“ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய ஓ. பன்னீர்செல்வம், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (20-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“இப்போது இந்த கிராம சபைக் கூட்டத்தை தொடங்கப் போகிறோம். மகிழ்ச்சியாக, பூரிப்பாக, வந்திருக்கும் உங்களையெல்லாம் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், தலைமைக் கழகத்தின் சார்பிலும் வருக… வருக… வருக என இன்முகத்தோடு வரவேற்க விரும்புகிறேன்.
இங்கு மகளிர் தான் அதிகமாக இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் குறைவாகத் தான் இருக்கிறார்கள். உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு. அதுபோல எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.
தங்கள் இல்ல நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உணர்வோடு, எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு வந்திருக்கும் உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
இந்த அரண்மனை புதூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பாக இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் நானும் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது கிராம சபைக் கூட்டமா அல்லது கிராம சபையின் பொதுக்கூட்டமா அல்லது கிராம சபை மாநாடா அல்லது மகளிர் அணி மாநாடா என்று சொல்லும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, நாம் சந்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்து இருக்கும் நம்முடைய கழக நிர்வாகிகளுக்கு, முன்னோடிகளுக்கு எல்லாம் மீண்டும் என்னுடைய வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்தோம். மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர்ச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரையும் அழைத்து சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்க கூட்டத்தில் முடிவெடுத்தோம்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினோம். 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று முடிவு செய்து நடத்தி முடித்தோம்.
அதனுடைய பலன், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி நமக்கு கிடைத்தது. மிகவும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவிலேயே நம்முடைய கட்சி தான் நாடாளுமன்றத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட வெற்றி கிடைத்ததற்கு காரணம் நீங்கள் தான்.
அதற்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரைக்கும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள். அக்கிரமம் செய்வார்கள், அநியாயம் செய்வார்கள், அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் நாம் 70% இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு காரணம் நிச்சயமாக, உறுதியாக மக்கள் தான்.
தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இல்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்தில், ஆட்சியில் இருப்பது போல மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறோம்; தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. இன்னும் போகவில்லை. உயிரையே பலிவாங்க கூடிய நோய் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் பலரை நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு கொடிய நோய். வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. லாக்டவுன் என்ற பெயரில் எந்தத் தொழிலும் இல்லை. அப்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த முயற்சியில் ஈடுபட முன்வரவில்லை.
ஆனால் முதன் முதலில் உயிரையே பணயம் வைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக பல கோடி பேருக்கு உதவி செய்த கட்சி தான் தி.மு.க என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
நம்முடைய தோழர்கள், நம்முடைய மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, பேரூர் கழகக் கிளைக் கழக, கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் அத்தனைப் பேரும் களத்தில் நின்றார்கள். தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நின்று மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தார்கள். மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்தார்கள். உணவு கொடுத்தார்கள். இப்படி மக்களுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தது தி.மு.க.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இவ்வாறு எந்தக் கட்சியும் செய்திருக்க முடியாது என்று பெருமையோடு சொல்கிறேன்.
துவக்கத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. இங்கே 10 பேர் பேசுவதற்காக பெயர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேசவைக்க வாய்ப்பில்லை, நேரமில்லை. நிறைவாக நான் நீண்ட நேரம் பேசுவேன். இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றை மட்டும் இப்போது உங்களிடத்தில் பேச விரும்புகிறேன்.
இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஓ.பி.எஸ். அவர்கள். ஓ.பன்னீர்செல்வம் என்றால் அவருக்கு ஒரு பட்டம் இருக்கிறது. மிகவும் பணிவாக இருப்பார்.
எம்.ஜி.ஆர். படத்தில் ஒரு பாட்டு பாடுவார். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று ஒரு பாட்டு பாடி இருக்கிறார். ஆனால் இவருக்கு பதவி வந்தவுடன் எவ்வாறு எல்லாம் காலம் மாறியது என்பது உங்களுக்குத் தெரியும்.
சமீபத்தில் அவர் ஒரு வீடியோ படப்பிடிப்பு எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு அமைதியாக, பொறுமையாக, உத்தமபுத்திரனாக, கையெடுத்துக் கும்பிட்டு நாட்டுக்கு நல்லது செய்தது போல மக்களை ஏமாற்றுகிறார்.
அரசியலில் ஒரு சிலருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். அதுபோல அதிர்ஷ்டம் அடித்தவர் தான் இவர். 1 முறை அல்ல 3 முறை. கலைஞருக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆர்.க்கு கிடைத்தது. ஜெயலலிதாவிற்கு கிடைத்தது, அது வேறு. இவருக்கு 3 முறை முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தது.
ஊழல் வழக்கில் அம்மையார் ஜெயலலிதா பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. 2001-இல் அம்மையார் ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை தான் முதலமைச்சராக உட்கார வைத்தார். அது முதல் முறை.
2-வது முறை 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் சிறைக்குச் சென்றார். அப்போது 2-வது முறை அந்த வாய்ப்பு பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது.
3-வது முறை 2015ஆம் ஆண்டு அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இத்தகைய சூழலில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தாரே தவிர நாட்டிற்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? நாட்டு மக்களைப் பற்றி ஏதாவது சிந்தித்து இருக்கிறாரா? நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் யோசித்தது உண்டா? இல்லை.
அவருக்கு அந்த மூன்று முறை பொறுப்பு கொடுத்த ஜெயலலிதாவைப் பற்றிக் கூட அவர் கவலைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் அந்த மர்மம் என்ன என்று இதுவரை அவரும் சொல்லவில்லை. அந்த கட்சியில் இருக்கக்கூடிய யாரும் சொல்லவில்லை.
ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்பு, ஓ.பி.எஸ். அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு சட்டமன்றம் நடக்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் நான் உட்கார்ந்து இருந்தபோது, ஓ.பி.எஸ். முதலமைச்சராக உட்காருகிறார். உட்கார்ந்த சில மாதங்களில் அவர் பதவியை பறித்து விட்டார், சசிகலா. அதற்கு காரணம் என்னை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான்.
அதற்கு பிறகு சசிகலா, தானே முதலமைச்சராக வருவதற்கு முடிவு செய்தார். அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்தது. அம்மையார் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இப்படி ஒரு தண்டனை. ஜெயலலிதா அவர்கள் இறந்துவிட்டார். அதனால் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. அது வேறு.
ஆனால் மற்ற 3 பேரும் தண்டனை அனுபவிக்க வேண்டும். வரும் 27ம் தேதி தான் வெளியே வரப் போகிறார் என்பது உங்களுக்கு தெரியும். வந்ததற்குப் பிறகு பழனிசாமி அவர்கள் பொறுப்பில் இருப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குறி.
அந்த பிரச்சினையை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். அதற்குப் பிறகு சசிகலா சிறைக்கு செல்ல வேண்டும். அப்போது யார் முதலமைச்சராக வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் கீழே ஏதோ ஊர்ந்து வந்திருக்கிறது. எடப்பாடி அவர்கள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தார்.
எடப்பாடி என்று சொல்லக்கூடாது. எடப்பாடி என்று சொன்னால் அந்த ஊருக்கு அவமானம். இ.பி.எஸ். என்று சொல்ல வேண்டும். இல்லையெனில் பழனிசாமி என்று சொல்ல வேண்டும்.
உடனே அவரை தட்டிக்கொடுத்து, நீங்கள் தான் இனிமேல் முதலமைச்சர் என்று அறிவித்து விட்டுச் சென்று விட்டார் சசிகலா. ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்ம மரணத்தை கண்டுபிடிக்க நீதி விசாரணை தேவை” என்று சொன்னார்.
இதெல்லாம் நீங்கள் பார்த்த செய்தி தான் நான் தவறாக சொல்லவில்லை. நீதி விசாரணை கேட்டது நாங்கள் அல்ல. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நாங்கள் அல்ல. தி.மு.க.காரர்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் சொன்னார்.
அதன்பின் அவரை சமாதானம் செய்து. துணை முதலமைச்சராக பதவி கொடுத்து, நீதிவிசாரணை வைக்கிறோம் என்று சொல்லி முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் நீதிவிசாரணை அறிவித்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் உண்மை வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை 8 முறை ஆஜராக அழைத்தார்கள். ஒருமுறை கூட அவர் செல்லவில்லை. இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அம்மா படத்தை மேசையில் வைத்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சாதாரணமாக ஒருவர் இறந்தாலே நாம் அவருக்கு என்ன நேர்ந்தது என்று விசாரிக்கிறோம். ஆனால் இறந்தது யார் சாதாரண ஒருவரா?
கொள்கை ரீதியாக, இலட்சிய அடிப்படையில் நாம் எதிர்க்கட்சி தான். இருப்பினும் அவர் நமக்கும் சேர்த்து தான் முதலமைச்சர். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைந்தது பற்றிய உண்மை இன்னும் வெளிவரவில்லை.
இப்போது சொல்கிறேன், இந்த 4 மாதம் தான் அவர்கள் ஆட்சி இருக்கப்போகிறது. 4 மாதத்திற்குப் பிறகு நாம் தான் ஆட்சியில் அமரப் போகிறோம். அதன் பிறகு இதைக் கண்டுபிடித்து விசாரணை கமிஷனை முறையாக நடத்தி, நிச்சயமாக, உறுதியாக குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பது தான் தி.மு.க.வின் நோக்கம். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான்.
இங்கு 10 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். எல்லோரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை. பேசக்கூடியவர்கள் சுருக்கமாக பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“இங்கே சகோதரி குருவம்மாள் அவர்கள் பேசுகிறபோது விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொன்னார். ஏற்கனவே தி.மு.க ஆட்சியில் தான் கலைஞர் அவர்கள் 5-வது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார்.
இலவச மின்சாரத்தை 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வழங்கினார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் இப்போது இருக்கக்கூடிய விவசாய கடனை முழுமையாக - நிச்சயமாக தள்ளுபடி செய்யப் போகிறோம். இதனைக் கலைஞர் வழிநின்று, கலைஞருடைய பிள்ளையாக நான் உறுதி சொல்கிறேன்.
அதேபோல நகைக் கடன் பற்றி சொன்னார்கள். 5 சவரன் வரை இருக்கும் நகைக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப் போகிறோம்.
எனக்கு இப்போது ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நாம் அறிவித்து விட்டோம். இப்போது அ.தி.மு.க அந்த அறிவிப்பை விரைவில் வெளியிடப் போகிறார்கள். நிச்சயமாக வரும்.
ஆனால் ஏற்கனவே விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டது. விவசாய சங்கம் சார்பாக நீதிமன்றத்திற்கு சென்றபோது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட உடன் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது தள்ளுபடி செய்யமுடியாது என்று பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சி உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கி வைத்திருக்கிறது. இப்போது தேர்தல் வரும் காரணத்தினால் இது போன்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படியோ தள்ளுபடி செய்தால் மகிழ்ச்சி. இருப்பினும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. நாம் தான் தள்ளுபடி செய்யப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல மகளிர் சுய உதவிக் குழு பற்றி சொன்னீர்கள். நான் இந்த மாவட்டத்திற்கு வந்து, என் கையால் உதவி வழங்கப்பட்டு அதனை வாங்கியதை பெருமையாக சொன்னார்கள்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல முறை சென்றிருக்கிறேன். இதேபோல் மேடையில் 6 மணி நேரம் வரை நின்று கொண்டு 5,000 பேராக இருந்தாலும், அனைவருக்கும் கொடுத்துவிட்டு தான் செல்வேன்.
5,000 பேரையும் உட்கார வைத்து, வரிசையாக வர வைத்து, மேடையில் வைத்து அவர்களுக்கு கொடுத்து, புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.
அப்போது சில தாய்மார்கள் என்னிடத்தில், “5 மணி நேரமாக நின்று கொண்டு கொடுக்கிறாய். உன் கால் வலிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அப்போது நான், “கொடுக்கின்றபோது உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன். அப்போது என் கால் வலி தானாக பறந்து விடுகிறது” என்று சொல்வேன்.
ஏனென்றால் கலைஞர் இந்தத் திட்டத்தை 1989-இல் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கினார். மகளிர் சுய உதவிக்குழுக்களை எதற்காக உருவாக்கினார் என்றால் - தன்னம்பிக்கையுடன் மகளிர் வாழவேண்டும், சுயமரியாதை உணர்வோடு இருக்க வேண்டும், எதையும் எதிர்பார்க்கக்கூடாது - அத்தகைய தன்னம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும் என்பதற்காகத் தான் அந்தத் திட்டத்தை உருவாக்கினார்.
நிச்சயமாக தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, முன்பு தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு வங்கிக் கடன், மானியத் தொகை, சுழல் நிதி என்று வழங்கப்பட்டதோ, அதேபோல எல்லா வசதிகளும் மகளிருக்கு நிச்சயமாக செய்து தரப்படும் என்ற உறுதியை, நம்பிக்கையை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இங்கு பேசியவர்கள் சுருக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இது தனிப்பட்ட அவர்கள் கருத்து மட்டுமல்ல. இங்கு இருக்கக்கூடிய அனைவரின் கருத்தும் அது தான்.
இந்த கருத்துக்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமல்ல, இந்த தொகுதிக்கு மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் இத்தகைய பிரச்சினைகள்தான் எல்லா ஊராட்சிகளிலும் இருக்கின்றன. நான் பல்வேறு கிராமசபைக் கூட்டங்களுக்கு சென்று வருகிறேன். அனைவரும் இதைத் தான் பேசுகிறார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்தை பற்றி பேசுனீர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் என்ற உறுதியை இப்போது சொல்கிறேன்.
இறுதியாக பேசிய சகோதரி பி.டி.ஆர். கால்வாய் பற்றி சொன்னீர்கள். அந்த கால்வாய் பற்றிய உறுதிமொழியை 10 ஆண்டுகளாக ஓ.பி.எஸ் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் இதுவரைக்கும் அவர் நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமில்லாமல் புலிக்குத்தி, அய்யம்பட்டி மற்றும் சங்கராபுரம் ஊராட்சிகளை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு 18வது கால்வாய் விரிவாக்கத் திட்டத்தில் இருந்து நீர் வளங்கள் இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
போடிநாயக்கனூரில் வசிப்பவர்கள் கோட்டை குடி நதிக்கு தடுப்பு அணை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான எந்த முயற்சிகளிலும் இந்த அரசு மற்றும் இந்த துணை முதலமைச்சர் ஈடுபடவில்லை.
இராஜகோபாலன் சமுத்திர ஏரியில் நீர் தேக்கத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதுவும் இதுவரை கவனிக்கப்படவில்லை.
குமுளி அருகே வடிகால் சுத்திகரிப்பு நிலையம் இதுவரைக்கும் அமைக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியில் இதுவரைக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடவில்லை.
‘நியூட்ரினோ’ திட்டத்தின் மூலம் கதிர்வீச்சு ஏற்படும் என்று 7 கிராமங்களைச் சார்ந்த மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலைகளும் இதுவரை தீர்த்து வைக்கப்பட வில்லை.
போடிநாயக்கனூரில் பெரிய மற்றும் சிறிய அளவிலான தொழில்கள் இதுவரையில் தொடங்கப்படவில்லை. இந்த தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. போடியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனையும் இதுவரைக்கும் செவி கொடுத்து கேட்கவில்லை. ‘மா’ விவசாயிகளுக்கு மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. குமுளியில் ஒரு பஸ் டெப்போ கூட இல்லை. இங்கு ஏராளமான ஏரிகள் இருக்கிறது. அவைகள் எல்லாம் வறண்டு இருக்கிறது.
ஓ.ஏ.பி. ஓய்வூதிய தொகை இதுவரையில் பலருக்கு வழங்கப்படவில்லை. அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரம், வெங்கடாசலபுரம், குப்பிநாயக்கன்பட்டி, அம்பாசமுத்திரம், கோவிந்த நகரம், ஜங்கல்பட்டி, காட்டி நாயக்கம்பட்டி, பூமலைகுண்டு ஆகிய கிராமங்களில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருந்துகொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை.
குரங்கணி, முதுவாக்குடி, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் விளையக் கூடிய மிளகு, காபி, தேயிலை உள்ளிட்ட பயிர்களை கொண்டு செல்ல விவசாயிகள் பயன்பெறும் வகையில் குரங்கணி டாப் ஸ்டேஷன் வரை சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. அதைப்பற்றியும் இந்த ஆட்சி கவலை கொள்ளவில்லை.
10 ஆண்டுகளாக இந்த பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. போடி, சங்கராபுரம் பகுதியில் சிட்கோ தொழிற்சாலை அமைக்க கடந்த 2 வருடத்திற்கு முன்னாடி பூஜை போட்டார்கள். ஆனால் இதுவரை அந்த திட்டம் கிடப்பில் இருக்கிறது.
போடி நகர் பகுதியில் முறையான சாலை வசதிகள் செய்து தரவில்லை. நகரில் இருக்கும் புதூர், வினோபாஜி காலனி உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.
இந்தத் தொகுதியில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகள் கடந்த 4 வருடத்திற்கு முன்பு மூடப்பட்டது. அதனால் 10 ஆயிரம் குடும்பங்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அதை பற்றியும் இந்த ஆட்சி கவலைப்படவில்லை.
இவ்வாறு ஏராளமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாத நிலையில் இங்கு இருக்கும் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
அது மட்டுமில்லாமல் விலைவாசி பற்றி இங்கு குறிப்பிட்டு சொன்னீர்கள். நானும் கையில் ஒரு பட்டியல் எடுத்து வந்திருக்கிறேன். அதாவது தி.மு.க ஆட்சியில் சிலிண்டர் விலை 250 ரூபாய். இப்போது 780 ரூபாய். துவரம் பருப்பு ஒரு கிலோ தி.மு.க ஆட்சியில் 38 ரூபாய். இப்போது 92 ரூபாய். உளுத்தம் பருப்பு ஒரு கிலோ தி.மு.க ஆட்சி இருந்த பொழுது 60 ரூபாய். இப்போது 140 ரூபாய். பாமாயில் ஒரு லிட்டர் தி.மு.க ஆட்சியில் 48 ரூபாய். இப்போது 118 ரூபாய். சர்க்கரை ஒரு கிலோ தி.மு.க ஆட்சியில் 18 ரூபாய். இப்போது 40 ரூபாய். கடலைபருப்பு தி.மு.க ஆட்சியில் ஒரு கிலோ 34 ரூபாய். இப்போது 72 ரூபாய்.
பெட்ரோல் - டீசல் விலை நாளுக்கு ஒருமுறை உயர்ந்துகொண்டே இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் டீசல் விலை உயரும்போது, விற்பனை வரியைக் குறைத்து, தலைவர் கலைஞர் அவர்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
விலைவாசி உயரும்போது, ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் இப்பொழுது இருக்கும் ஆட்சி அதை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக தான் இன்றைக்கு நாம் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம். கூடி இருக்கும் நீங்கள் உறுதியோடு வந்திருக்கிறீர்கள். இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட உங்களுக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணருகிறேன்.
எனவே அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை உங்கள் ஆதரவுடன் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றுவோம்.
அ.தி.மு.க. வை நிராகரிப்போம்…
அ.தி.மு.க. வை நிராகரிப்போம்…
அ.தி.மு.க. வை நிராகரிப்போம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.