பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் தி.மு.க முன்னோடி பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்தினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 103 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து வரும் தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற மூதாட்டிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெறும் பாப்பம்மாள், தி.மு.கழக முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று கோவைக்கு சென்ற நிலையில் நேரிலும் சந்தித்து சால்வை அணிவித்து, நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்தினார்.
இதுகுறித்து தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்தினேன்!
உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.