மு.க.ஸ்டாலின்

“மக்கள் பணத்தை சுயநலத்துக்காக சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!

"கடன் வாங்கிக் கொள்ளையடிக்கும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்ய அவசரக் கோலத்தில் விடும் டெண்டர்கள் அனைத்தும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரத்து செய்யப்படும்."

“மக்கள் பணத்தை சுயநலத்துக்காக சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகத்தைத் தள்ளி, கடன் வாங்கிக் கொள்ளையடிக்கும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்ய அவசரக் கோலத்தில் விடும் டெண்டர்கள் அனைத்தும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரத்து செய்யப்படும்” என விருதுநகர் மாவட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (07-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“அனைவருக்கும் மாலை வணக்கம். நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா? நான் ரெடி, நீங்க ரெடியா? இந்த விருதுநகர் மாவட்டத்தை 2 பிரிவாக கட்சியின் சார்பில் பிரித்து வைத்திருந்தாலும் 2 மாவட்டச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், விருதுநகர் - 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்டிருக்கும் மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தபட்சம் 2,000 பேர் என்று வைத்தாலும் 14,000 பேர் இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கின்ற பொழுது 25,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த அந்தரங்கத்தில் இருக்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது. இதை ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். ஆனால் அது நிகழ்ச்சியாக இல்லாமல் பெரிய மாநாடு போல இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய மாவட்ட கழகத்தின் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்களையும், தங்கம் தென்னரசு அவர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

மருது சகோதரர்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மருது சகோதரர்களாக இருந்து, பெரிய மருது - சின்ன மருது போன்று காட்சி தந்து கொண்டிருப்பவர்கள் தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும். அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களோடு இணைந்து, உறுதுணையாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையக் காரணமாக இருந்து பணியாற்றிய மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழகத்தின் நிர்வாகிகள், ஒன்றியக் கழக, நகரக் கழக, பேரூர் கழக, கிளைக் கழக அமைப்பில் இருக்கும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சார்ந்திருக்கும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியின் முன்னோடிகள் அத்தனை பேருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில், உங்கள் அனைவரின் சார்பில் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியை காணிக்கையாக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு, எழுச்சியோடு, உணர்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். எதற்காக இந்த நிகழ்ச்சி என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நம்முடைய கழக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை நாம் தீட்டியிருக்கிறோம். அந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அந்தப் பணிகளை உரிய வகையில் நிறைவேற்றப் போகிறோம்.

உங்களுடைய சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் மனுவாக கொடுக்கலாம், நேரடியாக வந்து பதிவு செய்யலாம் என்று சொன்னோம்.

பந்தலுக்கு வெளியே நம்முடைய தொண்டர்களிடத்தில் உங்களது கோரிக்கைகளை சொல்லிவிட்டு வந்திருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்திருப்பார்கள். அந்த அடையாள அட்டையில் சீரியல் நம்பர் இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் உங்கள் அன்போடு, ஆதரவோடு நம்முடைய கழகம் வெற்றி பெற்று நாம் ஆட்சிக்கு வந்து, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட மறுநாள் இந்தப் பெட்டியைத் திறப்போம். இந்த பெட்டியில் இருந்து மனுக்களை எல்லாம் எடுத்து உங்கள் கோரிக்கைகளை, பிரச்சினைகளை எல்லாம் அதிகாரிகளிடம் எடுத்துச்சொல்லி 100 நாட்களுக்குள் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்.

ஒருவேளை அந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதைத் தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இந்த அடையாள அட்டை இருந்தால், எங்கள் பணி முடியவில்லை என்று நேரடியாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளே நீங்கள் வந்துவிடலாம். கோட்டையில் இருக்கும் முதலமைச்சர் அறைக்குள் வரும் உரிமையிருக்கிறது.

அதனால்தான் வலியுறுத்தி இவ்வாறு சொல்கிறேன். இப்போது இங்கு25,000க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறீர்கள். உங்கள் அத்தனை பேரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை. அதனால் ஒரு அடையாளத்திற்காக 10 பேரை பேச வைக்கப்போகிறேன்.

அது எப்படி என்றால் இந்தப் பெட்டியில் இருக்கும் மனுக்களில் கையைவிட்டு நான் ஒவ்வொன்றாக எடுப்பேன். யார் பெயர் வருகிறதோ அவர்களை அழைப்பேன். அவ்வாறு அழைத்தவுடன் அவர்கள் எழுந்து தங்கள் பிரச்சினைகளை பேசப்போகிறீர்கள். பேசுகிறவர்கள் சுருக்கமாக பேச வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

“கோவர்த்தனன் அவர்கள், தி.மு.க ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சித்துறை எப்படி இருந்தது. இப்போது அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை எந்த அளவிற்கு கெட்டுப்போய் இருக்கிறது என்று மிகத் தெளிவாகச் சொன்னார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ கண்ட தி.மு.க என்று பெயர் எடுத்து கொடுத்தேன்.

இப்போது அந்த உள்ளாட்சித்துறையில் வேலுமணி என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை லஞ்சத்தில், ஊழலில் அமைச்சர் வேலுமணி மிஞ்சிவிட்டார்.

அவரை உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று சொல்லக்கூடாது. அவரை ஊழலாட்சித்துறை அமைச்சர் என்று தான் சொல்லவேண்டும். எல்லாவற்றிலும் கொள்ளை.

கொரோனா காலத்தில் கொள்ளை அடித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. துடைப்பம், பிளீச்சிங் பவுடர், மாஸ்க்கில் கொள்ளையடித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. உள்ளாட்சித் துறையை அப்படி ஒரு மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் வாதாடி 50 சதவீதம் தேர்தல் நடந்தது. ஊராட்சி பகுதியில் மட்டும் தேர்தல் நடந்தது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இன்னும் நடக்காமல் இருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மீதம் இருக்கும் அத்தனை ஊராட்சிப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்போம் என்ற உறுதியை நான் சொல்லுகிறேன். அவ்வாறு நடந்தால் கோவர்த்தனன் சொன்ன பிரச்சனைகள் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அருப்புக்கோட்டை பழனிகுரு சொன்னதுபோல காலையில் சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்திலும் இதே பிரச்சினை பேசப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சினை இருக்கிறது. நெசவாளர்களின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மாதாந்திர மின் கணக்கீடு, சாயக்கழிவு நீர் சுத்தப் படுத்தும் வசதி, கைத்தறிக்கு தேவைப்படும் சலுகைகள், இவற்றை எல்லாம் பழனிகுரு அவர்கள் தன்னுடைய மனுவில் கேட்டிருக்கிறார்கள்.

தி.மு.க ஆட்சி அமைந்ததும் உங்களுடைய பிரச்சினைக்கு இந்த ஸ்டாலின் தீர்வு காண்பான் என்பதை உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பாண்டிதேவி அவர்களின் குழந்தையை என்னிடத்தில் காண்பித்தார்கள். நானும் பார்த்தேன். மிகவும் வேதனைப்படுகிறேன். கவலைப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு அண்ணனாக - தம்பியாக இருந்து உங்களுக்கு பக்கபலமாக இருப்போம்.

40 முறை நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்து தீர்வு கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். அமைச்சர்களை, எம்.எல்.ஏ.க்களை பார்த்திருக்கிறீர்கள். ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்.

இந்த தொகுதியில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். பஃபூன் மந்திரி என்று சொல்வதா, பலூன் மந்திரி என்று சொல்வதா அவர் பெயரை சொன்னால் எனக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் இந்த மேடைக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இழுக்கு. அதனால் அவர் பெயரை சொல்லவில்லை.

இந்த தேர்தலில் அவர் படுதோல்வியடைவார். அதுதான் நடக்கப்போகிறது. நீங்கள் பார்க்க போகிறீர்கள். எனவே சகோதரி பாண்டி தேவி, கவலைப்படாதீர்கள். 100 நாட்கள் பொறுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன் கூட்டியே நிச்சயமாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை உறுதியாக நாங்கள் முன்நின்று செய்வோம். நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், நம்முடைய கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அதற்குரிய நடவடிக்கை எடுப்போம். நம்பிக்கையாக இருங்கள். கவலைப்படாதீர்கள்.

நாகராஜ் அவர்கள் சொன்ன, விருதுநகர் மாவட்டத்தின் நீண்ட நாள் பிரச்சினையான அழகர் அணை திட்டம், கலைஞர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. விரைவில் உங்களால் உருவாகும் கழக ஆட்சியில் அந்த அணை உருவாக்கப்படும். நாகராஜன் சொன்னார், அப்பா அடிக்கல் நாட்டினார். பிள்ளை அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று. நிச்சயமாக ‘அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது’ என்று பழமொழி உண்டு. அதனை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை. நிச்சயமாக நிறைவேற்றுவேன்.

பட்டாசு தொழில்துறை சார்ந்த பன்னீர்செல்வம் அவர்கள் ஜி.எஸ்.டி.யாலும் மற்றும் பல பிரச்சனைகளாலும் இந்த தொழில் கஷ்டமான நிலைக்கு சென்று விட்டது என்று வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். கொரோனா காலத்திலும் நீங்கள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் தான் போன தீபாவளி அன்று இராஜஸ்தான் அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்த போது அதை நீக்கக்கோரி அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நான் கடிதம் எழுதி அதை வலியுறுத்தினேன்.

பட்டாசு தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

ஜெஸ்வந்தி அவர்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சமூக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், அரசியல் நோக்கம் இல்லாமல், அவர்கள் செய்கின்ற பணிக்கு உள்ளபடியே என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் அவர்கள் செய்கின்ற பணிக்கு பல்வேறு இடையூறுகள் இருக்கின்றது. அரசு பக்கபலமாக இல்லை என்று வருத்ததோடு சொன்னார்கள்.

கொரோனா காலத்தில் கூட அ.தி.மு.க அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனால் தான் நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த கட்சியும் செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய சாதனையை நாம் செய்தோம்.

உயிரைப் பணயம் வைத்து நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கழகச் செயலாளர்கள், கட்சியில் இருக்கும் சாதாரண தொண்டர்கள் யாராக இருந்தாலும் செயல்பட்டார்கள். அதனால் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் – கொரோனாவின் போது பணி செய்ததால் அவருக்கு அந்த தொற்று ஏற்பட்டு அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அவர் மட்டுமல்ல அதுபோன்று பலரை நாம் இழந்திருக்கிறோம். எதற்காக சொல்கிறேன் என்றால் உயிரை பணயம் வைத்து களத்தில் நின்ற கட்சி தான் தி.மு.க.

“மக்கள் பணத்தை சுயநலத்துக்காக சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!

கொரோனா காலத்தில், இங்கே சகோதரி சொன்னது போல சமூகநல அமைப்பின் சார்பில் உணவு கிடைக்காத மக்களுக்கு, நோய்வாய் பட்டவர்களுக்கு, மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தோம். காய்கறிகள் வாங்கிக் கொடுத்தோம். மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தோம். இது ஒரு பெரிய சாதனை.

கொரோனா காலத்தில் செய்திருக்கும் பணியை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன். உயிர் போகும் சூழ்நிலையிலும் நேரத்திலும் நம் தோழர்கள் செய்கின்ற அந்த பணியை எண்ணி இன்றைக்கும் நான் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். சகோதரி சொன்னது போல இப்போது இருக்கும் அரசு போல இல்லாமல் வரவிருக்கும் நமது அரசு, எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உங்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம். நீங்களும் எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எனவே அந்த நம்பிக்கையை நான் உங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

100 நாட்களில் இந்தப்பணிகளை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்றால் முதலில் சொன்னதுபோல இதற்கென்று ஒரு தனித்துறையை உருவாக்கப்போகிறோம். அதில் அதிகாரிகளை நியமித்து, அந்த அதிகாரிகள் வேறு எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். இந்த வேலையை மட்டும் தான் செய்வார்கள்.

பஷீர் அவர்கள் சொன்னதுபோல பெட்ரோல் விலை உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு ஏறிய போதும் அந்த அளவுக்கு விலை ஏற்றத்தை நாம் செய்யவில்லை.

ஆனால் இப்போது உலக அளவில் அந்த விலை குறைந்தாலும் மானியங்களை குறைத்து, பல வரிகளை விதித்து பெட்ரோல் - டீசல் விலைகளைக் கூட்டியிருக்கிறது இப்போது இருக்கும் அரசு. அதனால்தான் பெட்ரோலின் விலை ஏற்றத்தால் விலைவாசி விஷம் போல் ஏறி கொண்டிருக்கிறது. மக்களை மிகவும் பாதித்த பெட்ரோல் - சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

மத்தியில் உள்ள ஆட்சியை அகற்றிவிட்டால் இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காண முடியும். இதற்கு மக்களாகிய நீங்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும், அதற்குப்பின் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருந்தால் நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

மணிகண்டன் அவர்கள் சொன்னது போல பயிர் சேதத்தை சரியாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை. பயிர் சேதம் நடந்த இடத்திற்கு ஆய்வுக் குழுவை அவர்கள் அழைத்துச் செல்லவில்லை என்று மணிகண்டன் அவர்கள் ஏற்கனவே மனுவில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். பல இடங்களில் பயிர்க் காப்பீட்டுத் தொகையும் சரியாக வழங்கப்படுவதில்லை.

பருவம் தப்பிப் பெய்திருக்கும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை, நானும் அதே போல நம்முடைய தி.மு.கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து அவ்வப்போது நேரடியாக சந்தித்துக் குறைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே வரவிருக்கும் ஆட்சியில் உறுதியாக உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் முயற்சியில் தி.மு.க. ஈடுபடும்.

பஞ்சவர்ணம் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவை பற்றி அவர்கள் சொன்னார்கள். எல்லா இடங்களில் இந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது. மகளிர் சுய உதவி குழு என்பதை முதன் முதலில் ஆரம்பித்தது தி.மு.க. தான்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் 1989-ல் தருமபுரி மாவட்டத்தில் இந்த புரட்சிகரமான திட்டத்தை கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். எதற்காக இந்த மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது என்றால் பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும், சுயமரியாதை உணர்வோடு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும், சிறு சிறு தொழில்கள் செய்து அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காக அந்த திட்டத்தை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அது நாளடைவில் வளர்ந்து ஒரு மிகப் பெரிய அமைப்பாக மாறி, அதற்குப் பிறகு 2006-ல் நாம் ஆட்சிக்கு வந்து, அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், அதைத்தொடர்ந்து துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்ற நேரத்தில், அந்தத் திட்டத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தேன். அதிகமான கவனத்தை செலுத்தினேன். இது அத்தனை பேருக்கும் தெரியும். இதை யாரும் மறக்கவும் மறைக்கவும் முடியாது.

5 மணி நேரம் 6 மணி நேரம் நின்று கொண்டே மேடையிலிருந்து அந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உட்காரவைத்து 100 பேராக இருந்தாலும், 1,000 பேராக இருந்தாலும், 5,000 பேராக இருந்தாலும் அத்தனை பேரையும் மேடைக்கு வர வைத்து வரிசையாக அவர்களுக்கு சுழல் நிதி, வங்கிக்கடன், மானியத்தொகையை கொடுத்தேன்.

இதெல்லாம் மாதம் 4 அல்லது 5 முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சி நடத்தியபோது நான் நேராக சென்று கொடுத்திருக்கிறேன். இப்படி எல்லாம் நடத்தினோம்.

ஆனால் இன்றைக்கு வங்கிக்கடன் இல்லை. மானியத்தொகை இல்லை. சுழல்நிதி இல்லை. அவர்கள் எல்லாம் திக்கற்ற நிலையில் இருக்கிறார்கள்.

கலைஞருடைய ஆட்சியில் தான் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால் அந்த திருமணத்திற்கு உதவித்தொகை இப்படிப் பெண்களுக்கான திட்டங்களை வழங்கிய ஆட்சி - இந்தியாவிலேயே தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க ஆட்சிதான்.

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தான் இந்த மகளிர் சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அது சின்னாபின்னம் ஆக்கப்பட்டிருக்கிறது.. அனாதையாக ஆதரவற்ற நிலையில் அந்த குழுவினர் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் இந்தப் புகார்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது போல விரைவில் 3 மாதத்திற்குள் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வாறு வந்ததற்குப் பிறகு இதெல்லாம் சரி செய்யப்பட்டு ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் எப்படி நடந்ததோ அதை விட அதிகமான அளவிற்கு உங்களுக்கு சலுகைகளும், வசதிகளும், உதவிகளும் நிச்சயம் வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

உங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்கள் அத்தனையும் உள்ளே போடப்பட்டு விட்டது. இப்போது இந்தப்பெட்டியை பூட்டி, அதற்கு ஒரு சீல் வைக்கப்போகிறேன். சீல் வைத்து அதற்குப் பிறகு இந்த பெட்டியை சென்னைக்கு கொண்டு சென்று விடுவேன். அண்ணா அறிவாலயத்தில் கொண்டு சென்று வைத்து விடுவேன்.

அண்ணா அறிவாலயத்தில் இருக்கும். 3 மாதத்திற்குள் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து, 234 இடங்களிலும் தி.மு.க அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்ற செய்தி வரப்போகிறது. அவ்வாறு ஆட்சிக்கு வந்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அடுத்த நாள் இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும்.

100 நாட்களுக்குள் இந்த மனுவில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நிறைவேற்றியே காட்டுவான் இந்த ஸ்டாலின். கவலைப்படாதீர்கள்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதலளித்து உரையாற்றினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“அ.தி.மு.க. அரசு கடைசி நேரக் கொள்ளையில் மும்முரமாக இறங்கிவிட்டது. ஆட்சி முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டும இருப்பதால் - மக்களுக்கு ஏதாவது நன்மை செய்துவிட்டுப் போவோம் என்று நினைக்காமல் - கடைசி நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவோம் என்று அலைகிறது பழனிச்சாமி கும்பல்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்துக் குவித்து விட வேண்டும் என்பதற்காக பழனிசாமி துடித்துக் கொண்டு இருக்கிறார். தனது பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையை சூறையாடி வருகிறார்.

கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2,855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டுள்ளார். டெண்டர் விடுகிறார் என்றால், அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல. அரசு பணத்தை சுருட்டுவதற்காக டெண்டர் விட்டுள்ளார்.

பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் நடந்து வரும் ஒரே வேலை டெண்டர் கொள்ளை தான்!

தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் “கடைசி நிமிட” கையெழுத்துப் போட்டு டெண்டர் விடும் தீவிர நடவடிக்கையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டிருக்கிறார்.

பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட போதும், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிவிக்கத் தயங்கிய முதலமைச்சர், இப்போது கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை அறிவிக்கிறார்.

5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது தமிழகம். கடன் வாங்கி கொள்ளையடிப்பவர்கள் இவர்கள் தான்.

இந்த ஒரு மாதத்திற்குள் எப்படியாவது முடிந்தவரை கஜானாவை சுரண்டி காலி செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு, இப்படி முதலமைச்சரும், அமைச்சர்களும் டெண்டர்களை விடுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட சட்டவிரோத டெண்டர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கழக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் மனு தரப்பட்டுள்ளது. அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வசதியாக எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அந்த புகாரில் சொல்லி இருக்கிறோம்.

முதியோர் நிதியுதவி வழங்கப் பணமில்லை; 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் தாய்மார்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை; ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பணிப்பயன்களைக் கொடுக்க நிதியில்லை; கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கக் கூட நிதியில்லை;

ஆனால் டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் பணம் இருக்கிறது என்றால் இது மக்களுக்கான ஆட்சி அல்ல. டெண்டர்களுக்கான ஆட்சி என்பதை மக்கள் உணர வேண்டும்.

“திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவசர கோலத்தில், கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" என்று நான் அறிவித்துள்ளேன்.

மக்கள் பணத்தை சுயநலத்துக்காக சூறையாடியவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவேன் என்பதை விருதுநகர் கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஊரில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். அவர் பெயரைச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு தகுதி படைத்தவர் அல்ல. அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் 1920-ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் நடக்கிறது. அதாவது கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தல்களில் வென்றவர்களில் மிக மோசமான அடி முட்டாள் யார் என்றால் அவர் தான்.

இதைப் போன்ற தலைகுனிவு தமிழகத்துக்கு இதுவரை வரவும் இல்லை. இனி வரவும் கூடாது. அவர் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். என்னை ஒருமையில் பேசுகிறார். அசிங்கமாகப் பேசுகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை.

தகுதியான ஒருவர் விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்படலாம். அதற்கு மதித்து பதில் சொல்லலாம். தரம் கெட்டவர்களிலும் கேடு கெட்ட ஒருவருக்கு பதில் சொல்வது எனக்கு அவமானம்.

ஒரு ஞானியை, ஒருவர் அசிங்கமாக விமர்சித்தாராம். ஆனால் அதற்கு அந்த ஞானி பதில் சொல்லவில்லையாம். ஏன் அவருக்கு நீங்கள் பதில் சொல்ல மறுக்கிறீர்கள் என்று கேட்ட போது அந்த ஞானி சொன்னாராம்.

“ஒரு பொருளை நீங்கள் எனக்கு தருகிறீர்கள். அதனை நான் வாங்க மறுத்தால் அது உங்களுக்கே சொந்தமாகி விடுவதைப் போல - அவர் செய்யும் விமர்சனங்களையும் நான் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் அது அவருக்கே சொந்தமாகி விடும்" என்றாராம். அது போல், அந்த வாயில் இருந்து வரும் அசிங்கமான வார்த்தைகள், அந்த வாய்க்கே திரும்பப் போய்விடுகிறது. அதனால் நம் கழகத் தோழர்கள் யாரும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

பேரறிஞர் அண்ணா ஒரு கதை சொல்வார். கோவில் யானை ஒன்றை பாகன் குளிப்பாட்டி அழைத்துச் செல்கிறான். எதிரில் சாக்கடைப் பன்றி வருவதைப் பார்த்து யானை ஒதுங்கிச் சென்றதாம். அப்போது அந்த பன்றி யானை தன்னைக் கண்டு பயப்படுகிறது என்று சொன்னதாம். ஆனால், அந்த சாக்கடை நம் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த யானை ஒதுங்கியது என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

''எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், ஏளனத்துக்கு ஆளானாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடச்சித்தமும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். தூற்றினோரே துதிபாடி நிற்பர். ஏளனம் பேசினோர் ஏந்தி ஏந்தி தொழுவர்" - என்றார் பேரறிஞர் அண்ணா.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

“மக்கள் பணத்தை சுயநலத்துக்காக சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!

2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விரைவில் தீர்ப்பு என்று அறிவித்துள்ளார்கள் நீதிபதிகள்.

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக வரப்போகிறது என்று எனக்குத் தெரியாது. மக்கள் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. ஊரை அடித்து உலையில் போட்ட அ.தி.மு.க அமைச்சர்களை சிறைக்கும் - ஊருக்கு உழைக்கும் தி.மு.க.வை கோட்டைக்கும் அனுப்பும் தேர்தல் தான் இந்தத் தேர்தல்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 10 முறை இதுவரை அதன் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல முறை ஓ.பி.எஸ் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

மறைந்த ஜெயலலிதா அம்மையாருக்கு 80 கோடி ரூபாய் செலவு செய்து நினைவிடம் அமைத்திருக்கிறீர்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

இறந்தவர் குப்பனோ, சுப்பனோ இல்லை, முதலமைச்சர். உங்கள் அம்மா, ஆனால் அனைவருக்குமே அவர்தான் முதலமைச்சர். 1.1 சதவீதத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதனால் நாம் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளோம். ஆனாலும் அவர்தான் நமக்கும் முதலமைச்சர்.

முதலமைச்சரின் மரணம் குறித்த தகவல் மறைக்கப்படலாமா? அண்ணாவும், எம்.ஜி.ஆரும் முதலமைச்சராக இருந்துதான் மறைந்தார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள், உடல்நிலை, மரணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படவில்லையா?

ஜெயலலிதாவும் முதலமைச்சராக இருந்துதானே மறைந்தார். அவர் மரணம் குறித்து இதுவரை உண்மையான தகவல் வெளிவந்திருக்கிறதா? 80 கோடிக்கு நினைவாலயம் கட்டி இருக்கிறீர்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், நம்முடைய தலைவர் கலைஞர் மறைந்த போது – மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் – உழைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த ஆசையும் இல்லாதவர் – அவருடைய கடைசி ஆசை – அண்ணாவின் அருகிலே ஓய்வெடுக்க வேண்டும் என்பது. தடுத்தார்களே, மறுத்தார்களே, திட்டவட்டமாக முடியாது என்று சொன்னார்களே!

நானே நேரில் போனேன். நமது மரியாதையை நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிப் பலர் அப்போது என்னைத் தடுத்தார்கள். ஆனாலும், தலைவரின் விருப்பம்தான் முக்கியம் எனக் கருதி நான் நேரில் சென்று கேட்டேன். மறுத்துவிட்டார்கள். பிறகு நீதிமன்றம் சென்று முறையிட்டோம்.

காலையில் இருந்து காத்திருக்கிறோம். மதியம் செய்தி வருகிறது. முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சராக இருந்த – 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு அண்ணாவின் அருகே இடம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்த அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடைவிதித்தனர்.

அன்று நீதிமன்றம் அத்தகைய தீர்ப்பை வழங்கவில்லை என்றால், மீறிப் போவோம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் பிரச்சினை ஏற்பட்டால் கழகத் தோழர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற கவலையோடு எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றம் நமக்கு சரியான தீர்ப்பை அளித்தது. கலைஞரின் ஆசையை நிறைவேற்றினோம். பேரறிஞர் அண்ணாவின் அருகே கலைஞரை ஓய்வெடுக்க வைத்தோம். இதுதான் வரலாறு.

இந்திய நாட்டுக்கு பிரதமர்களை உருவாக்கிய தலைவர். குடியரசுத் தலைவரை தேர்வு செய்த தலைவர். 5 முறை முதலமைச்சராக இருந்த தலைவர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு ஒட்டு மொத்தத் தமிழினத்திற்காக தமது வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து காட்டிய தலைவர் கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்கத் தவறிய இந்தப் பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? முடிவு செய்யுங்கள்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories