மு.க.ஸ்டாலின்

“அரசால் உதவ முடியாவிட்டால் சீட் ஒதுக்குங்கள்; கட்டணத்தை தி.மு.க ஏற்கும்” - கொதித்த மு.க.ஸ்டாலின்!

“மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.கழகம் அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது." என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பி சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 
stalin  பொன்பரப்பி சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். மில் தொழிலாளியான இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். இவரது இரண்டாவது மகன் யுவன்ராஜ், அரசு பொதுத் தேர்வில் 600-க்கு 445 மதிப்பெண்களும், நீட் தேர்வில் 155 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 450-வது இடம் பெற்றார்.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் இவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

எனினும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு ரூ.4லட்சத்துக்கு மேல் செலவாகும் என்பதால், அவ்வளவு கட்டணத்தை செலுத்தமுடியாது என யுவராஜ் தற்போது கேட்டரிங் பணிக்குச் சென்று வருகிறார்.

இதுகுறித்து செய்தியறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவே தகர்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருப்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“அரசால் உதவ முடியாவிட்டால் சீட் ஒதுக்குங்கள்; கட்டணத்தை தி.மு.க ஏற்கும்” - கொதித்த மு.க.ஸ்டாலின்!

இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் செய்யும் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ளதாக 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவாணி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இதுபோல மேலும் பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவே தகர்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும்.

அப்படி இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.கழகம் அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories