திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன், ‘புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் நடத்திய நேர்காணல், நேற்று (06-02-2021) ஒளிபரப்பானது.
அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: பொதுவாக அதிகமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த 40 ஆண்டுகளில் பல நேரங்களில் பொது வாழ்க்கை என்ற பயணம் நெருக்கடியாக இருந்தாலும் காலை நேரங்களில் வாக்கிங் அல்லது சைக்கிளிங் செய்வதை அதிகமாக பார்க்கிறோம். அது உங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், ஃபிட்னஸ்க்கு நல்லதாகவும் இருப்பதாக பார்க்கிறீர்களா?
கழகத் தலைவர்: என்னைப் பொறுத்தவரையில் கொரோனா காலத்திற்கு முன்பு, அதாவது கி.மு., கி.பி. போல கொரோனா காலத்திற்கு முன்பு நான் ரெகுலராக வாக்கிங் சென்று விடுவேன். ஐந்தரை மணி அல்லது ஆறு மணிக்கு தயாராகி, ஐ.ஐ.டி. அல்லது தி ஆபீஸ் சொசைடியிலிருந்து செல்வேன். அதேபோல வெளியூர் சுற்றுப் பயணங்கள் சென்றாலும் அங்கு இருக்கும் விளையாட்டுத் திடலில் அல்லது சாலைகளில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்.
கொரோனா காலத்திற்குப் பின்பு அவ்வாறு போக முடியாமல் ஆகிவிட்டது. அதனால் வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு மணி நேரம் நடப்பது, ட்ரெட்மில்லில் நடப்பதை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி ஒரு நாள் பிசியோ பண்ணுவேன். ஒருநாள் ஜும் செய்வேன். ஒரு நாள் யோகா செய்வேன்.
செய்தியாளர்: யோகாவையும் தொடர்கிறீர்களா?
கழகத் தலைவர்: யோகாவையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மூச்சு பயிற்சி என்பது கொரோனாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எல்லோரும் சொல்வார்கள்.
செய்தியாளர்: சைக்கிளிங் எங்கே செல்கிறீர்கள்? அதற்கான நேரம் கிடைக்கிறதா?
கழகத் தலைவர்: சைக்கிளிங் திருவான்மியூரில் இருந்து தொடங்கி மகாபலிபுரம் வரை செல்வேன். இடையில் இரண்டு பிரேக் எடுப்பேன். போட் ஹவுசில் ஒரு பிரேக் எடுப்பேன். கோவளம் பக்கத்தில் ஒரு ஒரு டீ கடையில் நின்று டீ சாப்பிடுவேன். அதற்குப்பிறகு மகாபலிபுரம் சென்று அங்கு ஒரு கடையில் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து காரில் வந்து விடுவேன். இங்கிருந்து 40 கிலோமீட்டர் வாராவாரம் செல்வேன். என்றைக்காவது ஒருநாள் மிஸ் ஆகி விட்டால், வேறு ஒரு நாளில் சென்றுவிடுவேன்.
செய்தியாளர்: இப்போது ‘உங்கள் தொகுதி ஸ்டாலின்’ என்று ஒரு பரப்புரையை தொடங்கிவிட்டீர்கள். முதல் கட்டம் முடித்து இரண்டாம் கட்டமாக நாம் இப்போது கோவில்பட்டியில் இருக்கிறோம். மக்களிடம் எந்த மாதிரியான புகார்கள் வருகிறது. நீங்கள் அதிகமான புகார்களை வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். என்ன புகார்கள் வருகிறது?
கழகத் தலைவர்: ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் ‘நமக்கு நாமே’ என்ற ஒரு பயணத்தை நடத்தினேன். அப்போது ஒவ்வொரு பிரிவினரையும் தனிப்பட்ட முறையில் நான் பார்த்தேன். அது வந்து 234 தொகுதிகளிலும் செய்தேன். அதேபோல இப்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தை வியூகத்தை எவ்வாறு நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றால் ஒரு ஆறு சட்டமன்றம், கட்சி ரீதியாக பிரித்து வைத்திருக்கும் மாவட்டங்களின் ரீதியாக, அதிலிருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களை மட்டும் தொடர்பு கொண்டு அவர்களை வர வைக்கிறோம். அவர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பேர் வரைக்கும் வருகிறார்கள்.
செய்தியாளர்: நீங்கள் பதிவு செய்வதையும் நாங்கள் பார்க்கிறோம்?
கழகத் தலைவர்: அவர்களை பதிவு செய்வது, அவர்களுக்கு ரசீது கொடுப்பது, சரியாக செய்து இதுவரையில் எந்த கட்சியும் செய்ய முடியாததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அவர்கள் உள்ளூர் பிரச்சினைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை, மருத்துவமனை, பள்ளிக்கூடம், பட்டா பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலைத்திட்டம் இது போன்ற உள்ளூர் பிரச்சினைகளை அதிகமாக சொல்லுகிறார்கள். பெரும்பாலும் மனுவாக கொடுத்து இருப்பதை நாங்கள் அந்த பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம். அதிலிருந்து சில தலைப்புச் செய்திகளாக சொல்கிறார்கள்.
செய்தியாளர்: இவ்வளவு மனுக்கள் வருகிறது. ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்? ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இருந்தால் தானே அது சாத்தியமாகும்? இந்த மனுக்களை பார்ப்பது மட்டும் தான் உங்களுடைய ஆட்சியின் முதலில் பிரதான வேலையாக இருக்குமா?
கழகத் தலைவர்: இதை தொடங்கியபோது இதற்கென்று தனித்துறை உருவாக்கப்படும். இதற்கென்று சில அதிகாரிகளை நியமித்து, ஆய்வு செய்து 100 நாட்களில் முடிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் 100 நாட்களில் அல்ல, 100 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் முடிப்பதற்கான யோசனை செய்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிறப்பான அதிகாரிகளை, ஒழுங்காக வேலை செய்யவிடுவதில்லை. அவர்களை முறையாக இந்த அரசு பயன்படுத்தவில்லை. அவர்களை வேலை செய்ய விடாமல் இந்த ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அதிகாரிகளை நான் எவ்வாறு பயன்படுத்தினேன் என்பது நாட்டுக்கே தெரியும். அதே போல நிச்சயமாக அதற்கான திட்டங்கள் இருக்கின்றன.
செய்தியாளர்: பரப்புரைக்கு முன்பாகவே கொரோனா காலகட்டத்தில் மக்களைச் சந்திப்பதற்கு ‘ஒன்றிணைவோம் வா‘ என்ற திட்டம் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதன் மூலமாக மக்களின் சந்திப்பு நடந்தது. அதற்கு பின்பு கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டீர்கள். இன்னொரு பக்கம் உங்கள் கட்சியினர் பல இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு மிகவும் முன்பாகவே பயணத்தை தொடங்கி விட்டீர்களா? பலமுனை பிரச்சாரம் தேவைப்படுகிறதா? அப்படி என்றால் எதிரணி மிகவும் பலமாக இருக்கிறது என்று பார்க்க முடியுமா?
கழகத் தலைவர்: ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் என்பது தேர்தல் பரப்புரைக்காக தொடங்கியது அல்ல. எப்போதும் தி.மு.க.வைப் பொறுத்தவரையுயில் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும், தேர்தல் வருகிறதோ இல்லையோ மக்களுடன் மக்களாக இருப்பவர்கள். அந்த அடிப்படையில் தான் புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலையில் தி.மு.க. எப்போதும் முன் நிற்கும்.
அது போல கொரோனா காலத்திலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு தான் முன் வந்து செய்ய வேண்டும். இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் கொள்ளை அடிப்பதிலும், லஞ்சம் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் கொரோனாவை பயன்படுத்திக்கொண்டு எதில் சதவீதம் வாங்கலாம் என்று சென்று கொண்டிருந்தார்களே தவிர, மக்களை பற்றி துளியளவும் கவலைப்படவில்லை.
சட்டமன்றத்தில் முதன்முதலில் குரல் எழுப்பியது நான் தான், தி.மு.க. தான். மார்ச் மாதத்தில் பேசினோம். அப்போது கிண்டல், கேலி செய்தார்கள். அதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வராது. அம்மா ஆட்சியில் யாருக்கும் வராது. யாரையும் சாக விடமாட்டோம். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
மாஸ்க் வேண்டும் என்று சட்மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசிகிறபோது, அதெல்லாம் வயதானவர்கள், வியாதி உள்ளவர்கள்தான் கவலைப்பட வேண்டும் என்று கேலி செய்தார்கள். அடுத்த நாளிலிருந்து அவர்கள் மாஸ்க் போட்டு வர ஆரம்பித்து விட்டார்கள்.
செய்தியாளர்: கொரோனா காலத்தில் சட்டமன்றத்தில் முன்கூட்டியே பேசியது திமுக தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அ.தி.மு.க. என்ன சொல்கிறதென்றால் கட்டுப்படுத்தியதில் நாங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.
கழகத் தலைவர்: கட்டுப்படுத்தியது என்று சொல்வது திட்டமிட்டு சொல்லுகிற ஒரு பொய் பிரச்சாரம். நிச்சயமாக அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. சாவு எண்ணிக்கையை மூடி மறைத்தது தான் இந்த ஆட்சி. மாநகராட்சி ஒரு கணக்கு சொன்னது. அ.தி.மு.க. ஒரு கணக்கு சொன்னது. அது உங்களுக்கே தெரியும். அதற்கு பிறகு அவர்களே திருத்திக் கொண்டார்கள். எனவே சாவு கணக்கு பார்த்தால் இன்னும் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அதன் உண்மை நிலவரம் என்னவென்று தெரியும். அதை மறக்க முடியாது.
செய்தியாளர்: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கூட்டத்திற்கு நிறைய மக்கள் வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். செல்கின்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்லுகிறீர்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டங்கள் வருகிறது. நாங்கள் தான் வெற்றி பெறப்போகிறோம் என்று சொல்கிறார்கள். கூட்டங்களை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியுமா அல்லது வெற்றியை தீர்மானிக்க முடியாத அளவிற்குத் தான் இருக்கிறதா?
கழகத் தலைவர்: ஊடகங்களில் தி.மு.க.வின் நிகழ்ச்சியை முறையாக, முழுமையாக ஒளிபரப்புவது இல்லை. அ.தி.மு.க.வை ஒளிபரப்புகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. என்ன கூட்டம் கூடுகிறது, எவ்வளவு எழுச்சியாக வருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். அவர்கள் ஒரு முதலமைச்சர். முதலமைச்சர் செல்லும்போது அந்த மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து பேருந்து மற்றும் லாரிகளில் அழைத்து வருவது, பணம் கொடுத்து கூட்டிக் கொண்டு வருகின்ற கூட்டம்.
அப்படி கூடிய கூட்டத்தில் கூட ஒரு எழுச்சி, ஒரு ஆர்வம், மகிழ்ச்சியோடு அவர்கள் கலந்து கொள்வதை பார்க்க முடியாது. அது மட்டும் இல்லாமல், ஊடகங்களில் அவருடைய முகத்தை மட்டும் காட்டுகிறார்களே தவிர, அங்கு என்ன கூட்டம் இருக்கிறது? அந்த கூட்டத்தின் ரியாக்சன் என்ன? என்று காட்டுவதில்லை. அந்த கூட்டத்தை காட்டினால் தான் உண்மை நிலவரம் ஒருவேளை அவருக்கும் தெரியும் நாட்டுக்கும் தெரிய வாய்ப்பு இருக்கிறது.
செய்தியாளர்: உங்களுடைய கருத்துகளை நீங்கள் முன் வைக்கிறீர்கள். இன்னொரு பக்கம் பார்க்கிறேன். தேர்தல் பரப்புரையை சமீப காலங்களில் எம்.ஜி.ஆரை பற்றி சொல்கிறீர்கள். எனக்கு வந்து அவர் பெரியப்பா மாதிரி இருந்தார் என்று சொல்லுகிறீர்கள். அவரைப் பற்றி புகழ்வது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வாக்குகள் என்பது மிகவும் முக்கியம் ஆகிவிட்டதா? தி.மு.க.வும் வாக்குகளை கவர்வதற்காக எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுகிறீர்களா?
கழகத் தலைவர்: எம்.ஜி.ஆரை அரசியலில் பயன்படுத்தப்போவதில்லை. பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அவர் ஏற்கனவே தி.மு.க.வில் இருந்தவர். தி.மு.க.வில் பல பொறுப்புகளில் இருந்தவர். பொருளாளர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தி.மு.க.வில் தான் அவர் வளர்ந்து வந்தார். வளர்ந்ததற்கு பிறகு தி.மு.க. அவரை நல்ல முறையில் பயன்படுத்தியது.
இடையில் பிரச்சினை வந்ததற்கு பிறகு அவர் கட்சியை விட்டு சென்றார். அது வேறு. அந்த பிரச்சினைக்குள் நான் போக விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர் உடல் நிலை நலிவுற்று படுத்திருந்த நேரத்தில்கூட கலைஞர் என்னிடத்தில் 40 ஆண்டு கால நண்பர் நலமுடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன் என்று சொன்னார். அந்த அளவிற்கு நம்பிக்கை உண்டு.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி எனப் பெயரை சொன்னதாலேயே அசெம்பிளியில் சத்தம்போட்டு அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தார். ஜேப்பியாரை, தலைவருடைய பெயரை சொன்னவுடன் காரிலிருந்து இறக்கி விட்டு சென்றவர். அந்த அளவிற்கு மரியாதைக்குரியவர். அதுமட்டுமில்லாமல் என்னுடைய வளர்ச்சியில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டவர்.
நான் நாடகம் நடத்தும் போது எவ்வாறு நடத்த வேண்டும் என்று அறிவுரைகள் சொன்னார். என்னுடைய பிரச்சார நாடகத்திற்கு வந்து அவர் தலைமை தாங்கினார். தலைமை தாங்கிய போது தெரு நாடகங்கள் தான் நாங்கள் போட்டோம். அப்போது நாற்காலி போட்டு உட்கார வைத்திருந்தோம். ஆனால் பின்னால் இருக்கும் ஆடியன்ஸுக்கு மறைக்கும் என்பதால் நாற்காலியை எடுத்து வைத்து விட்டு கீழே உட்கார்ந்திருந்தார். சைதாப்பேட்டை தெரு சாலையில் அமர்ந்து இருந்து பார்த்த அந்த புகைப்படம் கூட என்னிடம் இருக்கிறது. அதெல்லாம் பசுமையாக என்னுடைய நினைவில் இருக்கிறது.
அதுமட்டுமின்றி என்னுடைய நாடகத்தின் நிறைவு விழா நடந்துபோது, கலைஞர் வந்து அதை நிறைவு விழா என்று போடச் சொன்னார். நான் படிக்க முடியாததை ஸ்டாலின் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அட்வைஸ் செய்து பேசினார்.
‘எம்.ஜி.ஆர். பேசியபோது அப்பாவின் வருத்தத்தை கேட்டியா, நானும் பெரியப்பா என்ற முறையில் சொல்கிறேன், நான் உன் அப்பா சொன்னதை வழிமொழிகிறேன்’ என்று அறிவுரை கூறிப் பேசினார். இருவரும் அவ்வாறு நட்புகொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது. உள்ள உணர்வோடு பேசினேனே தவிர வேண்டும் என்று திட்டமிட்டு பேசியதில்லை.
செய்தியாளர்: இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை. அதற்கு முன்பாகவே ‘ஒன்றிணைவோம் வா’ என்று காணொலிக் காட்சி மூலமாக பல நிகழ்ச்சிகள் செய்தீர்கள். அதற்கு பிறகு மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தினீர்கள். உங்கள் கட்சியினர் இன்னொரு பக்கம் பரப்புரைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எதிரணி மிகவும் பலமாக இருக்கிறது. அதனால் முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கிவிட்டீர்கள் என்று பார்க்க முடியுமா?
கழகத் தலைவர்: நாங்கள் பயப்பட வேண்டியது இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால் அந்த கேள்வியே வராது. ஏற்கனவே சொன்னதுபோல தி.மு.க.வைப் பொறுத்த வரையில் தேர்தல் வருகிறது என்றோ, அரசியலுக்காகவோ நாங்கள் அப்படிப்பட்ட பிரச்சாரத்தை பயன்படுத்தவில்லை.
‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் என்பது கூட பொதுவாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து இருந்த மக்களுக்கு துணை நிற்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் நம்மை தான் நம்பி இருக்கிறார்கள். புயல் வந்த போதும், வெள்ளம் வந்தபோதும், சுனாமி வந்தபோதும் மக்களோடு மக்களாக நாம் இருந்தோமோ, அதே போல கொரோனா வந்த போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று அந்த பணிகளைச் செய்து முடித்திருக்கிறோம்.
அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஏற்கனவே ‘நமக்கு நாமே’ என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தினோம். அதற்குப் பிறகு காணொலி மூலமாக கட்சியினுடைய அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்தோம். உதவி செய்த தோழர்களுக்கு நன்றி சொன்னோம். அவர்களை ஊக்கப்படுத்தினோம்.
அதற்குப் பிறகு பலன் பெற்ற மக்களுக்கு முறையாக வந்து சேர்ந்ததா, கிடைத்ததா, அதைக் கேட்டோம். அதைத் தொடர்ந்துதான் கிராம சபை கூட்டத்தை நடத்தினோம். அந்த கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என்று இந்த அரசு தடை போட்டது. அதனால் மக்கள் கிராம சபைக்கூட்டத்தை நடத்தினோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினோம். அப்போது அவர்கள் தடைபோடவில்லை. இப்போது மக்கள் எழுச்சியை பார்த்து, மக்கள் இந்த ஆட்சியில் இருக்கும் அயோக்கியத்தனத்தை, ஊழல்களை, எதுவுமே நடக்கவில்லை என்பதை சொல்வதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முதல்நாள் நிகழ்ச்சியைப் பார்த்தபோது தாங்க முடியவில்லை. அதனால் தடை போட்டார்கள்.
செய்தியாளர்: கொரோனா காலத்தில் தனிமனித இடைவெளி போன்ற காரணங்களால் இருந்திருக்கலாம் அல்லவா?
கழகத் தலைவர்: அப்படி இருந்தால் அந்த நல்ல எண்ணம் இருந்தது என்றால் அவரே வெளியே வரக்கூடாது. ஆய்வுக் கூட்டம் நடத்தக் கூடாது. மக்களிடம் பேச கூடாது. அவர்கள் கட்டுப்பாடாக அந்த காலத்தில் இருந்திருந்தால் அந்த திட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவர் அதை செய்யாமல் எதிர்க்கட்சிக்கு மட்டும் இந்த கண்டிஷன் போடுவது தவறு என்று தான் கிராமசபை கூட்டத்தின் பெயரை மாற்றி விட்டு மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்தி அது இன்றைக்கு ஒரு பெரிய வரவேற்பை மக்களிடத்தில் பெற்றிருக்கிறது.
செய்தியாளர்: பொதுவாக நிறைய பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் எதுவும் டையட் வைத்திருக்கிறீர்களா? பொதுவாக உங்களுக்கு பிடித்தமானது, இது தான் சரியாக இருக்கும், ஒரு நாள் முழுக்க பயணிப்பதற்கு - என்று ஏதாவது டயட் வைத்திருக்கிறீர்களா?
கழகத் தலைவர்: பொதுவாக சென்னையில் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் டையட் அதிகமாக இருப்பேன். வெளியூர் நிகழ்ச்சிகளில் வந்து விட்டோம் என்றால் கம்ப்ளீட் சைவமாக மாறிவிடுவேன். டிராவல் செய்கிறோம், அன்டைமில் சாப்பிடுகிறோம். இஷ்டத்துக்கு சாப்பிட முடியாது. அதனால் வயிற்றுக்கு ஏதும் பாதிப்பு வரக்கூடாது என்பதனால், விரும்பியதெல்லாம் வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டதில்லை. எது இருக்கிறதோ அதை சாப்பிட்டுவிட்டு பொதுவாக சைவம் தான் அதிகமாக சாப்பிட வேண்டும். அசைவத்தில் மீன் அதிகமாக எடுத்துக் கொள்வேன்.
செய்தியாளர்: சமீபத்தில் ஒரு பேட்டியை கோபாலபுரத்தில் வீட்டில் முன்னால் வைத்திருந்தீர்கள். அது ஒரு உணர்வு சார்ந்த பிணைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறதா? தொடர்ந்து பல ஆண்டுகள் இன்னும் உணர்வு சார்ந்து இயங்க வேண்டும் என்று கலைஞர் உங்களுக்கு அறிவுரை சொல்லி இருக்கிறாரா?
கழகத் தலைவர்: கோபலபுரம் என்றால் கலைஞரை மறக்க முடியாது. கலைஞர் என்றால் கோபாலபுரத்தை மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒட்டி வாழ்ந்த அந்த பகுதி. மேயராக இருந்த வரைக்கும் கூட்டுக் குடும்பமாக அங்கேதான் இருந்தேன். தலைவரோடு தான் இருந்தேன்.
அதற்கு பிறகு இடவசதி இல்லாத காரணத்தினால் தனித்தனியாக வந்துவிட்டோம். அமைச்சரான பிறகு தனியாக வந்து விட்டேன். இப்போது தனியாக வீட்டில் இருக்கிறேன். கோபலபுரம் என்று எடுத்துக் கொண்டால் – முதன்முதலில் அங்குதான் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை முடிதிருத்தும் நிலையத்தில் தொடங்கினேன்.
அது வளர்ந்து இளைஞரணி ஆகியது. அந்த இளைஞர் தி.மு.க. ஆரம்பித்த 1967இல் அண்ணா முதலமைச்சராக வருகிறார். முதலமைச்சர் ஆனவுடன் அவருக்கு மணிவிழா வந்தது. அந்த விழாவை நடத்த வேண்டுமென்று இடம், தேதி வாங்கிவிட்டேன். பெரிய விழாவாக 3 நாள் அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். தலைவர் வீட்டு பகுதியில் கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அந்த கோவிலை மறைத்து பெரிய மேடை போட்டு அதில் தலைவர், நாவலர், பேராசிரியர் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். அனைவரும் பங்கேற்றனர்.
எம்.ஜிஆர் ‘குமரிக்கோட்டம்’ பட சூட்டிங்கில் இருந்து வந்தார். தலைவருடைய குடும்ப டாக்டர் கோபாலபுரத்தில் இருந்தார். அவர் ஒரு பிராமணர். அவர் தலைவர் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி இருக்கிறார். அவர் வந்து தலைவருக்கு வாரத்திற்கு இரு முறை செக்கப் செய்து விட்டு செல்வார்.
அவர் வந்து ‘உங்கள் பையன் சாமி கும்பிட விடாமல் பண்ணி விட்டான்’ என்று தலைவரிடம் கூறினார். ‘நாங்கள் சாலையில் நின்று செருப்பைக் கழற்றிவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு செல்கிறோம், மிகவும் கஷ்டப்படுகிறோம்.’ என்று முறையிட்டுள்ளார். ‘அது தப்புதான். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அன்றைக்கு மேடைக்கு வந்து பேசிய தலைவர் கலைஞர், ‘இதேபோல ஸ்டாலின் மேடை போட்டதற்காக கிருஷ்ணன் வருத்தப்பட்டார். பக்த பெருமக்கள் தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள், ஸ்டாலின் வேண்டுமென்றே செய்யவில்லை. அவருடைய கனவில் வந்து கிருஷ்ண பரமாத்மா தோன்றி, எல்லாலோரையும் வெளியில் நின்று கும்பிட்டு செல்கிறார்கள். இந்த மூன்று நாட்களாவது உள்ளே வந்து கும்பிட்டுவிட்டு செல்லட்டும் என்று சொல்லி இருக்கிறார்’ என மேடையில் பேசி அதை சமாதானம் செய்தார்.
இதெல்லாம் ஒரு பசுமையான நினைவுகள்.
செய்தியாளர்: அண்ணா போன்ற தலைவர்கள் எல்லாம் வந்திருப்பார்கள் அல்லவா?
கழகத் தலைவர்: பிரைம் மினிஸ்டர் ஆனவர்கள், பிரசிடன்ட் தேர்தலில் நிற்பவர்கள் கூட தலைவரிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். கோபாலபுரம் படியை மிதிக்காத தலைவர்கள் இருக்க மாட்டார்கள். அண்ணாவே ஓய்வு எடுப்பதற்கு அங்கு தான் வருவார். ஒன்று பேராசிரியர் வீடு அல்லது கோபலபுரம் தான் வருவார்.
செய்தியாளர்: உங்களுடைய பரப்புரை கூட்டங்களில் ஜெயலலிதாவை பற்றி பேசுகிறீர்கள். ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கண்டுபிடிப்போம் என்று சொல்லுகிறீர்கள். அப்படி ஒரு மர்மம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
கழகத் தலைவர்: அதாவது மர்மம் இருக்கிறது என்று சொன்னது நான் இல்லை. முதன் முதலில் சொன்னது இன்றைக்கு துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ். தான். இப்போது கூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், ‘அவர் தான் அப்போது முதல்வராக இருந்தார் அவரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்’ என்று சொன்னார்.
என்னதான் இருந்தாலும் கொள்கை ரீதியாக எதிர்க்கட்சியாக இருந்தாலும் இறந்தது முதலமைச்சர். அவர் மரணமே சர்ச்சைக்கு உரியதாக இருக்கும்போது எங்களுக்காக மட்டும் இல்லாமல் நாட்டு மக்களுக்காக தி.மு.க. ஆட்சி வந்ததற்குப்பிறகு அதுகுறித்து உரிய விசாரணை நடைபெறும். ஆறுமுகசாமி தலைமையில் அமைத்த விசாரணை கமிஷன் இதுவரையில் 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை முறை நீட்டிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
செய்தியாளர்: ஜெயலலிதா சிகிச்சை அளித்த ரிட்சர்ட்ஸ் பீலேயுடன் நீங்கள் பேசியதாக சொல்லப்படுகிறது?
கழகத் தலைவர்: அது தவறான கருத்து. யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடிய பேச்சு. அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆஜராகும்படி எட்டு முறை ஆறுமுகம் சாமி ஆணையம் நோட்டீஸ் அனுப்பிருக்கிறது. நீங்கள் ஏன் அந்த நோட்டீஸை ஏற்றுக் கொண்டு ஆஜராக வில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி? அதனால் இன்னும் சந்தேகம் வலுப்பெற்றுதான் வருகிறது.
செய்தியாளர்: ஜெயலலிதாவோடு நெருங்கிய தோழியாக நீண்ட நெடுங்காலம் இருந்தவர் சசிகலா. அவர் விடுதலையாகி வருகிறார். அவருடைய வருகை என்பது அ.தி.மு.க.விலோ அல்லது தமிழக அரசியலிலோ ஏதாவது தாக்கத்தை உண்டாக்கும் என்று பார்க்கிறீர்களா?
கழகத் தலைவர்: அவங்களுக்கு ஆபத்து இருக்கலாம். எங்களை பொறுத்தவரைக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அரசியலை பொறுத்தவரை எந்த பிரச்சினை கிடையாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் பல பிரச்சினைகள் உருவாகலாம்.
செய்தியாளர்: சசிகலா வெளியே வந்தால் இவர் முதலமைச்சராக இருக்க முடியாது என்கிறீர்களா? ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுதானே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகளாக இருக்கிறார்.
கழகத் தலைவர்: மக்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தான் தேர்ந்தெடுத்தார்கள். முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா தான். இவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. அதனால் சசிகலாவால் நியமிக்கப்பட்டு முதலமைச்சராக ஆட்சிக்கு வந்தவர் தான். அந்த அடிப்படையில் சொல்கிறேன்.
செய்தியாளர்: இப்போது வந்து சிக்கல் வரும் என்று நினைக்கிறீர்களா? சசிகலா வெளியே வந்ததனால் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவு குறையும் அல்லது மாறும் என்று நினைக்கிறீர்களா?
கழகத் தலைவர்: நிச்சயம் வரலாம் தேர்தல் அறிவிக்கை (notification) வந்த பிறகு பாருங்கள். சசிகலா சென்னைக்கு வந்த பிறகு பாருங்கள். வருகிறார் என்று பரவலாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. தேர்தல் அறிவிக்கை (notification) வந்த பிறகு அ.தி.மு.க. சின்னாபின்னமாக சிதறும் என்பது தான் என்னுடைய கருத்து.
செய்தியாளர்: கடந்த நான்கு வருடமாக கட்டுப்பாட்டில் தானே வைத்திருக்கிறார். தொடர்ந்து நீங்கள் மட்டுமல்ல, தி.மு.க.வில் எல்லோருமே சொல்லிக் கொண்டீருந்தீர்கள். 100 நாள் இந்த ஆட்சி தாண்டாது அல்லது மூன்று மாதம் இந்த ஆட்சி தாண்டாது என்று சொல்லி கொண்டீருந்தீர்கள். ஆனால் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறாரே?
கழகத் தலைவர்: ஆட்சி இருக்கிறது அதிகாரம் இருக்கிறது அல்லவா, பெர்சென்டேஜ் இருக்கிறதே, கமிஷன் இருக்கிறதே, கரப்ஷன் இருக்கிறதே இதெல்லாம் அடிப்படையாக வைத்து தான் இந்த ஆட்சியை ஓட்டிருக்கிறார். இந்த ஆட்சி இருக்காது என்று நினைத்தது உண்மை தான். பெர்சன்டேஜ் வைத்து கப்பம்கட்டி, பணப்பெட்டியை கொடுத்து எல்லோரையும் சரி செய்து வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னாடியே என்ன நடக்க போகிறது பாருங்கள். எங்களை பொறுத்தவரையில் கொல்லைப் புறமாக ஆட்சிக்கு வருவதற்கு எந்த நேரத்திலும் விரும்பியதில்லை.
இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். இவர்களை பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல இது. அது மட்டுமல்ல, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்தது, மூன்றாக உடைந்தது. அதற்கு பிறகு சரி செய்து வைத்திருக்கிறார்கள். இப்போது கொடுக்க வேண்டியது கொடுத்து சரி செய்து இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதனால் கொடுக்க வேண்டியவர்களுக்கு எல்லாம் - எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உட்பட எல்லோருக்கும் மாதம் மாதம் கமிஷன் போய் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
செய்தியாளர்: மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படவில்லை. ஆனால் 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போதுமான இடங்களை நாங்கள் பெற்றோம். இந்த ஆட்சியை நாங்கள் தக்க வைத்திருக்கிறோம் என்கிறார்களே?
கழகத் தலைவர்: தக்க வைத்திருக்கலாம். ஆனால் யார் அதிகமாக ஜெயித்தது. அவர்கள் இருந்த இடத்தை இழந்திருக்கிறார்கள். கணக்கு போட்டு பார்த்தால் அவர்கள் எங்களிடத்திலே அதிக இடங்களை இழந்திருக்கிறார்கள்.
செய்தியாளர்: 22 இடங்களில் 13 இடங்களை தி.மு.க.வும், 9 இடங்களை அ.தி.மு.கவும் பெற்றது. ஆனால் ஆட்சியை தக்கவைப்பதற்கு போதுமானதாக 9 இடங்களை பெற்றிருக்கிறார்களே?
கழகத் தலைவர்: அது இருக்கலாம். நான் இல்லை என்று மறுக்கவில்லை. எண்ணிக்கையை வைத்துதானே ஆட்சி இருக்க முடியும்.
செய்தியாளர்: சசிகலா வருகையோ அல்லது வேறு எந்த விசயங்களோ மாற்றமில்லை. 100 சதவீதம் சசிகலா கட்சிக்குள் வர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்கிறாரே? அ.தி.மு.க. முழுக்க எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக தெரிகிறதே? உங்களுக்கும் தி.மு.க. அ.தி.மு.க. நேரடிப்போட்டி என்ற பார்வையில் தான் பார்க்கிறீர்களா?
கழகத் தலைவர்: சசிகலா வருவதனால் அவர் அச்சப்படவில்லை. கவலைப்படவில்லை என்றால், ஜெயலலிதா நினைவிடத்தை மூட வேண்டிய அவசியம் வந்திருக்காது. இதிலிருந்து தெரிகிறதா. சசிகலா வருவதனால் எந்தளவுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்று.
செய்தியாளர்: ஜெயலலிதா நினைவிடத்தில் பணிகள் நிறைவடையவில்லை என்கிறார்களே?
கழகத் தலைவர்: அப்புறம் ஏன் அதை திறந்தார்கள்? அப்புறம் ஏன் திறப்பு விழா நடத்தினார்கள்? 4 வருடமாகவா பணிகள் முடியவில்லை. பணிகள் முடியவில்லை என்று சொல்வது நாடகம்.
செய்தியாளர்: எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியில் சொல்கிறார், நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்கிற முறையே வேறாக இருந்தது. ஆனால் சட்டமன்றம் என்று வருகிறபோது மக்கள் எங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால் எங்கள் ஆட்சி தான் தொடரும் என்கிறாரே. இரண்டுக்கும் வேறு வேறாக மக்கள் வாக்களிப்பார்களா?
கழகத் தலைவர்: தேர்தல் வரும்போது பார்க்கத்தானே போகிறோம். நாடாளுமன்ற தேர்தலின்போது யார், யார் கூட்டணியில் இருந்தார்கள். இவர் கூட்டணியில் பி.ஜே.பிக்கு ஒரு சீட்டாவது வாங்கி கொடுத்தார்களா. ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியவில்லையே. அதனால் இது கேள்வியே அல்ல. அதனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. வரக்கூடாது என்பதற்கு காரணம் மோடி மீது இருந்த வெறுப்பு, அவர்கள் தமிழ்நாட்டில் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தினார்கள். மாநில உரிமைகளை எல்லாம் பறிக்கிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிந்தது. அதனால் மொத்தமாக அந்த கட்சியை மக்கள் புறக்கணித்தார்கள். நாடாளுமன்ற தேர்தலைவிட பெரிய வெற்றி வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அணிக்கு கிடைக்கப்போகிறது.
செய்தியாளர்: பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்களே? அது ஒரு வலுவான அணியாக மாறியிருக்கிறதா? அ.தி.மு.க., பா.ஜ.க. இரண்டு பேரும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கிறார்கள். அது ஒரு பெரிய பலம் இல்லையா?
கழகத் தலைவர்: பிறகு ஏன் கூட்டணியை எல்லாம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளை எல்லாம் ஏன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்துகொண்டு வருகிறார்கள் என்றால் தனியாக நிற்க வேண்டியது தானே. அதெல்லாம் சும்மா, யார் முதுகிலாவது ஏறிக்கொண்டு ஒரு சீட்டு, இரண்டு சீட்டு வரலாமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா கட்சியும் சொல்லும் நாங்கள் வளர்ந்து கொண்டு வருகிறோம் என்று. அதைப்போலத்தான் இவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர்: தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் சொல்கிறார். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி விரைவில் உடையும் என்கிறாரே?
கழகத் தலைவர்: அது அவருடைய ஆசை. உடைவதற்கு வாய்ப்பே கிடையாது.
செய்தியாளர்: உங்கள் கூட்டணி இணக்கமான நிலையில் உள்ளதா?
கழகத் தலைவர்: தேர்தல் தேதி அறிவித்ததற்கு பிறகு எவ்வளவு சீட்டு, எந்தெந்த தொகுதி என்பது குறித்து முடிவு செய்ய கமிட்டி போட்டு முறையாக நடக்கும். எந்தவிதமான சச்சரவு, பிரச்சினைகள் - முருகன் ஆசைப் பட்டதைப்போல எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.
செய்தியாளர்: புதுச்சேரியில் உங்களுக்கும், காங்கிரசுக்கும் இடையே நெருடல் இருக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற நிலை உள்ளது. வெளிப்படையாக உங்கள் கட்சி தலைவர்கள் எல்லாம் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் என்று பேசியிருக் கிறார்களே, அப்படி என்றால் உரசல்தானே?
கழகத் தலைவர்: இங்கு இருக்கிற காங்கிரஸ் தோழர்களே காமராஜர் ஆட்சி தான் விரைவில் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அது அவர்களது ஆசை. அதை தவறு என்று நாம் சொல்ல முடியாது. அதேபோல புதுச்சேரியில் இருக்கிற தி.மு.க. தோழர்கள், முன்னணி தலைவர்கள் எங்கள் தலைமையில் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அதை தவறு என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் அந்த ஆசை உண்டு. அந்த உரிமையில் சொல்கிறார்கள். கடைசியில் தலைமை எடுக்கிற முடிவுதான் சரியானது. ஏற்கனவே இதற்கு விளக்கம் அளித்துவிட்டேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.
செய்தியாளர்: ராகுல்காந்தி 2 முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். பிரச்சாரம் செய்கிறார். உங்களுக்கும், அவருக்குமான இணக்கம் எப்படி? அந்த உறவு அப்படியே இருக்கிறதா? சோனியா காந்திக்கும், கலைஞர் அவர்களுக்கும் இடையே இருந்ததைப்போல அரசியல் ரீதியாக. இப்போது நல்ல இணக்கம் இருக்கிறதா?
மு.க.ஸ்டாலின்: அவ்வளவு சிறப்பாகவே இருக்கிறது. அதைவிட ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறோம். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார்கள். பொங்கல் வாழ்த்து கூட தொலைபேசி மூலம் சொன்னார்கள். இப்போது கூட நாடாளுமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுகூட சோனியா காந்தி என்னிடம் சொன்னார்கள். நல்ல இணக்கமாக இருக்கிறது. எந்த பிரச்சினையும் கிடையாது.
செய்தியாளர்: இடங்கள் பங்கிட்டு கொடுப்பதில் பிரச்சினை இருக்கிறதா? ஏன் என்றால் காங்கிரசால் தான் தொடர்ந்து 2 முறை ஆட்சிக்கு வரவில்லை. அவர்களுக்கு அதிக இடங்கள் கொடுத்ததினால் தான் வர முடிய வில்லை என்று உங்கள் கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் சொல்கிறார்கள்.
கழகத் தலைவர்: கூட்டணியை பொறுத்த வரைக்கும் இடங்களை அவர்கள் கேட்பார்கள். நாங்கள் ஒன்று சொல்லுவோம். மாறி மாறி வரும். அதற்கு தான் கமிட்டி இருக்கிறது. குழு போட்ட பிறகு அந்த குழு உட்கார்ந்து பேசி அதை சரிசெய்துகொள்வோம். எந்த பிரச்சினையும் வராது. கொள்கைதான் முக்கியமே தவிர கூட்டணி, சீட்டு, அது இது என்று எதுவும் இருக்காது.
செய்தியாளர்: அந்த நோக்கத்திற்காக பிரதான இடங்களை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
கழகத் தலைவர்: நிச்சயமாக, ஒன்றும் பிரச்சினை இருக்காது.
செய்தியாளர்: உங்கள் கூட்டணியில் வேறு ஏதாவது கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா? அல்லது இப்போது இருக்கிற அதே கூட்டணி தான் நீடிக்குமா?
கழகத் தலைவர்: நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது வரை சரியான வகையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எந்தவிதமான சங்கடமும் இல்லை. போராட்டமாக இருந்தாலும், ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், அறிக்கை வெளியிடுவதாக இருந்தாலும் எல்லோரும் இணைந்தே செய்துகொண்டிருக்கிறோம். நிச்சயமாக இந்த கூட்டணி தொடரும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
செய்தியாளர்: உங்கள் கூட்டணிக்கு வேறு யாராவது வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஏன் என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சொல்கிறார் கமலஹாசனையும் இந்த அணியில் இணைத்துக்கொண்டு போகலாம் என்று?
கழகத் தலைவர்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதுகுறித்து பேசவேண்டும். அவர் தன்னுடைய கட்சியினுடைய எண்ணத்தைத்தான் சொன்னாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதை அவரே தெளிவு படுத்திவிட்டார்.
செய்தியாளர்: அவர் விருப்பப்பட்டால் கமலஹாசனையும் இணைத்துக்கொள்ள உங்கள் அணி தயாராக உள்ளதா?
கழகத் தலைவர்: இப்போது இருக்கிற கூட்டணியே போதுமானது. இந்த கூட்டணிக்கே மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. எங்கள் கூட்டணியில் இருக்கிறவர்களுக்கே இடங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு சரியாக இருக்கும்போது புதிதாக வரும்போது அந்தச் சர்ச்சைகள் எல்லாம் வரும். அதனால் அந்த இடத்திற்கு வாய்ப்பு இருக்காது. வந்தால் பார்ப்போம். பேசுவோம்.
செய்தியாளர்: இந்த களம் வந்து வேறானது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பெரிய தலைவர்கள் இல்லை. அதனால் யாருமே தலைவர்கள் இல்லாத தேர்தலைச் சந்திக்கக்கூடிய ஒரு தேர்தல் என்கிறார்கள். நீங்கள் அப்படி பார்க்கிறீர்களா?
கழகத் தலைவர்: அப்படி என்றால் தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களை எப்படி வெற்றி பெற்றோம். வெற்றிடம் இருந்ததா? அதை நிரப்பி காட்டிவிட்டோம் அல்லவா?
செய்தியாளர்: அப்படி என்றால் வெற்றிடம் இல்லை என்கிறீர்களா?
கழகத் தலைவர்: அது சும்மா பிரச்சாரமாக வந்து கொண்டிருக்கிறதே தவிர அதற்கான வாய்ப்பே கிடையாது. அப்படி செய்திருந்தால் கலைஞருக்கு மரியாதையே இருந்திருக்காது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஒரு மாரியாதையே இருந்திருக்காது.
செய்தியாளர்: இந்த தேர்தலை பொறுத்த வரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. நேரடி போட்டி என்று பார்க்கிறீர்களா? அல்லது தேசிய கட்சிகளும் போட்டி இருப்பதாக சொல்கிறார்கள். இது நேரடி போட்டியா? இல்லை வேறு மாதிரியா?
கழகத் தலைவர்: நிச்சயமாக நேரடி போட்டிதான். பி.ஜே.பி.யை நாங்கள் இந்த அணியில் இருக்கிறார்கள் என்று எதிரியாக- அந்த அணியில் எதிர்த்து நிற்கிறார்கள் என்ற நினைப்பே கிடையாது. அவர்கள் கூட்டு சேர்ந்திருக்கலாமே தவிர அதை ஒரு பெரிய அணியாக நாங்கள் கருதவில்லை. அ.தி.மு.கவை பொறுத்தவரை அது ஒரு அணிதான். போட்டி போடுகிற அளவிற்கு எதிரணியாக நாங்கள் கருதுகிறோம்.
செய்தியாளர்: உங்கள் பரப்புரையையும் தொடர்ந்து பயணிக்க இருக்கிறோம். அங்கே என்ன சொல்கிறீர்கள் என்பதையும் அங்கே பார்க்கலாம்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:
செய்தியாளர்: பொதுமக்களின் வரவேற்பு எப்படி உள்ளது.
கழகத் தலைவர்: இது கூட்டி வரப்பட்ட கூட்டம் அல்ல. காசு கொடுத்து பழனிசாமி போல ஏற்பாடு செய்கிற கூட்டம் அல்ல. நான் வருகிறேன் என்று ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு கொடுத்து விடுகிறோம். அந்த அளவிற்கு இந்த ஆட்சி மீது பெரிய அதிருப்தி இருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளம். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளை வெற்றி பெற்றோமோ அதேபோல 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் சொல்லியிருந்தேன். மிஷன் 200 என்று சொல்லியிருந்தேன். இப்போது இந்த மக்களுடைய எழுச்சியை பார்த்தீர்களேயானால் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு நிரம்ப வந்திருக்கிறது.
செய்தியாளர்: அமைச்சர்களுடைய தொகுதிகளில் நேரடியாக தி.மு.க. களம் இறங்குமா? நீங்கள் மிஷன் 200 என்று சொல்லியிருந்தீர்களே?
கழகத் தலைவர்: தி.மு.க. இறங்குதோ இல்லையோ? தி.மு.க. கூட்டணி இறங்கும். தி.மு.க. இறங்கும். தேவைப்பட்டால் தி.மு.க. கூட்டணி இறங்கும். அதனால் தி.மு.க.வா? தி.மு.க. கூட்டணியா என்று நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. தி.மு.க. கூட்டணி நின்றாலும் அது தி.மு.க.தான். அதனால் அது முதலமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது கடைசியில் இருக்கிற இங்கே இருக்கிற கடம்பூர் ராஜுவாக இருந்தாலும் சரி, எல்லோரும் அமைச்சர்கள் உள்பட 234 பேரும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அத்தனை பேரும் தோற்பது என்பது உறுதி உறுதி உறுதி!!
செய்தியாளர்: பொதுவாக எந்தமாதிரியான புகார்கள் வருகிறது. நிறைய அடுத்தடுத்த கூட்டங்களை பார்த்திருக்கிறீர்கள்?
கழகத் தலைவர்: உள்ளாட்சி துறையில் செய்ய வேண்டிய பணிகள் தான் பெரும்பாலும். அதன் பிறகு சில பேர் வேலைவாய்ப்பு கேட்கிறார்கள். பட்டா கேட்கிறார்கள். இதுதான் பெரிய பிரச்சினைகள். அதாவது குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, சாலை வசதி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், நூறு நாள் வேலை திட்டம் இவைதான் முக்கிய கோரிக்கைகளாக வருகிறது.
நானும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால் நான் பெருமைக்காக சொல்லவில்லை. உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்தினேன் என்ற பெயரை வாங்கினேன். இப்போது இருக்கிற உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தினந்தோறும்- இப்போது இருக்கிற அமைச்சர்கள் பட்டியலில் நம்பர் ஒன் கரெப்ஷன் அமைச்சர் யார் என்று கேட்டால் அவர்தான்.
செய்தியாளர்: ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் கோரிக்கைகளாக வருகிறது. அதை நிறைவேற்றுவதாக சொல்லியிருகிறீர்கள். உங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் சில கோரிக்கைகள் இருக்கிறது. அவர்களுடைய இடங்கள் குறித்து எப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்?
கழகத் தலைவர்: அவர்களுடைய கோரிக்கைகள் இவ்வளவு தான் இடம் வேண்டும் என்று நிச்சயமாக இருக்கப் போவதில்லை. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு அடிபணிந்து இருக்கிற ஆட்சியாக பழனிசாமி ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதிலே தி.மு.க. மட்டுமல்ல. தி.மு.க. கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு குரல்கொடுத்து கொண்டிருக்கிறது. அதனால் கூட்டணியைப் பொறுத்தவரையில் எந்த பிரச்சினையும் வராது என்ற நம்பிக்கையில் இருக்கலாம்.
செய்தியாளர்: சின்னங்களை பொறுத்த வரைக்கும் ஏற்கனவே சில கட்சிகள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் நாடாளுமன்ற தேர்தலில். இந்த முறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சில பேர் விரும்புகிறார்களே?
கழகத் தலைவர்: மற்ற கூட்டணி கட்சிகளை பொறுத்தவரையில் அவர்களுடைய விருப்பம். ஒருவேளை நீங்கள் எங்களுக்கு உதயசூரியன் சின்னம் கொடுங்கள் என்று கேட்டால் மனமுவந்து கொடுப்போம். இல்லை எங்கள் சின்னத்தில் நிற்கிறோம் என்று சொன்னால் அதில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். யாரையும் கட்டாயப்படுத்தி எங்கள் சின்னத்தில் நில்லுங்கள் என்று சொல்லி நாங்கள் வற்புறுத்த மாட்டோம். அது அவர்களுடைய விருப்பத்தை பொறுத்தது.
செய்தியாளர்: மிஷன் 200 என்று சொல்கிறீர்கள். 200 சீட்டுகளுக்கு குறையாமல் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறீர்கள். தி.மு.க. ஏற்கனவே 184-ஐ கடந்ததில்லை. இப்போது எப்படி 200 வரும் என்று நினைக்கிறீர்கள்?
கழகத் தலைவர்: அதாவது நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வராது என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களோ, வரும் என்று சொன்னேன். வந்தது. அதேபோல இந்த தேர்தலில் நிச்சயமாக வருவோம். 1971ம் ஆண்டு கலைஞர் அவர்கள் 184 தொகுதிகளில் வென்றதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை வெல்ல வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். அதனால் 200 தொகுதிகளுக்கு மேல்தான் வரும். இன்னும் கூட சொல்ல வேண்டுமானால் 234 தொகுதிகள் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.
செய்தியாளர்: தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
கழகத் தலைவர்: அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த பணிகளும் நடைபெறவில்லை. அம்மையார் ஜெயலலிதா உடல் நலிவுற்றிருந்த நேரத்தில் எந்த பணியும் செய்யாமல் இருந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு வந்த பழனிசாமி ஆட்சி - அவர்களுக்கிடையே நடந்த அரசியல் போரை சரிசெய்யவே அவர்களுடைய எம்.எல்.ஏ.க்களை சரிசெய்ய கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் வாங்கிக்கொண்டு பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. இதை மக்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். மக்கள் தெளிவான முடிவை இந்த தேர்தலில் எடுப்பார்கள்.
செய்தியாளர்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டு வருகிறார். இது குடும்ப அரசியல் என்று தொடர்ந்து தி.மு.க. மீது முன்வைத்து வருகிறாரே?
கழகத் தலைவர்: தி.மு.க. குடும்ப பாசத்தோடு இருக்கக்கூடிய ஒரு கட்சி தான். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக குடும்ப அரசியல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. நான் படிப்படியாக வளர்ந்து வந்தவன் தான். எப்படி அதைச் சொல்கிறார்?
செய்தியாளர்: உங்களுடைய மகன் மட்டும் அல்ல. மற்ற மாவட்டச் செயலாளர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசியலுக்கு வரக் கூடியதை குடும்ப அரசியல் என்கிறார்?
கழகத் தலைவர்: எல்லோரும், எல்லா இடத்திற்கும் வந்துவிட முடியாது. அதற்காக உழைக்க வேண்டும். அவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் வந்திருக்கிறார்கள். நாங்களாக தூக்கிக் கொடுத்து எம்.பி.யாக வரமுடியாது. நாங்களாக தூக்கிக் கொடுத்து எம்.எல்.ஏ.வாக வரமுடியாது. நான் மக்களிடம் ஓட்டு வாங்கி தான் மேயராக வந்தேன். அப்போதும் அதைத்தான் சொன்னார்கள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு வந்தவனே தவிர திணிக்கப்பட்டு வந்தவன் அல்ல.
செய்தியாளர்: இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என்ற கருத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். அது தி.மு.க.வுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறதா?
கழகத் தலைவர்: அந்த மாதிரியான சூழலே இல்லை. பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களிடம் அது எடுபடவில்லை.
இவ்வாறு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.