இன்று (17-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, மதுரை - பழங்காநத்ததில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்பதற்காக உங்களை தேடி - நாடி வந்திருக்கிறேன்.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் சின்னம்மாள் அவர்கள் ஒரு எளிமையான வேட்பாளர். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர், அவரை கோமாளி மந்திரி என்று சொல்வதா, காமெடி மந்திரி என்று சொல்வதா? – ‘தெர்மாகோல் புகழ்’ செல்லூர் ராஜூ, அவர்தான் நிற்கிறார். எனவே ஒரு அமைச்சரை எதிர்த்து நம்முடைய சின்னம்மாள் அவர்களை நிறுத்தி இருக்கிறோம். அந்த அமைச்சருக்கு பாடம் புகட்ட, அவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைகளுக்கு முடிவுகட்ட, நம்முடைய மகளிர் அணியைச் சார்ந்த சின்னம்மாள் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள், ஏற்கனவே மதுரை மத்திய தொகுதியில் வென்று, சட்டமன்றம் சென்று, அளப்பரிய சாதனைகளை தொடர்ந்து செய்துகொண்டு இருப்பவர். எனவே அந்த சாதனைகள் தொடர இந்த தொகுதி மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாண அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை வடக்கு தொகுதியில் தளபதி அவர்கள், அவரும் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து அந்த தொகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் – பணியாற்றியவர். இன்றைக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை தெற்கு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக - நம்முடைய அருமை அண்ணன் வைகோ அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு இங்கே நிறுத்தப்பட்டிருக்கும் சகோதரர் பூமிநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
உங்களிடத்தில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். உரிமையோடு என்றால் தேர்தலுக்காக மட்டும் வருகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல, எப்பொழுதும் - எந்த நேரத்திலும் - எந்த சூழ்நிலையிலும் வருகிறவன். இப்போது நான் முதலமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன். அதுதான் முக்கியம். எனவே தான் அந்த உரிமையோடு உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
நீங்கள் தயவுசெய்து ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க வெற்றி பெறுவதும் பா.ஜ.க வெற்றி பெறுவதும் ஒன்றுதான். பா.ஜ.க உறுப்பினராக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை; அ.தி.மு.க வெற்றி பெற்றாலும் அவர்கள் பா.ஜ.க உறுப்பினர் தான். ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோம். அதில் தேனி தொகுதியில் அ.தி.மு.க எம்.பி. ஒருவர் வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க எம்.பி. அல்ல; பா.ஜ.க எம்.பி.யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
எனவே அ.தி.மு.க. வெற்றி பெறக் கூடாது. பா.ஜ.க.வும் வெற்றி பெறக்கூடாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வந்தாலும் அது எந்த அளவிற்கு நாட்டுக்கு கெடுதல் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க.வின் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல், சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க. ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே உதவாக்கரை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா அதுதான் பழனிசாமி. தமிழ்நாட்டை இன்றைக்கு அடமானம் வைத்து இருக்கிறார். நம்முடைய உரிமைகளை எல்லாம் ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது. காவிரியின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய நிதியை முறையாக பெற முடியவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தார்கள். 2014ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்றத்தில் அறிவித்தது. அதற்குப் பிறகு அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமராக இருக்கும் மாண்புமிகு மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவதற்கு முன்பு அதற்கு அடிக்கல் நாட்டினார்.
2014-இல் அறிவித்த திட்டத்திற்கு, 2019-இல் அடிக்கல் நாட்டினார். இப்போது 2021 வந்துவிட்டது. இதுவரையில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. அந்தத் திட்டம் இப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால் நான் இப்போது சொல்கிறேன். எந்த திட்டம் கிடப்பில் இருந்தாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அதை விரிவுபடுத்தி, அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயமாக உருவாக்கித் தருவோம். நாங்கள் அதில் அரசியல் நோக்கம் பார்க்க மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல உள்ளாட்சித் தேர்தலை முறையாக இந்த ஆட்சி நடத்தவில்லை. அதற்குப் பிறகு நாம் நடத்த வேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் சென்று ஒரு சில மாவட்ட ஊராட்சி பகுதிகளில் மட்டும் தான் நடைபெற்றது. பேரூராட்சி - நகராட்சி - மாநகராட்சிகளில் நடக்கவில்லை. எனவே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நடக்காமல் இருக்கும் அந்த உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவோம் என்ற உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப் பணியாளர்கள் - தூய்மைப் பணியாளர்கள் வேலை நிரந்தரம் வேண்டும் என்று சொல்லி ஒரு பக்கத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் - ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சரும் - அமைச்சர்களும் கோட்டு போட்டுக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று வந்தார்களே தவிர, எந்த முதலீடும் வரவில்லை. வேலை வாய்ப்பும் இல்லை. வேலை இல்லாமல் இன்றைக்கு இளைஞர்கள் - பட்டதாரிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மின் கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - பெட்ரோல் விலை - டீசல் விலை உயர்வு, இதனால் நம்முடைய வீட்டுப் பெண்கள் – தாய்மார்கள் கண்ணீர் சிந்தும் வகையில் விலைவாசி விஷம் போல் ஏறி இருக்கிறது. இவ்வாறு பத்தாண்டு காலமாக பாழாகிப்போன இந்த தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 7ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நான் 7 உறுதிமொழிகளை அறிவித்தேன்.
அதை நீங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்கள். 10 ஆண்டுகளுக்கான என்னுடைய தொலைநோக்குத் திட்டம் என்ற தலைப்பில் அவற்றை அறிவித்தேன். அதில் 7 முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்போது தலைப்புச் செய்தியாக மட்டும் உங்களிடத்தில் குறிப்பிட்டு காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
1. பொருளாதாரம் - வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு,
2. விவசாயம் - மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி,
3. நீர்வளம் - குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்,
4. சுகாதாரம், கல்வி - அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்,
5. சமூகநீதி - அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்,
6. நகர்ப்புற வளர்ச்சி - எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்,
7. ஊரக உட்கட்டமைப்பு - உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
இந்த இலக்குகள் அனைத்தும் பத்தாண்டு காலத்திற்குள் படிப்படியாக 2031-க்குள் நிறைவேற்றப்படும் என்று நான் அறிவித்தேன். அறிவித்தபோது சொன்னேன், அறிவிப்பது கலைஞருடைய மகன் “சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்” இது அண்ணாவின் மீது - நம்முடைய தலைவர் கலைஞர் மீது - தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் என்று உறுதியோடு சொல்லி இருக்கிறேன்.
அதை அடிப்படையாக வைத்துத்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையை நாம் வெளியிட்டு இருக்கிறோம். நாம் என்ன வெளியிட்டு இருக்கிறோமோ அதை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து அ.தி.மு.க. வெளியிட்டு இருக்கிறது.
நம்முடைய தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5 குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 4 குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம், கொரோனாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4,000 ரூபாய், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இந்த உறுதிமொழி சொல்லி பெரிய வெற்றி பெற்றபோது, முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை கூறி தி.மு.க. வெற்றி பெற்று விட்டது எனச் சொன்னார். குழந்தைகளுக்கு ஏதோ மிட்டாய் கொடுப்பது போல கொடுத்து வெற்றி பெற்று விட்டார்கள். அதை எவ்வாறு தள்ளுபடி செய்ய முடியும் என்று சொல்லி கிண்டல் செய்தார்கள். இப்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அது இடம்பெற்றிருக்கிறது. இப்போது நீங்கள் அல்வா கொடுக்கப்போகிறார்களா?
கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்து இருக்கிறோம். இவ்வாறு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அது மட்டுமா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பதை போல, ஒரு பிரம்மாண்டமான நூலகமாக இந்த மதுரை மாநகரில் ‘கலைஞர் நூலகம்‘ உருவாக்கப்படும், பூக்களை சேமித்து பாதுகாப்பாக வைப்பதற்கு மதுரையில் குளிர்பதனக் கிடங்கு, மதுரையில் ஜவுளிப் பூங்கா, மதுரை - பாண்டியராஜபுரம் மற்றும் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், மாடக்குளம் கண்மாயில் நிரந்தர நீர்த்தேக்கம் என்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் ஏறக்குறைய 505 உறுதிமொழிகள் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் கடுமையான வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் நீங்கள் நிற்பதற்கு காரணம், இந்த கொடுமையான ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் மீண்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன். மதுரை மேற்கு தொகுதியில் ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்து வலிமையாக இருக்கும் நம்முடைய சின்னம்மாள் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை மத்திய தொகுதியில் ஏற்கனவே உங்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய சகோதரர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை வடக்கு தொகுதியில் மாவட்டச் செயலாளர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்து பேசிய கோ.தளபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை தெற்கு தொகுதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் - நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அருமை சகோதரர் பூமிநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்” என உரையாற்றினார்.