்த தொகுதியில் இருக்கும் மக்களை ஒன்றுதிரட்டி அவர்களிடத்தில் கோரிக்கை மனுக்களை கேட்டு வாங்கி, ஒரு அடையாளச் சீட்டு கொடுத்திருக்கிறோம். 100 நாட்களுக்கு பிறகு உங்கள் பிரச்சினை ஏதாவது முடியாமல் இருந்தால் அந்த அட்டையுடன், யாருடைய அனுமதியும் இன்றிக் கோட்டைக்குள் இருக்கும் முதலமைச்சர் அறைக்கு வரலாம். அந்த அளவிற்கு அந்த அட்டைக்கு மதிப்பு இருக்கிறது என்று சொல்லி, அந்தப் பயணத்தை நான் தொடர்ந்து நடத்தினேன் என்பது உங்களுக்கு தெரியும்.
அதை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் கேலி செய்து, கிண்டல் செய்து, ‘100 நாட்களில் பிரச்சினைகளைத் தீர்க்க அவரால் எப்படி முடியும். பொய் சொல்கிறார். யாரும் நம்பாதீர்கள்’ என்று பேசி இருக்கிறார்.
உங்களால் முடியாது. நீங்கள் 10 வருடங்கள் அல்ல, 20 வருடங்கள் இருந்தாலும் அது நடக்கவே நடக்காது. உங்களுடைய கொள்கை எல்லாம் கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இதுதான். அதனால் மக்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை.
ஆனால் மக்களைப் பற்றி கவலைப்பட்டு ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய தலைவர் கலைஞருடைய மகன் நான். எனவே மக்களைப் பற்றித்தான் நான் கவலைப்படுவேன். எனவே உங்களுக்கு இதெல்லாம் தெரியாது.
நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வேன் என்று உறுதிமொழி கொடுத்தார். கலைஞர் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்து, முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அதே மேடையில் 7000 ரூபாய் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி என்று கையெழுத்திட்டார்.
அதேபோல ரேஷன் அட்டை வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் கலர் டி.வி. கொடுப்பேன் என்று அறிவித்தார்கள். இன்றைக்கும் பல வீடுகளில் அந்த கலர் டி.வி.யை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் எல்லாம் காயலான் கடைக்கு சென்று விட்டது. இப்போதும் ஏதோ அறிவித்திருக்கிறார்கள். மக்கள் அதை யாரும் நம்ப தயாராக இல்லை.
அதே போல, எம்.ஜி.ஆ.ர் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மறைந்த நாராயணசாமி அவர்கள் தலைமையில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
ஆனால், 1989-ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக வந்து சட்டமன்றத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் இனிமேல் மின்சாரக் கட்டணமாக ஒரு பைசாகூட தர வேண்டிய அவசியம் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவித்தார்.
எனவே கலைஞரைப் பொறுத்தவரையில் சொன்னதைச் செய்வார், செய்வதைத் தான் சொல்வார். அந்த உறுதிமொழிகள் எல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.
எனவே அவர் வழி வந்திருக்கும் அவருடைய மகன் ஸ்டாலினும் நிச்சயமாக அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையை திரும்பத் திரும்ப உங்களிடத்தில் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இன்னும் ஒரு அண்டப் புளுகு - ஆகாசப் புளுகை பழனிசாமி அவர்கள் சொல்லியிருக்கிறார். 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தரப்படும் என்று சொன்னார்கள். ஆனால் யாருக்கும் தரப்படவில்லை என்று ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் சொல்லியிருக்கிறார்.
அவர் அந்தக் கோப்புகளை, விவரங்களைப் பக்கத்தில் இருக்கும் திறமையான அதிகாரிகளைக் கேட்டிருந்தால் விளக்கத்தைச் சொல்லி இருப்பார்கள். ஆனால் அவர் அதை எதையும் செய்யாமல் வாய்க்கு வந்த படியெல்லாம் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.
நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். 2006-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 719 ஏக்கர் நிலத்தை, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 159 விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கிய ஆட்சிதான் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சி.
இதை இல்லை என்று அவர் மறுக்கட்டும். நான் சொல்வது தவறு என்றால் என் மீது வழக்கு போடட்டும். அதை சந்திப்பதற்கு நான் தயார். ‘தான் திருடி பிறரை நம்ப மாட்டான்’ என்பது ஒரு பழமொழி.
அதேபோல, 2011 மற்றும் 2016-இல் தேர்தலைச் சந்தித்தபோது அ.தி.மு.க. பல்வேறு உறுதிமொழிகளை சொன்னது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் சொன்னார்கள். இதுவரையில் ரத்து செய்கிற எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அனைவருக்கும் செல்போன் கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரையில் கொடுக்கப்படவில்லை. இப்போது 2021 தேர்தல் அறிக்கையில் மிகப்பெரிய பொய், யாராலும் செய்ய முடியாத ஒன்றை பழனிசாமி அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு என்ற ஒரு அற்புதமான கற்பனையை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.
இன்றைய தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கிறது. அதாவது அவர்கள் ஒரு கோடியே 97 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா? நடக்கவே நடக்காது.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. நம்முடைய தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகன் தான். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், இளைஞர்களுக்கு - மாணவர்களுக்கு - படித்த பட்டதாரிகளுக்கு - வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு என அனைவருக்குமான திட்டங்களை மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறோம்.
அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம், 70 வயது நிறையும் போது 10 விழுக்காடும், 80 வயது நிறையும் போது 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம், மாநில நிர்வாக தீர்ப்பாயமும் தலைமைச் செயலாளர், துணைச் செயலாளர், துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்கள் மீண்டும் அமைக்கப்படும், இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இப்போது சொல்கிறேன் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நாம் இந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.
அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி புறவழிச் சாலை அமைக்கப்படும். ராதாபுரம், பனங்குடி ஆகிய ஊர்களில் புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் கட்டப்படும். நாங்குநேரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி. திருநெல்வேலியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி. இராதாபுரம் தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி. திருநெல்வேலியில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம். எல்காட் மென்பொருள் நிறுவனம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அரசு மருத்துவமனையும், பேருந்து நிலையமும் அமைக்கப்படும். விக்கிரமசிங்கபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். விவசாயத்திற்காக பாபநாசம் அணையிலிருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.
இது அனைத்தும் ஐந்து ஆண்டு கால திட்டத்திற்கான வாக்குறுதிகளாக நாம் அளித்திருக்கிறோம்.
கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் ஒரு மாபெரும் மாநாடு போல ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அந்தச் சிறப்புக் கூட்டத்தில் நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் ஏழு உறுதிமொழிகள் அறிவித்தேன்.
பத்தாண்டுகாலத் தொலைநோக்குப் பார்வையோடு ஏழு அறிவிப்புகளை நான் அறிவித்தேன். தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட் தேர்வைத் திணித்து, மதவெறியைத் தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது, இது திராவிட மண். ஒருபோதும் அது நடக்காது. உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு எடுபடாது.
எனவே நான் உங்களை அன்போடு கேட்பது, தமிழக மக்கள் வாக்களிக்கப் போகும் முன் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லியில் இருந்து கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மிரட்டலுக்கு அடிபணிந்து, தாங்கள் அடித்த கொள்ளைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இங்கே பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி அடிபணிந்து அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தலில் எவ்வளவு சீட் என்பதைக் கூட அவர்கள் தான் நியமிக்கிறார்கள். கூட்டணி யார் என்பதை அவர்கள் தான் நியமிக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை. அந்த நிலைமை தொடரலாமா? என்பது தான் என்னுடைய கேள்வி.
இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தான். மேலும் நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல். அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. மதவெறியைத் தூண்டி, நாட்டைக் குட்டிச் சுவராக்கி, இனக்கலவரத்தை நடத்தலாம், சாதிப் பெயரைச் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு மத்தியில் இருக்கும் மோடியும் அமித்ஷாவும் இன்றைக்குக் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கனவை முடிவு கட்டும் தேர்தல்தான் இந்தத் தேர்தல். அதற்கு உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் நம்முடைய கூட்டணி வேட்பாளர்கள் சின்னத்திலும் நீங்கள் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
வேலை வாய்ப்புகளைப் பெருக்க, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, நெல்லைச் சீமையைக் காப்பாற்ற, நாம் இழந்த உரிமைகளை மீட்க - தலைவர் கலைஞர்தான் அடிக்கடி சொல்வார் உடன்பிறப்பே என்று. உடன்பிறப்பு என்றால் கழக உடன்பிறப்புகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் உடன்பிறப்புகள் என்று கருதித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள் - அந்த உரிமையோடு கேட்கிறேன். நாம் இழந்து நிற்கும் மரியாதையை மானத்தைக் காப்பாற்ற உரிமையை மீட்க இந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் ஆதரவுதர வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
திருமங்கலத்தில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உரிமையோடு உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அருமைச் சகோதரர் மு.மணிமாறன் அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர் மட்டுமல்ல, நம்முடைய சேடப்பட்டியார் அவர்களின் அருமைப் புதல்வர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கழக வேட்பாளராக நிற்கும் அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மூர்த்தி அவர்கள், அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, அந்த தொகுதிக்கு பல பணிகளை ஆற்றியவர், அவர் மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து கழகப் பணியாற்றுகிறார், மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார், எனவே அவரைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து கடந்த முறையும் நிற்க வைத்தார், இப்போது அவருடைய மகன் ஸ்டாலினும் அவரைத் தேர்ந்தெடுத்து நிற்க வைத்திருக்கிறான். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிற்கும் கழக வேட்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள், மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சிக்கு பக்கபலமாக இந்த வட்டாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அவர்களுக்கு கை சின்னத்திலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாநிலக் குழுவின் உறுப்பினராக இருந்த பொன்னுத்தாய் அவர்கள், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், தொடர்ந்து போராடுபவர், வாதாடுபவர், அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.
உங்களிடத்தில் அவர்களுக்கு வாக்குக் கேட்க, நானும் இங்கு வேட்பாளராக தான் வந்திருக்கிறேன். இவர்கள் தொகுதியின் வேட்பாளர்கள். நான் முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். தலைவர் கலைஞருடைய மகனாக உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
தென்பாண்டி மண்டலமாம் இந்த மதுரைக்கு வந்திருக்கிறேன். நெஞ்சில் ஈரமும் வீரமும் கொண்டிருக்கும் மக்கள் வாழும் இந்த மண்ணிற்கு வந்திருக்கிறேன். நீதி கேட்டு மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரையில் நடைபயணமாக சென்ற தலைவர் கலைஞர் அவருடைய மகன் ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
இப்போது மோடி - பழனிசாமி பிரச்சினைக்கு வருகிறேன். மோடியும் பழனிசாமியும் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் ஒரு முக்கியமான உதாரணம், எய்ம்ஸ் மருத்துவமனை.
அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கப் போகிறோம் என்று நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டு மோடி அவர்கள் அறிவித்தார். அதற்கு பிறகு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் மோடி அவர்களை அவசர அவசரமாக மதுரைக்கு அழைத்து வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள்.
இப்போது 2021. இதுவரையில் ஒரு செங்கல் கூட அங்கு வைக்கப்படவில்லை. எனவே தமிழ்நாட்டிற்கு மோடியும் பழனிசாமியும் எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். அதற்கு உதாரணம் தான் இந்த மருத்துவமனை.
இந்தியாவில் மொத்தம் 15 மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் மோடி அறிவித்தார். அதில் 14 மருத்துவமனைகளின் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் அந்தப் பணி தொடங்கப்படவில்லை.
மற்ற மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசே ஒதுக்கி, அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. கேட்டால் ஜப்பானில் நிதி கேட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், தமிழ்நாடு என்ன ஜப்பானிலா இருக்கிறது? குஜராத் மாநிலத்தில் தற்காலிகக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லையா? குஜராத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் பூஜ்ஜியம் போட்டு கொடுத்து விட்டீர்கள்.
எனவே இப்போது மோடியும் பழனிசாமியும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடியை குளோஸ் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
இந்த மதுரைக்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கிறது. ஆனால் ஒரு அசிங்கமும் இருக்கிறது. அந்த அசிங்கத்தின் அடையாளம்தான் செல்லூர் ராஜூ - உதயகுமார் - ராஜன் செல்லப்பா. இந்த மூன்று பேருக்குள்ளும் கோஷ்டி தகராறுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் இந்த மதுரை மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ். உதயகுமார் ஒரு கிரிமினல் அமைச்சர். அது எப்படி என்றால் ஜெயலலிதாவே உதயகுமாரிடமிருந்து மந்திரி பதவியை பறித்தவர். அதன்பிறகு சசிகலா காலில் விழுந்து விழுந்து அந்த பதவியை வாங்கினார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அந்த ஓ.பி.எஸ்.க்கு துரோகம் செய்து சின்னம்மா தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று சொன்னவர் இவர்தான்.
சின்னம்மா ஜெயிலுக்குப் போன பிறகு பழனிசாமி தான் முதலமைச்சர் என்று சொன்னார். எவ்வளவு துரோகம் என்று பாருங்கள். வருவாய்த்துறை அமைச்சராக இருந்து தன்னுடைய வருவாயைத் பெருக்கிக் கொண்டாரே தவிர வருவாய்த் துறையை நல்ல முறையில் காப்பாற்றி, மக்களுக்கு பணியாற்றினாரா?
திருமங்கலத்திற்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்குவேன் என்று சொன்னார். வந்ததா? விமான நிலையம் செல்லும் பாதையில் இரயில்வே மேம்பாலம் வந்ததா? பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினாரா? திருமங்கலம் பிரதான கால்வாய் தூர்வாரப்பட்டதா? உச்சப்பட்டி தோப்பூர் பகுதி துணைக்கோள் நகரமாக மாற்றப்பட்டதா? புதிய தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? இவ்வாறு எதையும் செய்யாதவர். அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு கோயில் கட்டினார். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மட்டுமல்ல. அவர் சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா உட்கார்ந்திருக்கும்போது செருப்பு போடாமல் இருந்தவர். மகா நடிகர் அவர். ஏனென்றால் அவர் அம்மாவை கடவுள் மாதிரி நினைத்தாராம். அவ்வாறு நடித்தவர், அந்த அம்மாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து வெளியில் சொன்னாரா? விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 4 வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் செய்தி வரவில்லை.
மதுரை மாவட்டத்தையே இந்த 3 பேரும் சேர்ந்து, போட்டி போட்டுக்கொண்டு குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிறார்கள். மதுரையை இன்றைக்கு மண்ணாக்கி வைத்திருக்கிறார்கள்.
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இருக்கிறாரே, அவர் செய்திருக்கும் பல கோடி ரூபாய் ஊழல் என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
பாரத் நெட் டெண்டர் ஊழல். இது மத்திய அரசின் திட்டம். அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதிகள் தருவதற்கான ஒரு திட்டம். அதில் பயங்கரமான ஊழல் நடந்திருக்கிறது. டெண்டர் விடுவதில் ஊழல் நடக்கிறது என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டுபிடித்து, அறப்போர் இயக்கமும் அதை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாங்கள் இன்னும் டெண்டரே விடவில்லை என்று ஒரு செய்தியை சொன்னார். சரி என்று பொறுத்திருந்தோம். அவருக்கு வேண்டியவருக்கு கொடுக்க வேண்டும். அதன் மூலமாக 5,000 கோடி ரூபாய் லஞ்சம் வாங்க வேண்டும் என்பதற்காக டெண்டர் விதிமுறைகளை மாற்றி, அதை கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது, அதைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு சென்ற போது, நீதிமன்றத்தில் டெண்டர் போடவில்லை என்று சொன்னார்கள்.
அதற்கு பிறகு திடீரென்று அதற்கு மத்திய அரசு தடை போட்டது. அதை விசாரித்தால் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக டெண்டர் விட்டிருக்கிறார்கள். இது மத்திய அரசுக்கு தெரிந்து, அதை நிறுத்தியது. இதைவிட கேவலம் இந்த ஆட்சிக்கு தேவையா?
அதிமுக 10 ஆண்டுகாலமாக இந்தத் தமிழகத்தைச் சீரழித்து ஊழல் செய்து கொண்டிருக்கிறது. பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி. 200-க்கு மேற்பட்ட இளம் பெண்களை கடத்தி, பண்ணையில் வைத்து, பலாத்காரம் செய்து, வீடியோ பதிவு செய்து, அதை காட்டி அவர்களை அச்சுறுத்தி பணம் சம்பாதிக்கும் கொடுமை நடந்திருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
துப்புகெட்ட ஆட்சி என்பதற்கு தூத்துக்குடியே சாட்சியாக இருக்கிறது. எல்லாவற்றையும் சாகடிக்கிற ஆட்சி என்பதற்கு சாத்தான்குளமே சாட்சி. இது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அடிமை ஆட்சி. மோடிக்கு தலைகுனிந்து, கைகட்டி வாய், பொத்தி நடைபெறுகின்ற ஆட்சி.
எனவே இந்த நேரத்தில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தப்பித்தவறி கூட ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் கூட வெற்றி பெறக் கூடாது. பா.ஜ.க. வெற்றி பெறப்போவதில்லை. அது வாஷ் அவுட்.
மற்ற மாநிலங்களில் அமித் ஷாவும் மோடியும் தில்லுமுல்லு செய்யலாம். ஆனால் இது தமிழ்நாடு. இங்கு அவர்கள் தில்லுமுல்லு எடுபடாது. ஆனால் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றால் கூட அது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அல்ல; பா.ஜ.க. எம்.எல்.ஏ. தான்.
அதற்கு ஒரு உதாரணம், தேனியில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வத்தின் மகன், அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக செயல்படவில்லை. பா.ஜ.க. எம்.பி.யாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்றைக்கு உங்களிடம் கம்பீரமாக நின்று வாக்குக் கேட்கிறோம் என்றால் ஏற்கனவே நாங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது என்னென்ன செய்தோம் – ஐந்து முறை கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய போது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஆற்றிய திட்டங்களை கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.
இப்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். அதில் சிலவற்றை மாத்திரம் உங்களுக்குக் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சட்டமன்றத்தில் அந்த தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்போகிறோம்,
வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் உருவாக்கப் போகிறோம், மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும், அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்துறையில் தனிப்பிரிவு, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இது ஏற்கனவே கடந்த பொங்கலுக்கு முதல் நாள் போகி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசும் போது சொன்னேன். அதற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அதையே சொல்லியிருக்கிறார். நான் கேட்கிறேன், 10 வருடங்களாக இந்த புத்தி வரவில்லையா?
ஏற்கனவே விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் போராடுகிற விவசாயிகளைப் பார்த்து தரகர்கள் என்று சொன்னவர் பழனிசாமி. இவர் அடிக்கடி தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொள்வார். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்கிற விவசாயிதான் முதலமைச்சர் பழனிசாமி.
நாம் அறிவித்த அடுத்த நாள் அவர் அறிவித்தார். மொத்தம் 12,000 கோடி. அதில் 5,000 கோடிக்குத் தான் சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். மீதமிருக்கும் 7,000 கோடி ரூபாய் கடனை தி.மு.க. அரசு அமைந்தவுடன் தள்ளுபடி செய்யும்.
இந்தப் பகுதியில் இருக்கும் வட்டாரத்திற்கு, இந்த மண்டலத்திற்கு நாம் அளித்திருக்கும் உறுதிமொழிகளை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
சோழவந்தானில் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும், சோழவந்தான், உசிலம்பட்டி, உத்தப்பநாயக்கனூர் ஆகிய ஊர்களில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும், சோழவந்தான் அருகே வைகை ஆற்றிலும் உசிலம்பட்டியின் அசுமா ஆற்றிலும் தடுப்பணைகள் கட்டப்படும், உசிலம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தில் நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும், திருமங்கலம், உசிலம்பட்டியில் நவீன வசதிகளோடு கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், திருமங்கலத்திலுள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு உயர் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும், வைகை கூட்டு குடிநீர் திட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு நீட்டிக்கப்படும், உசிலம்பட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டப்படும், திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்படும், உசிலம்பட்டியில் மதுரை, தேனி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் எனப் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இது அனைத்தும் ஸ்டாலின் தருகின்ற உறுதிமொழி. கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது “சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்” என்று சொல்வார். அவருடைய மகன் ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்.
ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி தொலைநோக்குப் பார்வையோடு பத்தாண்டு காலத்திற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான என்னுடைய 7 உறுதி மொழிகளை திருச்சி மாநாட்டில் சொல்லியிருந்தேன். அதில் முக்கியமாக, தமிழ் மண்ணில், இந்தியைத் திணித்து, நீட்டையும் கொண்டுவந்து திணித்து, அதன் மூலமாக மதவெறியைத் தூண்ட நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது திராவிட மண் - தந்தை பெரியார் பிறந்த மண் – அண்ணா பிறந்த மண் - நம்முடைய கலைஞர் பிறந்த மண். உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகளெல்லாம் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது.
அதனால் தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும். நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது.
எனவே, வேலைவாய்ப்புகளை பெருக்க, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, இந்த தூங்கா நகரமாம் மதுரையை மீட்க, நாம் இழந்த உரிமையை மீட்க நீங்கள் அத்தனை பேரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, அன்போடு, பாசத்தோடு, பணிவோடு, உரிமையோடு உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கலைஞருடைய மகனாக இருந்து உங்கள் பாதங்களைத் தொட்டு கேட்கிறேன் வெற்றிபெறச் செய்யுங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.