“பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் சீரழிவையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து விளம்பரம் கொடுக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி; நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுப்பதால் தலைவராகி விட முடியுமா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (13-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் – பெரியார் நகர், கலைஞர் திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:
ஜெநுலாப்தீன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
உங்கள் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அடக்கத்தலம் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். கொரோனா காலத்தில், உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் பலபேரை நல்ல முறையில், உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சிறப்புக்குரியவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அவர்கள் கட்சிகள் சார்பிலும் செய்தார்கள். தனிப்பட்ட முறையிலும் செய்தார்கள். அது எனக்கு மிகவும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அந்த அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை என்பது உள்ளபடியே வருத்தத்திற்குரியது. உங்கள் குறையைப் போக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர் ஆட்சிதான். அதனால், தி.மு.க ஆட்சியில் உங்கள் கோரிக்கைப்படி இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இராஜேஸ்வரி என்ற பெண்மணியின் கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
வேலைவாய்ப்பு திட்டம், தாலி வழங்கும் திட்டம், தூர்வாரும் பணி, வீடு வழங்கும் திட்டம், வீடு கட்டும் திட்டம், கழிப்பறை திட்டம் இதில் ஒன்று கூட விடாமல் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பேசினார். அதாவது அ.தி.மு.க.வினரும், பஞ்சாயத்து அலுவலக பணியாளர்களும் ஊழல் சமுதாயம் நடத்துவதாக இங்கே அந்த சகோதரி பேசினார். இப்படி ஒரு திட்டத்தை கூட விடாமல் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எஸ்.பி.வேலுமணிதான் மானசீக குருவாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் எல்லாம் இவ்வளவு தைரியமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். அவர்களெல்லாம் விரைவில் கம்பி எண்ணப்போகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தான் உருவாக்கப் போகிறோம். நீங்கள் சொன்னவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கெல்லாம் தலைமையாக இருக்கும் வேலுமணியும் நிச்சயமாக கம்பி எண்ணப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைக்கு ஊழலில் திளைத்து, ஊழலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா மந்திரிகளையும் விட, ஏன் முதலமைச்சரையும் விட அதிகமாக ஊழல் செய்து கொண்டிருப்பது இந்த எஸ்.பி.வேலுமணி தான். அவர் மேல் பல வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அதெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் உறுதியாக இவர்களுக்கெல்லாம் தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சஞ்சனா என்ற சிறுமி பேசியதைப் பாராட்டியும், அவர் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்தும் தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
சிறுமி சஞ்சனா பேசியதில் நான் அப்படியே ஐக்கியமாகி விட்டேன். அந்தச் சிறுமி ஒரு முக்கியமான ஒரு கோரிக்கையாக, தனி மாவட்டமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். இது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. நிச்சயமாக உறுதியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தபிறகு அதை நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கித் தருவோம்.
கனிமொழி என்ற பெண்மணி முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் பேசியதாவது:
கனிமொழி பேசும் போது பண்ருட்டி பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட பின்பும் பயன்பாட்டில் இல்லை என்று சொன்னார். அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்று சொன்னார். சர்க்கரை ஆலைகளில் வெளிமாநிலத்தவருக்கு வேலை கொடுப்பதால் நாங்கள் வேலை தேடி வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் இங்கே சொல்லி இருக்கிறார். கலைஞர் கொண்டு வந்த திட்டம் எதுவாக இருந்தாலும் அதன் மேல் காழ்ப்புணர்ச்சி காட்டுவது தான் இந்த ஆட்சியின் வாடிக்கை. மக்கள் அல்லல்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க.காரர்களுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச் செயலகம் கட்டினார். அதைக் கூடப் பயன்படுத்தக்கூடாது, பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்று கஷ்டப்பட்டாலும் பராவாயில்லை - அங்கேதான் நீங்கள் வேலை செய்ய வேண்டும், கலைஞருக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்று தலைமைச் செயலகத்தை கூட பயன்படுத்தாத நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது. அடுத்ததாக சர்க்கரை ஆலை மட்டுமின்றி, நெய்வேலி நிலக்கரி நிலையம், இரயில்வேத்துறை, வங்கிகள் என எல்லா இடங்களிலும் பிற மாநிலத்தவருக்கு கொல்லைப்புற வழியாக கம்பளம் விரித்துக் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிலைமை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. தொடர்ந்து அ.தி.மு.க. தமிழகத்திற்குச் செய்து வரும் துரோகத்தை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறோம். வழக்குகள் நடத்தி விட்டோம். இருந்தாலும் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் இதற்கு முழுமையான தீர்வு. பணிகளை செய்வதற்காக நாங்கள் காத்திருககிறோம். ஆனால் அந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு 3 மாதங்கள் தான் இருக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவரை இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவர் இன்றைக்கு தேர்தல் நெருங்க நெருங்க புதிது புதிதாக அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். முன்பு நான் என்ன சொல்கிறேனோ அதை எல்லாம் மறுத்தார். ஆனால் தேர்தல் நெருங்கி விட்டது. அதனால் நான் என்ன சொல்கிறேனோ அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். உடனே அவர் என்ன சொல்கிறார் என்றால், “நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை ஸ்டாலின் முன்கூட்டியே சொல்லி விடுகிறார்” என்று அவர் சொல்கிறார். அப்படியென்றால் நீங்கள் அரசை வழி நடத்தாதீர்கள். என்னிடம் விட்டு விட்டு செல்லுங்கள் இதுதான் நான் சொல்வது. நல்ல வேளை, காலில் விழுந்து ஊர்ந்து போனாரே அதையும் நான்தான் சொன்னேன் என்று சொல்லிவிடபோகிறார். அந்த பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் என்னென்ன சொன்னேனோ அதையே அவர் செய்து கொண்டிருக்கிறார். அதையெல்லாம் நான் சொல்வதைவிட நேரடியாக அதை ஒரு குறும்படமாகத் தயாரித்திருக்கிறோம். அதை இப்போது உங்களிடத்தில் போட்டுக் காட்டப்போகிறோம். அதையும் பாருங்கள். பார்த்துவிட்டு அதற்கு பிறகு முடிவு செய்யுங்கள்.
(பொதுமக்கள் பார்வைக்கு குறும்படம் திரையிடப்பட்டது)
இப்போது நீங்கள் நேரடியாக பார்த்தீர்கள். இது எல்லாம் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகள் தான். நீங்கள் மட்டுமல்ல, இதை இப்போது உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு தரப்பிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் முதலமைச்சர் பழனிசாமி கூட இந்த வீடியோ க்ளிப்பைப் பார்க்க தான் போகிறார். “என் மனதில் என்ன இருக்கிறதோ அதை தெரிந்து கொண்டு ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் சொல்கிறார். அப்படி எந்த மாயமந்திரமும் எனக்கு தெரியாது என்பதை நான் முதலில் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பரவுகிறது என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் சொன்னவன் இந்த ஸ்டாலின். முதலில் மறுத்த அவர், பிறகு அவையை ஒத்தி வைத்தார். முதலில் சொன்னார், வயதானவர்களுக்கு தான் அது வரும். நீங்கள் எல்லாம் கவலைப்படாதீர்கள். நம்முடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் மாஸ்க் கொடுங்கள், எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னார். அதை கூட கிண்டல் செய்தார்கள், நக்கல் செய்தார்கள். அதெல்லாம் சுகர் நோயாளிகளுக்கு தான் வரும். நீங்கள் பயப்படாதீர்கள் என்றார்கள். அனைவருக்கும் பரிசோதனை செய்யச் சொன்னோம். அதெல்லாம் தேவை இல்லை. அது யாருக்கும் வராது. எந்த சாவும் வராது. இது அம்மா ஆட்சி என்று சொன்னார்கள். இப்போது அதிகம் பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதெல்லாம் முடியாது, நிதியில்லை என்று சொன்னார்கள். இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பொங்கலை முன்னிட்டு 2,500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதையும் முடியாது என்று சொன்னார்கள். அதற்குப்பிறகு தேர்விற்கான தேதியை முடிவு செய்து, அதற்குப்பிறகு அதை ரத்து செய்துவிட்டார்கள். இ-பாஸ் முறையை ரத்து செய்ய சொன்னேன். நான் சொன்னதற்கு பிறகுதான் அவர்கள் ரத்து செய்தார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்காக இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நான் கவர்னர் மாளிகையின் முன் போராட்டம் நடத்தினேன். விவசாய கடன் ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்னது ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி அன்றைக்கு கும்மிடிபூண்டி தொகுதி - பொன்னேரி பகுதியில் நான் சொன்னேன். அதற்கு பிறகு இப்போது தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தினால் இப்போது அதை செய்திருக்கிறார். ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று நான் சொன்னேன். அதை இப்போது பழனிசாமி செய்திருக்கிறார். மக்கள் குறைகளை ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்ப்பேன் என்று சொன்னேன். உடனே அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செல்போனில் தீர்ப்போம் என்று சொல்லுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செல்போன் கொடுப்பேன் என்று சொன்னார்கள், அ.தி.மு.க. இதுவரைக்கும் யாருக்காவது செல்போன் கொடுத்து இருக்கிறார்களா? இல்லை. செல்போன் கொடுத்து தீர்த்து வைப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு காலையிலும் எனக்கு ஒரு செய்தி வந்தது. தருமபுரி மாவட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்துவதற்காக சென்றபோது, அங்கு அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டி ஏரி வரை வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரும் திட்டம் 4 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினேன். இப்போது இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அந்தத் திட்டத்தைத் தொடங்கப் போகிறார் என்று இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது. இப்படி நான் சொல்வதைத்தான் பழனிசாமி செய்கிறார். ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “ஆண்டவன் சொல்றான், இந்த அருணாச்சலம் செய்றான்” என்று சொல்வார். அதேபோல இப்போது, “இந்த ஸ்டாலின் சொல்கிறார், பழனிசாமி செய்கிறார்” இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.
இராமசாமி என்ற கரும்பு விவசாயியின் கோரிக்கைக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
இராமசாமி சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள். விவசாயிகளை பற்றிச் சொன்னார். நான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி விவசாயிகள் கூட்டுறவு வங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னேன். அது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் - சென்னை உயர்நீதிமன்றம், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் முடியாது, நிதி இல்லை என்று உச்சநீதிமன்றம் சென்று அங்கு தடை வாங்கிய முதலமைச்சர் பழனிச்சாமி கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைச் சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி, மக்கள் மன்றத்திலும் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் மறுத்தார்கள், இப்போது தேர்தல் நெருங்கி விட்டது. ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து கொண்டார்கள். அதனால் இருக்கும்வரை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிடலாம் என்று ஒரு திட்டம். டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்று இப்போது வாய்க்கு வந்தபடியெல்லாம் உறுதிமொழிகளைக் கொடுக்கிறார்கள்.
கலைஞர் அவர்கள் 2006ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தொகை 7,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்தார், வந்து கோட்டைக்கு கூட செல்லாமல் பதவி ஏற்றுக்கொண்ட விழா மேடையிலேயே 7,000 கோடி ரூபாய் கடன் ரத்து என்று கையெழுத்து போட்ட கை தான் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் 1989இல் கலைஞர்தான் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை அப்போதைய அ.தி.மு.க. அரசு. ஆனால் கலைஞர் 1989 - ல் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் நீங்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் எல்லாம், மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரிப் போராடினீர்கள். ஆர்ப்பாட்டம் செய்தீர்கள். சிறைக்குப் போனீர்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சி. இனிமேல் ஒரு பைசா கூட நீங்கள் மின்சார கட்டணம் தர வேண்டும் என்று உத்தரவு போட்டார் கலைஞர். எனவே விவசாயிகளுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்பது தி.மு.க. தான். இன்றும் 3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதை எதிர்த்து ஓட்டு போட்டது தி.மு.க. தான். இன்றைக்கு அதை எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பது தி.மு.க. தான். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா? பச்சைத் துரோகி தான் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர். அவர், “என் குடும்பமே விவசாய குடும்பம், நானும் ஒரு விவசாயி” என்று சொல்லுவார். ஒரு ரவுடி தான், “நானும் ரவுடி தான், நானும் ரவுடிதான்“என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அதேபோல இன்றைக்கு அவர் ‘நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
செவித்திறன் இழந்த தன்னுடைய மகனுக்கு கலைஞருடைய ஆட்சியில் தான் கடைசியில் உதவி கிடைத்தது என்று சொன்னார்கள். மேலும் அவரது சிகிச்சைக்காக உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் கலைஞர் ஆட்சிக்காலத்தில் அளித்த உறுதி இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை என்று ராமசாமி அவர்கள் சொன்னார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். கலைஞர் அளித்த உறுதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது. அதை நிச்சயம் உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
தேன்மொழி என்பவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக கழக நிர்வாகிகள் மூலம் அவருக்குத் தையல் இயந்திரம் வழங்கப்படும் என்ற உறுதியை அளித்து, கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:
நீங்கள் நல்லா இருக்கிறீர்களா என்று கேட்டீர்கள். உங்கள் கோரிக்கைகள் எல்லாம் தீர்த்துவைத்த பின்பு தான் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லுவேன். அதுவரைக்கும் எனக்கு ஓய்வு இல்லை. ஆட்டோ ஓட்டுனர் மனைவியான தேன்மொழி அவர்கள் வங்கியில் கடனுக்காக வைத்த அந்த நகையெல்லாம் ஏலம் விட்ட பிறகும், அதற்கு கூடுதல் தொகை கேட்கிறார்கள் என்று மிகவும் வருத்தமாக சொன்னார்கள். அவர்கள் கோரிக்கை மனுவில் எழுதியிருப்பது தையல் மெஷின் வாங்கி தந்தால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். உங்களை என்னுடைய சகோதரியாக நினைத்து உடனடியாக உங்களுக்கு இந்த உதவியை என்னுடைய கழக நிர்வாகிகள் மூலமாக செய்வேன். நிச்சயமாக விரைவில் நீங்கள் கேட்ட அந்த தையல் மெஷினைக் கொண்டு வந்து கழக நிர்வாகிகள் உங்களிடம் கொடுப்பார்கள். கொடுத்துவிட்டு அதை என்னிடம் தகவல் கொடுப்பார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன். கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
உத்தமசோழனின் தாயாகிய செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட விருத்தாசலம் கோவில் தேரின் அமைப்பைக் கொண்ட மணிமண்டபம் தமிழர் கலையின் செழிப்பைக் காட்டும் இடமாக அமைந்துள்ளது. அத்தகைய கலைக்கோயில் இருக்கும் விருத்தாசலம் வந்துள்ளேன்!
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் வடலூரும் அருகில் தான் இருக்கிறது. உங்களின் குறைகளை எல்லாம் நான் கேட்க வந்திருக்கிறேன் என்றால், அந்த வள்ளலாரின் வாக்கின் நோக்கத்துக்காகத் தான். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றார் அவர். வாடிய முகங்களின் ஏக்கங்களைப் போக்கவே, உங்கள் கோரிக்கைகளைக் கேட்கவே நான் வந்துள்ளேன். உங்கள் கவலைகளைத் தீர்க்கவே நான் வந்துள்ளேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. அப்போதெல்லாம் மக்களுக்கு என்ன தேவை, மக்களின் கோரிக்கைகள் என்ன, தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நன்மை ஏற்படுத்துபவை எவை என்பதை எல்லாம் யோசித்து முடிவுகள் எடுத்தோம். அதை நிறைவேற்றிக் கொடுத்தோம்.
ஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. இது மக்களை மறந்த ஆட்சி.மக்கள் விரோத ஆட்சி. மக்களைத் தண்டிக்கும் ஆட்சி. இந்த அதிமுக ஆட்சியை மக்கள் தண்டித்தாக வேண்டும். அதற்காக காலமும் சூழலும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. உழைப்பின் கஷ்டம் ஸ்டாலினுக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை' என்று பழனிசாமி பேசி இருக்கிறார்.
அவர் உழைப்பு என்று எதைச் சொல்கிறார்? ஊர்ந்து போவதையா? அப்படி எனக்குப் பழக்கமில்லை பழனிசாமி அவர்களே!
காலைப் பார்த்தால் ஊர்ந்து போய் பதவியைப் பெறுவதும்- அதன்பிறகு காலை வாரி விட்டு பதவி சுகத்தை அனுபவிப்பதும் எனக்கு பழக்கமில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், எங்களை அப்படி வளர்க்கவில்லை.
கலைஞர் அவர்கள் எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார். போராட்டம் நடத்தக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்குச் செல்லக் கற்றுக் கொடுத்தார். சித்ரவதைக்கு பயப்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார். மக்கள் எப்போது, எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று பார்க்கவேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். மக்களின் வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும் உங்களில் ஒருவனாக இருக்கக் கற்றுக் கொடுத்தார்.
புயலா, மழையா, வெள்ளமா, நிலச்சரிவா? எங்கே மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்தாலும் முதல் ஆளாக நான் போயிருக்கிறேன். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை இந்த எடப்பாடி அரசாங்கம் துள்ளத்துடிக்கக் கொன்ற போதும் உடனடியாக நான் சென்றேன். கலவர பூமிக்கு சென்றேன்.
நீட் தேர்வு காரணமாக தங்களது மருத்துவக் கல்லூரிக் கனவு சிதைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவச் செல்வங்களின் இல்லம் சென்றேன். அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களால் விபத்துக்கு உள்ளாகி இறந்துபோன மாணவி வீட்டுக்கு உடனடியாகச் சென்று உதவினேன்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தினேன். மின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக போராடினோம். காவிரி உரிமை மீட்புக்காக நடை பயணம் சென்றோம். இவை அனைத்துக்கும் மேலாக, கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு உதவி செய்த கரம் தான் இந்த ஸ்டாலினின் கரங்கள். மக்களோடு மக்களாக இருந்தவன் தான் இந்த ஸ்டாலின்.
இந்த ஸ்டாலினுக்கு உழைப்பை பற்றி பழனிசாமி கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிலைமையில் நான் இல்லை. பதவிக்காக எந்தக் காலையும் முத்தமிடத் தயாராக இருக்கும் பழனிசாமியிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி...
காலில் ஊர்ந்து போய் பதவியை பெற்றீர்களா? இல்லையா? ஆம் அல்லது இல்லை என்று சொல்லுங்கள். அதன்பிறகு மற்ற விவகாரங்களைப் பற்றி பேசலாம்.
மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து விளம்பரம் கொடுக்கிறீர்களா? நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுப்பதால் தலைவராகி விட முடியுமா?
கோவிட் காலத்தில் கோபுரமாய் உயர்ந்து நின்றோம் என்று விளம்பரம் செய்துள்ளார் பழனிசாமி. தமிழ்நாட்டில் மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டார்கள். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். இதுதான் கோபுரமாய் உயர்ந்து நிற்பதா?
கோவிட் காலத்திலும் கொள்ளையடித்து கோபுரமாய் உயர்ந்தது முதலமைச்சர் பழனிசாமியாகவோ, அமைச்சர்கள் வேலுமணியோ, விஜயபாஸ்கராகவோ இருக்கலாமே தவிர பொதுமக்கள் அல்ல.
பொதுமக்கள் வாழ்க்கை தரை தாழ்ந்துவிட்டது. தரையை விட ஆழமாக தாழ்ந்துவிட்டது. அதுதான் உண்மை. சிறு குறு தொழில் செய்பவர்கள் வாழ்வாதாரம் இழந்தார்கள். பலருக்கும் வேலை போனது. சிறுதொழில்கள் நடத்தியவர்கள் மூடிவிட்டார்கள். தொழிலை நிறுத்தியவர்களால் தொடங்க முடியவில்லை. நடுத்தர வர்க்கத்தினர்கள், வாழ்க்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் கொடுக்க நான் சொன்னேன். காது கேட்காதது போல முதலமைச்சர் இருந்தார். பணமில்லை என்று சொன்னார். ஆனால் கோடிக்கணக்கான பணத்தை காண்ட்ராக்டர்களுக்கு கொட்டிக் கொடுத்துள்ளார். கொரோனா காலத்திலும் டெண்டர் முறைகேடுகளைச் செய்தார்கள். கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட அனைத்து மருந்துப் பொருள்களிலும் ஊழல் செய்தார்கள்.
மருந்து தொடங்கி பிளீச்சிங் பவுடர் வரை கொள்ளை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்தார்கள் அல்லவா? அதிலும் ஊழல். அந்தப் பணத்தை கூட முழுமையாக விநியோகம் செய்யவில்லை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் சொல்லி இருக்கிறார்கள். இப்படி கொரோனாவை விட கொடூரமான கொள்ளை அரசாகத்தான் அ.தி.மு.க. அரசு செயல்பட்டது. இந்த கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்தை முடித்தாக வேண்டும்.
கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதன் பிறகு அமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக அமையும். இன்றைக்கு என்னை நம்பி, உங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.
என்னை என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி உங்களது கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். தி.மு.க மீதான, கலைஞரை மீதான நம்பிக்கையால் உங்கள் கோரிக்கையை கொடுத்துள்ளீர்கள்.
“சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்று கலைஞர் அவர்கள் தான் சொன்னார்கள். கூட்டுறவுக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தலுக்கு முன் சொன்னார். வெற்றி பெற்று வந்ததும், அந்த மேடையிலேயே ரத்து செய்தார். கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடுவேன் என்றார். ஒரு ரூபாய்க்கு போட்டார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தார். இலவச மின்சாரம் கொடுத்தார். இப்படிச் சொன்னதைச் செய்தவர் கலைஞர்!
கலைஞரின் மகனான இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான்! செய்வதைத் தான் சொல்வான்! நம்பிக்கையுடன் செல்லுங்கள். நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும் நன்றி வணக்கம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் உரையாற்றினார்.