“ரேஷன் அரிசியில் ஊழல் செய்து மக்களின் உணவில் மண்ணைப் போடும், பினாமிகள் மூலம் மணலைக் கொள்ளையடிக்கும் அமைச்சர் காமராஜ் எனும் கமிஷன்ராஜை டெல்டா மாவட்டத்து மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (04-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் மாவட்டம் – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் ஒன்றியத்துக்குட்பட்ட அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராமசபைக் கூட்டத்தில்” பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
"இந்த கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த 19ம் தேதி தலைமைக் கழகத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டு, நம்முடைய மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஒரு தீர்மானம் போட்டோம்.
23ம் தேதியிலிருந்து ஒரு 10 நாட்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத்திற்கும் சென்று, கிராமசபைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்தோம்.
அந்த கிராமசபைக் கூட்டத்தை, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு, அங்கு இருக்கும் நம்முடைய முன்னோடிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வைத்து நடத்த வேண்டும் என்று அறிவித்தோம்.
அதன்படி அந்தப் பணி தொடங்கியது. நான் முதன் முதலில் கிராமசபைக் கூட்டங்களைத் தொடங்கி வைக்க அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், குண்ணம் ஊராட்சிக்குச் சென்றேன்.
பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வேலூர் மாவட்டத்திற்குச் சென்றார். பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் அவருடைய தொகுதிக்குச் சென்றார்.
இப்படி நாங்கள் பிரித்துக் கொண்டு சென்றோம். எல்லா இடத்திற்கும் நானும் கழக முன்னோடிகளும் செல்ல முடியாது. அதனால்தான் நம்முடைய கழகத்தில் இருக்கும் எல்லோரும் சென்று, கலந்துகொண்டு நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறி இந்தக் கிராமசபைக் கூட்டத்தை 23-ஆம் தொடங்கினோம்.
23-ஆம் தேதி இந்தக் கூட்டங்களைத் தொடங்கிய போது ஒரு எழுச்சி ஏற்பட்டது. அந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய எல்லா மக்களும் வந்தார்கள்.
இப்பொழுது இங்கு பார்க்கிறேன். ஆண்களை விடப் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆண்கள் எல்லாம் உங்களைச் சுற்றி நின்று கொண்டு இருக்கிறார்கள்.
ஆண்கள் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதற்கு இது ஒரு சான்று. அதேபோல, நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. ஆண்கள் வெற்றிக்குக் காரணமே அவர்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய பெண்கள்தான். அந்த அளவிற்குப் பெண்களுடைய வாழ்வில் பல முன்னேற்றங்களை இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.
பெண்களுடைய முன்னேற்றத்திற்காகத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது, எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகளைச் செய்திருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்கள், 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
பெண்கள் முன்னேற்றம் தான் நமக்கு முக்கியம். பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள்.
சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை தர வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை 1929-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நிறைவேற்றிக் கொடுத்தார். இந்தக் காரணத்தினால் தான், தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ.வே.ராமசாமி என்றிருந்த நிலையில், பெண்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவருக்கு “தந்தை பெரியார்“ என்று ஒரு பட்டத்தைக் கொடுத்தார்கள்.
1929-இல் தந்தை பெரியார் கண்ட கனவை, 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுது, நிறைவேற்றிக் கொடுத்தார். அதுதான் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை.
அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பெண்களுக்கு 33% சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டது கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் என்பதை நான் பெருமையுடன் இங்கு பதிவு செய்கிறேன்.
அதேபோல, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம் ஆகியவையும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவைதான்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணின் பெற்றெடுத்த பெற்றோர் என்னென்ன கொடுமைகளுக்கு, துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
இப்படி ஒரு சூழ்நிலையில் தவித்துக்கொண்டிருந்த குடும்பங்கள் பல உண்டு. அதனால் கலைஞர் அவர்கள் ஒரு முடிவுசெய்தார். இவ்வாறு திருமணம் செய்யும் அந்தப் பெண்களுக்கு, நிச்சயமாக உதவி செய்ய வேண்டும் என்று கலைஞர் அவர்கள் கொண்டுவந்த திட்டம் தான், திருமண உதவித் தொகைத் திட்டம்.
அதுமட்டுமின்றி, ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாகப் பெண்களைத்தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று ஒரு சட்டம். வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற திட்டத்தையும் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதிலும் மிக முக்கியமாக மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம்.
மகளிர் சுயஉதவிக்குழுத் திட்டத்தை, 1989-இல் முதன் முதலில் தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் அவர்கள் தொடங்கிவைத்தார்.
பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும், சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது, தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தத் திட்டத்தை கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.
அவர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டுமென்றால், சுயமாக வாழ வேண்டுமென்றால், அந்தந்த வட்டாரத்தில் அவர்கள் தங்களுக்கான சிறு சிறு தொழில்களைச் செய்ய வேண்டும். அந்தத் தொழிலைச் செய்வதற்கு அவர்களுக்கு நிதி தேவை. அதற்கு நிதி உதவி செய்வதற்காக வங்கிக் கடன், மானியத் தொகை, சுழல்நிதி இப்படிப் பல்வேறு வகைகளில், சுயஉதவிக் குழுவின் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்று அந்தத் திட்டத்தை கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.
இதில் எனக்கு என்ன பெருமை என்றால் நான் அப்பொழுது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தேன். அந்த நேரத்தில் இந்த சுயஉதவிக் குழுப்பொறுப்பை என்னிடத்தில்தான் ஒப்படைத்து இருந்தார்கள். அதனால் எனக்கு ஒரு பெருமை கிடைத்தது.
பெண்களுடைய முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பணிகளை நான் எப்படி எல்லாம் செய்தேன் என்று உங்களுக்குத் தெரியும். முக்கியமாக சுயஉதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும்.
நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, ஒரு மாதத்திற்கு 4 முறையாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருவேன். அப்பொழுது அரசு நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த நிகழ்ச்சிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு எனத் தனி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அந்த நிகழ்ச்சிகளில், பங்கேற்று வங்கிக் கடன், மானியத்தொகை, சுழல் நிதி உள்ளிட்ட உதவிகளை நான் வழங்குவதுண்டு.
ஓர் அரசு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லாம் வந்திருப்பார்கள்.
அவர்களுக்காக நீங்கள் எல்லாம் காத்துக்கொண்டு இருப்பீர்கள். ஒரு 400 பேருக்குக் கொடுக்க வேண்டும். அதில் ஒரு 4 பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு அடுத்த வேறு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று அவர்கள் சென்று விடுவார்கள்.
மற்றவர்கள் அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அதை நீங்கள் சென்று வாங்குவதற்குள் உங்கள் பாடு திண்டாட்டமாகப் போய்விடும். அதிக லஞ்சம் எல்லாம் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு நிலை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், நான் அமைச்சராக இருந்த பொழுது, மகளிர் சுயஉதவிக் குழுக் கூட்டத்திற்கு சுமார் 5,000 பேர் வந்திருப்பார்கள். அந்த 5000 பேருக்கும் முழுமையாக, கடைசி வரையில் இருந்து, எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று அத்தனை பேருக்கும் கொடுத்துவிட்டுச் சென்ற ‘கை தான் இந்த கை‘.
5,000 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் மாலை 4 மணிக்குக் கூட முடித்திருக்கிறேன். நின்று கொண்டே தான் கொடுப்பேன்.
அதை ஒரு முக்கியப் பணியாக, உறுதியாக எடுத்துக் கொண்டு செய்தேன். சில வயது முதிர்ந்த தாய்மார்கள் அதனை வாங்கி செல்லும் போது, என்னைப் பார்த்துக் கேட்பார்கள்.
‘காலை 9 மணிக்கு நிற்க ஆரம்பித்தாய். இப்பொழுது மதியம் 2 மணி ஆகிவிட்டது. நாங்களாவது உட்கார்ந்து இருக்கிறோம். நீ கூப்பிடும் போது மட்டும் வந்து வாங்கி செல்கிறோம். ஆனால் நீ கடைசி வரைக்கும் நின்றுகொண்டு இருக்கிறாயே, உனக்கு கால் வலிக்க வில்லையா?’ என்று அந்தத் தாய்மார்கள் கேட்பார்கள். அப்பொழுது, “நான் கொடுக்கும் பொழுது நீங்கள் முகமலர்ச்சியோடு வாங்குகிறீர்கள் அல்லவா, அதைப் பார்க்கும் போது என் கால் வலி தானாகப் பறந்து போய்விடுகிறது, அந்த வலி தெரியவில்லை” என்று அவர்களிடம் சொல்வதுண்டு.
இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. கலைஞருடைய உணர்வை, அவருடைய எண்ணத்தை, அவருடைய லட்சியத்தை, எண்ணி அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவ்வாறு செயல்பட்டேன்.
அந்த உரிமையோடுதான் உங்களைத் தேடி வந்திருக்கிறோம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் இங்கு வந்திருக்கிறீர்கள்.
இன்னும் நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆட்சிமாற்றம் வரப்போகிறது. இந்த நான்கு மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? (தயார்… தயார்… என்று மக்கள் பதில் அளித்தனர்.)
இவ்வாறு தயாராக இருக்கும் உங்கள் இடத்தில், இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அக்கிரமத்தை, அநியாயத்தைப் பேச வந்திருக்கிறேன். உங்கள் உள்ளூர் அமைச்சரைப் பற்றி நிறையப் பேச வந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததைத்தான் பேசப்போகிறேன்.
அவர் என்னென்ன ஊழல்கள் செய்து கொண்டிருக்கிறார்? மணல் கொள்ளை, அரிசியில் ஊழல் என எல்லா விவரங்களும் என்னிடத்தில் உள்ளன. அவை அனைத்தும் உங்களுக்கும் தெரிந்தவைதான்.
அதனால்தான், அவரது காமராஜ் என்ற பெயரை ‘கமிஷன்ராஜ்’ என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூட நான் முன்னர் சொல்லி இருக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைத்து அமைச்சர்களும் அப்படி முறைகேடு செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கிறது. நிச்சயம் ஆட்சிக்கு அவர்கள் வரப் போவதில்லை. அது நம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
அதனால் இயன்றவரை இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு அந்தச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கு வந்திருக்கக் கூடிய அனைவரையும் பேச வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனால் அத்தனை பேரும் பேசினால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் உங்களின் சார்பில் ஒரு சிலர் பேசுவதற்காகச் சிலரைத் தேர்வு செய்து அவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பேசப் போகிறார்கள்.
உங்களின் சார்பாக, உங்கள் கருத்துகளைத்தான் அவர்களும் பேசப் போகிறார்கள். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அவை தீர்த்து வைக்கப்படும். அந்த நம்பிக்கை எங்களை விட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த நம்பிக்கையுடன் இங்கு வந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் சுருக்கமாக தங்களது கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“இப்பொழுது 9 பேர் உங்கள் கருத்துகளைப் பேசி உள்ளீர்கள். தொடக்க வேளாண்மை பற்றி, விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றிச் சுட்டிக்காட்டிப் பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில் தான், கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை யாராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாது.
மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, அன்றைக்கு விவசாய சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில், விவசாயிகளுக்குரிய மின்சார கட்டணத்தை ஒரு பைசா மட்டும் குறைக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அ.தி.மு.க ஆட்சி நடந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அவர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி அவர்கள் திருச்சியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை அடித்து, காலை உடைத்து, மருத்துவமனையில் படுக்க வைத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றன.
ஆனால், கலைஞர் முதலமைச்சராக வந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும் போது சொன்னார். விவசாயப் பெருங்குடி மக்கள் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராடினீர்கள்.
ஆனால் அப்போது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுது தி.மு.க. ஆட்சியில், என்னிடத்தில் யாரும் வந்து கேட்கவில்லை, கோரிக்கை கூட வைக்கவில்லை, கோட்டைக்கு ஊர்வலம் வரவில்லை, உண்ணாவிரதம் இருக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, யாரும் என்னிடத்தில் வந்து மனுக் கூடத் தரவில்லை. இருந்தாலும் நான் முன்கூட்டியே அறிவிக்கிறேன். ஒரு பைசா கட்டணக் குறைப்புக்காக போராடிய நீங்கள் இனி ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த வேண்டாம். மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
கலைஞர் எப்போதும் சொன்னதைத் தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஐந்தாவது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயப் பெருங்குடி மக்கள் வாங்கி இருக்கும் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று கூறினார். எங்களுக்கெல்லாம் அது ஆச்சரியமாக இருந்தது.
ஒரு கோடி இரண்டு கோடி அல்ல. நூறு கோடி இருநூறு கோடி அல்ல. 7,000 கோடி ரூபாய் கடன். அதைத் தள்ளுபடி செய்வேன் என்று அவர் அறிவித்தார்.
கலைஞர் முதலமைச்சராக வந்த பிறகு, சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அது முடிந்தவுடன் அங்கிருந்து கோட்டைக்குத் தான் செல்ல வேண்டும். அதுதான் மரபு.
ஆனால் ஆளுநர் அங்கிருந்து சென்றவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் அங்கேயே 7,000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடிக்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
நாங்கள் கூட, “7,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்கிறீர்களே, இதனால் கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருக்கும் அ.தி.மு.க.காரர்கள் தான் அதிகமாகப் பயன் பெறுவார்கள். நம் கட்சிக்காரர்கள் 5 லட்சம், 10 லட்சம் என்றுதான் வாங்கியிருக்கிறார்கள்” என்று சொன்னோம்.
அதற்கு, “நான் விவசாயப் பெருங்குடி மக்களை, அ.தி.மு.க. என்று பார்க்கவில்லை, தி.மு.க. பார்க்கவில்லை, கம்யூனிஸ்ட் என்று பார்க்கவில்லை, மற்ற கட்சிகள் என்று பார்க்கவில்லை. அத்தனை பேரையும் தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களாகவே பார்க்கிறேன் என்றார். அவர்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றார்,
ஆனால், இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் பச்சைத் துரோகியாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போது பார்த்தாலும் அவர், நான் ஒரு விவசாயி நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடி தான், எப்பொழுதும் நான் ஒரு ரவுடி நான் ஒரு ரவுடி என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.
விவசாயிகளை அவர் இப்பொழுது கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்றோடு 39 நாட்களைக் கடந்து விட்டது. தலைநகர் டெல்லியில், கடும் குளிரில், பல மாநிலங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்து மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இதுவரைக்கும் மத்திய அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு கடுமையான 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறது.
அதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். வாழ்வாதாரம் அழிந்து விடும். விவசாயம் செய்ய முடியாது. கார்ப்பரேட் கம்பெனிகள் தான் அதை ஆக்கிரமிப்பு செய்யப் போகிறார்கள். உழவர் சந்தை கிடையாது. நாம் நினைக்கிற விலைக்குப் பொருட்களை விற்க முடியாது.
இப்படி ஒரு சூழ்நிலையை அந்தச் சட்டங்கள் உருவாக்கப் போகின்றன. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் அனைத்து முதலமைச்சர்களும் சட்டமன்றத்தில் அந்தச் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தீர்மானம் போட்டாரா? இல்லை.
தீர்மானம் கூடப் போட வேண்டாம், அதை எதிர்க்கக் கூட வேண்டாம். ஆதரிக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
ஆனால் அவர் அதனை ஆதரித்துக் கூட்டத்தில் பேசுகிறார். இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது.
இதுதான் இந்த நாட்டின் நிலைமை. விவசாயிகள் இல்லை என்றால் நாம் இல்லை. நாம் இன்றைக்கு உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் விவசாயிகள் தான்.
அதே போல மின்சாரம் பற்றி, வேலை வாய்ப்பு பிரச்சினை பற்றி எல்லாம் சொன்னீர்கள்.
இதே மோடி அவர்கள், முதல் முறை பிரதமராக வருவதற்கு முன்பே, ஒரு உறுதிமொழி கொடுத்தார். நான் பிரதமராக வந்துவிட்டால், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன். மீட்டுக் கொண்டுவந்து, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்வேன் என்று சொன்னார்.
ஐந்து ஆண்டுகால ஆட்சி முடிந்து விட்டது. அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்கு யாருக்காவது அவ்வாறு பணம் வந்துள்ளதா? 15 லட்சம் வேண்டாம், 15 ரூபாய் வேண்டாம் 15 பைசாவேனும் கிடைத்துள்ளதா? இல்லை. இது தான் மோடி அளித்த உறுதிமொழியின் நிலை.
அதேபோல வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்போகிறேன் என்று சொன்னார். இங்கு யாருக்காவது மத்திய அரசின் மூலமாக வேலைவாய்ப்பு வந்திருக்கிறதா? இல்லை.
எதற்காக நான் இதைச் சொல்கிறேன்? இவ்வாறு தவறான வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அவ்வாறு ஆட்சிக்கு வந்த அவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கு, அநியாயத்திற்கு அடிபணிந்து ஓர் அடிமைச் சேவகனாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
மகளிர் சுயஉதவிக் குழு பற்றிச் சொன்னீர்கள். நான் அதைத் தொடக்கத்திலேயே சொன்னேன். அது தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அதனால் தான் அ.தி.மு.க ஆட்சியில் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
தி.மு.க ஆட்சியில் நீங்கள் வங்கிக்குச் சென்றால், உங்களிடம் கடன் எவ்வளவு வேண்டும்? எப்படி வேண்டும்? என்று கேட்டு அதனை முறையோடு கொடுத்தார்கள்.
ஏனென்றால் வங்கி நிர்வாகிகளை நாங்கள் அவ்வப்போது அழைத்துப் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த ஆட்சியில் வங்கியில் கூட நீங்கள் நுழைய முடியவில்லை. அடித்து விரட்டுகிறார்கள்.
மானியத்தை வாங்க முடியவில்லை. கடன் கேட்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலை தான் மகளிர் சுயஉதவிக் குழுவைப் பொறுத்தவரைக்கும் இந்த ஆட்சியில் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நிச்சயமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உதயமானவுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என்று தனிக் குழு அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும், முறைப் படுத்தப்படும் என்பதனை நான் இங்குஉறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அடுத்தது கமிஷனைப் பற்றிப் பேசினீர்கள். முதியோர் உதவித் தொகை பற்றிச் சொன்னீர்கள்.
தி.மு.க ஆட்சி இருந்தபோது, அதனைக் கட்சிப் பாகுபாடு இல்லாமல் கொடுத்தார்கள். வயது முதிர்ந்தவராக இருந்தால் போதும். அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இப்போது இருக்கும் ஆட்சி, அவர்கள் கட்சிக்காரர்களைப் பார்த்து, அவர்களுக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களைப் பார்த்து, அதைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நிச்சயம் ஒரு முடிவு வரும்.
ரேஷன் கடைப் பிரச்சினை பற்றிச் சொன்னீர்கள். சிறு விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னீர்கள். குடிநீர்ப் பிரச்சனை பற்றிச் சொன்னீர்கள். நீங்கள் வந்த பிறகுதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று சொன்னீர்கள். நிச்சயம் முடிவு கிடைக்கும். நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். அதற்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
கஜா புயல் வந்தபோது, நான் பலமுறை இந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்த டெல்டா மாவட்டம் முழுவதும் நான் பல முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.
அப்பொழுது இந்த அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கஜா புயல் ஏற்பட்டது முதல் இன்று வரைக்கும் பல இடங்களில் நிவாரண உதவிகள் சென்று சேரவில்லை என்ற செய்திதான் நமக்கு வந்து கொண்டிருக்கிறது.
அந்தச் சூழ்நிலையில், இப்பொழுது நிவர் புயல் வந்தது. அப்பொழுதும் நான் ஓடோடி வந்தேன். அதன் பிறகுதான் ஒரு நாடகம் போடுவதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓடோடி வந்தார்.
இவர் வந்து நிவாரணத் தொகை கொடுத்தாரா? இல்லை. இன்னும் அந்த வாழ்விழந்த விவசாயிகள் மீள முடியாமல் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் நிவாரணமாக 10,000 ரூபாய் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஒரு அறிக்கை எடுத்தேன். ஆனால் இந்த ஆட்சி இதுவரை கொடுக்கவில்லை.
வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால் அவர்கள் 2.5 ஏக்கருக்கு 20000 ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
PM-KISAN என்பது மத்திய அரசின் திட்டம். அந்த திட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஆட்சியில் 110 கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.
குடிமராமத்துப் பணி என்று ஒரு திட்டத்தை அறிவித்து, அதில் ஒரு பெரிய சாதனை செய்தது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் மட்டும் 1,600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பதை ஆதாரத்தோடு ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடனையே தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்தவர்தான் இந்த முதலமைச்சர் பழனிசாமி.
இந்த தொகுதி எம்.எல்.ஏ. அதாவது உணவுத்துறை அமைச்சராக இருக்கும் – காமராஜ் – மன்னிக்க வேண்டும் - கமிஷன்ராஜ் அவர்களைப் பற்றி அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
5,36,000 மெட்ரிக் டன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று ஊழல் செய்தவர் தான் அவர். இதுபற்றி ஆளுநர் இடத்தில் ஆதாரபூர்வமாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அடுத்தவன் சோற்றில் மண்ணை போட்டுவிடாதே“ என்று கிராமங்களில் சொல்வார்கள். ஆனால் இந்த அமைச்சர் தமிழக மக்களுடைய சோற்றிலேயே மண்ணை அள்ளிப்போடும் அமைச்சராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நெல்கொள்முதல் பற்றியெல்லாம் நீங்கள் பேசினீர்கள். நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் என்று மூட்டைக்கு 80 ரூபாய் வசூல் செய்கிறார்கள். அது யாருக்குச் செல்கிறது?
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு அரைப்பதற்கு ரைஸ்மில்லில் கொடுப்பார்கள். அதில் மூட்டைக்குக் குறிப்பிட்ட ரூபாய் என்று கமிஷன் பார்ப்பவர் தான் இந்த அமைச்சர். சாப்பாட்டில் ஊழல் செய்த அமைச்சர்தான் அமைச்சர். இதனைக் காவிரி டெல்டா நிச்சயம் மன்னிக்காது. நீங்களும் மன்னிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அவருக்குச் சரியான பாடத்தை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
பினாமிகள் மூலம், மணல் குவாரி கொள்ளை மிகவும் மோசமாக இந்த ஊரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பேசியதன் மூலமாக நான் புரிந்து கொண்டேன்.
அதிலும் குறிப்பாக குவளைக்கால் - ஆனைக்குப்பம் இடையே, 142.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது.
அந்தப் பாலம் மக்கள் போக்குவரத்திற்காகக் கட்டப்பட்டதா? இல்லை. அது எதற்காக என்றால், அ.தி.மு.க.வினுடைய ஒன்றியச் செயலாளராக இருக்கக்கூடிய ராம குணசேகரன் மூலமாக நடக்கும் மணல் வியாபாரத்திற்காகத் தான் அந்தப் பாலம் கட்டப்பட்டது என்பதனை இங்கு ஆதாரத்தோடு சொல்ல விரும்புகிறேன்.
வயல்வெளியில் நிறைந்த, மக்கள் நடமாட்டம் இல்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த இடத்தில் இப்படி ஒரு பாலம் எதற்கு?
இப்பொழுது மழை பெய்து இருக்கிற காரணத்தினால் மணலை அள்ள முடியவில்லை. அதனால் அந்தப் பாதையை வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பாலத்தில் இருந்து பக்கத்து ஊருக்குச் செல்ல முடியாது.
நான் ஆதாரத்தோடு தான் சொல்கிறேன். எதுவும் பொத்தாம் பொதுவாக பேச விரும்பவில்லை. நான் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறேன். இந்த பாலம் மக்களுக்காக கட்டப்பட்ட பாலம் அல்ல. இந்த பாலம் வண்டிகளில் மணல் அள்ளிச்செல்வதற்காக கட்டப்பட்டுள்ளது.
அதற்கு நமது வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மழை பெய்ததால், வண்டியில் போக முடியாது என்பதனால், தடுப்பு போட்டு அதை தடுத்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி ஊழல் மலிந்த ஆட்சியாக கமிஷன், கரெப்சன், கலெக்சன் இந்த குறிக்கோள்களை வைத்துக்கொண்டு நடக்கக்கூடிய ஆட்சியாக எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த ஆட்சிக்கு நாமெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்குத்தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன், நாடி வந்திருக்கிறேன். நீங்களும் அந்த நம்பிக்கையோடுதான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில், எத்தனையோ திட்டங்களை, எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளைத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் செய்து தரப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
அவை எல்லாம் மீண்டும் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள், யோசித்துப் பாருங்கள்.
இன்றைக்கு இருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் நான்கு மாதங்களில் சுருட்டிக்கொண்டு போவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பெரிய சாதனை மனிதரைப் போல, கோடி கோடியாக செலவு செய்து, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாருடைய பணத்தை எடுத்துச் செலவு செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் எதற்காக வரி செலுத்துகிறோம்? நமக்கு நல்ல திட்டங்கள் வர வேண்டும். நாம் முன்னேற வேண்டும். நமக்கு அது பயன்பட வேண்டும். அதற்காகத் தான் நாம் வரி செலுத்துகிறோம்.
ஒவ்வொரு பொருளுக்கும் நாம் வரி செலுத்துகிறோம். அந்த வரிப்பணம் எல்லாம் எங்கே செல்கிறது? அரசாங்கத்திற்குச் செல்கிறது. அந்த வரியை வாங்கி அரசு என்ன செய்ய வேண்டும்? மக்கள் தரக்கூடிய வரியை, மக்களுக்குப் பயன்படும் வகையில் செலவழிக்க வேண்டும்.
ஆனால் இன்றைக்குத் தனிப்பட்ட முதலமைச்சருக்கு, தனிப்பட்ட அமைச்சர்களுக்குப் பயன்படும் வகையில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.
சின்னஞ்சிறு கிராமத்தில் பெண்கள் இவ்வளவு அமைதியாக இருப்பதைப் பார்க்கிற போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் ஆண்கள் பக்கம் கூட அவ்வப்போது சலசலப்பு இருந்தது.
பெண்கள் இவ்வளவு அமைதியாக இருக்கும் காட்சியைப் பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதைவிட உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
எனவே, அந்த மாற்றத்தை நிரூபிக்க ஒவ்வொரு மக்கள் கிராமசபைக் கூட்டத்திலும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம்.
அதே போல, நாம் இங்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.
அ.தி.மு.கவை நிராகரிப்போம்… அ.தி.மு.கவை நிராகரிப்போம்… அ.தி.மு.கவை நிராகரிப்போம்… தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது. நன்றி. வணக்கம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.