அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி வருவது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே இடப்பிரச்சனை காரணமாக இன்று தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அ.தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பி உள்ளது. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை; பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய் விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.