திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியாளர்கள் ஜெயாமேனன் மற்றும் டி.கோவர்தன் ஆகியோருக்கு அளித்த பேட்டி இன்று (24-02-2021), அந்நாளிதழில் வெளியாகியுள்ளது.
தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
கேள்வி: “மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்குப் பிறகு தாங்கள், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளீர்கள். 2016-ஆம் ஆண்டு “நமக்கு நாமே” பரப்புரை பயணத்தின் போதும், தற்போதும் மக்கள் அளிக்கும் ஆதரவில் வித்தியாசம் எதையும் தாங்கள் காண்கிறீர்களா?
கழகத் தலைவர்: திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய இயக்கம்; எப்போதும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கம்; மக்களின் நம்பிக்கையை ஈட்டியுள்ள இயக்கம். மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், மக்களின் குறைகளைக் கேட்டேன். இப்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில், மக்களின் குறைகளைத் தீர்க்கும் முகாமை நடத்தி வருகிறேன். பொதுமக்கள் பெருவாரியாகப் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் பத்தாண்டு காலத் தோல்வி பளிச்சென தெரிகிறது. குறைகள் அடங்கிய மனுக்களுடன் குவிந்து கொண்டிருக்கும் மக்களே, இந்தக் கூட்டம் வெற்றி பெற்றதற்கான சாட்சியமாக இருக்கிறார்கள்.
கேள்வி: எதிர்வரும் தேர்தலில் தி.மு.கழகத்திற்கான வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கழகத் தலைவர்: மக்களின் வரவேற்பு மிகப் பெரிய அளவுக்கு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தங்களுக்குப் பல வழிகளிலும் நேர்ந்த அவலத்தை போகிற இடமெல்லாம் நேரடியாக விளக்குகிறார்கள். படித்த இளைஞர்களுக்குக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் வட மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படுகிறது. மருத்துவக் கல்வியிலும் இதேநிலைதான். தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி வருவாய்கள் அனைத்தும் வட மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பல முனைகளில் தமிழகம் உரிமைகளை இழக்கிறது. மைகளையும் தமிழகம் இழந்து – இதனால், வடமாநிலங்கள் பயன்பெறுகின்றன.
இதை அ.தி.மு.க. ஆட்சி வேடிக்கை பார்க்கிறது. பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்பதால், பிரச்சினை எதுவுமின்றி அவர் தன்னை முதலமைச்சராகத் தொடர அனுமதித்த பா.ஜ.க.விற்குத்தான் மிகவும் விசுவாசமாக இருக்கிறார். தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விசுவாசமாக இல்லை. எனவே, 2019 மக்களவைத் தேர்தலில் அளித்த வெற்றியைவிட மகத்தான வெற்றியை அளித்து இந்த அரசைத் தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள்.
கேள்வி: உங்களுடைய அரசியல் ராஜதந்திரம், கொள்கை மற்றும் தலைமைத்துவ பாணி ஆகியவை தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து வேறுபட்டுள்ளதா?
கழகத் தலைவர்: முத்தமிழறிஞர் கலைஞர் இந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தோள் மீது சுமந்து பாதுகாத்தவர். கூட்டாட்சித் தத்துவம் என்ற உயரிய கோட்பாட்டிற்கு அடையாளமாக விளங்கியவர். தனது இயக்கத்தின் கொள்கையை ஆட்சியில் இருந்தபோது திட்டங்களாக வகுத்துக் கொடுத்தவர். நான் கலைஞரின் மகன். கலைஞரிடம் பாடம் கற்றவன். கலைஞருக்கு நிகர் நான் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆகவே, கலைஞரின் கொள்கை வழி நின்று- திராவிட முன்னேற்றக் கழகத்தை- திராவிட இயக்கத்தை எப்போதும் போல் எழுச்சிமிகு இயக்கமாக நடத்திட உழைக்கிறேன்.
கேள்வி: கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் இருப்பது தி.மு.க., அ.தி.மு.க. தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
கழகத் தலைவர்: அ.தி.மு.க.வை நான் தி.மு.க.விற்கு சவாலானதாகக் கருதவில்லை.எனினும், தேர்தல் களத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது; அதே சமயம், அ.தி.மு.க. வலிமையான தலைமை இல்லாமல் தடுமாறி, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடிமையாகிவிட்டது.
கேள்வி: தி.மு.கழகம் மேற்கு மாவட்ட தொகுதிகளில் கடுமையாக முனைப்புக் காட்டி வருகிறது. இது திட்டமிட்டு செய்யப்படும் உத்தியா?
கழகத் தலைவர்: மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. பலமாக இருப்பதாக் கூறுவது பொய்யான கருத்து. இது 2019 மக்களவைத் தேர்தலிலேயே தகர்க்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பல, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டதால், மேற்கு மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி நி்ச்சயமற்ற தன்மைக்கு ஆளாகிவிட்டது. எந்த அடிப்படையில் அ.தி.மு.க.விற்கு ஏதோ மேற்கு மாவட்டங்கள் சாதகமாக இருக்கிறது போன்ற தோற்றத்தை பத்திரிகைகளும், ஊடகங்களும் உருவாக்குகின்றன என்பது புரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலிலேயே மேற்கு மாவட்டங்கள் தி.மு.கவின் கோட்டை என மக்கள் நிரூபித்து விட்டனர். எங்களைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
கேள்வி: அரசாங்கத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கிறீர்கள். அதற்கு உங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா?
கழகத் தலைவர்: தி.மு.க. எப்போதுமே ஆதாரபூர்வமான ஊழல் புகார்களை மட்டுமே கொடுக்கும். முதலமைச்சர் பழனிசாமி மீது தி.மு.க. கொடுத்த “நெடுஞ்சாலைத்துறையில் தன் சம்பந்திக்கு டெண்டர் வழங்கிய" ஊழல் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றமே உத்தரவிட்டது. ஆனால் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அதற்குத் தடைவாங்கி விட்டார். முதல் கட்டமாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு உள்ளிட்ட ஊழல் புகார்களை தமிழக ஆளுநரிடம் நானே நேரில் சென்று கொடுத்தேன்.
இப்போது இரண்டாவது ஊழல் பட்டியலையும் கொடுத்திருக்கிறோம். அப்போது எங்களின் முதல் ஊழல் புகார் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழக ஆளுநர் அவர்கள் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கூறியிருக்கிறார். ஆதாரம் இருப்பதால்தானே புகார்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார். முறையான விசாரணை நடந்தால் இவற்றை நிரூபிக்க முடியும்.
கேள்வி: இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் குற்றச்சாட்டுகளையும், 1991-96 ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசின் மீது கொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?
கழகத் தலைவர்: 1991-1996 அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மிஞ்சி, ஊழலில் நம்பர் ஒன் அரசு, முதலமைச்சர் பழனிசாமியின் அரசுதான் என்பதை நிரூபித்து விட்டார். தமிழகத்தில் மட்டுமன்று, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதற்கு இணையான ஊழல் இல்லை. நாட்டிலேயே பழனிசாமிதான் அதிக ஊழல் புரிந்த முதலமைச்சர்.
கேள்வி: 2ஜி குற்றச்சாட்டு உள்ளிட்ட உங்கள் கட்சியினர் மீது கூறப்படும் புகார்கள் வெற்றி வாய்ப்பில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
கழகத் தலைவர்: முதலமைச்சரும் – அவரது அமைச்சரவையினரும் தங்களின் மெகா ஊழல்களை மறைக்க திமுகவுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்! 2ஜி தொடர்பான வழக்கில் ஆதாரம் இல்லை என்று வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது. அந்தப் வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் - முதலமைச்சர் மீதும்தான் உள்ளன. அதுதான் அ.தி.மு.க.விற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தலில் படுதோல்வியைத் தரும்.
கேள்வி: மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்ப்போம் என்கிற தங்கள் உறுதிமொழியில் சிலருக்கு சந்தேகம் உள்ளதே?
கழகத் தலைவர்: சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளை வகித்திருக்கிறேன். அரசு நிர்வாகத்தின் அத்தனை அம்சங்களையும் நன்கு உணர்ந்திருக்கிறேன். சவால்கள் நிறைந்த திட்டங்களை - சங்கடங்கள் ஏதும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன். ஆகவே 100 நாட்களுக்குள் தீர்வு என்று நான் அறிவித்துள்ள இந்த திட்டம் நிறைவேற்றப்படும். என்னால் முடியும் என்பதால்தான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். பழனிசாமி அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடனை ஏற்கனவே வாங்கி வைத்து விட்டதே - எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கவலையில் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கலாம். ஊழலின் கதவிற்கு நிரந்தரமாக பூட்டுப் போட்டாலே – மக்களின் குறைகளைத் தீர்த்துவிட முடியும்.
கேள்வி: எத்தனை தொகுதிகளில் நீங்கள் போட்டியிட விரும்புகிறீர்கள்? அதில் எத்தனை தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
கழகத் தலைவர்: தொகுதிப் பங்கீடுக்கான பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை. தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.
கேள்வி: காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவதற்கு தாங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
கழகத் தலைவர்: தேர்தல் அறிவிக்கப்பட்டப் பின்னர், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரோடும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களுடைய விருப்பங்களை அறிந்து, எங்களுடைய விருப்பங்களையும் எடுத்துரைத்து, சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெறும். புரிந்துணர்வுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வோம்.
கேள்வி: புதுச்சேரியில் தி.மு.கழகம் தனித்துப் போட்டியிட முடிவு செய்து, அதற்காக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டாரா?
கழகத் தலைவர்: புதுச்சேரியில் 1996 முதல் 2000 வரை மற்றும் பல்வேறு காலக்கட்டங்களிலும் ஏற்கனவே பலமுறை திமுக ஆட்சி நடத்தி இருக்கிறது! ஆகவே தி.மு.க.வை வலுப்படுத்த முயற்சி எடுப்பதில் தவறு இல்லை. மற்றபடி புதுச்சேரியில் தி.மு.க. தனித்துப் போட்டி என்று யார் அறிவித்தது? இதுவரை அப்படியொரு முடிவை நாங்கள் அறிவிக்கவில்லை. ஆகவே உங்கள் கேள்வி எனக்குப் புதிராக இருக்கிறது.
கேள்வி: நீங்கள் ஆட்சி நிர்வாகம் பற்றிய “விஷன் டாக்குமெண்ட்” ஒன்றை வெளியிடுவதற்கான திட்டம் இருக்கிறதா?
கழகத் தலைவர்: கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் வளம் குன்றிவிட்டது. நிதி நிலைமை நிலைகுலைந்து கிடக்கிறது. பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. வரலாறு காணாத வேலை இல்லாத் திண்டாட்டம் இளைஞர்களை விரக்தியில் தள்ளியிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது. பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன. ஒரு மெகா உட்கட்டமைப்புத் திட்டங்கள் கூட கடந்த 10 ஆண்டுகளில் இல்லை. மாநில உரிமைகள் சிதைக்கப்பட்டு - கூட்டாட்சித் தத்துவத்தையே அ.தி.மு.க. என்ற அடிமை அரசு மத்திய அரசிடம் சரண்டர் செய்திருக்கிறது. இவை அனைத்திற்கும் விடியலை ஏற்படுத்தும் வகையில் விஷன் டாக்குமெண்ட் இருக்கும். தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் அதனை வெளியிடுவோம்.
கேள்வி: இது தேர்தல் வியூக வகுப்பாளர்களின் காலம் என்று தெரிகிறது. இந்தப் புதிய அரசியல் ஆலோசகர்களை உருவாக்குபவர்கள் பற்றி கலைஞர் அவர்கள் திருப்திகரமாக உணர்ந்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
கழகத் தலைவர்: அரசர்களின் அரசவையில் ஆலோசகர்கள் இருந்திருக்கிறார்கள். மத்திய அரசுக்கே பல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆலோசர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோலவே, தேர்தல் களத்திற்காக பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக வைத்திருக்கிறோம். அவர் எங்களுக்குத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை - மற்ற கட்சிகளுக்கு எப்படி ஆலோசகர்கள் வழங்குகிறார்களோ அதே மாதிரி வழங்குகிறார். தி.மு.க. புதிதாக ஒன்றும் செய்து விடவில்லை!
கேள்வி: தி.மு.க. அரசியலில் குடும்ப அரசியலை ஊக்குவித்து வருகிறது என்ற அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கு நீங்கள் எப்படி பதில் அளிக்கப் போகிறீர்கள்?
கழகத் தலைவர்: இப்போது தமிழகத்தில் உள்ள ஊழல் அரசு தமிழகத்திற்கு ஆபத்து. அதை ஆதரிக்கும் பா.ஜ.க. பேராபத்து. இதுதான் தமிழக மக்களின் முன்பு உள்ள முக்கியப் பிரச்சினை! அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். அதை நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் காண்கிறேன். வரும் களச் செய்திகள் மூலமும் அறிகிறேன். ஆகவே “வாரிசு அரசியல்" என்ற துருப்பிடித்த வாதத்தை மீண்டும் கூர்மையாக்கி - அ.தி.மு.க. தங்கள் ஊழலை மறைக்கப் பார்க்கிறது. ஊழல் அ.தி.மு.க.வை ஆதரிப்பதை மறைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. மற்றபடி உழைப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க.வில் முதல் மரியாதை!
கேள்வி: இந்த முறை உதயநிதி தேர்தலில் போட்டியிடுவாரா?
கழகத் தலைவர்: இப்போதுதான் விருப்ப மனு கோரப்பட்டிருக்கிறது. விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு முறைப்படி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கேள்வி: அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் காலணிக்குள் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எவ்வாறு தாங்கள் எப்படி உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள்?
கழகத் தலைவர்: ஆங்கிலத்தில் கடைப்பிடிக்கும் வழக்கத்தின்படி, காலணிகளைக் குறிப்பிட்டு உங்களின் கேள்வி இருப்பதைத் தவறாகக் கருதவில்லை. எனினும், தமிழ் மரபு - திராவிட இயக்கத்தின் சுயமரியாதை உணர்வு இவற்றின் அடிப்படையில் இந்தக் கேள்வியை, ‘பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் கொள்கைச் சட்டை, மக்களின் பார்வையில் எனக்கு எந்த அளவு பொருத்தமாக இருக்கிறது?’ என்பதாக எடுத்துக் கொள்கிறேன். 13 வயதிலேயே கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை உருவாக்கி அதன் சார்பிலான விழாவுக்கு பேரறிஞர் அண்ணாவை அழைத்திருக்கிறேன். என்னிடம் மிகுந்த அன்பு காட்டியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பையும் ஆட்சிப் பொறுப்பையும் சுமந்த தலைவர் கலைஞர் அவர்கள். அவரது வழிகாட்டுதலில், பல்வேறு சோதனைகளைக் கடந்து, அவரது மறைவிற்குப் பிறகு, கழகத்தினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.
தலைவர் கலைஞர் எனது கடுமையான உழைப்பைப் பாராட்டி இருக்கிறார். எனவே திராவிடக் கொள்கை எனும் சட்டையை பேரறிஞரிடமிருந்தும் கலைஞரிடமிருந்தும் பெற்று அணியவேண்டிய தேவையை காலம் உருவாக்கியிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் இதயமும் கலைஞரின் உழைப்பும் என்னை வழிநடத்துகின்றன. சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக என்னுடைய கடுமையான உழைப்பைத் தமிழக மக்கள் அறிவார்கள். அவர்களின் வரவேற்பும் வாழ்த்தும்தான் என்னை ஊக்கத்துடன் செயல்பட வைக்கிறது.
கேள்வி: நீங்கள் வேல் ஒன்றை பிடித்திருந்தீர்கள். அது மதமா? அரசியலா?
கழகத் தலைவர்: வேலும் வாளும் பழந்தமிழர்களின் படைக்கலன்கள். ; ‘வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது, வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். போரில் பயன்படுத்தும் படைக்கலன்கள் மற்றும் ஏர்கலப்பை ஆகியவற்றைத் தமிழர்கள் வழிபட்டனர் என்று அறியப்படுகிறது. பிரித்தாளும் சக்திகள் கடந்த காலத்தில் (ராமனின்) வில்லைப் பயன்படுத்தினர். அவர்கள் திடீரென்று அரசியலுக்காக வேலைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்’ என்ற புரட்சியாளர் மாவோவின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.