“ஒவ்வொரு நிமிடமும் முறைகேடு செய்வதையே பணியாகச் செய்து வரும் ஊழல்மணியான அமைச்சர் வேலுமணியின் கொட்டம் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (02-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை வடக்கு மாவட்டம் - தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்” பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய விவரம் வருமாறு:
“இன்றைக்கு இந்த தேவராயபுரம் பகுதியில் இருக்கும் பொதுமக்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நீங்கள் எல்லாம் இன்முகத்தோடும் மகிழ்ச்சியோடும் நம் வீட்டுத் திருமணத்திற்கு செல்வதுபோல் வந்திருக்கிறீர்கள். அதிலும் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிக ஆர்வமாக வந்திருக்கிறீர்கள்.
அதனால் தான் மகளிர் சகோதரிகளை உட்கார வைத்துவிட்டு ஆண்கள் எல்லாம் உங்களை எல்லாம் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அதாவது உங்களுக்கு ஆண்கள் பாதுகாப்பு. இங்கே உங்களை எல்லாம் பார்க்கிறேன்; உங்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன், சிரிப்பைப் பார்க்கிறேன்.
மக்கள் கிராம சபை கூட்டத்தைக் கடந்த 23-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். வருகிற 10-ஆம் தேதி வரை நடத்தப் போகிறோம். இன்னும் சில மாவட்டங்களில் அதை நீடித்து நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெற இருக்கிறது. ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்து, நான் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கிறேன். இன்றைக்கு இதை முடித்துவிட்டு, மாலையில் ஈரோட்டிற்குச் செல்கிறேன். நாளைக்குக் கரூர் செல்கிறேன். அதற்குப் பிறகு திருவாரூர் மாவட்டம், கடலூர் மாவட்டம். இப்படிப் பல மாவட்டங்களுக்கு நான் என்னுடைய பயணத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்.
ஏற்கனவே பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் ஒரு மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினோம். அடுத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடத்தினேன். பின்னர் ராணிப்பேட்டை அனந்தலை என்று மக்கள் சபைக் கூட்டங்களை நடத்திவிட்டு, இப்போது உங்களைச் சந்திக்க இந்த தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்திருக்கிறேன்; கோவை மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்; உங்களிடத்தில் வந்து இருக்கிறேன் அது தான் முக்கியம்!
நான் பல கிராம சபை கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன்; நடத்தி முடித்து இருக்கிறேன்; இன்னும் நடத்தப் போகிறேன். ஆனால் இதுவரைக்கும் இந்த மக்கள் கிராம சபைக்கூட்டம் போல ஒரு எழுச்சியை, ஒரு மகிழ்ச்சியை, ஒரு உணர்ச்சியை நான் எங்கும் பார்க்கவில்லை. இங்குதான் பார்க்கிறேன். அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இங்கே என்னை வரவேற்று மகிழ்ந்திருக்கிறீர்கள்.
எதற்காக இந்த மக்கள் கிராம சபைக் கூட்டம்? இந்த கிராம சபைக் கூட்டத்தை நாம் நடத்தக்கூடாது என்று சொல்லி இப்போது இருக்கக்கூடிய இந்த அரசு தடை விதித்துள்ளது. இன்னும் நான்கு மாதங்கள் இந்த ஆட்சிக்கு ஆயுட்காலம். அந்த நான்கு மாதத்திற்குள் என்ன அக்கிரமம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பது ஒரு பக்கம். இந்த நான்கு மாதங்களில் என்ன அராஜகம் செய்யலாம் அதுவும் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நம் தி.மு.க. மீது என்ன பழி போடலாம்? என்ன வழக்குப் போடலாம்? என்ன பொல்லாங்குச் சொல்லலாம்? பொய் சொல்லலாம்? எவ்வாறு கைது செய்யலாம்? எவ்வாறு சிறைக்குக் கொண்டு போகலாம்? என்ன வழக்குப் போட்டாலும் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தைப் பெற்றவர்கள் தான், கலைஞருடைய உடன்பிறப்புகளான நாங்கள்.
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு இந்த கோவையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அக்கிரமங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரியும். (ஊழல் மணி… ஊழல் மணி… என்று மக்கள் ஆர்ப்பரித்தனர்.)
வேலுமணி அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவி வைத்துக்கொண்டிருக்கிறார். நான் வகித்த பதவி தான். நான் துணை முதலமைச்சராக இருந்தாலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் என் கையில் வைத்திருந்தேன். “உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன்” என்று பெயர் எடுத்தவன், இந்த அடியேன் ஸ்டாலின். ஆனால் இப்போது உள்ளாட்சித்துறை என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். அந்தளவுக்கு அந்தத் துறையை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்; கேவலப்படுத்தியிருக்கிறார்கள். அவரை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வதற்குப் பதிலாக ஊழலாட்சித் துறை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஊழல்களை – அக்கிரமங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகத்தான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, ஒவ்வொரு ஊராட்சியிலும் சென்று, அதற்கானப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என இங்குள்ள அமைச்சர் செயல்படுகிறார்.
அதையெல்லாம் எதிர்த்து நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் கார்த்திக், சி.ஆர்.ராமச்சந்திரன், சேனாபதி, பையா கிருஷ்ணன் ஆகியோர் கழகத்தினரின் ஒத்துழைப்புடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் கூட, சில போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோது, அதற்கான அனுமதியை மறுத்தார்கள். அனுமதி தர மறுக்கிறார்கள் என்று எனக்கு விடிய விடிய தொலைப்பேசி அழைப்பு வந்துகொண்டிருந்தது. கைது படலம் எல்லாம் நடந்தது. நம்முடைய தோழர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து வைத்தார்கள். உடனே எனக்குச் செய்தி கிடைத்தது. பத்து நிமிடத்தில் விடுகிறார்களா என்று கேளுங்கள். இல்லையென்றால், விடியற்காலையில் விமானத்தைப் பிடித்து நான் உங்களோடு போராட வருகிறேன் என்று தொலைபேசியில் சொன்னேன். பேசிய பத்தாவது நிமிடத்தில், நம் தோழர்களையெல்லாம் வெளியே விட்டு விட்டார்கள். அந்த பயம் இருக்க வேண்டும்.
அவ்வளவு அக்கிரமங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக எல்லா மாவட்டங்களையும் விட, அதிகமாக அக்கிரமம், அநியாயம், ஊழல் இந்தக் கோவை மாவட்டத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். இன்னும் நான்கு மாதங்கள் தான், அவர்கள் ‘சாப்டர் கிளோஸ்‘. அவர்களுடைய ஊழல்களை மக்களிடத்தில் நாங்கள் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லை என்றால் உங்களுக்குத் தெரியாமல் போய்விடுமா? (தெரியும்… தெரியும்… என்று மக்கள் குரலெழுப்பினர்.)
இப்போது வேலுமணி தொலைக்காட்சியில் இந்தக் கூட்டத்தின் நேரலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். உங்களது கைகளை உயர்த்திக் காட்டுங்கள், அவர் தெரிந்து கொள்ளட்டும். (மக்கள் கைகளை உயர்த்திக் காட்டினர்). சீப்பை ஒளித்து வைத்துவிடுவதால் திருமணம் நின்றுவிடாது.
எங்களையெல்லாம் கைது செய்து அடைத்து வைத்துவிட்டால் மக்களுடைய உணர்வைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அதனுடைய எழுச்சிதான், இந்த எழுச்சி.
கிராம சபை கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள். 23ஆம் தேதி நாம் நடத்தத் தொடங்கினோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் திரளாகக் கூடக்கூடிய காட்சிகளைப் பார்த்துவிட்டு, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று, கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள். நான் உடனே, மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துகிறேன் என்று அறிவித்தேன்.
கிராம சபைக் கூட்டங்களை உள்ளாட்சித் துறைதான் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் என மூன்று முறை நடத்த வேண்டும். அங்கு இருக்கக்கூடிய ஊராட்சி தலைவர்கள், கிராம மக்களைக் கூட்டி நடத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு போடுவார். குடிநீர் பிரச்சினை, சாலை வசதிகள், மருத்துவமனை பிரச்சனைகள் போன்ற அடிப்படை பிரச்சினைகள், அன்றாடம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளையெல்லாம் எப்படி சரி செய்ய வேண்டும்? எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? என்று திட்டம் போட்டு தீர்மானம் போடுவார்கள். அதுதான் கிராம சபைக் கூட்டம். ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரைக்கும் ஒரு முறை கூட கிராம சபைக் கூட்டத்தை நடத்தவில்லை.
நடத்தாத காரணத்தினால் தான் நாம் நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தினோம்; பெரிய வெற்றி கிடைத்தது.
இதுவரைக்கும் நாட்டில் யாரும் அப்படி ஒரு கிராம சபைக் கூட்டங்களை நடத்தி இருக்க முடியாது. அப்படி நடத்திய ஒரே கட்சி நமது திராவிட முன்னேற்றக் கழகம் தான். மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்று, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். அவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் தந்தீர்கள். அதற்குக் கிராம சபைக் கூட்டம் தான் பயன்பட்டது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அது நமக்குப் பயன்பட்டது. எப்போதும் ஆளும் கட்சி தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சி பல இடங்களில் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் அவர்கள் அக்கிரமம் செய்வார்கள். அதையும் மீறி எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க. கிட்டத்தட்ட 75 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குக் காரணம் நீங்கள்தான்.
ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தினோம். உங்களை வந்து சந்தித்தோம். உங்கள் குறைகளைச் சொன்னீர்கள். அதையெல்லாம் செய்து தருவோம் என்று நம்பி நீங்கள் ஆதரவு கொடுத்தீர்கள். பெரிய வெற்றி பெற்றோம்.
இன்றைக்கு நாம் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்குப் போட்டியாக நாளைக்கு ஆளும்கட்சி சார்பில் ஒரு கூட்டம் நடக்கப் போகிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவிருக்கிறார். வழியெங்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க பலூன்கள் கட்டப்பட்டுள்ளன. பலூன்களைப் பார்த்ததும் அவரது ஞாபகம் வந்துவிட்டது. அவற்றை விரைவில் அப்புறப்படுத்திவிடுமாறு நம்முடைய தோழர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். அவர் பலூன்களை உடைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
போட்டிக் கூட்டம் நடத்துங்கள். ஆனால், நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்வதை விட; மக்களாகிய நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் கூறக்கூடிய தெளிவு – துணிவு – தெம்பு – ஆற்றல் - அருகதை அவர்களுக்கு இருக்கிறதா? இன்றைக்கு ஊழலிலேயே கடைந்தெடுத்த ஊழல் ஆட்சி செய்திருப்பவர் அமைச்சர் வேலுமணி. அவர் செய்திருக்கக்கூடிய ஊழல் வேறு ஒன்றும் இல்லை. மஞ்சள் நிறத் தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப் போகிறோம் என்று ஒரு திட்டத்தை அறிவித்து, மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுதும் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களிலும் அந்த விளக்குகளை மாற்றவேண்டும் என்று சொல்லி, கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக பேச விரும்பவில்லை ஆதாரத்தோடு சொல்கிறேன்.
நாமெல்லாம் கடைக்குச் சென்று அந்த விளக்குகளை வாங்கினால் அந்த விளக்கின் விலை 450 ரூபாய் தான். ஆனால் வேலுமணி என்ன விலைக்கு வாங்குகிறார் தெரியுமா? 3737 ரூபாய்க்கு வாங்குகிறார். இது முதல் ஆண்டு. அடுத்தடுத்த ஆண்டுகளில் 4120 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இதேபோல எல்.இ.டி.யில் இன்னொரு வகை உள்ளது. அதனை நாம் கடையில் வாங்கினால் 1550 ரூபாய். அதை என்ன விலைக்குக் கணக்குக் காட்டுகிறார்? 14,919 ரூபாய் கணக்கு காட்டுகிறார்கள்.
இதை எல்லாம் ஆளுநர் இடத்தில் நாங்கள் சென்று சில நாட்களுக்கு முன்னால், எடப்பாடியிலிருந்து நம்முடைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திலிருந்து வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் என அமைச்சர்கள் மீது பட்டியல் போட்டு - சும்மா பொத்தாம் பொதுவாக இல்லை, ஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு கொடுத்து இருக்கிறோம். இதையெல்லாம் ஏற்கனவே நாங்கள் முறையாக புகார் கொடுத்து அந்தப் புகார் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதெல்லாம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி நடந்துகொண்டிருக்கிறது.
இதன்படி முதலமைச்சர் மீது காண்ட்ராக்ட் ஊழல். காண்ட்ராக்ட் ஊழல் என்றால் அவருடைய சம்பந்தி, சம்பந்திக்கு சம்பந்தி அவர்களுக்கெல்லாம் காண்ட்ராக்ட் விட்டுக் கிட்டத்தட்ட 6000 கோடி மதிப்புள்ள வகையில் ஊழல் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறையில் நடந்துள்ளது. இதனை ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்கள், கட்சி சார்பில் வழக்குப் போட்டு சென்னை உயர்நீதிமன்றம் இதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது.
உடனே எடப்பாடி என்ன செய்தார் என்றால் டெல்லிக்குச் சென்று உச்சநீதிமன்றத்தை நாடி, சி.பி.ஐ. விசாரிக்கத் தடை உத்தரவைப் பெற்றார். நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா?
ஊழல் புகார்களை எல்லாம் நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவாரா என்று அமைச்சர் வேலுமணி கேட்டிருக்கிறார். அமைச்சர் வேலுமணி அவர்களே அதை நிரூபிக்க நான் ரெடி நீங்க ரெடியா. நீங்கள் முதலில் சொல்லுங்கள். நான் நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் நிரூபித்துவிட்டால் நீங்கள் அரசியலைவிட்டு ஒதுங்குங்கள். அது ஒரு பக்கம். அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டு இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சட்டத்தின் முன்னால் நிற்க வைத்து அதற்குரிய தண்டனை வாங்கித் தரும் பொறுப்பைத்தான் இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். இது அரசுப் பணம்; மக்கள் தருகிற வரிப்பணம்.
அம்மையார் ஜெயலலிதா இருந்தவரையில் பெட்டிப்பாம்பாக இருந்தீர்கள். எந்த அமைச்சர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாது. அந்த அம்மையாரின் மறைவுக்குப் பிறகு; அந்த மறைவே ஒரு மர்மம். நமது உறவினர் யாராவது இறந்தாலே அவரது உடல்நலன் குறித்து, துக்கம் விசாரிக்கும்போது விசாரிக்கிறோம். ஆனால் இறந்தது யார்? முதலமைச்சர் ஜெயலலிதா. நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு கருத்து மாறுபாடுகள் வேறுபாடுகள் இருந்தாலும், நமக்கும் சேர்த்துத் தான் அவர் முதலமைச்சர். அவரது மரணத்தில் மர்மம்.
ஒரு சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சர் என்கிறோம். அவர் எப்படி முதலமைச்சரானார் என்பது உங்களுக்குத் தெரியும். (காலை பிடித்து… காலை பிடித்து… என்று மக்கள் குரலெழுப்புகிறார்கள்). அப்படி வந்தவர் அவர். ஆனால் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர். இப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பி.எஸ் அவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் ஏற்றுக்கொள்ள வில்லை. நாங்கள் சொல்பவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டாலே, தங்களை முதலமைச்சர் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனை அறிவிப்பதற்கே இத்தனைக் குழப்பம்.
ஆனால், தி.மு.க. கம்பீரமாக யார் முதலமைச்சர் என்று கூறி தேர்தலில் நிற்கிறோம். யார்? (தளபதி ஸ்டாலின்… தளபதி ஸ்டாலின்… என மக்கள் உற்சாகமாக ஆர்ப்பரிக்கிறார்கள்). இதைப்போல எடப்படியைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது தி.மு.க. அல்ல; நான் அல்ல; எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் - கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்ல! முதன் முதலில் இதைச் சொன்னது, தற்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இறந்தவுடன் முதலமைச்சராக ஓ.பி.எஸ் அவர்களை நியமித்தார்கள். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அவர்தான் பொறுப்பேற்றுக் கொண்டார். சிறிது காலம் பதவியிலிருந்தார். திடீரென்று சசிகலா அவரைத் தூக்கி விட்டார்கள். ஏன் தூக்கினார் என்று அதற்கு ஒரு காரணம் சொன்னார்கள். மறந்து விட மாட்டீர்கள்! நான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் என்னைப் பார்த்துச் சிரித்தார் - நான் அவரைப் பார்த்துச் சிரித்தேன். அதற்காகவே அவரை தூக்கி விட்டார்கள். சசிகலாவை முதலமைச்சராக அறிவித்தார்கள்.
அறிவித்து பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. 4 ஆண்டு சிறைத் தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்குத் தண்டனை. ஜெயலலிதா இறந்ததால் தண்டனை அனுபவிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு தண்டனை இல்லை. ஆனாலும் குற்றம் குற்றம்தான். சசிகலா பதவி ஏற்பதற்கு முன்னால் தண்டனை அறிவிப்பு வந்ததால், யாரை முதலமைச்சராக்குவது என்று பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவரது காலில் ஏதோ ஊர்ந்து கொண்டிருக்கிறது. உடனே கையைத் தூக்கி எடப்பாடியை முதலமைச்சராக்கிவிட்டார்கள்.
எதற்கு நான் சொல்கிறேன் என்றால், அப்படி முதலமைச்சராக வந்தவர் இவர். ஆனால், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானவர். அவருடைய மரணத்தில் மர்மம் என்று ஓ.பி.எஸ் அவர்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று 40 நிமிடம் தியானத்தில் அமர்ந்தார். ஆன்மாவோடு பேசினார். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது நீதி கேட்கப் போகிறேன் என்றார். அதன்பிறகு அந்தக் கட்சி இரண்டாக உடைந்தது. இதையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்.
பின்னர், துணை முதலமைச்சர் பதவி கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி பிரச்சினையை இதோடு விட்டுவிட வேண்டும் என்றபோது, கண்துடைப்புக்காக ஏதாவது செய்யுங்கள் என்றதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக விசாரணை ஆணையம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல முறை அந்த ஆணையம் நீட்டிக்கப்பட்டுவிட்டது. சாட்சி சொல்ல வருமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பலமுறை அழைத்தும் அவர் போகவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது; அந்த மர்மத்தை மறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். இப்போது விட்டுவிடலாம்; நான்கு மாதங்கள் பொறுத்திருங்கள்; தேர்தல் அறிக்கை எல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பதையெல்லாம் சொல்லவிருக்கிறோம். ஆட்சிக்கு வந்தப் பிறகு அவற்றையெல்லாம் செய்யவிருக்கிறோம். தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ என்றார். அதில் பல திட்டங்களைச் சொல்லவிருந்தாலும், முக்கியமாகச் சொல்லவிருப்பது அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து, அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.”
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் ஆற்றிய விவரம் வருமாறு:
நான் முன்னுரையாக அதிக நேரம் பேசினேன். அதை நீங்களும் கேட்டு, அதை புரிந்துகொண்டு, உள்வாங்கிக்கொண்டு, ஆண்களில் ஐந்து பேரும், பெண்களில் ஐந்து பேரும் உங்களுடைய கருத்துக்களைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
இங்கு, இடையே ஒரு சகோதரி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். எனக்கு நேற்றே தெரியும். இந்தக் கூட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று வேலுமணி திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தைத் தடுக்க முயற்சி செய்தால், நாங்கள் உங்களுடைய எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் தடையாக இருந்தவரைச் சரியாகக் கண்டுபிடித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியே அனுப்பிவிட்டோம். இதுதான் தி.மு.க.
வேலுமணி அவர்களே… மிஸ்டர் வேலுமணி அவர்களே… அமைச்சர் வேலுமணி அவர்களே… ஊழல் வேலுமணி அவர்களே… இன்றோடு உங்களது கொட்டத்தை அடக்கி கொள்ளுங்கள். இதேபோல தொடர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இல்லை, உங்கள் முதலமைச்சர் கூட எங்கேயும் கூட்டம் பேச முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் இறங்கினால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் மரியாதை. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. அதை விட்டு விடுங்கள். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.
அ.தி.மு.க.காரர்களுக்கு தைரியம் இல்லை. அதுதான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். நான்கு நாட்களில் ஒரு கூட்டம் போடப் போகிறீர்கள் அல்லவா? கூட்டத்தைச் சேர்ப்பதற்கு ரெக்கார்ட் டான்ஸ் எல்லாம் வைப்பீர்கள். ஒரு நடிகையை கூப்பிட்டு வரப் போகிறீர்கள். நடத்துங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது உங்கள் ஜனநாயகம். உங்கள் பண்பாடு. உங்கள் கலாச்சாரம். அதை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.
இந்தக் கூட்டத்தில் புகுந்து அதுவும் தி.மு.க. தொப்பியை வாங்கிப் போட்டுக்கொண்டு செய்திருக்கிறீர்கள். தைரியமாக அ.தி.மு.க. என்று சொல்லி வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும். தி.மு.க. என்ற போர்வையில் வந்து உட்கார்ந்து விட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அமைச்சர் வேலுமணி இப்படி ஒரு செயலைத் திட்டமிட்டு செய்திருப்பதற்கு என்ன காரணம்? அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அந்த காட்சிகளை எல்லாம் பத்திரிகை நிருபர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்தியையாவது அவர்கள் சரியாக போடுவார்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் நிகழ்ச்சியை எடுப்பதற்கு செய்தியாளர்கள் இவ்வளவு முண்டியடித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஏனென்றால் இதுதான் நல்ல நிகழ்ச்சி. இதுதான் மக்கள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சி என்று புரிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்.
எங்கள் நிகழ்ச்சியைச் சீர்குலைக்க அ.தி.மு.க., அதிலும், குறிப்பாக வேலுமணி எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் என்பதனை தயவு செய்து மக்களுக்கு உங்கள் ஊடகத்தின் மூலமாக போட்டு வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். இல்லையென்றால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர்.
நீங்கள் போட்டாலும், போடவில்லை என்றாலும் அது சமூகவலை தளங்களில் வரப்போகிறது.
இங்கே பேசியவர்கள் மிகச்சிறப்பாக பேசியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். மிகச் சிறப்பாக, பாராட்டக்கூடிய வகையில் நம்முடைய மாவட்ட செயலாளர் அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக இருக்கவேண்டும், மிக அமைதியாக நடக்க வேண்டும், அடக்கமாக நடக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறார். அவருக்கு துணை நின்று பணியாற்றியிருக்கூடிய தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை அழகு படுத்தவேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக நம்முடைய கழக முன்னோடிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் தொடக்கத்தில் பேசுகிறபோது, ஊழல் மணி, வேலுமணி என்ன அக்கிரமங்கள் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னேன். எல்.இ.டி. பல்பு பற்றி சொன்னேன். அதில் எவ்வளவு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்பது பற்றியெல்லாம் சொன்னேன்.
இப்பொழுது எனக்கு மற்றும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்” என்று சொல்வார்கள்.
அதாவது வேலுமணியைப் பொறுத்தவரைக்கும் நிமிடத்திற்கு நிமிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுதான் அவருடைய வேலை. தகவல் அறியும் உரிமைச் சட்டம், அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் ஒரு தகவல் கோரி இருக்கிறார். அந்தத் தகவலைக் கேட்ட போது சில ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
அதை இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன். அது என்னவென்றால் சாக்கடை அடைப்பு சரி செய்யக்கூடிய ‘டிச் கொத்து’வின் விலை 130 ரூபாய். வேலுமணி அவர்கள் கொடுத்த விலை 1010 ரூபாய். அதேபோல் சுண்ணாம்பு பவுடர், சுண்ணாம்பு பவுடரில் ஊழல் செய்யக்கூடிய ஒரு மந்திரி யார்? என்று கேட்டால் இந்த வேலுமணி தான்.
சுண்ணாம்பு பவுடர் 25 கிலோவின் விலை 170 ரூபாய். ஆனால் வேலுமணி கொடுத்த விலை 842 ரூபாய். பினாயில் ஒரு லிட்டர் 20 ரூபாய் தான். ஆனால் அவர் கொடுத்து இருக்கக்கூடிய விலை 130. மோட்டார் விலை 1500 ரூபாய். வேலுமணி கொடுத்திருக்கக் கூடிய விலை 29,465 ரூபாய். தெருவுக்கு 40 வாட்ஸ் பல்ப், பிட்டிங் – அதன் விலை 870 ரூபாய். ஆனால் வேலுமணி கொடுத்திருக்கக் கூடிய விலை 2080 ரூபாய்.
இதில் மட்டும் ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக ஒரு கோடி ரூபாய் ஊழல் என்று பார்த்தால் 12,600 ஊராட்சிகளுக்கு மேல் உள்ளது. ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி என்றால் 12600 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இது தெரியவந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு மோசமான ஊழல் பேர்வழி தான் இந்த துறையின் அமைச்சராக இருக்கிறார். இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருக்கிறார். இவர் மட்டுமல்ல இன்றைக்கு எடப்பாடியில் இருந்து கடைசியாக இருக்கும் எல்லா அமைச்சர்கள்வரை, அடுத்த நான்கு மாதங்களில் எவ்வளவு கொள்ளை அடிக்க வேண்டும், எவ்வளவு சுரண்ட வேண்டும் என்று திட்டமிட்டு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுதான் வரப்போகிற தேர்தல். இந்தத் தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்தி சரியான பாடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இங்கே பேசிய கவிதா அவர்கள் விவசாயத்தில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். ஞானமணி அவர்கள், காட்டுச்செடி மற்றும் பன்றிகள் பிரச்சினை பற்றிச் சொன்னார்கள். விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அதேபோல எம்.டி.குமார் அவர்கள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கல்பனா அவர்கள் சுயஉதவி குழு பிரச்சினைகளை பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ராஜேந்திரன் அவர்கள் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய சிரமங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
‘ஊனமுற்றோர்’ என்ற பெயரை மாற்றி ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று பெயர் வைத்தது கலைஞர்தான் என்பது உங்களுக்கு தெரியும். அதற்கன்று ஒரு துறையை உருவாக்கி தன் கையில் வைத்திருந்தார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
மரம் ஏறும் தொழில்களில் உள்ள சிரமங்களைப் பற்றி சகோதரி சாந்தி அவர்கள் சொன்னார். படங்களெல்லாம் கொடுத்திருக்கிறார். நாம் ஆட்சியில் இல்லை. இல்லை என்றாலும் இப்பொழுது என்ன உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ, அதெல்லாம் செய்வேன். கவலைப்படாதீர்கள். ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை செய்யக் காத்திருக்கிறோம்.
அதேபோல குமார் அவர்கள் வாய்க்கால் பிரச்சனை பற்றியும் விவசாய பிரச்சனைகளை பற்றியும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் நான் இங்கு அதிகமாக சொல்ல விரும்புவது விவசாயத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
35 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய, எல்லா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, கடும் குளிரையும், கொட்டுகின்ற பனியையும் பொருட்படுத்தாமல், அங்கேயே சமைத்து, அங்கேயே குடிசை போட்டு, குடும்பம் குடும்பமாக வந்து உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் போராடி வருகிறார்கள். ஏறக்குறைய பதினைந்து இருபது பேர் இறந்து இருக்கக்கூடிய செய்தி கூட வந்திருக்கிறது.
அதைப் பற்றிக் கூட மத்திய அரசு கவலைப்படவில்லை. இங்கே இருக்கக்கூடிய மாநில அரசு அதற்கு உறுதுணையாக இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை இங்குள்ள மாநில அரசு ஆதரித்திருக்கிறது.
இவற்றை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல மகளிர் சுயஉதவிக் குழு பற்றி சொன்னீர்கள். இந்த மகளிர் சுய உதவி குழு முதன் முதலில் கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், இதைச் சிறப்பாக செய்ய வேண்டும்.
நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக – கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஒவ்வொரு மாவட்டமாக சென்று 4 மணி நேரம், 5 மணி நேரம் மேடையில் நின்று கொண்டு அந்த சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி, மானியம், வட்டியுடன் கூடிய கடன்களை எல்லாம் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் இன்றைக்கு வங்கிக்கு கூட செல்ல முடியாத நிலையில் கேவலமாக பேசுகிறார்கள் என்று ஒரு சகோதரி சொன்னார். இப்படி ஒரு நிலை இன்று நிலவுகிறது.
அதேபோல் இங்கு சகோதரி கீர்த்தனா பேசும் போது, - நான் எதார்த்தமாகத்தான் - என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் - என்று கேட்டேன். அதற்கு அவர் எம்.பி.பி.எஸ். படிப்பதாகச் சொன்னவுடன் ஒரு பெரிய புத்துணர்ச்சி ஏற்பட்டது. அந்த எம்.பி.பி.எஸ். இடத்தைக் கூட எப்படி வாங்கினேன் என்று சொன்னார்.
நீட் தேர்வு எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் இருந்தாலும் அதை வென்று காட்டியிருக்கிறேன் என்று பெருமையாக சொன்னார். பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் சட்டமன்றத்தில் இரண்டு முறை ஏகமனதாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். இதுவரைக்கும் அந்த பிரச்சனையைப் பற்றி முதலமைச்சர் வாய்திறக்கவில்லை.
அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட நீட் உள்ளே வரவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும் அது வர முடியவில்லை. ஆனால் இப்போது வந்துவிட்டது என்றால் அதற்கு என்ன காரணம்? இந்த எடப்பாடி ஆட்சி, மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு மண்டியிட்டு, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் ஆட்சியாக இருக்கிறது என்பதுதான் காரணம்.
இதனை நீங்கள் புரிந்து கொண்டால் சரி. அது மட்டுமில்லை இங்கு இருக்கக்கூடிய தாய்மார்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
கடைக்குச் சென்று கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற பொருட்களை வாங்கும்போது கூட பேரம் பேசி, நல்ல பொருளா என்பதைப் பார்த்து வாங்கக் கூடியவர்கள் நீங்கள்.
நாற்றம் உள்ள கருவாடைக் கூட நல்ல நாற்றமா, கெட்ட நாற்றமா என்பதைப் பார்த்துத் தான் வாங்குவீர்கள். நாற்றத்தைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள், நாட்டை பற்றியா கவலைப்படாமல் இருந்து விடப் போகிறீர்கள்.
நாட்டை பற்றி கொஞ்சம் கவலைப் படுங்கள். நாடு நன்றாக இருந்தால்தான் நாம் நலமாக இருக்க முடியும். நாம் நலமாக இருந்தால்தான் நம்முடைய பிள்ளைகள் நலமாக இருக்க முடியும். நம்முடைய பிள்ளைகள் நன்றாக இருந்தால்தான் நம்முடைய சந்ததியினர் நன்றாக இருக்க முடியும்.
ஆகவே நாம் நன்றாக இருக்க, நாம் நலமோடு வாழ, கழகத்திற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். கலைஞர் ஆட்சியை உருவாக்க, நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.