இந்தியா டுடே சார்பில் நேற்று (13.3.2021) மாலை நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய பிறகு அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அதன் விவரம் வருமாறு:
தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்!
கேள்வி: வெற்றி குறித்து மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். அ.தி.மு.க தரப்பில் முதலமைச்சர் பழனிசாமியும் இதே நம்பிக்கையுடன் இருக்கிறார். எதன் அடிப்படையில் இந்த அளவு நம்பிக்கையுடன் பேசுகிறீர்கள்?
கழகத் தலைவர்: நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். அதற்குப் பிறகு நடந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதை நிரூபித்துக் காட்டியிருக் கிறோம். அதுமட்டுமில்லாமல் மக்களிடத்தில் நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது, மக்களைச் சந்திக்கும் போது, மக்களிடத்தில் காணப்படும் எழுச்சி - வரவேற்பு அத்தனையும் நிச்சயமாக- நான் 200 இடங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் - தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்திருக்கிறது.
தி.மு.க. வெற்றியைத் தடுக்க - ஒரு கூட்டம் சதிதிட்டம்!
கேள்வி: நீங்கள் இந்த பிரச்சாரம் செய்யும்போது உங்களுக்கு ஏதாவது தடைகள் வருகிறதா? என்னென்ன சவால்கள் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு என்னென்ன சவால்கள் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
கழகத் தலைவர்: நான் அந்த தடைகளை பற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. வரக்கூடாது என்ற நிலையை விட, தி.மு.க. வரக்கூடாது என்று ஒரு கூட்டம் சதித் திட்டம் போட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது நிச்சயமாக நடக்காது. இந்த தேர்தலை பொறுத்தவரையில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
அரசியலில் யாரையும் திணித்து விட முடியாது!
கேள்வி: தி.மு.க வாரிசு அரசியலையும், குடும்ப ஆட்சியையும் முன்னெடுப்பதாக கான்க்லேவுக்கு வந்திருந்த அதிமுகவைச் சேர்ந்த பலரும் குற்றம் சாட்டினார்கள். உங்கள் மகன் உதயநிதி கூட இப்போது அரசியலில் இருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
கழகத் தலைவர்: யாரும் வந்து எம்.எல்.ஏ. பதவியை இந்தா நீ தான் எம்.எல்.ஏ. என்று தூக்கி கொடுத்து விடவில்லை. மக்களிடத்தில் நின்று மக்களின் ஆதரவைப் பெற்று, அதற்குப் பிறகுதான் எம்.எல்.ஏ. ஆக முடியும். இதே போல தான் நான் அரசியலில் நுழைந்த போது, நான் மேயராக நியமிக்கப்படவில்லை. மக்களிடம் சென்று வாக்கு வாங்கித்தான் அந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று நான் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனவே மக்களிடத்தில் செல்வாக்கு இருந்தால் தான் யாராக இருந்தாலும் அரசியலில் வர முடியுமே தவிர யாரும் திணித்து விட முடியாது. அந்த நிலையை தி.மு.க. என்றைக்கும் எடுக்காது.
கேள்வி: 3 விஷயங்கள் தமிழ்நாட்டிற்காக உடனடியாக செய்வேன், ஒன்று சொல்லிவிட்டீர்கள், ஊழல் வழக்குகள் எல்லாம் நாங்கள் விசாரிப்போம். அதற்கு தனி நீதிமன்றம் வைப்போம் என்று சொல்லிவிட்டீர்கள். அதனைத் தவிர வேறு 2 விஷயங்கள் என்ன செய்வீர்கள்?
கழகத் தலைவர்: இன்றைக்கு பெட்ரோல்- டீசல் விலையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதை மாநில அரசின் மூலமாக எந்த அளவிற்கு குறைக்க முடியுமோ அதை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் இதைக் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறோம். அதேபோல வேலைவாய்ப்பு, இது போன்ற மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளைக்குரிய நிலையை நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்தித் தருவோம்.
கேள்வி: கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் இது. புதிய வரிசை, புதிய தலைமை. கலைஞர் இல்லாமல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
கழகத் தலைவர்: கலைஞர் இல்லாவிட்டாலும் அவர் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் எங்களுக்கு மனதில் இருக்கிறது. கலைஞருடைய அந்தப் பயிற்சி எங்களுக்கு இருக்கிறது. அந்த பயிற்சியை வைத்துக்கொண்டு நாங்கள் கட்சியை நடத்துகிறோம். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.