தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 67 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய கொளத்தூர் தொகுதியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில், இந்த நிகழ்ச்சி எழுச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டில் நான் பல ஊர்களுக்குச் சென்று இருந்தாலும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும், கொளத்தூர் என்று சொன்னால் எனக்கு தனி மகிழ்ச்சி என்பது உங்களுக்குத் தெரியும். அந்த கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமிக்கு வருவதென்றால் அதைவிட மிகுந்த மகிழ்ச்சி எனக்கு உண்டு. எனவே, அந்த மகிழ்ச்சியோடு என்னுடைய வணக்கத்தை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்கு மாணவர்களுடைய நம்பிக்கையாக, உங்களை ஊக்கப்படுத்தக் கூடிய, உற்சாகப்படுத்துகிற நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.
இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி, எந்த நோக்கத்திற்காக, இலட்சியத்திற்காக, உணர்வுக்காக உருவாக்கப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்தச் சுற்று வட்டாரத்தில், தொகுதியில் இருக்கக்கூடிய, மாணவிகளுக்கு அருமைச் சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பு, அதற்குரிய பயிற்சி வழங்கிவிட வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. முதல் குழுவினருக்கான பயிற்சி 20.6.2019 அன்று தொடங்கப்பட்டது.
அப்போது பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற மாணவியரின் எண்ணிக்கை 61. அதேபோல் இரண்டாவது பேட்சில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 51. மூன்றாவது முறை பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 53. நான்காவது முறை பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 67. 67 பேர் பயிற்சி பெற்று இருந்தாலும் அதில் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 16 பேர். ஏனென்றால், இது கொரோனா காலம். மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு முகாம் மூலமாக நிச்சயமாக வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்பதை நான் இப்பொழுது உறுதிபடக் கூறுகிறேன்.
இப்பொழுது ஐந்தாவது பேட்ச்சுக்கான பயிற்சி அக்டோபர் 11ம் தேதி தொடங்கியுள்ளது. தற்பொழுது வரைக்கும் 82 மாணவர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர தையல் பயிற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தையல் பயிற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் 196 பேர் அதில் பயன் பெற்றிருக்கிறார்கள். இரண்டாவது முறையாக 200 பேர் அதில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாணவ, மாணவிகளை, இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்ப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பயிற்சி மட்டும் அளிக்காமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வாங்கித் தரும் பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது அனிதா அசீர்வர்ஸ் அகாடமி.
குறிப்பாகக் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த மாணவியருக்கு இந்த அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நான்காவது பேட்சாக பயிற்சி பெறும் 67 மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சியில் இன்று லேப்-டாப்புகள் வழங்கப்படுகின்றன.
கொளத்தூர் தொகுதி என்னுடைய மேம்பாட்டு நிதி மற்றும் என்னுடைய கோரிக்கையை ஏற்றுச் சென்னை மாநகராட்சி வழங்கிய நிதிகளையும் சேர்த்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்குக் கொளத்தூர் தொகுதியில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மக்கள் பணியாற்றுவதில் கொளத்தூர் தொகுதி, மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் - அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, தி.மு.கவாக இருந்தாலும் சரி, நம்மைப் பார்த்துத்தான் மற்ற தொகுதியில் பணிகளைச் செய்வதாக இருக்கவேண்டும் – என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். 234 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதி ஒரு தொகுதியாக இருந்தாலும், அந்த 233 தொகுதிகளுக்கும் ஒரு வழிகாட்டும் தொகுதியாக இந்தத் தொகுதி உள்ளது.
மழை அடிக்கடி வருகிறது; வெள்ளம் அடிக்கடி வருகிறது. இப்படி இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்பட்டாலும் இந்தத் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். நிவாரணப் பணிகள் மட்டுமல்ல, சேவைகளையும், உதவிகளையும், சில நலத்திட்ட உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.
கொரோனா காலம் என்பது ஒரு கொடிய காலம். வீட்டை விட்டு வெளியே வர முடியாத நேரத்தில், லாக்டவுன் காலத்தில், தவித்துக் கொண்டிருந்த அந்த மக்களுக்கு, என்னென்ன பணிகள் எல்லாம் செய்து மற்ற தொகுதி மக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்சினை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.
தி.மு.க எதிர்க்கட்சி. ஆனால் நாம் அறிவிப்பதை பார்த்துத்தான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலைமை உள்ளது. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் மூன்று மாதம் அல்லது நான்கு மாதகாலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப் போகிறோம்.
உங்களை எல்லாம் பார்த்த பிறகு எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் பேசத் தோன்றுகிறது.
அந்த அளவுக்கு மக்களிடத்தில் ஒரு எழுச்சியை நாம் காணுகிறோம். ஏனென்றால், மக்களுக்காக இருந்து, மக்களோடு வாழ்ந்து, மக்களுடைய பிரச்சினைகளுக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய 10 ஆண்டுக்காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களைப் பற்றிக் கவலைப் படுகிற ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்தாலும், ஏற்கனவே ஐந்து முறை ஆட்சியிலிருந்து உள்ளோம். ஐந்து முறை ஆட்சியில் இருந்த பொழுது மக்களுக்கு என்னென்ன திட்டங்களை உருவாக்கினோம், என்னென்ன தொழிற்சாலைகளை உருவாக்கினோம், என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்றைக்குத் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து வருகிற தொழிலதிபர்கள் எல்லாம், இங்கு தொழில் தொடங்க அஞ்சி, பயந்து ஓடக்கூடிய நிலைமை இப்பொழுது உள்ளது.
அதற்குக் காரணம் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் உடனடியாக ஈடுபடவேண்டும். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 4 மாத காலத்தில் வருகிற தேர்தல்தான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனவே, அந்தத் தேர்தலை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆட்சியில் இல்லாத காலத்திலேயே இவ்வளவு செய்யும் பொழுது, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்களது நண்பர்கள் உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோரிடத்திலும் இதை எடுத்துச் சொல்லுங்கள். கொளத்தூர் தொகுதியில் இருக்கும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இத்தகைய உதவிகளை எல்லாம் எங்களுக்குச் செய்திருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறுங்கள்.” என உரையாற்றினார்.