“தி.மு.க.வைக் குடும்பக் கட்சி எனும் பழனிசாமி தான், அரசாங்க கஜானாவிலிருக்கும் பணத்தையெல்லாம் தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் கொள்ளையடித்து மடைமாற்றம் செய்யும் குடும்ப கான்ட்ராக்டர்“ என அரியலூர் - பெரம்பலூர் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (31-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், அரியலூர், பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“மனித இனம் தோன்றிய தடயங்கள் உள்ள வரலாற்றுப் பெருமை கொண்ட ஊர் இந்த அரியலூர். அதன் அடையாளமான டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டது. கடலாக இருந்து, பின்னர் நிலமான ஊர் என்று இதனைச் சொல்வார்கள். அதேபோல் ஒரு காலத்தில் மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்து பெரும் புலியூர் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதிதான் இப்போது பெரம்பலூர். ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் சண்டை நடந்த பகுதி இந்தப் பகுதி. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் தமிழகம் மீட்போம் என்ற பிரச்சார பொதுக்கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்!
பல்வேறு கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் இந்த அரியலூரும் பெரம்பலூரும்! கனிம வளங்களைப் போல விலை மதிப்பில்லா கழகத்தின் காவல் அரண்களான உடன்பிறப்புகள் நிறைந்த மாவட்டம்தான் இந்த இரு மாவட்டங்களும்!
நாடறிந்த பேச்சாளராக விளங்கிய வெற்றிகொண்டான் அவர்கள், மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இந்த அரியலூர் மாவட்டப் பகுதியில் தான் கழக கொள்கைகளை மேடை தோறும் பம்பரமாகச் சுழன்று வந்து முழங்கினார்.
கழகத்தின் கோட்டை திருச்சி என்றால் அரியலூரும் பெரம்பலூரும் தான் அதன் தலைவாசல்கள். அந்த தலைவாசலைக் காத்த தளகர்த்தர்கள் ஏராளமானவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்!
‘காசோ பணமோ, கனகமாலை வைரமாலையெனக்
கணக்கில்லா உயரமாலை குவிந்தாலும் எங்கள்
க.சொ.கணேசன் எனும் கழக மாமாலையை
கடவுளே பிறந்து வரினும் மாற்ற முடியாத” என்று தலைவர் கலைஞரால் புகழப்பட்ட க.சொ.கணேசன்!
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகாரம் பெற உழைத்த ஆண்டிமடம் எஸ்.சிவசுப்பிரமணியம், அரியலூர் ஆறுமுகம், ஒடுக்கப்பட்டோருக்கு உழைத்த பெரம்பலூர் ஜே.எஸ்.ராஜூ, வேப்பந்தட்டை செல்லக்கருப்பண்ணன், பெரியார் விருது பெற்ற ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ஆதிமூலம், இரத்தினசாமி, அரியலூர் நாராயணன் போன்ற பலரால் வளர்க்கப்பட்ட மாவட்டம் இது!
இந்த வரிசையில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் அவர்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். களத்தில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் கழகத்தின் கொள்கையை வளர்க்கும் சிந்தனையாளராக சிவசங்கர் செயல்பட்டு வருகிறார். களப்போராளியாகவும், முகநூல் போராளியாகவும் இருக்கிறார்.
அதேபோல் குன்னம் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளராக இருந்து தனது உழைப்பால் மாவட்டச் செயலாளராக உயர்ந்து கழகத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் வளர்த்து வருகிறார். அவரது உழைப்பை நான் முழுமையாக அறிவேன். இவர்கள் இருவருக்கும் எனது பாராட்டுதல்களையும், அவர்களுக்கு தோள் கொடுத்து வரும் தோழர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து - மாவட்டச் செயலாளராக இருந்த நம்முடைய ஆ.ராசா அவர்கள், தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, இப்போது கழக துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயலாற்றி வருகிறார். 'தகத்தகாய சூரியன்' என்று தலைவர் கலைஞர் அவர்களால் மெச்சப்பட்ட ஆ.ராசா அவர்கள், இப்போது நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அது அவரது புகுந்த வீடு! ஆனாலும், தன்னுடைய பிறந்த வீடான பெரம்பலூர் மாவட்டத்தை மறக்காமல், இங்கே நடைபெறும் அத்தனை கழக நிகழ்ச்சிகளுக்கும் முன்னின்று தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் பெரம்பலூர் - அரியலூர் மாவட்டக் கழகங்களுக்கு வழங்கி வருகிறார். அவருக்கும் வாழ்த்துகள்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களைக் கொண்டு வந்த ஆட்சி தி.மு.க. ஆட்சி!
* அரியலூர் பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் மாவட்டமாக இருந்தது. நிர்வாக வசதிக்காக அரியலூர் மாவட்டம் தனியார் பிரிக்கப்பட்டது.
* கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்
* அரியலூர் நகர் புறவழிச்சாலை கொண்டு வரப்பட்டது.
* அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம்.
* மதனத்தூர் - நீலத்தநல்லூர் மிகப் பெரிய பாலம் 2 கி.மீ. அமைக்கப்பட்டது.
* ஆண்டிமடம் பகுதியில் தொழிற்பயிற்சி கல்லூரி
* அரியலூர் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரி.
* அரியலூர் மாவட்டத்தில் இரண்டு துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டது.
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில்,
* காவிரி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம்.
* குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி.
* கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக்.
* அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ).
* வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி மையம்.
* மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்.
* எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை.
* 3,300 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம்.
* ஒதியம் எனுமிடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்துக் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களைத் தான் பட்டியல் போட முடியும்!
* கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி தருவதாக முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அவை கிடப்பில்தான் உள்ளது!
* ஜெயங்கொண்டம் ஒன்றியம் பொன்னேரி வரை விரிவுபடுத்தப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்து இதுநாள் வரை செயல்படுத்தப்படவில்லை.
* அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு முடிவு காணப்படவில்லை!
* முந்திரி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
* வெள்ளாறு - கொள்ளிடம் பகுதியில் லாரியில் விடிய விடிய நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை!
* தூர்வாருவதில் பெரிய சாதனை செய்துவிட்டதாக பழனிசாமி சொல்லி வருகிறார். ஆனால் கண்டராதித்தம் ஏரி என்ன நிலைமையில் இருக்கிறது? தூர்வாருகிறோம் என்று சொல்லி நிதியை ஒதுக்கிக் கொள்ளையடித்துவிட்டார்கள். சுமார் 4 கோடி ரூபாயில் முறைகேடு நடந்துள்ளது.
* 2011 அ.தி.மு.க. ஆட்சியில், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவுள்ள இடத்தில் விமான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வருகிறது என்று அப்போதைய ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் சட்டசபையில் அறிவித்தார். கிடப்பில் போட்டுவிட்டனர்.
* பாடாலூர், இரூர் ஊராட்சிகளை உள்ளடக்கிய 110 ஏக்கர் பரப்பளவில் ஜவுளிப் பூங்கா திட்டத்தை ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். கிடப்பில் போட்டுவிட்டனர்.
* கொட்டரை நீர்த்தேக்கம் பல வருடங்களாக ஆமை வேகத்தில் வேலை நடந்து வருகிறது.
* கல்லாற்றில் தடுப்பணை கட்டுகிறோம் என்று கூறினார்கள். இது வரையில் கட்டவில்லை.
* சின்னமுட்லு நீர்தேக்கம் கட்டுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் திட்டம் கொண்டு வரவில்லை.
* அரியலூர் முதல் சேலம் வரை ரயில்வே திட்டம் கொண்டு வருவதற்காக அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.இராசா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மத்திய அரசு அதிகாரிகள் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். அதையும் கிடப்பில் போட்டுவிட்டனர்.
* திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூர் எனுமிடத்தில் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதால் அங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்கள். திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்படி இவர்கள் செய்யாத திட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்!
அரியலூர் மாவட்டத்துக்குக் கழக ஆட்சியில் என்ன செய்து கொடுத்தோம் - பெரம்பலூர் மாவட்டத்துக்கு என்ன செய்து கொடுத்தோம் - என்பதை நான் பட்டியலிட்டேன். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கழக ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைச் சொல்லி வருகிறேன்.
அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் தானே சொல்வார்.
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, நேற்று திருச்சியில் பேசியிருக்கிறார். அ.தி.மு.க.வை உடைக்க நானோ திராவிட முன்னேற்றக் கழகமோ நினைக்கவில்லை, அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
அ.தி.மு.க.வின் நான்கு ஆண்டுகால முதலமைச்சராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ தி.மு.க.வோ கருதவில்லை.
‘நான் முதலமைச்சர்’, ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பா.ஜ.க.வே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். பழனிசாமி முதலமைச்சர் என்று பன்னீர்செல்வமே பிரச்சாரம் செய்யவில்லை. இந்த சோகத்தை மறைக்க, இந்த வெட்கத்தை மறைக்க, தி.மு.க மீதும் என் மீதும் பழி போடுகிறார் பழனிசாமி. தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். அரசாங்க கஜானாவிலிருக்கும் பணத்தையெல்லாம் தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் கொள்ளையடித்து மடைமாற்றம் செய்யும் குடும்ப ‘கான்ட்ராக்டர்’தான் பழனிசாமி.
தனது குடும்பத்திற்குச் சொத்து சேர்க்கவே முதலமைச்சர் பதவியையும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும் கடந்த 10 ஆண்டுகாலத்தில் பயன்படுத்தி, தமிழ்நாட்டைப் பாழாக்கிய பகல் கொள்ளைக்காரர்தான் பழனிசாமி. ஏழைகளுக்குக் கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் பழனிசாமி!
கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத கல்நெஞ்சக்கார பழனிசாமி எல்லாம் மனிதரா? இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு 2,500 ரூபாய் தரவில்லை; தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அ.தி.மு.க. நலனுக்காகக் கொடுக்கிறார். அ.தி.மு.க. டோக்கன் கொடுத்து அவர் தான் மாட்டிக் கொண்டார். வழக்குப் போட்டோம். ஆர்வக் கோளாறாகச் சிலர் கொடுத்துவிட்டார்கள் என்று திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட வெட்கம் கெட்ட அரசு தான் இது!
'சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார்?' என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். சென்னையின் தெருவில் இறங்கிக் கேளுங்கள். அதைவிட்டு விட்டு பொதுக்கூட்டத்தில் கேட்பதால் என்ன பயன்?
சில வாரங்களுக்கு முன்னால் இதே கேள்வியை பழனிசாமி கேட்டார். அதற்கு டிசம்பர் 2-ஆம் தேதி அன்று நடந்த கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் நான் விரிவாகப் பதில் அளித்தேன். அதனைப் புரிந்து கொள்ளும் சக்தி முதலமைச்சருக்கு இல்லையா எனத் தெரியவில்லை. அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார் பழனிசாமி.
* சென்னையில் பழனிசாமி பயணிக்கும் பாலங்கள் அனைத்தையும் கட்டியது இந்த ஸ்டாலின் தான்! ஒன்றல்ல, ஒன்பது பாலங்களைக் கட்டினேன்!
* மாநில அரசின் நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவன் நான்.
* ஒவ்வொரு நாளும் மலையெனக் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்குக் கனரக வாகனங்கள், துப்புரவு எந்திரங்கள் மூலம் குப்பை அகற்றும் திட்டம்!
* துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்திற்கு மருத்துவ நலத்திட்டம்
* 302 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்னை போக்குவரத்து சாலைகள், 2023 கிலோ மீட்டருக்கு உட்புறச் சாலைகள் அமைத்தேன்.
* சென்னை முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள்
* 81 ஓய்வுப்பூங்காக்கள்
* 18 சாலையோரப் பூங்காக்கள்
* 47 குடியிருப்புப்பகுதி விளையாட்டுத் திடல்கள்
* சென்னை மருத்துவமனைகள் மூலம் 83,34,076 புறநோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை,
* வருமுன் காப்போம் திட்டம் மூலம் 2,50,000 பேருக்கு நோய்த்தடுப்பு சிகிச்சை,
* பிரசவ காலத்தில் குழந்தைகளையும் தாயையும் காக்கும் 93 தாய் சேய் நல மருத்துவக்கூடங்கள்
* கொத்தவால்சாவடியிலிருந்து கோயம்பேட்டிற்கு வணிகச்சந்தை மாற்றம்
* பல கி.மீ சாலைகளுக்கு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் - இவை அனைத்தையும் சென்னை மாநகராட்சியில் அமைத்தவன் நான்.
* மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றன.
* இந்தியாவிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதுபோல மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வார்டு வளர்ச்சி நிதி வழங்கினேன்.
* மாநகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாகப் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தந்தேன்.
சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்கும் கனவை நனவாக்கியவன் நான். இது எதுவும் பழனிசாமிக்குத் தெரியாது. ஏனென்றால் அப்போது அவர் சேலத்தைத் தாண்டியவர் அல்ல. இவ்வளவு நற்பணிகளை நான் செய்து வந்தபோது அந்த தேர்தலில் தோற்று, சட்டமன்றத்துக்கு வர முடியாதவர் தான் பழனிசாமி.
2006 முதல் உள்ளாட்சித் துறை அமைச்சர், 2009 முதல் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை இந்த ஒரு கூட்டத்திலேயே மொத்தத்தையும் சொல்லி முடிக்க இயலாது.
எனது நிர்வாகத்தின் கீழ் தமிழகத்தின் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டங்கள் தான் என் மனத்துக்கு மிக நிறைவான திட்டங்கள்.
* 630 கோடியில் இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் முக்கியமானது! மூன்று ஆண்டுகள் ஆகும் என்ற இந்த திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து இராமநாதபுர மாவட்டத்து மக்களின் தாகம் தீர்த்தவன் நான்!
* 1928 கோடியில் உருவாக்கப்பட்ட ஒகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேறக் காரணம் ஆனது நான். ஜப்பான் சென்று அதற்கான நிதி வசதிகளையும் திட்டமிடுதல்களையும் செய்தேன். 2008-இல் முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. அரசு அதனை முடக்கியது. இதனை செயல்படுத்தினால் எனக்குப் பெயர் வந்துவிடும்; கழகத்திற்குப் பெயர் வந்துவிடும் என ஓரவஞ்சனையோடு முடக்கினார்கள்.
* 1400 கோடியில் வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம்
* 1000 கோடியில் மேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம்
* நெம்மேலியில் 533 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் - இவை அனைத்தும் எனது பெயரைச் சொல்லும்!
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தணிக்கக் காரணமாக இருந்தவன் நான்!
* ரூ.2032 கோடியில் சென்னையிலும், ரூ.2497 கோடியில் மதுரையிலும், ரூ.3187 கோடி கோவையிலும் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் அமைத்தவன் நான்!
* தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கினேன். இதில் 20 லட்சம் பெண்களை இணைத்தேன். இதன் மூலமாக சுமார் ரூ.4 ஆயிரம் கோடி சுழல் நிதியை என் கரங்களால் அப்பெண்களுக்கு வழங்கினேன்!
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 2,568 கோடி ரூபாய் வங்கி சேமிப்பு உருவாக வித்திட்டேன். அதன் மூலம் சுமார் ரூ.7000 கோடி வரை சுய உதவிக்குழுக்களுக்கு கடன் கிடைக்கக் காரணமாக அமைந்தேன்.
* வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளாட்சித்துறைக்கு மாநில அரசின் நேரடி வருவாயிலிருந்து 31% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்து 104 ஊராட்சிகளில் தனி நூலகங்கள் அமைத்தேன்.
* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 76% பெண்கள், 56% தாழ்த்தப்பட்டோர் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் உச்சநீதிமன்றத்தால் பாராட்டைப் பெற்றேன்.
* கலைஞரின் கனவுத்திட்டமான சமத்துவபுரங்களைக் கட்டி எழுப்பியதும் எனது துறையின் கீழ் தான். 5 ஆண்டுக்குள் 95 சமத்துவபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
* 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தினேன்.
* பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய கிராமங்களுக்குத் தேர்தலை நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களைச் சென்னை அழைத்து வந்து சமத்துவப் பெருவிழா நடத்தினோம்.
* விவசாயிகளுக்கு தலவரி, தலமேல் வரியை ரத்து செய்தேன்.
* குளம், குட்டை பராமரிப்பு பணியை உள்ளாட்சிகளுக்கு ஒப்படைத்தேன்.
* ஊரகப் பகுதிக்கு மின் கட்டணத்தைக் குறைத்தேன்.
* அபராத வரியை ரத்து செய்தேன்.
* வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
- இவை அனைத்தையும் செய்து கொடுத்தவன் இந்த ஸ்டாலின்!
பழனிசாமியைப் போல டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தவனல்ல நான்.
ஒரு திட்டத்தை உருவாக்கும் போது அதனால் கோடிக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான ஏழைகள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுகிறார்களா என்பதைப் பார்த்து அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியவன் நான்.
அரசாங்க கஜானாவில் உள்ள பெரும்பாலான பணத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய மூன்றுக்கு மட்டுமே ஒதுக்கி பழனிசாமியும், வேலுமணியும் கொள்ளை அடிப்பதற்காக ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறீர்களே அத்தகைய வழக்கம் கொண்டது அல்ல தி.மு.க. ஆட்சி.
அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் - அனைத்து துறைக்கும் நிதிப்பங்கீடு செய்து - அனைத்து மக்களுக்கும் சரிவிகித நன்மை செய்த அரசு தி.மு.க. அரசு. அத்தகைய அரசை நடத்தியவர் தான் கலைஞரும் நாங்களும்!
ஸ்டாலின் தூங்கிக் கொண்டு இருந்தாரா என்று கேட்கும் பழனிசாமிக்குச் சொல்கிறேன்! நான் தூங்க மாட்டேன். நான் தூங்குகிறேனா விழித்திருக்கிறேனா என்பது விழித்திருப்பவர்களுக்குத் தான் தெரியுமே தவிர, தூங்கும் பழனிசாமிக்குத் தெரியாது.
கடந்த நான்காண்டு காலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கப் போராடியவன் நான்! நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிக் கொண்டு இருப்பவன் நான்! நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு முறை விலக்கு பெறச் சட்ட மசோதா நிறைவேறக் காரணமானவன் நான். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற வாய்ப்பு ஏற்படுத்த நான் எடுத்த முழு முயற்சிகள் தான் 7.5 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கக் காரணம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் உணர்வார்கள்! ஒக்கி புயலாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும், நீலகிரி நிலச்சரிவாக இருந்தாலும் கடலூர் வெள்ளமாக இருந்தாலும் முதலில் அங்கே போய் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்பவனாக நான் தான் இருந்துள்ளேன். மக்களின் வடிக்கும் கண்ணீரைத் துடைக்கும் கை எனது கையாகத்தான் இருக்கும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த இரட்டைக் கொலைகள், இவை அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை உடைக்கும் வேலையும் நான் தான் செய்தேன். இன்று வரை ஜெயலலிதாவுக்காகப் பேசிக் கொண்டு இருப்பவனும் நான் மட்டும் தான். அம்மா, அம்மா என்று நடிப்பவர்கள் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கவில்லை. நீதி கிடைத்துவிடக் கூடாது என்று தான் அவர்கள் துடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் தான் நீதி கேட்டுப் பேசி வருகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காவிரி மீட்பு நடைப்பயணம் சென்றேன். மேகதாது அணை கட்டுவதை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறக் காரணமானேன். முல்லைப் பெரியாற்றில் கேரளா அணை கட்டுவதை எதிர்த்து ஐந்து மாவட்ட விவசாயிகள் உரிமைக்குக் குரல் கொடுத்தோம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். 2 கோடி கையெழுத்துகள் பெற்று குடியரசுத் தலைவருக்குக் கொடுத்தோம். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம்.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி சி.பி.ஐ. வசம் சிக்கக் காரணம் தி.மு.க தாக்கல் செய்த வழக்கு தான். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக் காரணம் தி.மு.க தான். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளோம். ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். நாளை அவர்கள் சிறைக்குச் செல்வார்களேயானால் அதற்குக் காரணமும் தி.மு.க தான்!
இந்த மத்திய அரசு, மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் பறிக்க முயற்சிக்கிறது. அதனைத் தடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து செய்தவன் நான். இந்திக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்துச் சொன்னபோதும், இந்தியில் தான் பேச வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு வந்தபோதும் போராட்டம் நடத்தி அதனைத் திரும்பப் பெற வைத்தது தி.மு.க.
கொரோனாவுக்கான பரிசோதனையை அனைவருக்கும் செய்யுங்கள் என்பது முதல் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தாதீர்கள் என்பது வரை எனது பேச்சைத் தான் அ.தி.மு.க. அரசு கேட்டுச் செயல்பட்டது.
மின்வாரியத்துக்கு தனியார் ஆள் எடுப்பது கூடாது என்பது முதல் குப்பைக்கு வரி போடாதே என்று தடுத்தது வரை எனது சொல்படி தான் அ.தி.மு.க. அரசு கேட்டது. நாங்கள் வழக்குப் போடாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலையே நடத்தி இருக்க மாட்டார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கிராம சபைகளைக் கூட்டி மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவன் நான்.
இவை அனைத்துக்கும் மேலாக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக உணவளித்தோம். உணவுப் பொருள்கள், மளிகைகள், காய்கறிகள், மருந்துப் பொருள்கள் அளித்தோம். நிதி உதவிசெய்தோம். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவிகள் செய்தோம். மத்திய மாநில அரசுகள் இரண்டும் மக்களைக் கைகழுவி விட்ட போது கை கொடுத்துத் தூக்கிய இயக்கத்தின் தலைவர் தான் இந்த ஸ்டாலின்.
அதனால், ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்கும் தார்மீக யோக்கியதை எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கோ கிஞ்சித்தும் இல்லை!
சென்னை மாநகரத் தந்தையாக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக - பொறுப்புகள் வகித்த போது நாட்டு மக்களுக்கு நான் நிறைவேற்றிக் கொடுத்த ஒருசில முக்கியமான திட்டங்களை மட்டும் உங்களுக்கு நினைவூட்டினேன்!
எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஆற்றிய பணிகளைச் சுட்டிக் காட்டினேன்!
23 வயதில் ஜனநாயகம் காக்கும் போரில் ஓராண்டுக் காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது முதல் இன்று வரை தமிழ்நாட்டு மக்களுக்கான என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்!
தாய்த்தமிழ்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன! நிறைவேற்ற வேண்டிய கனவுகள் அதிகம் உள்ளன! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இக்கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாக அமையும். எல்லார்க்கும் எல்லா கனவுகளும் நிறைவேறும் ஆட்சியாக அமையும்!
பத்தாண்டு கால பள்ளத்தைச் சரி செய்யும் ஆட்சியாக மட்டுமில்லாமல், அங்கே ஒரு சிகரத்தை எழுப்பும் ஆட்சியாக அமையும்!
உங்களுக்காக - உங்களைப் போலவே அன்போடு உழைக்க - ஒரு உதயசூரியனாகக் காத்திருக்கிறேன்!
உங்களில் ஒருவனாக - பெரியாரின் பேரனாக - அண்ணாவின் தம்பியாக - கலைஞரின் மகனாக – அழைக்கிறேன்… வாருங்கள் அனைவரும் இணைந்து நமக்கான தமிழகத்தை நாளை அமைப்போம்! அதற்காக இன்று முதல் உழைப்போம்!
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் வரை தூக்கம் இல்லை.
தமிழகத்துக்குத் துயரமான ஆட்சி இது. இந்தத் துயரம் களையப்பட வேண்டும்!
தமிழகத்துக்குத் துக்கமான ஆட்சி இது. இந்த துக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!
தமிழகத்துக்குக் களங்கமான ஆட்சி இது. இந்தக் களங்கம் நீக்கப்பட வேண்டும்.
தமிழகத்துக்குக் கறை படிந்த ஆட்சி இது. இந்தக் கறை கழுவப்பட வேண்டும்.
தமிழகத்தை சீரழித்த ஆட்சி இது. இது சீர்செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தை வஞ்சித்த ஆட்சி இது. இந்த வஞ்சகம், நிறுத்தப்பட வேண்டும்.
தமிழகத்துக்கு துரோகம் செய்த ஆட்சி இது. அத்தகைய துரோகிகள் துரத்தப்பட வேண்டும்.
இது ஒரு இருண்ட காலம். அது இன்றோடு முடியவேண்டும்!
இன்று 2020 ஆம் ஆண்டின் இறுதிநாள்! நாளை 2021 புத்தாண்டு பிறக்கும் போது அது தமிழகத்துக்கு புதிய விடியலைத் தரும் நாளாக விடியட்டும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
2021-ஆம் ஆண்டு, உங்களது கவலைகள் நீங்கி, கனவு காணும் பொற்கால ஆட்சி அமையும். அந்த ஆட்சி நல்லாட்சியாக, நலம் தரும் ஆட்சியாக, கழக ஆட்சியாக, கலைஞரின் ஆட்சியாக அமையும். தமிழகம் மீட்போம்! நன்றி. வணக்கம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.